ட்ரம்ப் நிர்வாகம், கொரோனா வைரஸ் குறித்து செல்வந்த முதலீட்டாளர்களை எச்சரிக்கும் அதேவேளை, பொதுவில் அதன் அச்சுறுத்தலை குறைத்துக் காட்டுகிறது

Jacob Crosse
20 October 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஹெட்ஜ் நிதி ஆலோசகரால் நியூ யோர்க் டைம்ஸூக்கு கசியவிடப்பட்ட ஒரு குறிப்பாணை, கொரோனா வைரஸால் பொதுமக்களுக்கு ஆபத்து எதுவுமில்லை என்று பெப்ரவரியில் ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்த அதேவேளை, வெள்ளை மாளிகை அதிகாரிகள் இந்த தொற்றுநோய் நிச்சயமற்ற பரிமாணங்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது என்று நிர்வாகத்தின் செல்வந்த ஆதரவாளர்களுக்கு தெரிவித்தனர், இது முதலீட்டின் பங்குகளை அவர்கள் குறுகியகாலத்தில் விற்று, பங்குச் சந்தையிலிருந்து அதன் வீழ்ச்சிக்கு முன்னர் தங்களது இலாபத்தை எடுத்துக்கொள்ள பல முதலீட்டாளர்களை முடிவெடுக்கத் தூண்டியது எனத் தெரிவித்தது.

இந்த குறிப்பாணை, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கெல்லி லோஃப்லர் (ஜோர்ஜியா), ஜேம்ஸ் இன்ஹோஃப் (ஓக்லஹோமா), ரிச்சர்ட் பர் (வடக்கு கரோலினா) மற்றும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த டயான் ஃபைன்ஸ்டீன் (கலிபோர்னியா) போன்ற பல அமெரிக்க செனட்டர்களால் நடத்தப்பட்ட உள்வர்த்தகம் தொடர்பான அமெரிக்க நீதித்துறையின் முந்தைய விசாரணைகளைத் தொடர்ந்து வெளிவந்தது. லோஃப்லர், இன்ஹோஃப் மற்றும் ஃபைன்ஸ்டீன் ஆகியோர் மீது எந்தவித குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படாமல் விசாரணைகள் முடித்துக்கொள்ளப்பட்டன, ஆனால், மே மாதம் செனட் புலனாய்வுக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலக நிர்ப்பந்திக்கப்பட்டதன் பின்னர் பர் தொடர்ந்து விசாரணையின் கீழ் உள்ளார்.

President Trump holds a sheet of paper with the names of four U.S. companies worth over a trillion dollars to emphasize how well the economy is doing in the Oval Office at the White House in Washington on February 11, 2020. (AP Photo/Manuel Balce Ceneta)

புதிய வெளிப்பாடுகள், வெள்ளை மாளிகை அதிகாரிகளில் உள்வர்த்தக முறைகேடுகளில் ஈடுபடும் திறமையுள்ளவர்கள் அல்லது கலிபோர்னியாவின் ஸ்டன்போர்ட் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய வலதுசாரி சிந்தனைக் குழுவான ஹூவர் நிறுவனம் மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஆகிய இரண்டிலும் உள்ள அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றிய புதிய விசாரணைகள் குறித்த அறிவிப்பிற்கு இன்னும் தூண்டவில்லை.

இரண்டு நிகழ்வுகளிலுமே, அமெரிக்க அரசாங்கத்திற்குள் உள்ள அதிகாரிகள் தங்களது நன்கொடையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தமையால் அவர்கள் பங்குச் சந்தை வீழ்ச்சியடைவதற்கு முன்னரே மில்லியன் கணக்கான டாலர்களை பங்குகளிலிருந்து விலக்கிக் கொள்ள வழிசெய்தது தெளிவாகிறது. நெருக்கடியின் தொடக்கத்தில் இருந்ததைப் போலவே, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் முதன்மை அக்கறை, ஒரு கொடிய தொற்றுநோயிலிருந்து மக்களை பாதுகாப்பது பற்றியதாக இருக்கவில்லை, மாறாக எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களது சலுகை பெற்ற வர்க்க அந்தஸ்தையும் செல்வத்தையும் பாதுகாப்பதாகவே இருந்தது.

