ஐரோப்பிய ஒன்றியத்தின் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவோம்!

17 October 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கோவிட்-19 நோயாளிகளின் "அதிவேகமான அதிகரிப்பை" ஐரோப்பா முகங்கொடுத்து வருவதாக இந்த வாரம் உலக சுகாதார அமைப்பு எச்சரித்தது. வெறும் கடந்த பத்து நாட்களில், அந்த கண்டம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான புதிய நோயாளிகளைப் பதிவு செய்துள்ளது, இது இந்த தொற்றுநோய் ஆரம்பித்ததற்குப் பின்னர் மொத்த எண்ணிக்கை ஏழு மில்லியனுக்கும் அதிகமாக கொண்டு வந்துள்ளது.

கோவிட்-19 இன் ஓர் உலகளாவிய மீளெழுச்சிக்கு குவிமையமாக ஐரோப்பா மேலெழுந்து வருகின்ற நிலையில், இந்த வசந்த காலத்தின் 200,000 உயிரிழப்புகளையும் வெகுவாக விஞ்சி, முன்னொருபோதும் இல்லாதளவில் மரணங்களுக்கு இட்டுச் செல்லும் ஒரு கொள்கையைப் பின்தொடர்ந்து வருகிறது.

ஐரோப்பாவில் கோவிட்-19 இன் ஆரம்ப உயர்வை சமூக அடைப்புகள் மாற்றியமைத்த பின்னர், அக்கண்டம் எங்கிலுமான அரசாங்கங்கள் அந்த வைரஸைக் கட்டுப்படுத்திவிட்டதாக பெருமை கொண்டாடின. ஐரோப்பாவின் மத்திய வங்கிகள் 1.25 ட்ரில்லியன் யூரோவும் மற்றும் பிரிட்டனில் 645 பில்லியன் பவுண்டும் பிணையெடுப்புகளாக கையளிக்கப்பட்டதால், ஐரோப்பிய ஒன்றியம் 750 பில்லியன் யூரோ பெருநிறுவன பிணையெடுப்புக்கு மத்தியஸ்தம் செய்ததால், அவை தொழிலாளர்களை வேலைக்குத் திரும்புமாறும் இளைஞர்களைப் பள்ளிக்குத் திரும்புமாறும் கோரின. இந்த முன்னுரிமைக்கு ஒரு புதிய அடைப்பு அவசியமில்லை என்றும் அவை வலியுறுத்தின.

இந்த வாதங்கள் அனைத்தும் முற்றிலும் அம்பலமாகி நிற்கின்றன. ஐரோப்பாவில் இந்த வைரஸ் கட்டுப்பாட்டை மீறி வெடித்து வருவதால், நாளாந்த புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பிரான்ஸ் 30,000 க்கும் அதிகமாக அறிவித்து வருகிறது, பிரிட்டன் அண்மித்து 20,000, செக் குடியரசு அண்மித்து 10,000, இத்தாலி 9,000, பெல்ஜியம், போலாந்து மற்றும் நெதர்லாந்து 8,000 மற்றும் ஜேர்மனி 7,000 அறிவித்து வருகின்றன. சமீபத்தில் வரையில் ஐரோப்பாவின் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக இருந்த ஸ்பெயினில் நாளாந்தம் 13,000 புதிய நோயாளிகளை அதிகாரிகள் அறிவிக்கின்றனர், ஆனால் பிராந்திய அரசாங்கங்கள் அவற்றின் மொத்த எண்ணிக்கையில் ஆயிரக் கணக்கான நோயாளிகளை அவை குறைத்துக் காட்டி வருவதாக பத்திரிகைகள் குறிப்பிட்டு வருகின்றன.

