பிரான்சில் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், மக்ரோன் முஸ்லீம்-விரோத பொலிஸ்-அரசு ஒடுக்குமுறையை தொடங்குகிறார்

Will Morrow
21 October 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

Conflans இல் நடுநிலைப் பள்ளி ஆசிரியர் சாமுவேல் பட்டியை கொன்ற வெள்ளிக்கிழமை பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், இமானுவல் மக்ரோனின் நிர்வாகம் ஒரு பொலிஸ்-அரசு ஒடுக்குமுறையை நடத்தி வருகிறது. நூற்றுக்கணக்கானவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர், 50க்கும் மேற்பட்ட முஸ்லிம் அமைப்புகளை கலைப்பதற்காக இலக்குவைக்கப்பட்டுள்ளது, டஜன் கணக்கான மக்கள் பயங்கரவாத தாக்குதலுக்கு எந்த தொடர்பும் இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் பாதுகாக்கப்பட்ட கருத்துச் சுதந்திர நடவடிக்கைகளை குற்றமாக்கவும் சமூக ஊடகங்களில் பெயர் குறிப்பிடாத அநாமதேயத்தை அகற்றவும் அரசாங்கம் முயன்று வருகிறது.

மக்ரோனின் கொள்கையானது தேசிய பேரணித் (National Rally) தலைவர் மரின் லு பென்னின் பாசிச வெறியிலிருந்து வேறுபடுத்திபார்க்க முடியாதது. முழு அரசியல் ஸ்தாபகத்தின் வலதை நோக்கிய மேலும் நகர்வை நியாயப்படுத்தவும், பொலிஸ் அதிகாரங்களை விரிவாக்கவும் மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளை கட்டுப்படுத்தவும் ஒரு முஸ்லிம்-விரோத வெறிச்சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

Emmanuel Macron (en.kremlin.ru)

ஞாயிறன்று இரவு தேசிய பாதுகாப்பு சபைக்கு மக்ரோன் ஆற்றிய அவருடைய உரையின் தொனியை விறைப்பாக அமைத்துக்கொண்டு, "அச்சம், இப்போது பக்கத்தை மாற்றுவதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது", "இஸ்லாமியவாதிகள் நம் நாட்டில் நிம்மதியாக உறங்க அனுமதிக்கப்பட முடியாது" என்று அறிவித்தார். குடியரசுக் கட்சியின் செனட்டின் தலைவரான புரூனோ ரூதையோ (Bruno Retailleu) வன்முறைக்கு வெளிப்படையான அழைப்புடன் பதிலளித்தார், தேவைப்படுவது "ஆயுதங்கள், கண்ணீர் அல்ல" என்றும் "நாட்டின் ஒரு பகுதி, பிரான்சின் அடிப்படை விழுமியங்களை மீறும் அதே வேளையில், ஒரு சொற்பொழிவுப் போரை நடத்தியதற்காக" மக்ரோனை தாக்கினார்.

மரின் லு பென், "மெழுகுவர்த்தி-ஒளி விழிப்புணர்வை எங்களை வைத்திருக்க விரும்பும்படி செய்யும்" அரசியல்வாதிகளை கண்டித்ததோடு அதற்கு பதிலாக "படைகளைப்" பயன்படுத்துமாறு அழைப்பு விடுத்தார்.

இஸ்லாமிய தீவிரமயமாக்கலுக்காக அரசாங்க கண்காணிப்புப் பட்டியலில் ஏற்கனவே இருந்த 231 பேரை உடனடியாக பிரான்சிலிருந்து வெளியேற்றுமாறு உள்துறை அமைச்சகத்தை கோரியுள்ளதாக பிரதமர் ஜோன் காஸ்டெக்ஸ் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். ஆனால் அக்டோபர் 16 பயங்கரவாத தாக்குதலுக்கும் எந்தத் தொடர்பும் அவர்களுக்கு இல்லை.

திங்கள்கிழமை காலை Europe1 க்கு அளித்த பேட்டியில், உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மனன் இன்னும் கூடுதலான ஒரு தொடர் பொலிஸ் அரசு நடவடிக்கைகளை அறிவித்தார், மேலும் தேசிய பேரணித் தலைவர் லு பென்னை தனிப்பட்ட முறையில் பாராட்டினார்.

