பயங்கரவாத கொலைக்குப் பின்னர், மக்ரோன் முஸ்லீம்-விரோத "கருத்துச் சுதந்திர" வஞ்சகத்தனத்தை ஊக்குவிக்கிறார்

Will Morrow
20 October 2020

மொழிபெர்ப்பின்மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பாரிஸ் அருகே வெள்ளிக்கிழமை பிற்பகல் பயங்கரவாத தாக்குதலில் ஒரு ஆசிரியர் கொல்லப்பட்ட 48 மணி நேரத்திற்குள், முழு பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகமும் பலப்படுத்தப்பட்ட முஸ்லீம்-விரோத சட்டங்களுக்குப் பின்னால் “தேசிய ஐக்கியத்திற்காக” ஒரு பிரச்சாரத்தில் இணைந்து கொண்டுள்ளது.

ஒரு நடுநிலைப் பள்ளியின் புவியியல் ஆசிரியரான சாமுவேல் பட்டி, பாரிஸின் வடமேற்கிலுள்ள Yvelines பகுதியிலுள்ள Conflans-Sainte-Honorine இல் தனது பள்ளியை விட்டு மாலை 5:00 மணிக்குப் பின்னர் வெளியேறும்போது கொலை செய்யப்பட்டார். தாக்குதல் நடத்தியவர் 2002 ஆண்டில் மாஸ்கோவில் பிறந்த 18 வயது செச்செனியரான, அப்துல்லாக் அன்சோனோவ் என போலீசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடைய குடும்பம் 2011 ஆண்டில் பிரான்சில் அகதி அந்தஸ்தைப் பெற்றது. அன்சோனோவ் 30 செ.மீ கத்தி மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கியுடன் தனது வீட்டிலிருந்து பள்ளிக்கு பொது போக்குவரத்து மூலம் 80 கிலோமீட்டர்கள் பயணம் செய்து, பள்ளி கட்டிடத்திற்கு வெளியே பட்டிக்காக பல மணி நேரம் காத்திருந்தாக கூறப்படுகிறது.

அரை கிலோமீட்டர் தூரம் அவரைப் பின்தொடர்ந்த பின்னர், அன்சோனோவ் பட்டியைத் தாக்கி, பல முறை குத்தி, தெருவில் தலையைத் துண்டித்தார். பொலிசார் வந்தபோது, அன்சோனோவ் அவர்களுடன் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது "அல்லாஹு அக்பர்" என கத்தியதாகக் கூறப்படுகிறது. அவர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.

Macron with French Army Chief of Staff General Pierre de Villiers in 2017 [Credit: Etienne Laurent/Pool Photo via AP, File]

பட்டியின் கொடூரமான கொலை உடனடியாக இமானுவல் மக்ரோனின் நிர்வாகத்தால் அதன் முஸ்லிம் விரோத பிரச்சாரத்தை தீவிரப்படுத்த பயன்படுத்தப்பட்டது. இஸ்லாமிய "பிரிவினைவாதம்" குறித்த ஏற்கனவே முன்மொழியப்பட்ட சட்டத்தின் அவசியத்தை இந்த தாக்குதல் நிரூபிக்கிறது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. டிசம்பர் 9 ந் திகதி பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இச்சட்டம், இப்போது அது மேலும் பலப்படுத்தப்படலாம்.

பெண் பிள்ளைகள் தலைமறைப்பு (headscarf) அணியும் இஸ்லாமிய பள்ளிகளுக்கு ஒரு தடை விதிப்பும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது, ஆனால் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களுக்கு இதே போன்ற கட்டுப்பாடுகள் எதுவும் இதில் இல்லை, மேலும் பிரதமரால் தீர்மானிக்கப்பட்டபடி “குடியரசு மதிப்புக்களை” கடைப்பிடிக்காத எந்தவொரு அமைப்பையும் கலைக்க அரசுக்கு பரந்த அதிகாரங்களை வழங்குகிறது.