இந்த தொற்றுநோய் அதன் இப்போதைய மட்டங்களில் இருக்க விடப்பட்டால், அதாவது மாதத்திற்கு 4.5 மில்லியன் நோயாளிகள் என்றால், அதனால் ஐரோப்பாவின் மருத்துவக் கவனிப்பு அமைப்பு நிரம்பி வழிவதாக இருக்கும். ஆனால் ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களோ பொதுவாக வீட்டிலேயே இருக்கும் அல்லது அடைப்பு உத்தரவைத் தொடர்ந்து நிராகரித்து, அதற்கு மாறாக மிகப்பெரும் பெருநிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கும் பாரியளவிலான நிதி மூலதனத்திலிருந்து இலாபங்களை உருவாக்க, அத்தியாவசியமற்ற துறையிலுள்ள தொழிலாளர்களையும் வேலைக்குத் திரும்புமாறு கோரி வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் நிதியியல் செல்வந்த தட்டுக்களின் இலாபங்களுக்காக தொழிலாளர்களின் ஆரோக்கியத்தையும் வாழ்வையும் தியாகம் செய்துவிட்டது.

ஸ்பெயின், பிரிட்டன் மற்றும் பிரான்சிலுள்ள அதிகாரிகள் அதிகரித்தளவில் கோபம் மற்றும் அச்சத்திலுள்ள மக்களிடையே இழந்துவிட்ட நம்பிக்கையை மீட்டமைக்கும் ஒரு முயற்சியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் இரவு நேர ஊரடங்குகள் அல்லது ஒன்று கூடுவதன் மீதான கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றனர். ஆனால் மாட்ரிட்டில் இருந்து மார்சைய், பாரீஸ் மற்றும் லிவர்பூல் வரையில், இந்த ஊரடங்குகள் ஒரு விடயத்தைப் பொதுவாக கொண்டுள்ளன: அதுவாவது, தொழிலாளர்களும் இளைஞர்களும் பெரும் பெரும்பான்மை நோய்தொற்று ஏற்படும் இடங்களான வேலையிடத்திற்கும் பள்ளிக்கும் முன்னர் போல அவர்கள் செல்ல வேண்டுமென அவை நிர்பந்திக்கின்றன. இந்த கொள்கையால், புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிவேகமாக உயரும்.

வடக்கு அரைக்கோளம் குளிர்காலத்தை நோக்கி நகர்கையில் —இந்த பருவக்காலத்தில் மக்கள் குறைவான காற்றோட்டம் உள்ள பகுதிகளில் உள்ளே இருப்பார்கள் என்பதுடன் கோவிட்-19 போன்ற நோய்கள் வேகமாக பரவி பெரும்பாலானவர்களைக் கொல்லக்கூடும் என்கின்ற நிலையில்— ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் ஒரு பேரழிவு அதிகரித்து வருகிறது.

ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியில் அணித்திரட்டுவதன் மூலமாக மட்டுமே மிகவும் மோசமான விளைவுகளைத் தடுக்க முடியும். உண்மையில், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான தலையீடு மட்டுந்தான் கடந்த வசந்தகாலத்தில் ஐரோப்பாவில் சமூக அடைப்பு கொள்கைகளை ஏற்க நிர்பந்தித்தது, இது மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றி இருப்பதாக தொற்றுநோய் நிபுணர்கள் மதிப்பிடுகிறார்கள். பியட் நிறுவனத்தின் Pomigliano வாகன உற்பத்தி ஆலையில் தொடங்கி, இத்தாலியிலும் ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளிலும் எஃகு, பொறியியல் மற்றும் உணவு பதப்படுத்தும் ஆலைகளுக்குப் பரவிய தன்னிச்சையான வேலைநிறுத்தங்கள் சர்வதேச வினியோக சங்கிலிகளை முடக்கி, வீட்டிலேயே இருக்கும் உத்தரவுகளைப் பிறப்பிக்க ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களை நிர்பந்தித்தது.

