சதித் திட்டத்துடன் ட்ரம்ப் முன்னேறும்போது ஜனநாயகக் கட்சியினர் “பொறுமைக்கு” அழைப்பு விடுக்கின்றனர்

21 October 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பொதுத் தேர்தலுக்கு இரண்டு வாரங்கள் மீதமுள்ள நிலையில், நவம்பர் 3 தேர்தலின் முடிவை பொருட்படுத்தாமல், ஆட்சியில் நீடிப்பதற்கான தனது முயற்சிக்கு ஆதரவாக டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து தீவிர வலதுசாரி சக்திகளை அணிதிரட்டுகிறார்.

சனிக்கிழமையன்று மிச்சிகனில் உள்ள மஸ்கெகோனில் பேசிய ஜனாதிபதி, பாரிய வாக்காளர் மோசடி குறித்த ஆதாரமற்ற எச்சரிக்கைகளை மீண்டும் மீண்டும் கூறி, 12 நாட்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ட்ரம்ப் ஆதரவாளர்களால் படுகொலை செய்ய முயன்ற சதித்திட்டத்தின் இலக்காக இருந்த மாநில ஜனநாயக ஆளுநர் கிரெட்சன் விட்மரைக் கடுமையாக கண்டித்தார்.

"அவரையும் அவருடைய அரசவழக்குத் தொடுனரையும் பற்றி கவனமாக இருங்கள்" என்று விட்மர் மற்றும் மாநிலத்தின் உயர் வழக்கறிஞரான ஜனநாயகக் கட்சி உறுப்பினர் டானா நெசெல் ஆகியோரைப் பற்றி ட்ரம்ப் கூட்டத்தில் கூறினார். "ஆனால் உங்களுக்கு தெரியும், அவர்கள்தான் வாக்குச் சாவடிகளுக்குப் பொறுப்பானவர்கள்." விட்மர் பற்றி அவர் குறிப்பிடுகையில், கூட்டம், “அவரை சிறையில் அடை!” என்று கோஷமிட்டது. நாஜிகளின் "பெரிய பொய்" தந்திரத்தை நினைவூட்டும் வகையிலான ஒரு அறிக்கையில், அவரது பிரச்சார ட்விட்டரில் "வெள்ளை மாளிகைக்கு யாரோ ஒரு றிஸ்லின் நஞ்சு அடங்கிய பொதியை அனுப்பிய சில வாரங்களிலேயே அதிபர் ட்ரம்பிற்கு எதிரான படுகொலை முயற்சிகளை விட்மர் ஊக்குவிக்கிறார்." என்று வெளியிட்டது.

ஏப்பிரல் 15, 2020 லான்சிங் மிச் தலைநகர கட்டிடத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்கார்கள் ஆயுதங்களுடன் (AP Photo/Paul Sancya)

ட்ரம்பின் மறைமுகமான அல்லது நேரடி ஒப்புதலுடன் செயல்பட்டு, மாநிலம் தழுவிய காவல்துறை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் சங்கங்கள், தேர்தல் நாளில் வாக்குச் சாவடிகளில் பகிரங்கமாக ஆயுதங்களை எடுத்துச் செல்வதைத் தடைசெய்து வெளியுறவுத்துறை செயலாளர் ஜோசலின் பென்சன் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த மாட்டோம் என்று திங்களன்று அறிவித்தன. தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரியின் சட்டபூர்வமான ஒழுங்கிற்கு எதிரான இந்த அரை கிளர்ச்சியின் செயல், அரசிற்கு யார் பொறுப்பாக இருக்கின்றார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது. தேர்தல் நாளில் வாக்களிப்பதை சீர்குலைக்க ஆயுதக்குழுக்கள் திட்டமிட்டுள்ளதால் இந்த ஆயுதத் தடை பிறப்பிக்கப்பட்டது.

காவல்துறையுடனான கூட்டுடன் பாசிச வலதுசாரி வகிக்கும் ஆபத்தான பங்கு ஜனநாயகக் கட்சியின் கோழைத்தனமான பதிலை இன்னும் அரசியல்ரீதியாக குற்றத்தன்மையாக்குகிறது. நேற்று, செனட் சிறுபான்மைத் தலைவர் சக் ஷுமரின் அலுவலகம், ட்ரம்பின் மூலோபாயத்தை எதிர்ப்பதற்கான கட்சியின் திட்டங்களை அறிவித்து செனட் ஜனநாயகக் கட்சியின் சார்பாக ஒரு அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை வெளியிட்டது.

