ஆபத்தான வகையில் பள்ளிகள் திறக்கப்படுவதை ஜேர்மன் பெற்றோர் அமைப்புக்கள் எதிர்க்கின்றன

Gregor Link
22 October 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜேர்மனியில் இருபது மிகப்பெரிய பெற்றோர் அமைப்புக்கள், பள்ளிகளில் நேரடி வகுப்புக்களை மீண்டும் தொடங்குவதற்கான “தற்போதைய முடிவுகளை எதிர்க்கும் வகையிலான தங்களது தீவிர நிலைப்பாடுகளை” வெளிப்படுத்த சான்சிலர் அங்கேலா மேர்க்கெலுக்கும் (கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் – CDU) ஏனைய முன்னணி அரசியல்வாதிகளுக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளன.

தற்போதைய சூழ்நிலை “எங்களது குழந்தைகளுக்கும், ஒட்டுமொத்த மக்களுக்கும்” ஆபத்தானது என்பதுடன் “பொறுப்பற்றது” என்று அவர்கள் எழுதினர். மேலும் அவர்கள், “பள்ளிகளை திறப்பதற்காக கூட்டாட்சி அரசுகள் மேற்கொண்ட சுகாதார நடவடிக்கைகள் —கடந்த சில வாரங்களாக காணப்பட்டது போல— நோய்தொற்றுக்கு எதிராக பள்ளி சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போதுமானதாக இல்லை” என்றும் குறிப்பிட்டனர்.

இந்த கடிதம், ஜேர்மனியில் மட்டுமல்லாமல், ஐரோப்பா எங்கிலுமாக பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் வளர்ந்து வரும் கோபம் மற்றும் சீற்றத்தின் வெளிப்பாடாக உள்ளது. ஆளும் வட்டாரங்களால் ஆணையிடப்பட்ட நூறாயிரக்கணக்கான உயிர்களை பலி கொள்ளும் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையை பெரும்பாலான தொழிலாளர்களும் இளைஞர்களும் எதிர்க்கின்றனர். இந்நிலையில், செய்தி ஊடகங்கள் வெளிப்படையாகவும் அச்சுறுத்தும் வகையிலும் இது குறித்து மவுனம் சாதிக்கின்றன. News4teachers என்ற ஆசிரியர்களுக்கான இணைய வழியைத் தவிர, ஜேர்மனியின் எந்தவொரு பெரிய பிரசுரமும் பெற்றோர்களின் பிரதிநிதிகள் எழுதிய இந்த கடிதம் பற்றி எதையும் தெரிவிக்கவில்லை.

Classroom in Dortmund, Germany, August 13, 2020 (AP Photo/Martin Meissner, File)

இந்த கடிதம் உண்மை நிலைமை குறித்த பகுப்பாய்வுடன் தொடங்குகிறது. அதாவது, “ஜேர்மனியில் SARS-CoV-2 [COVID-19] நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிர்ச்சி தரும் வகையில் அதிகரித்து வருகிறது. இது குறிப்பாக நமது பள்ளிகளை பாதிக்கும். ஏராளமான ஆசிரியர்கள், ஏனைய கல்வி வல்லுநர்கள், மற்றும் ஏனைய பள்ளி ஊழியர்களுடன் மாணவர்கள் இருக்க வேண்டியிருப்பதால், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் SARS-CoV-2 நோய்தொற்றுக்குள்ளாகி வருகின்றனர். ஆகவே, தற்போது குறைந்தது 50,000 மாணவர்களும், மேலும் கூடுதல் எண்ணிக்கையிலான ஆசிரியர்களும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று இந்த கடிதம் தொடங்கப்பட்டிருந்தது.

பெற்றோர் அமைப்புக்கள் பள்ளிக் கல்வி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளின் அலட்சியத்தை விமர்சித்ததுடன், “நோய்தொற்று பாதிப்புள்ள நபர்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளி வகுப்புக்களோ அல்லது கல்வி ஆண்டு குழுக்களோ முழுமையாக தனிமைக்குட்படுத்தப்படவில்லை, மாறாக பாதிக்கப்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மாணவர்கள் மட்டுமே பெரும்பாலும் தனிமைப்படுத்தப்பட்டனர்” என்பது பெரிதும் வெளிப்படையானது என்று எழுதின. மேலும் அக்கடிதம் இவ்வாறு தொடர்ந்தது: “எவ்வாறாயினும், விஞ்ஞான தொடர்பு வரிசை பகுப்பாய்வுகளின் அடிப்படையில் நோய்தொற்றுக்களின் மூலத் தடமறிய அமைச்சகங்கள் தவறிவிட்டன. இதனால் அறிகுறி இல்லாத நோய்தொற்றுக்களை கண்காணிக்கவோ கண்டறியவோ முடியாது, ஏனென்றால் பல சந்தர்ப்பங்களில் ஒட்டுமொத்த குழுக்களும் பரிசோதிக்கப்படாமல் கைவிடப்படுகின்றன.”