தொற்றுநோய்க்கு முன்னர், டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி மீதான பங்குச் சந்தை நிலை தொடர்ந்து 30,000 க்கு நெருக்கமாக இருந்தது. ஆனால், அதிகரித்து வரும் சர்வதேச அளவிலான நோய்தொற்று நெருக்கடிக்கு பதிலிறுக்கும் வகையில், டோவ் பெப்ரவரி மாத மத்தியில் அண்ணளவாக 10,000 புள்ளிகள் வீழ்ச்சி காணத் தொடங்கி மார்ச் முழுவதுமாக அந்நிலை தொடர்ந்தது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் தேசிய பொருளாதார கவுன்சிலின் இயக்குநரான லாரி குட்லோ (Larry Kudlow) உட்பட, அமெரிக்க அரசாங்கத்துடன் சேர்ந்து அதிகாரிகள் தொற்றுநோயின் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை பகிரங்கமாக குறைத்து மதிப்பிடுகின்றனர், இந்நிலையில், குட்லோ மற்றும் வெளியுறவுத்துறை செயலரான மைக் பொம்பியோ உட்பட நிர்வாக அதிகாரிகள் ஹூவர் நிறுவனத்தின் குழு உறுப்பினர்களுடன் பெப்ரவரி 4 ஆம் திகதி முதல் நடத்திய இரகசிய கூட்டங்களில், வைரஸ் தொற்று கட்டுப்பாட்டில் இல்லை என்பதால், அதன் தாக்கம் பங்குச் சந்தைகளில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பது நிச்சயமற்றது என்பதே தங்களது முக்கிய கவலையாக உள்ளது என்று தனிப்பட்ட முறையில் அவர்களை எச்சரித்தனர் என்று Times பத்திரிகை தெரிவித்தது.

பெப்ரவரி 24 பிற்பகலில் ட்ரம்ப் பதிவிட்ட ட்வீட்டில், அமெரிக்காவில் வைரஸ் “கட்டுப்பாட்டில் உள்ளது!” என்றும், “தன்னை பொறுத்தவரை பங்குச் சந்தை சிறப்பாக செயல்படுவதாகத் தெரிகிறது!” என்றும் தெரிவித்திருந்தார். என்றாலும், சில மணிநேரங்களுக்கு முன்னதாக, பொருளாதார ஆலோசகர்களின் வெள்ளை மாளிகை கவுன்சிலின் (White House Council of Economic Advisers) தற்காலிக தலைவரான தோமாஸ் பிலிப்சன் (Tomas Philipson), ஹூவர் நிறுவனத்தின் பழமைவாத குழு உறுப்பினர்களிடம், ஜனாதிபதியால் சித்தரிக்கப்பட்ட ரோஸ் வண்ண நிலவரத்துக்கு முற்றிலும் முரண்பட்டதாக, பங்குச் சந்தை மற்றும் பொதுவாக பொருளாதாரத்தின் மீது வைரஸ் எந்தளவிற்கு விளைவுகளை ஏற்படுத்தும் என்று தங்களால் இன்னும் மதிப்பிட முடியவில்லை என்றே தெரிவித்திருந்தார்.

அடுத்த நாள் பெப்ரவரி 25 அன்று, குட்லோ CNBC இல், அமெரிக்காவில் வைரஸ் “காற்று புகாத அளவிற்கு நேர்த்தியான நெருக்கத்தில்” தொடர்ந்து உள்ளது என்று பகிரங்கமாக மகிழ்ச்சியுடன் கூறினார். கசியவிடப்பட்ட ஆவணத்தின் கருத்துப்படி, சில மணிநேரத்தில் ஹூவர் மேற்பார்வையாளர்கள் குழுவின் முன் பேசுகையில், இந்த வைரஸ் “அமெரிக்காவில் இன்றுவரை கட்டுப்பாட்டிற்குள் இருந்தது, என்றாலும் தற்போது அதன் நிலை பற்றி எங்களுக்குத் தெரியாது,” என்று குட்லோ எச்சரித்திருந்தார்.

இந்த குறிப்பாணை, ஸ்டன்போர்ட் பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையாளர்களின் குழு உறுப்பினரான வில்லியம் காலனன் (Willam Callanan) ஆல் எழுதப்பட்டு பின்னர், அப்பலூசா நிறுவனத்தின் (Appaloosa Management) நிறுவனரும் தேசிய கால்பந்து லீக்கின் கரோலினா பாந்தர்ஸின் (Carolina Panthers of the National Football League) உரிமையாளருமான பில்லியனர் டேவிட் டெப்பருக்கு பெப்ரவரி 26 அன்று அனுப்பப்பட்டது. டெப்பர், 12 பில்லியன் டாலருக்கு மேற்பட்ட நிகர மதிப்புள்ள சொத்துக்களுக்கு அதிபதியாவார்.

1993 இல் அப்பலூசா நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கு முன்னர், டெப்பர் Goldman Sachs இல் “junk bond” மேசையில் பணிபுரிகையில் மில்லியன்களை சம்பாதித்தார். மேலும் அவர், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நியூயோர்க் செனட்டர் சக் ஷூமர் (Chuck Schumer) மற்றும் அப்போதைய அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த குடியரசுக் கட்சி ஜோன் போஹெனர் (John Boehner) ஆகியோர் உட்பட, மற்றும் ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகளுக்கு நிதி வழங்கியுள்ளார். மேலும், 2016 இல் ஜெப் புஷ் (Jeb Bush) மற்றும் ஜோன் காசிச் (John Kasich) ஆகியோரது ஜனாதிபதி பதவி போட்டிக்கு ஆதரவளித்த அரசியல் நடவடிக்கைக் குழுக்களுக்கு 1 மில்லியன் டாலர் வரை நிதி வழங்கியுள்ளார்.

