ட்ரம்பின் “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கையும் வலதுசாரிப் பயங்கரவாதமும்

15 October 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

"சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கையின் (policy of “herd immunity”) மூலம் COVID-19 வைரஸால் மக்கள்தொகை பெரும் தொற்றுநோய்க்குள்ளாவதை நடைமுறைப்படுத்த வாதாடும் ஒரு அறிக்கையான கிரேட் பாரிங்டன் பிரகடனத்தை வெள்ளை மாளிகை ஆதரிப்பதாக இரண்டு ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் கூறியதாக செவ்வாயன்று நியூஸ் வீக் தெரிவித்தது.

மாசசூசெட்ஸில் கிரேட் பாரிங்டனை மையமாகக் கொண்ட ஒரு வலதுசாரி சுதந்திரவாத சிந்தனைக் குழுவான பொருளாதார ஆராய்ச்சிக்கான அமெரிக்க நிறுவனம் (AIER) ஏற்பாடு செய்த கூட்டத்திலிருந்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. தொலைதூர வேலைகளை ஊக்கமிழக்கச் செய்து, மேலும் வைரஸ் பரவக்கூடியவாறு வெகுஜன ஒன்றுகூடல்களை ஊக்குவித்து "இயற்கையாக நோய்த்தொற்றின் மூலமாக வைரஸுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள" அரசாங்கங்களுக்கு அது அழைப்பு விடுக்கின்றது. இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது என்பது ஒரு பாரியளவிலான மரணங்களுக்கு வழிவகுக்கும் என்ற அர்த்தத்தைக் குறிக்கிறது.

"சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கையானது உலக சுகாதார அமைப்பு (WHO) உட்பட அனைத்து புகழ்பெற்ற சுகாதார அமைப்புகளாலும் கண்டிக்கப்படுகின்றது. WHO இன் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் திங்களன்று அத்தகைய கொள்கையை "அறநெறிமுறை அற்றது" என்று கூறினார். “ஒரு வைரஸிலிருந்து மக்களைப் பாதுகாப்பதன் மூலம்தான் சமூக நோயெதிர்ப்பு சக்தி அடையப்படுகிறது, ஆனால் அதை வெளிப்படுத்துவதன் மூலம் அல்ல. பொது சுகாதார வரலாற்றில் ஒருபோதும் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையானது ஒரு திடீர் வெடிப்பு பரவலுக்கு பதிலளிப்பதற்கான ஒரு மூலோபாயமாக பயன்படுத்தப்படவில்லை, அது ஒரு பெருந்தொற்று நோயாக இருந்தால்கூட” என்று அவர் மேலும் கூறினார்.

ஆனால் ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள பிற அரசாங்கங்களால் செயற்படுத்தப்பட்ட துல்லியமான கொள்கையாக இது இருக்கிறது.

"இந்தத் திட்டம் [கிரேட் பாரிங்டன் பிரகடனம்] பல மாதங்களாக ஜனாதிபதியின் கொள்கையாக இருந்து வருகிறது என்பதை ஒப்புதல் அளிக்கிறது" என்று வாஷிங்டன் போஸ்ட் ஒரு வெள்ளை மாளிகை அதிகாரி கூறியதாக மேற்கோளிட்டது.

இந்த தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள், எதிர்விளைவைக் கொண்டிருக்கின்றன என்று வெள்ளை மாளிகை "பல மாதங்களாக" நம்பினால், ஜனவரி மற்றும் பிப்ரவரியில் தொற்று நோய் பரவுவதைத் தடுக்க அடிப்படை நடவடிக்கைகளை எடுக்க அவர் மறுத்ததை வேண்டுமென்றே விடப்பட்ட படுகொலையாக கருதப்பட வேண்டும். மக்கள்தொகையில் பாரிய தொற்றுக்கள் ஒரு நல்ல விஷயம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், வெள்ளை மாளிகை வேண்டுமென்றே மற்றும் தெரிந்தே அமெரிக்காவில் 200,000 க்கும் மேற்பட்ட இறப்புக்களை ஏற்படுத்தி வருகின்ற கொள்கைகளை செயற்படுத்துகிறது.

"200,000 மக்கள் இறந்துபோயுள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும். அது மிகவும் கடுமையானது மற்றும் துன்பகரமானது. ஆனால் மறுபுறம், சமூகம் முடக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை, மேலும் மக்களை அவர்களது வீடுகளில் அடைத்து வைப்பதன் தீங்குகளை நாங்கள் அறிவோம்" என்று அநாமதேய அதிகாரி தொடர்ந்து கூறினார்.