ஐரோப்பாவில் 230,000 க்கும் அதிகமான உயிரிழப்புகள் உள்ளடங்கலாக உலகெங்கிலும் 1 மில்லியனுக்கும் அதிகமான கோவிட்-19 உயிரிழப்புகளுக்குப் பின்னர், வெடிப்பார்ந்த சமூக எதிர்ப்பு கட்டமைந்து வருகிறது. கிரீஸ் மற்றும் போலாந்தில் பள்ளிக்குத் திரும்ப செய்யும் கொள்கைகளுக்கு எதிராக பாரிய இளைஞர் போராட்டங்கள் வெடித்துள்ளன, இத்துடன் ஸ்பெயின் மற்றும் பிரான்சில் செவிலியர்களின் வேலைநிறுத்தங்கள் இந்த தொற்றுநோயைக் கையாள அதிக ஆதாரவளங்களையும் நல்ல சம்பளத்தையும் கோரி வருகின்றன. உலகெங்கிலுமான அரசாங்கங்கள் ஏற்றுள்ள "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கைகளை சுகாதாரத்துறை தொழிலாளர்களும் தொழில்துறை நிபுணர்களும் கண்டித்து வருகின்றனர், இதைக் குறித்து சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பிரிட்டனின் மருத்துவ சஞ்சிகை Lancet குழப்பத்திற்கிடமின்றி மிகக் கடுமையான விமர்சனத்தை வைத்திருந்தது.

Lancet குறிப்பிடுகையில், “இரண்டாம் அலை வந்திருப்பதும் வரவிருக்கும் சவால்களை உணர்ந்து கொண்டிருப்பதும் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் அணுகுமுறை என்றழைக்கப்படும் புதுப்பிக்கப்பட்ட ஆர்வத்திற்கு இட்டுச் சென்றுள்ளது, இது பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாக்கும் அதேவேளையில் குறைந்தளவே இந்த அபாயத்திற்கு உட்படும் மக்களிடையே மிகப்பெரியளவில் கட்டுப்பாடின்றி நோய் பரவுவதை அனுமதிக்க அறிவுத்துகிறது. இது குறைந்தளவே இந்த அபாயத்திற்கு உட்படும் மக்களிடையே நோய்தொற்று ஏற்பட்டு அவர்களின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இட்டுச் செல்லும் என்றும், இதன் விளைவாக பாதிக்கப்படக்கூடியவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்றும் அதன் ஆதரவாளர்கள் அறிவுறுத்துகின்றனர். இது விஞ்ஞானபூர்வ ஆதாரத்தின் ஆதரவில்லாத ஓர் அபாயகரமான பிதற்றலாகும்,” என்று குறிப்பிட்டது.

“இளைஞர்களிடையே கட்டுப்பாடின்றி பரவுவது குறிப்பிடத்தக்களவில் ஒட்டுமொத்த மக்களின் ஆரோக்கியத்தன்மையையும் ஆயுள்காலத்தையும் ஆபத்திற்குட்படுகிறது,” என்று Lancet எச்சரித்தது. இது "நீடித்த மற்றும் வழமையான கவனிப்பை வழங்குவதற்கான மருத்துவ அமைப்புமுறையின் ஆற்றலை மூழ்கடித்துவிட" அச்சுறுத்துவதுடன், “தொற்றுநோயின் மறுஎழுச்சியை" உறுதிப்படுத்தும், மற்றும் "இந்த தொற்றுநோயால் ஏற்கனவே அப்பட்டமாக எடுத்துக்காட்டப்பட்ட … சமூகபொருளாதார சமத்துவமின்மையை இன்னும் கூடுதலாக தீவிரப்படுத்தும் அபாயத்தை" ஏற்படுத்துகிறது என்பதையும் அந்த சஞ்சிகை சேர்த்துக் கொண்டது.