பட்டியின் மாணவர்களில் ஒருவரின் தந்தை உட்பட, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோக்களால் அன்சோனோவ் உந்துதல் பெற்றதாகத் தெரிகிறது, ஆசிரியர் இஸ்லாத்தைத் தாக்கியதாகவும் அவரது முஸ்லீம் மாணவர்களை புண்படுத்தினார் என்றும் பாகுபாடு காட்டினார் என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

அக்டோபர் 5 ஆம் திகதி, பட்டி தனது வகுப்பிற்கு கருத்துச் சுதந்திரம் குறித்த வகுப்பு விவாதத்தின் ஒரு பகுதியாக வகுப்பிற்கு, Charlie Hebdo தயாரித்த ஒரு படத்தைக் காண்பிப்பதாக மறுநாள் அறிவித்திருந்தார். அந்தப் பத்திரிகையின் சிறப்பு நிபுணத்துவத்துடன் முஸ்லீம்-விரோத ஆத்திரமூட்டல்களுக்கு பொதுவான முகமதுவின் நிர்வாண உருவப்படமாக இந்தப் படம் இருக்கிறது. படம் புண்படுத்தும் விதமாக இருப்பதைக் கண்டால், மேலும் அவர்கள் விரும்பவில்லை என்றால் அவர்கள் முகத்தைத் திருப்பிக் கொள்ளலாம் அல்லது வகுப்பறையை விட்டு வெளியேறலாம் என்று பட்டி மாணவர்களுக்கு எச்சரித்ததாக கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை மாலை பேசிய இமானுவல் மக்ரோன், தனது அரசாங்கத்தை "குடியரசின் மதிப்புகள்” மற்றும் இஸ்லாமிய அச்சுறுத்தலுக்கு உள்ளான பேச்சுச் சுதந்திரம், ஜனநாயக உரிமைகள் ஆகியவற்றின் தார்மீக பாதுகாவலராக சித்தரிக்க முயன்றார். "இன்றிரவு, ஒரு ஆசிரியர் ஒரு பயங்கரவாதியால் கொல்லப்பட்டார் என்பது தற்செயலானது அல்ல, ஏனென்றால் அவர் குடியரசின் மதிப்புகள், அதன் அறிவொளி, நம் குழந்தைகளை உருவாக்கும் வாய்ப்பு —அவர்கள் எங்கிருந்து வந்தாலும், அவர்கள் எதை நம்புகிறார்கள் அல்லது நம்பவில்லை என்றாலும், அவர்களின் மதம் எதுவாக இருந்தாலும்— சுதந்திர குடிமக்களாக ஆக்குவதற்கு அவர் விரும்பினார். இது எங்கள் போர், அது எமது இருப்புடன் தொடர்புபட்டது” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “அவர்கள் வெற்றிபெற மாட்டார்கள். அதனுடன் வரும் அறிவொளி எதிர்ப்புத் தன்மையும் வன்முறையும் வெற்றிபெறாது, மேலும் “அனைத்து சக குடிமக்களும், இந்த நேரத்தில், ஒரு கூட்டை உருவாக்க, எந்த வேறுபாடும் இல்லாமல் ஒன்றுபட வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார்.

ஜனநாயக மரபுகள் மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கான ஒரு அரணாக தன்னை காட்டிக்கொள்ள மக்ரோன் மேற்கொண்ட முயற்சிகளில் உள்ள வஞ்சகத்தனத்தை விவரிப்பது கடினம். பொலிஸ் வன்முறைக்காக சர்வதேச மனித உரிமை அமைப்புகளால் செய்யப்பட்ட கண்டனங்கள், கலவர அடக்குதல் அதிகாரிகளின் கண்ணீர்ப்புகை குண்டுப் பயன்படுத்துதல் மற்றும இரப்பர் தோட்டாக்களை “மஞ்சள் சீருடை” எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி சுடும் வீடியோ படங்கள் போன்றவற்றிற்காக அவரது அரசாங்கம் நன்கு அறியப்பட்டது. இது சஹேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏகாதிபத்திய போர்களில் ஈடுபட்டுள்ளது, படகு மூலம் ஐரோப்பாவை அடைய முயற்சிக்கும் ஆயிரக்கணக்கான அகதிகளை மத்தியதரைக் கடலில் வேண்டுமென்றே மூழ்கி இறக்க அனுமதிக்கிறது.