"இன்று காலை முதல், பொலிஸ் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன, மேலும் அவைகள் வரும் மணித்தியாலயங்கள் மற்றும் நாட்களில் தொடரும்," என்று அவர் கூறினார். அக்டோபர் 16 தாக்குதலில் "டஜன் கணக்கான தனிநபர்கள்" இலக்கு வைக்கப்பட்டிருப்பது "விசாரணையுடன் அவசியமாக அவர்கள் தொடர்புபடுத்தப்படவில்லை" என்றும் அவர் அறிவித்தார். அவர்களுக்கு "நாங்கள் தெளிவாக ஒரு செய்தியை அனுப்ப விரும்புகிறோம், பாதுகாப்பு சபையில் ஜனாதிபதி அறிவித்ததை போல: அதாவது குடியரசின் எதிரிகளுக்கு ஒரு இரவு கூட அமைதியாக இருக்காது"

வரவிருக்கும் நாட்களில் குடியரசின் எதிரிகள் என்று அழைக்கப்படுபவைகளை சட்டபூர்வமாக கலைப்பிற்கு உள்ளாகும் 51 அமைப்புகளின் பட்டியலை அரசாங்கம் ஏற்கனவே தயாரித்துள்ளது என்று டார்மனன் மேலும் கூறினார். இந்த அமைப்புகளின் பட்டியல் வெளியிடப்படவில்லை, ஆனால் அதில் பிரான்சில் இஸ்லாமிய வெறுப்புக்கு எதிரான கூட்டு (Collective Against Islamophobia in France -CCIF) என்ற முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாட்டை எதிர்க்கும் ஒரு சட்டரீதியாக வாதிடும் அமைப்பும் அடங்கும். அக்டோபர் 16 பயங்கரவாத படுகொலைக்கு CCIF க்கு தொடர்பு இருந்தது என்பதற்கான எந்த ஆதாரத்தையும் வழங்க அரசாங்கம் முயற்சிக்கவில்லை.

பாரிசின் வடமேற்கிலுள்ள Conflans பகுதியிலுள்ள ஒரு நடுநிலைப் பள்ளியின் புவியியல் ஆசிரியரான பட்டி, அன்று பள்ளியிலிருந்து வெளியேறிய போது 18 வயதான செச்செனிய புலம்பெயர்ந்த அப்துல்லாக் அன்ஸோனோவ்வால் தாக்கப்பட்டார். தெருவில் தலை துண்டிக்கப்படுவதற்கு முன்பு, அஸோனோவ் பலமுறை பட்டியை கத்தியால் குத்தினார். பட்டிக்கு எதிரான சமூக ஊடகங்களின் ஒரு பிரச்சாரத்தால் அவர் கொடூரமான குற்றத்தில் உந்துதல் பெற்றதாகத் தெரிகிறது, அவரது மாணவர்களில் ஒருவரின் தந்தை தயாரித்த வீடியோக்கள் உட்பட, அவரது இஸ்லாமிய விரோத நடத்தையை குற்றஞ்சாட்டினார்கள்.

"கருத்துச் சுதந்திரம்" பற்றிய விவாதத்திற்கான அடிப்படையாக சார்லி ஹெப்டோ பத்திரிகையின் இஸ்லாமிய-விரோத கேலிச் சித்திரத்தை பட்டி வகுப்பறையில் காட்டியிருந்தார், பின்னர் மாணவர்கள் அதைப் பார்க்க விரும்பவில்லை என்றாலோ புண்படுத்துவதாக இருந்தாலோ வகுப்பறையை விட்டு வெளியேறலாம் என்றும் மாணவர்களை எச்சரித்திருந்தார்.

இந்த வார நிகழ்வுகள் பயங்கரவாதத்தின் (terrorism) முற்றிலும் திவாலான மற்றும் பிற்போக்குத்தனமான முன்னோக்கை அம்பலப்படுத்தியுள்ளன. பட்டியின் மரணம் ஒரு சோகம் மட்டுமல்ல, ஆனால் பிரெஞ்சு ஆளும் வர்க்கம் மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களின் உரிமைகள் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்த இப்போது சுரண்டிக் கொண்டிருக்கிறது.