இந்தாண்டின் தொடக்கத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டிலேயே தங்கியிருக்கும் நடைமுறை "இறப்பு விகிதத்தைக் குறைக்கவும், மருத்துவக் கவனிப்பு சேவைகள் நிரம்பி வழிவதிலிருந்து தடுக்கவும், சமூக அடைப்பைத் தொடர்ந்து பரவலைத் தடுக்கும் விதத்தில் தொற்றுநோய் விடையிறுப்பு முறைகளை அமைப்பதற்கான அவகாசத்தைப் பெறுவதற்குமாக" இருந்தன.

ஐரோப்பா எங்கிலும் இந்த வசந்தகாலத்தில் தொடங்கிய சமூக அடைப்புகளுக்கு ஏழு மாதங்களுக்குப் பின்னர், இந்த வைரஸை எதிர்த்து போராடுவதற்கான ஒரே விஞ்ஞானபூர்வ கொள்கையாக உள்ள பரிசோதனை, தனிமைப்படுத்தல் மற்றும் நோய்தொற்று ஏற்பட்டவர்களை தொடர்தல், பொது சுகாதார அமைப்புமுறையில் பாரியளவில் முதலீடுகள் ஆகியவற்றுடன் சேர்ந்து, அத்தியாவசியமற்ற வணிகங்கங்களை அடைப்பது என அங்கே எந்த கேள்வியும் இப்போது இல்லை. என்ன தெளிவு செய்ய வேண்டியுள்ளது என்றால் நிஜமாகவே கொடூரமான உயிரிழப்புகளைத் தடுக்க தொழிலாள வர்க்கத்தினுள் அதிகரித்து வரும் எதிர்ப்பை ஒரு நனவுபூர்வமான போராட்டத்தில் திருப்பும் அரசியல் வேலைத்திட்டமாகும். சர்வதேச ஒற்றுமை மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவதன் மூலமாக மட்டுமே ஒரு விஞ்ஞானபூர்வ கொள்கையை நடைமுறைப்படுத்தத முடியும்.

முதலாளித்துவ சொத்துக்கள் மீது பாரியளவில், புரட்சிகரமாக தாக்குதல் தொடுப்பதன் மூலமாக மட்டுமே கோவிட்-19 சம்பந்தமாக ஒரு படுகொலை கொள்கைக்கு உத்தரவிட்டுள்ள பலமாக வேரோடிய பொருளாதார நலன்களைக் கடந்து செல்ல முடியும். ஐரோப்பிய அரசாங்கங்களின் வேலைக்குத் திரும்புவதற்கான, பள்ளிக்குத் திரும்புவதற்கான கொள்கை, பொய்களின் அடிப்படையில் நிதியியல் பிரபுத்துவத்தால் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீது திணிக்கப்படும் ஒரு பொய்யான, விஞ்ஞானத்திற்குப் புறம்பான கொள்கையாகும் என்பதே Lancet கட்டுரையிலிருந்து கிடைக்கும் தவிர்க்கவியலாத தீர்மானமாக உள்ளது.

அவர்களின் கொள்கைகள் பாரிய மரணங்களுக்கு இட்டுச் செல்லும் என்பது ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கு தெரியும். மார்ச் மாதம், வேலைநிறுத்தங்கள் அவர்களை சமூக அடைப்புகளை மேற்கொள்ள நிர்பந்தித்த போது, ஜேர்மன் உள்நாட்டு அமைச்சகம், அவசரகால நடவடிக்கைகள் இல்லாவிட்டால் கோவிட்-19 ஆல் 2020 இல் "1 மில்லியனுக்கும் அதிகமான" ஜேர்மானியர்கள் உயிரிழக்க நேரிடும் என்று ஒரு விரிவான அறிக்கையைத் தயார் செய்தது. நூறாயிரக் கணக்கான உயிரிழப்புகள் குறித்து உயர்மட்ட இரகசிய எச்சரிக்கைகளைக் கேள்விப்பட்டதாக பிரெஞ்சு தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் அதிகாரிகளுக்குக் கூறப்பட்டதாக செய்திகள் அறிவித்தன. ஆனால் ஐரோப்பிய ஒன்றிய வங்கிகளும் அரசாங்கங்களும் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் திரும்ப அழுத்தமளிக்கவும் மற்றும் இலாப ஓட்டங்களை மீண்டும் தொடங்கவும் இந்த எச்சரிக்கைகள் எல்லாம் மக்களிடம் இருந்து மறைக்கப்பட்டு, ஊடகங்களால் புதைக்கப்பட்டன.

