கிரேட் பாரிங்டன் பிரகடனம்: ஒரு மரண அறிக்கை

17 October 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மக்களிடையே பாரியளவில் நோய்தொற்று ஏற்படுவது சாதகமான நன்மையே என நடைமுறையளவில் அறிவித்து, இந்த வாரம், வெள்ளை மாளிகை உத்தியோகபூர்வமாக கோவிட்-19 தொற்றுநோய்க்கு சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையைத் தழுவியது.

இது சுதந்திர சந்தைக்கான அமெரிக்க பொருளாதார ஆய்வு மையத்தின் ஒரு பிரகடனமான கிரேட் பாரிங்டன் பிரகடனத்தில் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளும் வடிவம் எடுத்தது. இந்த பிரகடனம் இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடைமுறைகளையும் கைவிட அழைப்பு விடுகிறது. இந்த பிரகடனம், ட்ரம்ப் ஆலோசகர் ஸ்காட் அட்லாஸ் (Scott Atlas) உடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தது.

இந்த எட்டு பத்தி பிரகடனம் எந்த விஞ்ஞானபூர்வ புள்ளிவிபரங்களையும் மேற்கோளிடவில்லை என்பதுடன், அதன் விடயத்தை வாதிட எந்த ஆழ்ந்த முயற்சியும் செய்யவில்லை. அதற்கு பதிலாக அது இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான பொது சுகாதார நடவடிக்கைகளைக் கைவிட, முன்னர் அமெரிக்க பெருவணிகங்கள் கோரும் கோரிக்கையிலிருந்து கட்டமைக்கப்பட்ட பல வலியுறுத்தல்களாக உள்ளது: “நேரடியாக கல்வி கற்பிப்பதற்காக பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் திறக்கப்பட வேண்டும். விளையாட்டுக்கள் போன்ற கூடுதல் பாடக் கல்வியும் மீண்டும் தொடங்கப்பட வேண்டும். குறைந்தளவே பாதிக்கப்படும் பருவ வயதடைந்த இளைஞர்கள் வீட்டில் இருப்பதை விட வழமையாக வேலையைத் தொடங்க வேண்டும். உணவு விடுதிகளும் மற்ற வணிகங்களும் திறக்கப்பட வேண்டும். கலைகளும், இசை, விளையாட்டு மற்றும் ஏனைய கலாச்சார நடவடிக்கைகளும் மீண்டும் தொடங்கப்பட வேண்டும்,” என்று குறிப்பிட்டது.

பரிசோதனையில் இருந்து நோயின் தடம் பின்தொடர்தல் வரையில் நோயுற்றவர்களைத் தனிமைப்படுத்துவது வரையில், இந்த நோயைக் கட்டுப்படுத்த எந்த பொது சுகாதார நடவடிக்கைகளையும் இந்த ஆவணம் குறிப்பிடவில்லை. இது தவறுதலாக விடப்பட்டவை அல்ல, வேண்டுமென்றே விடப்பட்டவை. ஏனெனில், அக்கட்டுரை ஆசிரியர்களின் நிலைப்பாட்டிலிருந்து, பாரிய நோய்தொற்றும், அதைத் தொடர்ந்து ஏற்படும் பாரிய உயிரிழப்புகளும், தேவைப்படும் ஒரு ஆதாயமாக உள்ளன.

நிர்வாகத்தின் கொள்கை உண்மையில் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கையா என்று நேற்றிரவு டவுன் ஹாலில் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. “பிரச்சினையை விட குணப்படுத்தல் மோசமாக இருந்துவிடக் கூடாது" என்று நியூ யோர்க் டைம்ஸில் தோமஸ் பிரெட்மன் முதலில் முன்மொழிந்த மந்திரத்தையே — அதாவது வைரஸ் பரவலைக் குறைக்கும் நோக்கில் பொருளாதார நடவடிக்கை மீதான கட்டுப்பாடுகளுக்கு திரும்பக்கூடாது என்பதை மீண்டும் எடுத்துரைத்து தெளிவுபடுத்தியதன் மூலமாக ட்ரம்ப் விடையிறுத்தார்.

“சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கத்தை" உத்தியோகபூர்வமாக தழுவுவதானது, வெள்ளை மாளிகை, பரிசோதனை முயற்சிகளை நாசப்படுத்தி வருகிறது என்பதையும், பாதுகாப்பு உபகரணங்களை வழங்க அது தவறுகிறது, மற்றும் பொதுமக்களை வேண்டுமென்றே அது தவறாக வழிநடத்துவதானது "பொருளாதாரத்திற்காக" மனித உயிர்களைத் தியாகம் செய்ய மொத்தத்தில் வேண்டுமென்றே வடிவமைக்கப்பட்டது என்பதையும் ஒப்புக்கொள்வதாகும்.

மிக முக்கியமாக, வெள்ளை மாளிகை அந்த ஆவணத்தைத் தழுவியமை பாரிய மனிதப்படுகொலைக்கான கருத்தூன்றிய ஓர் அறிக்கையாகும். அந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக வணிகங்களை அடைத்ததையும் மற்றும் ஏனைய முயற்சிகளையும் காலத்திற்கு முந்தியே கைவிட்டதால் உலகளவில் அந்நோய் மீண்டும் எழுந்திருப்பதற்கு மத்தியில் இன்னும் நூறாயிரக் கணக்கான மக்கள் உயிரிழப்பதை அனுமதிக்க அது திட்டமிடுகிறது.

இந்த "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" மூலோபாயம் உலகின் முன்னணி பொது சுகாதார அமைப்புகளிடம் இருந்து சரியான விதத்தில் கடுமையான கண்டனங்களை ஈர்த்துள்ளது. அக்டோபர் 15 இல், பிரிட்டிஷ் மருத்துவ சஞ்சிகை Lancet “விஞ்ஞான ஆதாரத்தால் ஆதரிக்கப்படாத அபாயகரமான பிழை" என்பதாக அந்த கொள்கைகயைக் கண்டித்து ஓர் அறிக்கை வெளியிட்டது.

“இயற்கையான நோய்தொற்றைத் தொடர்ந்து SARS-COV-2 க்கு ஆண்டுக்கணக்கில் பாதுகாப்பான நோயெதிர்ப்பு சக்தி பெருக்கம் செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை,” என்று அது வாதிட்டது. ஆகவே, “இதுபோன்றவொரு மூலோபாயம் கோவிட்-19 தொற்றுநோயைத் தடுத்துவிடாது, மாறாக மீண்டும் உயிர்கொல்லிகள் எழுவதிலேயே போய் முடியும், இதுதான் தடுப்பூசி வருவதற்கு முன்னர் எண்ணற்ற தொற்றுநோய்களிலும் நடந்திருந்தது,” என்று அந்த அறிக்கை வாதிட்டது.

“ஆதாரம் மிகவும் தெளிவாக உள்ளது: அதாவது, வரவிருக்கும் மாதங்களில் நடைமுறையளவில் பாதுகாப்பான தடுப்பூசிகளும் மருத்துவ முறைகளும் வரும் வரையில் நமது சமூகங்களையும் பொருளாதாரத்தையும் பாதுகாக்க, சமூகத்தில் கோவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்துவதே சிறந்த வழி,” என்று Lancet இறுதியில் திட்டவட்டமாக எடுத்துரைத்தது.

Lancet இன் இந்த அறிக்கை, பெரு நகரங்களின் சுகாதாரத்துறை கூட்டணி மற்றும் அமெரிக்க பொது சுகாதார அமைப்பு உட்பட 17 முன்னணி பொது சுகாதார அமைப்புகளின் முந்தைய ஒரு அறிக்கையைத் தொடர்ந்து வந்திருந்தது. அவை குறிப்பிடுகையில், “கிரேட் பாரிங்டன் பிரகடனத்ததின் பரிந்துரைகள் பின்தொடரப்பட்டால், கவனக்குறைவாகவும் அவசியமின்றியும் உயிர்களைத் தியாகம் செய்ய வேண்டியிருக்கும். இந்த பிரகடனம் ஒரு மூலோபாயம் அல்ல, இதுவொரு அரசியல் அறிக்கை. இது பொது சுகாதாரத்துறை வல்லுனர்களின் குரல்களைப் புறக்கணிக்கிறது,” என்றன.

“சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கத்திற்கு நாம் நெடுந்தூரத்தில் கூட நெருக்கமாக உள்ளோம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதற்கு முரணாக, அமெரிக்க மக்களில் 85 இல் இருந்து 90 சதவீதம் பேர் இன்னமும் SARS-COV-2 தொற்று அபாயத்தில் இருப்பதாக வல்லுனர்கள் நம்புகின்றனர்,” என்று பொது சுகாதாரத்துறை அமைப்புகளின் அறிக்கை நிறைவு செய்கிறது.

“நோர்டிக் நாடுகளிலேயே மிக அதிகபட்ச இறப்பு விகிதம் கொண்ட சுவீடன் போன்ற நாடுகளில் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையின் பரிசோதனை தோல்வி அடைந்திருப்பதை நாம் பார்த்துள்ளோம்,” என்று குறிப்பிட்ட அது, “இந்தளவுக்கு பல உயிர்கள் பணயத்தில் இருக்கையில் பொது சுகாதார மற்றும் விஞ்ஞான ஆதாரங்களைப் புறக்கணிப்பது பொருந்தா வாதமாக உள்ளது,” என்பதையும் சேர்த்து நிறைவு செய்தது.

வாண்டர்பெல்ட் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் நிபுணர் டாக்டர் William Schaffner தெளிவுபடுத்தியதைப் போல, அமெரிக்கா அதன் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையைத் தொடர்ந்தால் எத்தனை பேர் உயிரிழப்பார்கள் என்பதற்கு "ஒரு நேர்த்தியான பகுத்தறிவார்ந்த பக்கவாட்டு கணக்கீட்டின்படி இரண்டு மில்லியனில் இருந்து 6 மில்லியன் உயிரிழப்புகளாக உள்ளன.”

வெள்ளை மாளிகை பகிரங்கமாக சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையைத் தழுவுவது முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களால் தொழிலாள வர்க்கம் மீது தொடுக்கப்படும் ஒரு போர் பிரகடனமாக உள்ளது. மனித உயிர்கள் அனைத்தும் மதிப்புடையன என்ற பாசாங்குத்தனத்தைக் கூட இனி முதலாளித்துவம் அனுசரிக்காது என்பதை இது தெளிவுபடுத்துகிறது. வைரஸ் வேகமாக பரவி வரும் வேலையிடங்களுக்குத் திரும்ப தொழிலாளர்கள் திருப்தியடையவில்லை என்றால், அவர்கள் பொருளாதார நிர்பந்தங்கள் மூலமாகவும் அல்லது அதிவலது மற்றும் அரச வன்முறை மூலமாகவும் அதை செய்ய நிர்பந்திக்கப்படுவார்கள்.

இதனால் தான் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கத்தின்" ஊக்குவிப்பானது, மத்திய அரசின் அவசரகால உதவி அனைத்தையும் வெட்டுவதுடனும், கட்டண நிறுத்தங்கள் மற்றும் வெளியேற்றங்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்குவதுடன் சேர்ந்துள்ளது. மற்றொரு பொருளாதார உதவிப்பொதியை நிறைவேற்றுவதில் அவர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதை இரண்டு கட்சிகளின் தலைவர்களும் இந்த வாரம் தெளிவுப்படுத்தி இருந்த அதேவேளையில், மாநிலங்கள் ஒன்று மாற்றி ஒன்று பாதிக்கப்படக்கூடிய தொழிலாளர்களுக்கான எல்லா பாதுகாப்புகளையும் கைவிட்டு வருகின்றன.

மிச்சிகன் ஆளுநர் கெரெட்சென் விட்மெர் மற்றும் வேர்ஜினியா ஆளுநர் ரால்ஃப் நோர்தமைக் கொல்ல போராளிகள் குழுக்களது பெரிதும் முன்னேறிய நிலையிலிருந்த சதித்திட்டம் குறித்து கடந்த வாரம் வெளியான நிலையில், பாசிசவாத அமைப்புகளை அணித்திரட்டுவது நிதியியல் செல்வந்த தட்டுக்களின் கொள்கையை அமலாக்குவதில் ஒரு அவசியமான ஆயுதம் என்பதாக ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவு பார்க்கிறது என்பது தெளிவாகிறது.