டார்மனன் வழங்கிய CCIF க்கான ஒரே தொடர்பானது பட்டியின் மாணவரின் தந்தை, பட்டிக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க CCIF ஐ தொடர்பு கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இது தவிர, CCIF சட்டபூர்வமாக கலைக்கப்பட முடியும் என்று "நம்புவதாக" அவர் கூறினார், ஏனென்றால் அது "அரசாங்க ஆதரவு, வரி சலுகைகள், மற்றும் அரசாங்கத்தின் இஸ்லாமிய விரோதத்தை கண்டனம் செய்வது," மேலும் "எங்களிடம் பல கூறுகள் இருக்கின்றன குடியரசின் எதிரி என்று நம்பவதற்கு எங்களை அனுமதிக்கிறது" என்று அவர் கூறினார்.

இது "ஒரு வழியில் அல்லது வேறு வழியில்", பட்டி "அதற்கு தகுதியானவர்" என்று தாக்குதலுக்குப் பின்னர் இணையத்தில் கருத்துக்களை வெளியிட்டதற்காக 80 பேர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர் என்று டார்மனன் கூறினார்.

தாக்குதலுக்கு முன்னர் இணையத்தில் பட்டி பற்றிய விமர்சனங்களை பதிவு செய்த எவரையும் பயங்கரவாத கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்று குற்றம் சாட்ட அரசாங்கம் முயற்சிக்கலாம் என்று அவர் மேலும் கூறினார். "சமூக ஊடகங்களில் வெறுப்பின் மூலம் [ஒரு குற்றத்திற்கு] ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்ற இந்த கருத்துடன் நான் உடன்படுகிறேன் என்று நான் கூற விரும்புகிறேன்," என்று அவர் கூறினார்.

பிரான்சில் நீண்டகாலமாக முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டதற்கு அரசியல் எதிர்ப்பை குற்றமாக்குவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதிதான் இது என்பதை டார்மனன் தெளிவுபடுத்தினார். "அரசியல் இஸ்லாம் சில நேரங்களில் பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கிறது," மற்றும் "பயங்கரவாதத்திற்கு எதிரான அதே வலிமையுடன் அரசியல் இஸ்லாமுக்கு எதிராக போராட வேண்டும்" என்று அவர் கூறினார்.

பட்டியின் மாணவர்களில் ஒருவரின் தந்தை, அவருக்கு எதிராக ஒரு "ஃபத்வா" (fatwa) தொடங்கினார் என்று உள்துறை அமைச்சர் பலமுறை அறிவித்துள்ளார். முற்றிலும் உண்மை நிலைப்பாட்டிலிருந்து பார்த்தால், இது வெளிப்படையாக தவறானது, ஏனெனில் ஒரு ஃபத்வா என்பது இஸ்லாமிய சட்டத்தைப் பற்றிய ஒரு சட்டபூர்வமாக கட்டுப்படுத்தாத கருத்தாகும், ஏனெனில் ஒரு அறிஞர் போன்ற ஒரு தகுதிவாய்ந்த நபரால் உருவாக்கப்பட்டது, இது முஸ்லிமாக இருக்கும் ஒரு நபரால் பகிரங்கமாக கண்டிக்கப்படுவதில்லை. ஆனால் முஸ்லிம் எதிர்ப்பு ஆத்திரமூட்டல்களுடன் டார்மனன் வழக்கின் உண்மைகளில் அக்கறை காட்டவில்லை. அவர் தீவிர வலதுசாரிகளின் சொற்களஞ்சியத்திலிருந்து நேரடியாக இந்த வார்த்தையை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர், தேசிய பேரணியின் பிரதிநிதியான ஜோர்டான் பார்டெல்லா, "கருத்து சுதந்திரத்தை" கற்பிக்க முயற்சிக்கும் ஆசிரியர்கள், மாணவர்களின் முஸ்லீம் பெற்றோரிடமிருந்து பணிவுடன் ஏற்றுக்கொள்வதாகக் கூறப்படும் "ஃபத்தாவை" கண்டித்தார்.

மக்ரோன் நிர்வாகம் தேசிய பேரணியின் கொள்கைகளை நேரடியாக பின்பற்றி வருகிறது. பிரெஞ்சு ஆளும் வர்க்கம் எந்த அளவிற்கு பாசிச சக்திகளை ஊக்குவித்து வருகிறது என்பதை குறிப்பிடும் ஒரு அசாதாரணமான கருத்துப் பரிமாற்றத்தில், Europe1 இல் பேட்டி கண்ட சோனியா மாப்ரூக், டார்மனனிடம் கூறினார், "இன்னும் அதிகாரத்திற்கு வராத ஒருவர் இருக்கிறார், அதாவது மரின் லு பென், விழிப்புநிலை அரசியலை "நிறுத்து" என்று கூறுகிறார், இந்த அரசியலை "நிறுத்து" என்று கூறுகிறார். அவர் தப்பாக இருக்கிறாரா?"