முதுகெலும்பற்ற மற்றும் மேலோட்டமான அந்த அறிக்கை. “2020 பொதுத் தேர்தல்: வாக்குகளை எண்ணுதல் மற்றும் தேர்தல் நாளில் எதை எதிர்பார்ப்பது” என தலைப்பிடப்பட்டிருந்தது. விட்மர் அல்லது இன்னுமொரு இலக்காக இருந்த ஜனநாயகக் கட்சி வேர்ஜீனியா ஆளுனர் ரால்ப் நோர்தாமுக்கு எதிரான சதி குறித்து இந்த ஆவணம் எதையும் குறிப்பிடவில்லை. தேர்தல் முடிவுகளை மீறுவதாக ட்ரம்ப்பின் அச்சுறுத்தல்களுக்கு இது பின்வருமாறு பதிலளிக்கிறது:

அதிபர் ட்ரம்பும் அவரது கூட்டாளிகளும் அச்சத்தையும் குழப்பத்தையும் தூண்ட முயற்சிப்பது துரதிர்ஷ்டவசமானது. இந்த முயற்சிகள் குறித்து அமெரிக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆனால் அவை தவறான தகவல்களைத் தவிர வேறில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். … தவறான தகவலை நிராகரிக்க அமெரிக்கர்கள் தயாராக இருக்க வேண்டும் மற்றும் வாக்குச்சீட்டுகளை எண்ணுவதற்கு அதிக நேரம் எடுக்கும் இடங்களில் முடிவுகளைப் பற்றி பொறுமையாக இருக்க வேண்டும்.

இது அரசியல் சரணடைதலின் ஒரு மோசமான அறிக்கையாகும். ட்ரம்பின் அதிகாரத்தில் நீடிப்பதற்கான அச்சுறுத்தல் பால் பாத்திரம் சிந்துவது போன்ற “துரதிர்ஷ்டவசமான” விபத்து அல்ல. இது ஒரு திட்டமிட்ட பாசிச மூலோபாயமாகும். இது அமெரிக்க வரலாற்றில் முன்னோடி இல்லாததும், காவல்துறையின் கணிசமான பிரிவுகள் மற்றும் அடக்குமுறை அரசு அமைப்புகளினால் ஆதரவளிக்கப்படுகின்றது.

ஷுமருக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் இது நன்றாகத் தெரியும். இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜோ பிடென் Daily Show வின் ட்ரெவர் நோவாவிடம், ட்ரம்ப் பதவியை விட்டு வெளியேற மறுக்கும் வாய்ப்பு “என்னை இரவில் கண்விளித்திருக்க வைத்திருக்கிறது” என்று கூறினார். இப்போது, பிடனும் ஜனநாயகக் கட்சியினரும் "இங்கு பார்க்க எதுவும் இல்லை" என்று மக்களிடம் கூறுகிறார்கள். இதற்கிடையில், பிடென் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பெரு நலங்களின் சிறந்த பாதுகாவலன் என்று அவர்கள் ஆளும் வர்க்கத்திற்குள் இரக்கமின்றி தங்கள் நிலைப்பாட்டை முன்வைக்கிறார்கள்.

நிதி மூலதனத்தின் ஒரு சக்திவாய்ந்த பிரிவின் பிரதிநிதிகள் என்ற வகையில், ஜனநாயகக் கட்சியின் அறிக்கை எல்லாவற்றிற்கும் மேலாக மக்களை தூங்கச் செய்வதையும் சர்வாதிகாரத்தின் ஆபத்தை குறைத்து மதிப்பிடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜனநாயகக் கட்சியினரின் மிகப் பெரிய அச்சம் என்னவென்றால், கீழிருந்து வரும் சமூக எதிர்ப்பின் வடிவத்திலான “குழப்பமானது” அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பித்து வோல் ஸ்ட்ரீட் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நீண்டகால நலன்களை அச்சுறுத்தும் என்பதாகும்.

லியோன் ட்ரொட்ஸ்கி இந்த அடிப்படை அரசியல் இயக்கத்தை நவம்பர் 1934 இல் தனது பிரான்ஸ் எங்கே செல்கின்றது என்ற கட்டுரையில் அடையாளம் காட்டினார். முதலாளித்துவ சார்பு, நடுத்தர வர்க்க பிரெஞ்சு தீவிரவாதக் கட்சியைப் பற்றி ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதினார்: “ஒட்டகம் அதன் ஓட்டுநரின் சவுக்கின் கீழ் இருப்பது போலவே, தீவிரவாதமும் அதன் நான்கு முழங்கால்களில் கீழ்இறங்கி முதலாளித்துவ பிற்போக்கினை அதன் முதுகுகூம்புகளுக்கு இடையில் அமர அனுமதிக்கிறது. கீழிருந்து சமூக எதிர்ப்பின் அச்சுறுத்தலைக் கண்டு பயந்துபோய், “பிற்போக்குத்தனத்தை மூடிமறைக்கவும், மக்களை ஏமாற்றவும், மூடிமறைக்க இன்னும் முயன்று இந்த வழியில் பாசிசத்தின் வெற்றிக்கு தயாரிக்கின்றனர்.”