இதுபோன்ற பல முறையீடுகள் செவிட்டுக் காதுகளில் விழுந்துவிட்டதாகவும், எந்தவொரு “ஏற்றுக்கொள்ளக்கூடிய பதிலிறுப்பை” வழங்கத் தவறிவிட்டதாகவும் தேசிய அளவில் பெற்றோர் சங்கங்கள் புகார் செய்கின்றன. மேலும் “குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களுக்கு SARS-CoV-2 நோய்தொற்றால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான பேராசிரியர் டாக்டர் கிறிஸ்தியான் ட்ரொஸ்டன் போன்றோரின் கண்டுபிடிப்புக்களை கல்வி அமைச்சர்கள் தொடர்ந்து புறக்கணிப்பது” குறிப்பாக தீவிரமானது என்றும் அவை தெரிவிக்கின்றன.

இந்த பின்னணியில், பள்ளிகளில் நோய்தொற்று பரவுவதற்கான வாய்ப்பு ஆபத்தான விகிதத்தில் உள்ளது என்று அறியப்படுகிறது: “முக்கியமாக பாதுகாப்பு தேவைப்படுகிறவர்களைப் பொறுத்தவரை, அதிலும் குறிப்பாக பள்ளிகளில், AHA விதிகளை [Abstand, Hygiene, Atemschutz = சமூக இடைவெளி, சுகாதாரம் மற்றும் சுவாச பாதுகாப்பு] பயன்படுத்த முடியும்.”

பிற நடவடிக்கைகளுக்கு மத்தியில், சுகாதார நடவடிக்கைகளுக்கான “அரசின் தனிப்பட்ட கட்டுப்பாட்டிலான, படிப்படியான திட்டம், “கட்டாயமாக முகக்கவசங்களை அணியும் கொள்கை நீட்டிப்பு,” “கற்றல் குழுக்களின் அளவை குறைப்பது,” மற்றும், “சிறுபான்மையினருக்கான தேவையை கணக்கில் எடுத்துக் கொள்ளும்போது” “மிகப்பெரிய இலத்திரனியல் ஏற்பாட்டை சாத்தியப்படுத்தி” “சுழற்சிமுறை கலவை அறிவுறுத்தல்களுக்கு சாத்தியப்படுத்துவது” ஆகியவற்றிற்கு பெற்றோர் சங்கங்கள் அழைப்பு விடுக்கின்றன.

மேலும் கூடுதலாக, இந்த கடிதம், “அறைகளில் காற்று வடிகட்டி அமைப்புக்களை அமைப்பது,” “அதிகபட்ச ஆபத்து உள்ள அனைத்து நபர்களுக்கும் உயர்தர முகக்கவசங்களை (FFP2 ரக) வழங்குவது” மற்றும் பள்ளிகளில் நோய்தொற்றுக்களின் புள்ளிவிபரங்கள் தொடர்பாக முழுமையான வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிப்பது, “அத்துடன் பாதிக்கப்பட்ட அனைத்துக் குழுக்களையும் அடுத்தடுத்து பரிசோதிப்பது,” என அனைத்தும் இன்றியமையாதவை என்றும் தெரிவிக்கின்றது.

பெற்றோர்களின் இந்த பொதுவான முறையீடு, அந்தந்த அரசாங்கங்களின் குற்றவியல் கொள்கைகளுக்கு எதிராக ஐரோப்பா எங்கிலுமாக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்பின் வெளிப்பாடாக உள்ளது. உலக சோசலிச வலைத் தளம் ஒரு ஊடக இருட்டடிப்புக்கு மத்தியில் தெரிவித்தபடி, பரந்த எதிர்ப்பு நடவடிக்கைகள், பள்ளி புறக்கணிப்புக்கள் மற்றும் ஆக்கிரமிப்புக்களுக்கு போலந்து மற்றும் கிரீஸ் நாடுகளின் மாணவர்கள் சமீபத்திய வாரங்களில் ஏற்பாடு செய்தனர். மேலும், நோய்தொற்று வீதங்கள் அதிவேகமாக உயர்ந்து வரும் செக் குடியரசில், சமீபத்தில் தேசிய அளவில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.

ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவின் மில்லியன் கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள், தங்களது கவலைகளும் கோரிக்கைகளும் கல்வி அமைச்சர்கள், மற்றும் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையை மிக மிக வெளிப்படையாக பின்பற்றும் அரசாங்கங்கள் உடனான நேரடி மோதலுக்கு தங்களை இட்டுச் செல்கின்றன என்பதை பெரிதும் உணர்கிறார்கள்.

ஆசிரியர்களிடையே நிலவும் ஒரு பொதுவான வெளிப்பாடு என்பது news4teachers இணையவழியில் பதிவான ஒரு அநாமதேய கருத்தாகும். பெற்றோர் சங்கங்களுக்கு ஆசிரியர் நன்றி தெரிவிப்பதுடன், “குழு அளவு, பிரிவு, அமைப்பு, கற்பித்தல் வடிவம்” ஆகியவற்றின் மீதான கட்டுப்பாட்டை இனி கல்வி அமைச்சர்களும் மற்றும் பள்ளி அதிகாரிகளும் பயன்படுத்தக்கூடாது என்று கோருகிறார். அதற்கு பதிலாக, “சம்பந்தப்பட்ட பள்ளிகளின் அதிகாரிகள் பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோருடன் சேர்ந்து யோசனைகளை வழங்கவும் முடிவுகளை எடுக்கவும் அனுமதிக்கப்பட வேண்டும்” என்கிறார்.

“தற்போதைய தொழில் பாதுகாப்பு விதிமுறைகளை பள்ளிகளில் அமல்படுத்த வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்,” என்று ஆசிரியர் மேரி முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார். “இது உங்களது பிள்ளைகளுக்கும் நன்மையளிக்கும், ஏனென்றால் இது அவர்களுக்கு நோய்தொற்றும் ஆபத்தைக் குறைக்கும். நாம் எங்கு சென்றுக் கொண்டிருக்கிறோம் என்று நீங்கள் காண விரும்பினால், நீங்கள் வெகு தொலைவில் உள்ள நாடுகளை பார்க்க வேண்டியதில்லை: ஏனென்றால், பிரான்ஸ், ஹாலந்து, செக் குடியரசு, ஆஸ்திரியா என நம்மை சுற்றியுள்ள அனைத்து நாடுகளிலுமே நோய்தொற்றுக்கள் வெடித்து பரவி வருகின்றன.

நோய்தொற்றுக்களை கண்டறிவதற்கான, கண்காணிப்பதற்கான மற்றும் தடுப்பதற்கான ஜேர்மன் அரசாங்கத்தின் மைய நிறுவனமான ராபர்ட் கோச் நிறுவனம் (Robert Koch Institute-RKI), செவ்வாயன்று, பள்ளிகளுக்கான கட்டுப்பாடற்ற “செயலுக்கான பரிந்துரையை” பிரசுரித்தது, இது பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து நோய்தொற்று வெடிப்புக்கள் அதிகரித்து வருவதாக வெளிப்படையாகக் கூறுகிறது.

மாவட்ட அளவில் நோய்தொற்றுக்களின் 7 நாள் மதிப்பீட்டைப் பொறுத்து, வகுப்புக்களில் கட்டாயமாக முகக்கவசங்கள் அணிவதை செயல்படுத்துவது போன்ற மேலதிக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆவணம் முன்மொழிகிறது. அக்டோபர் 15 அன்று, கல்வி மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர்களின் மாநாட்டின் தலைவரான ஸ்டெஃபானி ஹூபிக் (சமூக ஜனநாயகக் கட்சி, SPD), அத்தகைய “தன்னியக்கவாதத்தை” தான் கடுமையாக எதிர்த்ததாக ஊடகத்திற்கு தெரிவித்தார், இதை, அங்கு கூடியிருந்த அமைச்சர்கள் “எந்த அர்த்தமும் இல்லாதது” என்று ஒப்புக் கொண்டனர்.

News4teachers இணையவழியில் ஜியோர்க் என்ற ஆசிரியர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: “என்ன விலை கொடுத்தாலும், பள்ளிகளை திறந்து வைத்திருப்பது வெளிப்படையாக அரசியல்வாதிகளுக்கு அதிகபட்ச முன்னுரிமையானது. இந்நிலையில், ஏற்கனவே கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ள மாணவர்களும் ஆசிரியர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டிய துரதிர்ஷ்டவசமான இணை சேதமாக இது உள்ளது. பணம் செலவு செய்ய வேண்டிய இந்த நடவடிக்கைகளை தவிர்க்க நீங்கள் எந்த திசை நோக்கியும் பரபரப்புடன் திரும்புவீர்கள்.”