பெருந்தொற்று நோய்க்கு எந்தவொரு ஒருங்கிணைந்த பதிலையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக டாக்டர் அந்தோனி ஃபாசி மீதான தாக்குதலை ட்ரம்ப் நிர்வாகம் அதிகரித்து வருகிறது. "இலையுதிர் காலத்திலும் குளிர் காலத்திலும் நமக்கு அவசியமானதை நாங்கள் செய்யாவிட்டால், 300,000-400,000 கோவிட்-19 மரணங்கள் ஏற்படக்கூடும்" என்று ஃபாசி சமீபத்தில் எச்சரித்தார்.

பெருந்தொற்று நோய்க்கு பதிலளிக்கும் வகையில் ஆளும் வர்க்கத்தின் படுகொலை கொள்கையானது அமெரிக்காவில் முன்னோடியில்லாத அரசியல் நெருக்கடியின் மையத்தில் உள்ளது. இந்தக் கொள்கையை நடைமுறைப் படுத்த, ஆளும் உயரடுக்கு இன்னும் அதிகமாக வன்முறை மற்றும் சர்வாதிகார ஆட்சியை நாடுகிறது.

மிச்சிகன் ஆளுநர் கிரெட்சன் விட்மரைக் கடத்தி கொலை செய்ய தீவிர வலதுசாரி பயங்கரவாதிகள் ஒரு அதிஉச்ச சதித்திட்டத்தை சட்ட அமலாக்க அதிகாரிகள் வெளிப்படுத்திய சில நாட்களில் வெள்ளை மாளிகையின் “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கைக்கு திறந்த ஒப்புதல் அளிக்கப்படுதல் வருகிறது. நேற்று வெளியான தகவல்களின்படி, வேர்ஜீனியா கவர்னர் ரால்ப் நார்தாமையும் குறிவைத்தது இந்தச் சதித்திட்டம், இது பெருந்தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மிகக் குறைந்த கட்டுப்பாடுகளுக்கு எதிரான எதிர்ப்பை மையமாகக் கொண்டுள்ளது.

மிச்சிகன், வேர்ஜீனியா, விஸ்கான்சின் மற்றும் பிற மாநிலங்களிலுள்ள மாநில தலைநகரங்களில், பெரும் ஆயுதமேந்திய குண்டர்களின் தலைமையில், ஏப்ரல் மற்றும் மே மாதம் நடந்த வலதுசாரி ஆர்ப்பாட்டங்களில் இருந்து இந்தச் சதித்திட்டம் வளர்ந்தது. இந்த மாநிலங்களை "விடுதலை" செய்ய ட்ரம்ப் விடுத்த அழைப்பு தூண்டிவிட்டதாலும், ஆளும் வர்க்கம் மார்ச் மாதம் வாகனத் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினரின் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு பதிலிறுப்பாகவும், பெருந்தொற்று நோய் பரவியதை அடுத்து ஏற்றுக்கொள்ளப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து பணிக்குத் திரும்பவேண்டும் என்று கோரிவந்த நிலையிலும்தான் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

மார்ச் மாத இறுதியில், வோல் ஸ்ட்ரீட் மற்றும் பெருநிறுவன அமெரிக்காவிற்கு டிரில்லியன் கணக்கான டாலர்களை மாற்ற அனுமதித்த CARES சட்டத்தை ஒருமனதாக காங்கிரஸ் நிறைவேற்றியது. அதன் நலன்களைப் பாதுகாத்த பின்னர், ஆளும் வர்க்கம் செல்வந்தர்களின் பிணையெடுப்புக்கு பணம் செலுத்துவதற்கான இலாப ஓட்டத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரியது.

ட்ரம்பின் தலைமையிலான இந்தக் கொள்கை இருகட்சிக் கொள்கையாகும். இது முதலில் நியூ யோர்க் டைம்ஸின் கட்டுரையாளர் தோமஸ் ப்ரீட்மன் என்பவரால் அறிவிக்கப்பட்டது, அவர் "நோயைக் காட்டிலும் சிகிச்சை முறை மோசமாக இருக்க முடியாது" என்று அறிவித்தார், அதாவது பெருந்தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நோக்கம் கொண்ட நடவடிக்கைகள் விலைமதிப்பிற்கு உரியவை அல்ல என்று அறிவித்தார். நாடு முழுவதிலுமுள்ள மாநிலங்கள், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் இருபகுதியாலும் வணிகங்கள் மீதான கட்டுப்பாடுகளை அகற்றி விட்டு தொழிலாளர்களை வேலைக்கு அனுப்பத் தொடங்கினர். சிறிய வலதுசாரி ஆர்ப்பாட்டங்களை மக்கள் உணர்வின் ஒரு நியாயமான வெளிப்பாடாக முன்வைத்து செய்தி ஊடகமானது அதனுடைய பங்களிப்பைச் செய்தது.