ஜேர்மனியில் இடது கட்சி, ஸ்பெயினில் பொடெமோஸ், அல்லது பிரான்சில் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி போன்ற தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் தொடர்புடைய நடுத்தர வர்க்க கட்சிகளும் ஐரோப்பாவின் தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் இந்த குற்றகரமான கொள்கையில் உடந்தையாய் உள்ளன. இந்த குளிர்காலத்தில் தொழிலாளர்களை அணித்திரட்ட எதுவும் செய்யாமல், அவை வேலைக்குத் திரும்புவதற்கான கொள்கையை நடைமுறைப்படுத்த உதவின. ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்புகளை ஆமோதித்து இந்த கோடையில் ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் ஓர் அறிக்கையில் கையெழுத்திட்ட பின்னர், பிணையெடுப்புக்கான பில்லியன் கணக்கிலான நிதியானது வங்கிகள் மற்றும் தொழில் கவுன்சில்கள் மூலமாக அவர்களின் பங்குத்துறைகளிலும் தொழிற்சங்க கஜானாக்களுக்கு உள்ளேயும் பாயும் என்று எதிர்பார்க்கின்றன, அதேவேளையில் இது ஆயிரக் கணக்கான அல்லது மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் உயிரிழக்க விடப்படுவார்கள்.

ஆளும் வர்க்கத்தின் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கைகளை எதிர்க்க தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, தொழிலாளர்களும் இளைஞர்களும் வேலையிடங்களிலும் பள்ளிகளிலும் பாதுகாப்பு குழுக்களை அமைக்குமாறு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரிவுகள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த வைரஸ் மக்களிடையே பரவி வருகையில், பாரிய நோய்தொற்று மற்றும் மரணங்களுக்கான நிதியியல் செல்வந்த தட்டுக்களின் மூலோபாயத்தை எதிர்க்க ஒருமித்த ஒரு புரட்சிகர மூலோபாயம் இல்லாமல் தனிப்பட்ட வேலையிடங்களிலும் அல்லது பள்ளிகளிலும் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை பாதுகாப்பதென்பது சாத்தியமில்லை.

இதற்கு, பெருந்திரளான மக்களிடையே அரசியல் அடித்தளத்தை அமைக்கவும், ஒருங்கிணைக்கப்பட்ட வேலைநிறுத்த நடவடிக்கைகள், திட்டமிட்ட எதிர்ப்பைக் காட்டவும், கோவிட்-19 க்கு எதிராக விஞ்ஞானபூர்வமாக மனிதாபிமானத்துடன் போராடுவதற்கு அவசியமான ஆதாரவளங்களைப் பறிமுதல் செய்வதற்காக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் புரட்சிகர தலைமையாக ICFI ஐ கட்டமைப்பது அவசியமாகும். இதில் செயல்பட முடியாமல் போகும் சிறு வணிகங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு நிதியளிப்பதுடன் சேர்ந்து, இளைஞர்கள் மற்றும் அனைத்து அத்தியாவசியமற்ற துறையின் தொழிலாளர்களையும் வீட்டிலேயே தங்கியிருக்க செய்யும் கொள்கையையும் உள்ளடக்கி உள்ளது. இது, ஐரோப்பிய ஒன்றியத்தைக் கீழிறக்கி ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளைக் கொண்டு அதைப் பிரதியீடு செய்ய தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர போராட்டத்தைக் கோருகிறது.

Alex Lantier