"அரசியலின் அனைத்து ஆண்களையும் பெண்களையும் போலவே அம்மணி லு பென்னையும் நான் மதிக்கிறேன்" என்று டார்மனன் லு பென்னைப் பாராட்டியதன் மூலம் விடையளித்தார், ஆனால் பின்னர் அரசாங்கத்தின் பொலிஸ்-அரசு நடவடிக்கைகளை ஆதரிக்கத் தவறியதற்காக அவரை விமர்சித்தார். லு பென் “அவரை ஆட்சிக்கு கொண்டுவரும் காரணங்களை மதிக்கிறார், ஆனால் நாங்கள் முன்மொழிகின்ற எந்தவொரு சட்டத்திற்கும் அவர் வாக்களிக்கவில்லை, பயங்கரவாத எதிர்ப்பு போராட்டத்தின் எந்தவொரு வலுவூட்டல்களும் இல்லை. ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நாங்கள் முன்மொழிந்த தொலைபேசி ஒட்டுகேட்டல் சட்டங்களை அவர் நிராகரித்தார். உள்துறை உளவுத்துறை பாதுகாப்பு சட்டங்களுக்கு அவர் இணங்கவில்லை” என்று விமர்சித்தார்.

வலதுபுறத்தில் இருந்து லு பென் மீதான டார்மனனின் தாக்குதல்கள் இஸ்லாத்திற்கு எதிரான “ஜனநாயகம்” மற்றும் “பேச்சு சுதந்திரத்தை” பாதுகாப்பதாக மக்ரோன் அரசாங்கம் கூறிவரும் மோசடியை தெளிவுபடுத்துகிறது. 2017 ஆம் ஆண்டில் பாசிச சர்வாதிகாரி பெத்தானை ஒரு "சிறந்த சிப்பாய்" என்று புகழ்ந்துரைத்த மக்ரோன், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கும், மக்களுக்கு எதிராக பொலிஸ் அதிகாரத்தை கட்டமைப்பதற்கும் தீவிர வலதை நேரடியாக ஊக்குவித்து வருகிறார்.

இரண்டு ஆண்டு வேலைநிறுத்தங்கள் மற்றும் பொலிஸால் கொடூரமாக தாக்கப்பட்ட "மஞ்சள் சீருடை" ஆர்ப்பாட்ட போராட்டங்களுக்குப் பின்னர், தீவிரமடைந்து வரும் சமூக நெருக்கடி மற்றும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்க்கு அதன் குற்றவியலான நடவடிக்கையானது, சர்வாதிகாரத்திற்கு திரும்புவதன் மூலம் மட்டுமே சமூக கோபத்தின் வெடிப்பை அடக்க பிரெஞ்சு ஆளும் வர்க்கம் தயாராகி வருகிறது.

இந்த நிகழ்வுகள் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தின் ஒரு கூர்மையான வெளிப்பாடு ஆகும், மக்ரோனின் பிரச்சாரத்திற்கு பின்னால் ஒருமனதாக அணிசேர்ந்துள்ள அதன் "இடது" அணியாக பாவனை செய்வதினதும் ஒரு கூர்மையான வெளிப்பாடுமாகும். அடிபணியா பிரான்ஸ் (La France Insoumise) இன் தலைவரான ஜோன்-லூக் மெலோன்சோன், "பிரிவினைவாதத்திற்கு" எதிரான மக்ரோனின் வரவிருக்கும் இஸ்லாமிய விரோத சட்டத்திற்கு ஆதரவு கொடுக்க தான் இப்போது நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், டிசம்பர் 9 ந் திகதியன்று பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட உள்ளது என்றும் அறிவித்தார். மக்ரோனின் அரசாங்கம் வெளிப்படையாக தேசிய பேரணியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறது, முஸ்லிம்களை கடுமையாகத் தாக்குகிறது மற்றும் ஒரு பொலிஸ் அரசைக் கட்டி எழுப்புகிறது, அதேவேளையில், "தேசிய ஐக்கியத்திற்கான" மக்ரோனின் கோரிக்கைக்கு தொழிலாளர்களும் இளைஞர்களும் ஆதரவளிக்க வேண்டும் என்று மெலோன்சோன் அறிவிக்கிறார்.