"கருத்துச் சுதந்திரத்தை" பொறுத்தவரை, பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்ற யேமன் மக்களுக்கு எதிரான சவுதி அரேபியாவின் குற்றப் போரை ஆதரிப்பதற்காக சட்டவிரோத பிரெஞ்சு ஆயுத விற்பனையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் மீது மக்ரோன் வழக்குத் தொடர்ந்தார். "பிரிவினைவாத எதிர்ப்பு" சட்டம் பிரான்சில் ஒரு நிரந்தர முஸ்லீம் விரோத வெறுப்பு சூழ்நிலையை வளர்த்து வந்த சோசலிஸ்ட் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி அரசாங்கங்களின் துன்புறுத்தல் பிரச்சாரத்தின் சமீபத்தியதாகும். இதில் 2004ல் பொதுப் பள்ளிகளில் இஸ்லாமிய தலைமறைப்பு தடை செய்யப்பட்டது, 2010ல் பொது இடங்களில் பர்தா தடை செய்யப்பட்டதும் உள்ளடங்கும்.

மக்ரோனின் கருத்துக்கள் உடனடியாக அதிவலது தேசிய பேரணி (National Rally) மற்றும் மரின் லு பென் இனால் புலம்பெயர்ந்தோர் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை கோருவதற்காக பயன்படுத்தப்பட்டன. "அவர்கள் வெற்றபெற மாட்டார்கள்" என்ற மக்ரோனின் கருத்துக்கு பதிலளித்த லு பென், "அவர்கள் ஏற்கனவே இங்கே இருக்கிறார்கள்" என்று ட்டுவீட் செய்தார்.

ஜோன்-லூக் மெலோன்சோனின் La France Insoumise (LFI)இலிருந்து சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் குடியரசுக் கட்சியினர் (LR) வரை பரந்து விரிந்துள்ள இந்த முழு அரசியல் ஸ்தாபகமும் மக்ரோனின் "தேசிய ஐக்கியத்திற்கான" வஞ்சகத்தனமான அழைப்பிற்குப் பின்னால் இணைந்து கொண்டுள்ளது.

நேற்று, பிரதமர் ஜோன் காஸ்டெக்ஸ் மற்றும் பிற அரசாங்க அமைச்சர்களுடன் பாரிசில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட ஒரு பேரணியில் கலந்து கொண்டனர். LFI, சோசலிஸ்ட் கட்சி மற்றும் LR உட்பட அனைத்து முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். நாடு முழுவதுலுள்ள முக்கிய நகரங்களில் பல நூறு முதல் பல ஆயிரம் பேர் வரை கலந்து கொண்ட மற்றய பேரணிகள் நடைபெற்றன. அங்கு சாமுவேல் பட்டிக்கு ஆதரவு தெரிவித்து பலர் கலந்து கொண்டனர்.

ஒரு வெறித்தனமான முஸ்லீம்-விரோத சூழ்நிலையை தூண்டிவிட்டு, எப்போதும்போல, ஆளும் வர்க்கம் அதன் பிற்போக்குத்தனக் கொள்கைகளுக்கு ஆதரவைப் பெறுவதற்காக மக்களின் நியாயமான சீற்றத்தை சுரண்ட முயற்சிக்கிறது.

Le Parisien உடனான ஒரு நேர்காணலில், பிரான்சின் சோசலிச கட்சியின் முன்னாள் பிரதம மந்திரி பேர்னார்ட் கசெனேவ் (Bernard Cazeneuve), இந்தத் தாக்குதலை "தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் நகராட்சித் தேர்தல்களில் வாக்குகளைப் பெற தங்களை சமரசம் செய்துகொண்ட சில அரசியல் அமைப்புகள்", என்றும் அதேபோல் "இஸ்லாமிய - இடதுசாரிவாதம், குடியரசுக்கு வெறுப்பைக்கூற அல்ல, மாறாக, ஒரு வெறுப்பைக் கொண்ட சில வகுப்புவாத அமைப்புக்களைக் கண்ணுற்றது" என்றும் தாக்குதலை குற்றஞ்சாட்டினர்.