இதன் விளைவுகள் முன்கணிக்கக்கூடியதாக இருந்தன: அதாவது வைரஸின் ஒரு புதுப்பிக்கப்பட்ட விரிவாக்கமும் இறப்புக்களின் அதிகரிப்புமாகும். ஆனால், ஆளும் வர்க்கம் இந்தப் பரவலைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளை எதிர்க்கிறது. அதே நேரத்தில், இந்த வைரஸின் பொருளாதார தாக்கமானது வேலையின்மை நலன்களில் இருந்து துண்டிக்கப்பட்டு வறுமை, வெளியேற்றம் மற்றும் பட்டினி ஆகியவைகளை முகங்கொடுக்கும் மில்லியன் கணக்கான மக்களுக்கு ஒரு பாரிய சமூகப் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரம்ப் தனது சதித் திட்டங்களை விரிவுபடுத்துவதன் மூலம் இந்த முன்னேற்றங்களுக்கு எதிர்வினையாற்றுகிறார். தேர்தலுக்கு மூன்று வாரங்களே உள்ள நிலையில், ட்ரம்ப் தீவிர வலதுசாரி வன்முறையைத் தூண்டி, தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் அதிகாரத்தில் தொடர்ந்து நீடிக்கப் போவதாக அச்சுறுத்துகிறார். இந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டத்தை அனுமதிக்க இந்த வாரம் நியமன விசாரணைகளைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்திற்கு ஆமி கோனி பாரெட் நியமிப்பதை அவர் கருத்தில் கொண்டிருக்கிறார்.

மிச்சிகனில் நடந்த சதித் திட்டத்தை மூடிமறைக்கவும் கீழறுப்பதற்கும் முயன்றதிலும் மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளுடனுள்ள தொடர்புகளையும் ஜனநாயகக் கட்சியின் பாத்திரத்தையும் இந்த பெருந்தொற்று நோய்க்கு ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பு விளக்குகிறது. பைடென் மற்றும் பிற முக்கிய ஜனநாயகக் கட்சியினர் மாநில அரசாங்கங்களை அகற்றுவதற்கான முயற்சிகளின் முக்கியத்துவம் குறித்து மெளனம் காத்து வருகின்றனர்.

வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவத்தின் ஒரு கட்சியான ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள், ட்ரம்ப் நிர்வாகத்திற்கு பரந்த வெகுஜன எதிர்ப்பைத் தூண்டிவிடக்கூடிய எதையும் பற்றி பீதிகொண்டுள்ளனர். வெள்ளை மாளிகையில் மையப்படுத்தப்பட்ட பாசிச சதிக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதற்கு, இதில் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கமும் ஊக்குவிக்கும் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கையை செயற்படுத்துவது உள்ளடங்கலாக அதற்கு உந்துசக்தியாக இருக்கும் சமூக நலன்களை அம்பலப்படுத்துவது அவசியமாகும்.

தேர்தலில் என்ன நடந்தாலும், இந்த ஆண்டு நிகழ்வுகள் முடிவுபெற முடியாது. ஆளும் வர்க்கத்தின் கொள்கையானது அடிப்படையில் ஜனநாயக வடிவிலான அரசாங்க முறைகளைப் பாதுகாப்பதற்கு பொருத்தமற்றதாக இருக்கிறது. அதனுடைய இலாப நலன்களைப் பாதுகாக்க, ஆளும் வர்க்கம் அதிவலது பயங்கரவாதத்தை பயன்படுத்தியுள்ளது, அதனுடைய இறுதி இலக்கு தொழிலாள வர்க்க எதிர்ப்பாக இருக்கிறது.

சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டமானது மரணம் விளைவிக்கும் வேலைக்கு மீண்டும் செல்லுதல், வெகுஜன வேலையின்மை மற்றும் வரலாற்றுரீதியாக முன்னோடியில்லாத அளவிலான சமூக சமத்துவமின்மைக்கு எதிராகவும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் அணிதிரட்டலுடன் இணைக்கப்பட வேண்டும். ஆளும் வர்க்கத்திற்கும் ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் எதிரான ஒரு போராட்டம் இதற்கு அவசியமாக இருக்கிறது.

Andre Damon