இந்த செயல்பாட்டில் ஒரு முக்கிய பங்கை பேர்ணி சாண்டர்ஸ் போன்ற "இடது" ஜனநாயகக் கட்சியினர் வகிக்கின்றனர், அவர் அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) மற்றும் அதன் அரை அதிகாரபூர்வ வெளியீடு, ஜாக்கோபின் பத்திரிகை போலவே மிச்சிகன் சதி அல்லது விட்மரின் உயிருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து தனது 13 மில்லியன் பின்தொடர்பவர்களுக்கு ஒருமுறை ட்வீட் செய்யவில்லை. மிச்சிகன் சதி குறித்து ஜாக்கோபின் ஒரு கட்டுரை கூட எழுதவில்லை, ஜனநாயக சோசலிஸ்டுகள் அதைக் கண்டித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் ஏஞ்சலா டேவிஸ், Debt Collective அமைப்பின் நிறுவனர் அஸ்ட்ரா டெய்லர் மற்றும் ஜாக்கோபின் ஆசிரியர் பாஸ்கர் சங்கரா ஆகியோருடன் கடந்த வாரம் ஒரு இணையவழி நிகழ்வில் இந்த போலி-இடதுகள் உடைந்தையாக இருப்பது வெளிப்பட்டது.

பங்கேற்பாளர்கள் விட்மருக்கு எதிரான சதித்திட்டத்தை குறிப்பிட உணர்மையுடனே மறுத்துவிட்டனர். கூட்டத்தின் தொடக்கத்தில், டெய்லர், "நாங்கள் தேர்தலுக்காக, செய்திகளில் அதிக நேரம் செலவிடப் போவதில்லை" என்று அறிவித்தார். கலந்துகொண்டவர்கள் பைடெனுக்கு வாக்களிப்பதை ஆதரிப்பதாகக் கூறினர். சமூக எதிர்ப்பை அடக்குவதற்கான வழிமுறை இதுதான்: ஜாக்கோபினும் ஜனநாயக சோசலிஸ்டுகளும் சாண்டர்ஸுக்கு சரணடைகிறார்கள். அவர் பைடெனுக்கு அடிபணிந்து, ட்ரம்பிற்கு விட்டுக்கொடுப்பார். இந்த செயல்முறை இல்லாமல், ட்ரம்ப்பின் நிலைமையை பாதுகாக்க முடியாது.

அமெரிக்காவில் ஒரு பாசிச இயக்கத்தின் வளர்ச்சி ஒரு உண்மையான நிகழ்வாக உள்ளது. இதுதான் நவம்பர் 3 மற்றும் அதற்கு அப்பால் ட்ரம்பின் அரசியல் மூலோபாயமாகும். அவர் தேர்தலில் தோல்வியடைந்தாலும் கூட, ட்ரம்ப் தனது தீவிர வலதுசாரி ஆதரவாளர்களுக்கு மன்னிப்பு வழங்குவதற்கும் அவரது பாசிச மூலோபாயத்தை விரிவுபடுத்துவதற்கும் நவம்பர் 3 முதல் 2021 ஜனவரி 20 வரை நீண்ட மாதங்கள் இருக்கின்றது.

விளைவு எதுவாக இருந்தாலும், ஜனநாயகக் கட்சியின் சரணடைதல் மூலோபாயம் தொடரும்.

பைடென்-ஹாரிஸ் வெற்றிபெற்றால், அவர்களின் நிர்வாகம் “தேசிய ஒற்றுமை” மற்றும் “அனைத்து அமெரிக்கர்களையும் ஆளுதல்” என்ற பெயரில் வலதுசாரிகளுக்கு தொடர்ந்தும் சலுகை அளிக்கும். அமெரிக்க அரசியல் காட்சியில் ஆயுதக்குழுக்குள் ஒரு முக்கிய இடத்தை பெறும். மேலும் அவர்கள் தற்போது முற்றுகையிட திட்டமிட்டுள்ள அதே மாநில தலைநகரங்களில் தங்கள் குறைகளை எழுப்ப ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி ஆளுநர்களால் அழைக்கப்படுவார்கள்.

அமெரிக்காவில் காணப்படும் அதே போக்குகள் பிரேசில், ஜெர்மனி, இங்கிலாந்து, அர்ஜென்டினா, பிரான்ஸ் மற்றும் பிற இடங்களிலும் அதே பங்கு வகிக்கின்றன. பாசிச பிற்போக்குத்தனத்தின் வளர்ச்சியைத் தடுக்க சர்வதேச அளவில் மற்றும் ஒரு சுயாதீனமான, சோசலிச வேலைத்திட்டத்துடன் தொழிலாள வர்க்கத்தின் தலையீடு தேவையாகும்.

Eric London