பிரான்சுவா ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் முன்னாள் உள்துறை மந்திரி மானுவல் வால்ஸ், அதிவலது விமர்சகர் செலின் பியாவின் ஒரு ட்டுவீட்டைப் பகிர்ந்து கொண்டார், அப்பெண்மணி பாரிஸ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார் என்று அறிவித்தார், ஏனெனில் அமைப்பாளர்கள் "இஸ்லாமிய-இடதுவாதங்களில் மூழ்கியிருக்கும் இடதை பெரும்பாலும் சேர்ந்தவர்கள்." பியாவின் பல கருத்துக்களுடன் “நிறைய பகிர்ந்து கொள்கிறேன்" ஆயினும்கூட பேரணியில் கலந்து கொள்வேன் என வால்ஸ் கூறினார். பிரான்சில் இஸ்லாமிய வெறுப்பிற்கு எதிரான கூட்டு (Collective against Islamophobia) என்ற சட்டபூர்வ அமைப்பு கலைக்கப்பட வேண்டும் என்று அவர் ட்டுவீட் செய்தார்.

சனிக்கிழமையன்று BFM TV க்கு அளித்த பேட்டியில், ஜோன்-லூக் மெலன்சோன் வெள்ளிக்கிழமை பயங்கரவாத தாக்குதலை, செச்சினியாவைச் சேர்ந்தவர்களை தொடர்பு கொண்டுள்ளது என்ற அடிப்படையில் டிஜோனில் சமீபத்திய மாதங்களில் தொடர்ச்சியான கும்பல் தொடர்பான சம்பவங்களுடன் இரண்டையும் தொடர்புபடுத்தினார். ஒரு தேசிய "கூட்டுக்கு" மக்ரோனின் அழைப்பை அவர் ஆதரிப்பாரா என்று கேட்கப்பட்டதற்கு, மெலன்சோன் பதிலளித்தார்: அதாவது "நிச்சயமாக ... தேசியத் தலைவர் தேசிய ஐக்கியத்திற்கு அழைப்பு விடுத்தால், அவர் ஒரு பயனுள்ள வேண்டுகோளை விடுக்கிறார், ஏனெனில் பயங்கரவாதிகளின் நோக்கம் எங்களை பிளவுபடுத்துவதாகும்" என்று கூறினார்.

மக்ரோனின் முஸ்லீம்-விரோத சட்டத்தை ஆதரிப்பதற்கு தான் முடிவு செய்திருப்பதாகவும் மெலோன்சோன் மேலும் கூறினார்: "வரும் அடுத்த சட்டமாக, மதச்சார்பின்மையை வலுப்படுத்துவதற்கான சட்டம் என்று அழைக்கப்படுவதால், இந்த மக்கள் தங்களை குழுவாக்கம் செய்யும் சாத்தியத்தை நசுக்குவதற்கான திறமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்."

பட்டியின் கொலை எவ்வாறு நிகழ முடிந்தது என்பது குறித்து பதிலளிக்கப்படாத பல கேள்விகள் உள்ளன. கொலைக்கு ஒரு வாரத்திற்கு மேலாக அவர் ஒரு தீவிர சமூக ஊடக பிரச்சாரத்தின் இலக்காக இருந்தார். அதே மாணவரின் தந்தை, பட்டிக்கு எதிராக ஆபாசப் படங்களைப் பகிர்ந்ததற்காக சட்டரீதியாகப் புகார் அளித்திருந்தார். அதற்கு பொது அவதூறு குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்ததன் மூலம் பட்டி அதற்குப் பதிலளித்தார்.

பிரெஞ்சு உளவுத்துறை உன்னிப்பாகக் கவனிக்கும் இஸ்லாமிவாதியான அப்துல்ஹாக்கிம் செஃப்ரிவீ (Abdelhakim Sefrioui), பட்டியின் இராஜினாமாவுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்தார் மற்றும் பல வீடியோக்களில் அவரைக் கண்டித்தார். ஆயினும் பட்டி அல்லது பள்ளியின் பாதுகாப்பிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. பிரான்சில் தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதல்களில், தாக்குதலுக்கு முன்னர் தாக்குதல் நடத்தியவர்கள் பிரெஞ்சு உளவுத்துறையால் அறியப்பட்டவர்கள் அல்லது கண்காணிக்கப்பட்டனர் என்பது வெளிப்பட்டிருக்கிறது.