ஆந்திரா பிரதேச ஆடைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்; 400, 000 அசாம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வெளிநடப்பு போராட்டம்

தொழிலாளர்கள் போராட்டங்கள்: ஆசியா

22 October 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தியா: ஆந்திர பிரதேச ஆடைத் தொழிலாளர்கள் வெளிநடப்பு போராட்டம்

ஆந்திர பிரதேச நகரமான ஹின்ட்பூரில் இருக்கும் மூன்று டெக்ஸ்போர்ட் தொழிற்துறை ஆலைகளிலிருந்து 90 சதவீத பெண்களைக் கொண்டிருக்கும் சுமார் 4,000 ஆடைத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி அக்டோபர் 5 இலிருந்து வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஹின்ட்பூர் தொழிலாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 6,000 ரூபாய்களை ($82) மட்டுமே நிறுவனம் வழங்குவதாக அவர்கள் கூறினார்கள். அதே நிறுவனத்தின் மற்ற கிளைகளில் வழங்கப்படுவதைவிட இது குறைவானதாகும்.

அக்டோபர் 7 அன்று வேலைநிறுத்தத்தை ஆதரித்த 25 தொழிற்சங்க உறுப்பினர்களை காவல்துறையினர் கைது செய்ததற்கு பின்னர் அக்டோபர் 9 அன்று சுமார் 500 தொழிலாளர்கள் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தனர். உத்தியோகபூர்வ குறைந்தபட்ச சம்பளத்தைவிட மிகவும் குறைவாக அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்றும் ஆலைகளில் அடிப்படை வசதிகளும் இல்லை என்று தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர்.

டெக்ஸ்போர்ட் தொழிற்துறை ஆண்டு வருமானம் 80 பில்லியன் டாலராகும் மேலும் 19 நேரடி சொந்த தொழிற்சாலைகளில் 15,000 க்கும் அதிகமான தொழிலாளர்களு வேலை செய்கின்றனர்.

அசாமில் ஆயிரக்கணக்கான தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வறுமை ஊதியத்திற்கு எதிராக வேலைநிறுத்தப் போராட்டம்

இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான அசாமில் 250 தேயிலைத் தோட்டங்களிலிருந்து சுமார் 400,000 தொழிலாளர்கள் ஒரு வாரகாலமாக நடத்திய நீண்ட வேலைநிறுத்தப் போராட்டத்தை செவ்வாய் அன்று முடித்துக்கொண்டனர். 2018 ஒப்பந்தத்தின்படி அவர்களுடைய சம்பளத்தை அதிகரிப்பதற்கு மாநில அரசாங்கம் தவறியதை எதிர்த்து அவர்கள் போராட்டம் செய்தனர்.

தேயிலை தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக 350 ரூபா அதிகரிப்பதற்கும் - அதாவது அவர்களின் சம்பளத்தின் இரண்டு மடங்காக - மேலும் தொழிலாளர்களின் இழப்பீட்டு தொகையை அதிகரிப்பதற்கும் தோட்டங்களிலிருக்கும் மோசமான நிலைமைகளை மீட்டுத்தருவதற்கும் ஒரு குழுவை அமைப்பதாக அசாம் அரசாங்கம் உறுதியளித்தது. கடந்த இரண்டு வருடங்களில் இத்தகைய கோரிக்கைகளுக்காக பல்வேறு போராட்டங்களை தொழிலாளர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய கோரிக்கைகள் விரைவில் தீர்க்கப்படவில்லையென்றால் அவர்கள் மேலும் வெறித்தனமான போராட்டங்களை நடத்தப் போவதாக பெரும்பான்மை பெண்களைக் கொண்ட வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அறிவித்திருக்கிறார்கள்

ஜார்கண்ட் போக்ரா இரும்பு ஆலைத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

போக்ராவில் திங்களன்று நிறைவேற்றப்படாத ஒருதொகை கோரிக்கைகளுக்காக அரசு நடத்தும் போக்ரா இரும்பு ஆலையை சேர்ந்த (பிஎஸ்எல்) ஆயிரக்கணக்கான நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆலையிலிருந்து இந்திய இரும்பு ஆணையர் (எஸ்ஏஐஎல்) நிர்வாக அலுவலகத்திற்கு பேரணியாக சென்றனர். யூனியன் இரும்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் எஸ்ஏஐஎல் இன் ஒரு பகுதியாக பிஎஸ்எல் இருக்கிறது.