இந்த குறிப்பாணையின் உள்ளடக்கம் அப்பலூசா நிறுவனத்திற்குள்ளும் மேலும் இரண்டு பெயர் அறியப்படாத வெளி முதலீட்டாளர்களுக்கும் விரைந்து பரப்பப்பட்டன. 24 மணிநேரத்திற்குள்ளாக குறிப்பாணை, நான்கு தனிப்பட்ட நாணய நிர்வாக மற்றும் வர்த்தக நிறுவனங்களின் குறைந்தது ஏழு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டமையால், முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் பங்குச் சந்தையில் அண்ணளவாக 300 புள்ளிகள் வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றது.

Times செய்தி, “அமெரிக்காவில் பேரழிவுகர வைரஸ் வெடிப்பு நிகழ்வதற்கு அதிகரித்தளவில் வாய்ப்பு உள்ளது, மேலும் அரசாங்க அதிகாரிகள் வைரஸ் குறித்த அச்சுறுத்தல் பற்றி வெளிப்படையாக தெரிவிப்பதை விட, அது குறித்து தாம் விழிப்புடன் இருந்தனர் என்ற குறிப்பாணையின் மிகைப்படுத்தப்பட்ட செய்தி துல்லியமானது என்பது நிரூபணமானது” என்று குறிப்பிட்டது.

டெப்பருக்கான பொது அறிவிப்புகளுடன் ஒப்பிடுகையில் தனியார் கூட்டங்களைப் பற்றி விவரிக்கையில், வைரஸ் “முழுமையாக தூண்டப்படவில்லை” என்று வைரஸைப் பற்றி கிட்டத்தட்ட ஒவ்வொரு நிர்வாக அதிகாரியும் தமது கவலையை வெளிப்படுத்தியது தனக்கு “அதிர்ச்சியாக” இருந்தது என்று காலனன் குறிப்பிட்டார். மேலும், குட்லோ தனிப்பட்ட முறையில் மிகவும் நேர்மையானவர் என்று அவர் குறிப்பிட்டார், என்றாலும் அமெரிக்காவில் வைரஸின் தாக்கம் எந்தளவிற்கு இருக்கும் என்பது பற்றி “எங்களுக்குத் தெரியாது” என்று அவர் கூறியது பற்றி தனது மிகுந்த அச்சத்தை வெளிப்படுத்தினார். மேலும், “வைரஸ் கட்டுப்பாட்டில் இருப்பது பற்றிய தனது அறிக்கையை குட்லோ திருத்தியுள்ளார்,” என்று டெப்பருக்கு காலனன் எழுதினார்.

அவர்களுக்கு சலுகையாக வழங்கப்பட்ட தகவல்கள் அந்த வாரத்தின் அவர்களது வர்த்தக முடிவுகளைத் தெரிவித்தன என்பதுடன், பலரை பங்குகளை “குறைப்பதற்கும்” இறுதியில் பங்குச் சந்தை வீழ்ச்சியில் இருந்து பெரும் இலாபத்தை வாரி எடுக்கவும் தூண்டுதலளித்தன என்பதை Times க்கு பேட்டியளித்த பெயர் அறியப்படாத முதலீட்டாளர்கள் உறுதிப்படுத்தினர். மேலும், மற்றவர்கள் டாய்லெட் பேப்பர் போன்ற பெரும் விநியோகத்திற்குரிய பொருட்களை மறைத்து வைக்க தகவல்களை பயன்படுத்தியமை இறுதியில் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது.

குறிப்பாணை பற்றி Times க்கு பேசுகையில், மின்னஞ்சலில் மேற்கோள் காட்டியிருந்த கருத்துக்களை தான் கூறியதாக குட்லோ உறுதிப்படுத்தினார், ஆனால் வேறுபட்டிருந்த அவரது பொது அறிக்கைகளை தான் பார்க்கவில்லை என்றார். மேலும், “தவறான தகவலை வழங்குவதற்கான எந்தவொரு நோக்கமும் தன்னிடம் இல்லை,” என்றும் குட்லோ கூறினார்.

Times செய்தியின் படி, வெள்ளை மாளிகை கூட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒருவரான, வலதுசாரி போலி மருத்துவரான டாக்டர் ஸ்காட் டபிள்யூ. அட்லஸ் (Dr. Scott W. Atlas), “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை”யை கொரோனா வைரஸ் கொள்கையாக ஆதரிக்கும் முதன்மை ஆதரவாளராக மாறியுள்ளார்.