பாரிய நோய்தொற்று கொள்கையை ட்ரம்ப் நிர்வாகம் முன்னெடுத்துள்ள அதேவேளையில், அது ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்தின் பரந்த ஆதரவைப் பெற்றுள்ளது. இந்த தொற்றுநோய்க்கு அவர் எவ்வாறு விடையிறுக்க உள்ளார் என்று பைடெனிடம் வியாழக்கிழமை இரவு டவுன் ஹாலில் கேட்கப்பட்ட போது, வணிகங்கள் மற்றும் பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதிக்க, அவசியப்படும் இன்னும் கூடுதல் ஆதாரவளங்களைக் கிடைக்குமாறு செய்யப்படும் என்று மட்டுமே பதிலளித்தார். இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஜனநாயகக் கட்சியினர் எந்த நடவடிக்கைகளையும் முன்மொழியவில்லை, மேலும் பைடென் மீண்டும் எந்தவொரு "அடைப்புக்கும்", அதாவது தொழிலாளர்களைப் பாதுகாக்க அத்தியாவசியமல்லாத உற்பத்தியை நிறுத்துவதை இது அர்த்தப்படுத்துகின்ற நிலையில், அதற்கு திரும்புவதையும் நிராகரித்தார்.

ஜனநாயகக் கட்சியைச் சுற்றியுள்ள போலி-இடது அமைப்புகளைப் பொறுத்த வரையில், அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளுடன் இணைந்த ஜாகோபின் சஞ்சிகை, “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கம்" “இடதுசாரி" நிலைப்பாடு என்று அபத்தமாக வாதிட்ட, கிரேட் பாரிங்டன் பிரகடனத்தின் முன்னணி ஆசிரியர்களில் ஒருவரான Martin Kulldorff ஐ பகிரங்கமாக பாராட்டி இருந்தது.

“சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கை முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களுக்கு உள்ளே மட்டும் ஆதரவைக் காணவில்லை, மாறாக உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகளிலும் ஆதரவைப் பெற்றுள்ளது என்ற உண்மை, இந்த சமூக அடுக்கின் ஆழ்ந்த நோக்குநிலை பிறழ்வைப் பேசுகிறது. 1930 களைப் போலவே, பிரளயகரமான சம்பவங்களால் நோக்குநிலை பிறழ்ந்து மார்க்சிசத்திற்கு விரோதமாக உள்ள நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகள், “மரண வழிபாட்டை" நோக்கியும், பாசிச இயக்கங்கள் உள்ளடக்கியுள்ள வன்முறையை நோக்கியும் ஈர்க்கப்பட்டு வருகிறார்கள்.

உலகெங்கிலுமான தொழிலாளர்கள் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் ஆளும் வர்க்க கொள்கையை எதிர்ப்பதில் பொது சுகாதாரத்துறை வல்லுனர்கள் எடுத்துள்ள ஆணித்தரமான மற்றும் தைரியமான நிலைப்பாட்டை வரவேற்க வேண்டும். ஆனால் இந்த போராட்டத்தை வாக்குவாதங்கள் மூலமாக வென்றெடுக்க முடியாது.

மக்களிடையே பாரிய நோய்தொற்றை அனுமதிப்பதற்கான ஆளும் வர்க்கத்தின் முனைவை வன்முறை மூலமாக மட்டுமே திணிக்க முடியும். இதற்கு விடையிறுத்து, இந்த மனிதப்படுகொலை கொள்கையை எதிர்ப்பதில் தொழிலாள வர்க்கம் அதன் சொந்த சமூக மற்றும் அரசியல் பலத்தை அணித்திரட்ட வேண்டும்.

தொழிலாளர்கள் அவர்களின் சொந்த சுகாதார மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான போராட்டத்தில், அவர்கள் ஒவ்வொரு ஆலையிலும் வேலையிடத்திலும் சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்க வேண்டும். இந்த தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் என்பது, அடிப்படையில் மருத்துவம் சார்ந்த போராட்டம் மட்டுமல்ல, மாறாக சமூகத்தில் சோசலிச மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான போராட்டத்தில் பிரிக்கவியலாத, ஓர் அரசியல் போராட்டமாகும்.

Andre Damon