நிறுவனத்தின் 9,335 நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் 15,000 ஒப்பந்த ஊழியர்களால் எழுப்பிய 13 அம்ச கோரிக்கைகளை நிர்வாகம் புறக்கணித்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. பிஎஸ்எல் கடந்த நிதியாண்டில் கணிசமான லாபத்தை சம்பாதித்திருக்கிறது என்றும் கோவிட்-19 பொதுமுடக்கத்தின்போது அதன் உற்பத்தியை பராமரித்திருக்கிறது என்றும் தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஒரு ஊதிய உயர்வு மற்றும் துர்கா பூஜைக்கு (மத கொண்டாட்டம்) முன்னர் போனஸாக குறைந்பட்சம் 30,000 ரூபாய் ($US410) வழங்கவும் மேலும் விடுமுறை கொடுப்பனவுகள் மற்றும் பிற கொடுப்பனவுகள் ஆகியவற்றை பிஎஸ்எல் தொழிலாளர்கள் கோரியுள்ளார்கள்.

பஞ்சாப் அரசு பல்கலைக் கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

லூதியானவில் உள்ள ஆசியாவின் மிகப் பெரும் வேளாண்மைப் பல்கலைக்கழகமான பஞ்சாப் வேளாண்மைப் பல்கலைக் கழக கல்வி கற்பிக்கும் ஊழியர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் புதன்கிழமையன்று பல்கலைக் கழகத்திற்குள் பேரணி மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். பதவி உயர்வு கோரி அவர்கள் போராடியுள்ளனர். தேவையான அளவு வருடங்கள் சேவைகளை முடித்திருக்கின்ற நிலமைகளிலும் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என தொழிலாளர்கள் கூறியுள்ளார்கள்.

ஒழுங்கு விதிமுறைகளின்படி எழுத்தர்கள் ஐந்து வருடத்தில் அடுத்த நிலைக்கு பதவி உயர்வு அளிக்கப்படவேண்டும் என்று இருந்தாலும் எழுத்தர்கள் பத்துவருடங்களுக்கு மேல் பணியாற்றியிருந்த போதிலும் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை.

பதவி உயர்வுக்கான அனுப காலத்தின் அளவை குறைக்கவேண்டும் மற்றும் தொழிலாளர்கள் ஊதியம் அதிகப்படியாக வழங்கவேண்டும் மற்றும் மேம்பட்ட நன்மைகளுடன் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

இந்த வாரம், பஞ்சாபில் உள்ள ஸ்ரீ குரு ஹிரான்ந்த் சாஹிப் உலக பல்கலைக் கழகத்தின் ஒரு தொழிலாளர்கள் குழு கடந்த ஏழு மாதங்களாக அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததை எதிர்ந்து பல்கலைக் கழகத்தின் வாயிலில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள் மிகுந்த வறுமைநிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் பலர் வங்கிகளில் கடன் பெற்றிருப்பதால் அதன் மாதத் தவணையை கட்டமுடியாமல் தவிப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகா உயர்கல்வி ஊழியர்கள் நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

கர்நாடகா மாநில உயர்கல்வி கல்லூரியின் தொழிற்சங்க உறுப்பினர்கள் அக்டோபர் 9 அன்று மைசூர் உயர்கல்வி இணை இயக்குநர் அலுவலகத்திற்கு எதிரில் மாவட்டத்தின் அனைத்துக் கல்லூரி ஊழியர்களுக்கு வழங்கப்படாத நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டார்கள்.

கோவிட்-19 முடக்க காலத்தின்போது ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை வழங்கியிருப்பதாக கல்லூரி முதல்வர்கள் பொய் கூறுவதாக ஊழியர்கள் குற்றம் சுமத்தினார்கள்.

தெலுங்கானா அரசு வன மரக்கன்று வளர்ப்பு தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

ஹைதராபாத்தில் அக்டோபர் 12 அன்று டெலாபூர் ஹைதராபாத் பெருநகர வளர்ச்சி ஆணைய மரகன்று வளர்ப்பு நர்சரியின் சுமார் 100 தொழிலாளர்கள் மூன்றுமாதமாக வழங்காத ஊதியத்தை வழங்கக் கோரி வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

அதிகாரிகள் சம்ளத்தை சரியான நேரத்தில் கொடுப்பதில்லை என்றும் சில மாதங்களுக்கு சம்பளத்தை கொடுக்காமல் தள்ளிப் போட்டுவிட்டு பின்னர் ஒரு மாதம் மொத்த பாக்கியை இழப்பீடாக வழங்குகிறார்கள் என்று தொழிலாளர்கள் குற்றம் சுமத்தினார்கள். அவர்கள் மாதம் ஒன்றுக்கு 9,000 ரூபாய் ($123) மட்டுமே சம்பளமாக பெறுகிறார்கள். வேலைசெய்யும் திறன் பற்றாக்குறையாக இருப்பதாக கூறி அதிகாரிகள் சம்பளத்தை பிடித்துவைத்து விடுகிறார்கள் என்று அவர்கள் கூறினார்கள். நர்சரியில் தொழிலாளர்களின் எண்ணிக்கையை 50 சதவீதமாக குறைத்துவிட்டார்கள். அந்த உழைப்பு சுமையை தங்கள் மீது சுமத்தியுள்ளார்கள் என்று அவர்கள் புகார் தெரிவித்தனர்.

கொச்சின் துறைமுகத் தொழிலாளர்கள் தனியார் மயமாக்கத்தை எதிர்த்து போராட்டம்

கொச்சியில் பிரேரிக்கப்பட்ட முக்கிய துறைமுக பொறுப்பு ஆணைய சட்டம், 2020 இன் கீழ் துறைமுகத்தை தனியார் மயமாக்குவதற்கான இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்த்து அக்டோபர் 4 அன்று கொச்சி துறைமுக தலைமை அலுவலகத்திற்கு வெளியே கொச்சி துறைமுக கூட்டுத் தொழிற்சங்க மன்றம் ஒரு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியிருக்கிறது.

துறைமுக நடவடிக்கைகள் நெறிப்படுத்தப்பட்டு, பணியமர்த்தப்படாமல் உள்ள அனைத்து இடங்களும் நிரப்பப்படவேண்டும் என்று கூட்டுத் தொழிற்சங்கங்களின் கோரிக்கை வைத்துள்ளது. கப்பல் வழித்தடத்தை ஆழப்படுத்துவதற்கான செலவை கொச்சி கப்பல் கட்டும் நிறுவனமும் இந்திய கடற்படையும் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்றும் அவர்கள் கோரினார்கள்.

பாகிஸ்தான் அரசுத் துறை தொழிலாளர்கள் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் கேட்டு போராட்டம்

இஸ்லாமாபாத் இல் புதன்கிழமையன்று ஆயிரக்கணக்கான அரசுத் துறை ஊழியர்கள் ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியத்தின் மீதான வெட்டுக்களை முடிவுக்கு கொண்டுவரவும் மற்றும் பணி ஓய்வுக்குபின்னரான பலன்கள் மற்றும் மருத்துவ கொடுப்பனவில் 100 சதவீத அதிகரிப்பு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். அக்டோபர் 6 அன்று இஸ்லாமாபாத்தில் பல்வேறு மாகாணங்களிலிருந்து வந்த 10,000 க்கு மேற்பட்ட அரசுத் துறை தொழிலாளர்களால் இதே போன்ற ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர். அந்த போராட்டம் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஆராய்வதற்கு ஒரு குழுவை நியமிப்பதாக கூறிய அரசாங்கத்தின் ஒரு தெளிவற்ற உறுதிமொழியை ஏற்றுக்கொண்டது, இதை அடுத்து அனைத்து பாகிஸ்தான் எழுத்தர்கள் சங்கம் ஆர்ப்பாட்டத்தை திரும்பப் பெற்றுக்கொண்டது.

புதன்கிழமையன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் எழுத்தர்கள், பெண் சுகாதாரத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், பாகிஸ்தான் ரயில் மற்றும் பாகிஸ்தான் சர்வதேச விமான நிலைய தொழிலாளர்கள் மற்றும் பிறர் கலந்துகொண்டிருந்தனர். தேசிய சட்டமன்றத்தை நோக்கி சென்ற ஆர்ப்பாட்டக்காரர்களின் பேரணியை தடுத்து நிறுத்துவதற்கு ஆயுத வாகனங்களுடன் கூடிய 1,300 பேர்களைக்கொண்ட பலமான பாதுகாப்பு படை மற்றும் தண்ணீர் பீச்சியடிக்கும் வண்டிகளை அரசாங்கம் நிறுத்தியிருந்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைக்கு ஏற்ப அரசாங்கம் 2020-21 நிதி ஆண்டுக்காக அனைத்து அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை உறையவைக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஊழியர்களின் ஓய்வூதிய பலன்களை ஒட்டுமொத்தமாக துடைத்தெறிவதற்கு அரசாங்கம் திட்டம் தீட்டுவதாக ஊழியர்கள் குற்றம் சாட்டினார்கள்.

அனைத்து பாகிஸ்தான் எழுத்தர்கள் சங்கம் மற்றும் பிற சங்கங்கள் இணைந்த ஒரு குடை அமைப்பான அனைத்து பாகிஸ்தான் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் இந்த சமீபத்திய ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

கம்போடிய குப்பை சேகரிப்பவர்கள் வேலைநிறுத்தம் முடித்துக்கொள்ளப்பட்டது

தலைநகர் புனோம் பென்னில் ஒப்பந்ததாரர் சி.என்.டி.ஆர்.ஐ. ஆல் பணியமர்த்தப்பட்டிருக்கும் சுமார் 2,500 குப்பை சேகரிக்கும் டிரக் ஓட்டுநர்கள் புதன்கிழமையன்று தங்களது 13 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடித்துக்கொண்டனர். நகர மன்றம் (City Hall) குப்பை சேகரிக்கும் ஒப்பந்தத்தை மற்றொரு ஒப்பந்ததாரருக்கு வழங்க இருப்பதாக சி.என்.டி.ஆர்.ஐ. தொழிலாளர்கள் கண்டுபிடித்தபிறகு இந்த வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கப்பட்டது.

வேலைக்கு திரும்பியதை தொடர்ந்து என்.டி.ஆர்.ஐ.யின் ஒப்பந்தம் முடிவடைகின்ற போது பணி முடிவு முறைகள் குறித்து புனோம் பென் நகராட்சி அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஒப்பந்தக்காரர் இடையே ஒரு உடன்பாடு ஏற்பட்டது.

சி.என்.டி.ஆர்.ஐ யின் பணியாளர்களாக தொழிலாளர்கள் வேலையைவிட்டு நிறுத்தப்படும் நிலையில் ஜனவரி 31 அன்று தற்போதைய நகராட்சியுடனான ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது. பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் அனைத்து சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகள், பணிமூப்பு கொடுப்பனவுகள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட்டுவிடும். இத்தகைய கொடுப்பனவுகள் நகராட்சி அதிகாரிகளால் உத்தரவாதமளிக்கப்படுகிறது.