“பாடத்திட்டத்தை முக்கிய பாட அளவிற்கு சுருக்கவும்,” “ஒன்று முதல் ஏழு வரையிலான வகுப்புக்களை பாதியாக்கவும்,” மேலும் இந்த வகுப்புக்களை மேற்பார்வையிட “சிறு பாடங்களுக்கான ஆசிரியர்களைப் பயன்படுத்தவும்” அவர் ஆலோசனை கூறுகிறார். மேலும், எட்டாம் வகுப்பு முதல் முக்கிய பாடங்களை முடிந்தவரை இணையவழி வகுப்புக்களாக நடத்த வேண்டும் என்றும் ஜியோர்க் கூறுகிறார்.

மேலும், மற்றொரு ஆசிரியர் இவ்வாறு தெரிவிக்கிறார்: “ஏனைய அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் உள்ள (மேல்நிலை) பள்ளிகள் கொரோனா வைரஸ் பரவுவதற்கான முக்கிய காரணிகளாக உள்ளன. நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களின் எண்ணிக்கைகள் பெருகிக் கொண்டிருக்கையில், நோய்தொற்றை திறம்பட கட்டுப்படுத்துவது பற்றி பேசுவதற்கு இனிமேல் சாத்தியமில்லை. இந்த பொறுப்பற்ற கல்வி கொள்கை தொற்றுநோயை விரைந்து பரவச் செய்யும் ஊக்கியாக மாறி வருகிறது”.

பெற்றோர் ஒருவர் இவ்வாறு விளக்குகிறார்: “பொருளாதாரம் தான் முதன்மையாக உள்ளது, அதனால் தான் பள்ளிகளில் அனைத்தும் அப்படியே இருக்க வேண்டும் என்ற நிலைமை உள்ளது. எங்களது குழந்தை முதல் வகுப்பிற்கு செல்கிறது, அனைவரும் முகக்கவசம் அணியாமலும், ஒருவருக்கொருவர் 1.5 மீட்டர் இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படாமலும் சேர்ந்தே செல்கின்றனர். ஒரு மேசைக்கு 2 குழந்தைகள் அமர்ந்திருக்கின்றனர். இலையுதிர் கால விடுமுறைக்குப் பின்னர் வகுப்பறைகளில் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை காற்றோட்ட வசதி செய்யப்பட திட்டம் உள்ளது, ஆனால் மிக மிக குளிர்ச்சியான காற்று தான் அங்கு வருகிறது. இதன் விளைவாக குழந்தைகளும் ஆசிரியர்களும் விரைவில் மோசமான ஜலதோசத்தினால் அல்லது நிமோனியாவால் பாதிக்கப்பட்டு படுக்கையில் வீழ்கின்றனர். இது வெறுமனே உயிர்களுடன் விளையாடுவதாக உள்ளது!”

“இது கல்வி, குழந்தைகள் அல்லது வேலையின் போது பாதுகாப்பு ஆகியவை பற்றியது அல்ல, மாறாக பெற்றோர்கள் வேலைக்கு திரும்ப முடிகிறதா என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது,” என்று பாலிம் என்ற மற்றொரு ஆசிரியர் குறிப்பிடுகிறார். மேலும், தற்போதைய பணி, சிறிய குழுக்களுக்கு கல்வியூட்டும் வகையில் மேலதிக “அறைகளை வாடகைக்கு அமர்த்தவும்” “உடற்பயிற்சிக்கூடங்கள், உணவுக்கூடங்கள் மற்றும் பிற அறைகளை பிரத்யேகமாகப் பயன்படுத்தவும்” நடவடிக்கை எடுக்கக் கோருவது உள்ளது என்கிறார். “அச்சு அறைகள் மற்றும் தகர்ந்து விழும் அபாயத்திலுள்ள கூரைகள்” போன்றவற்றை காண்கையில், “எத்தனை வகுப்பறைகளில் காற்றோட்ட வசதி கூட செய்யப்படாமல் உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது” என்றும் பாலிம் கூறுகிறார்.

கல்வி அமைச்சர்களோ, ஜேர்மன் சான்சிலரோ இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கப் போவதில்லை. கல்விக்கான பாதுகாப்புமிக்க நிலைமைகளை உறுதிப்படுத்திக் கொள்ள, சிறிய குழுக்கள் அமைத்தல், பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களை சுயாதீன நடவடிக்கைக் குழுக்களாக ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன், அவை சர்வதேச அளவிலான தொழிலாளர் சக்திகளுடன் தம்மை இணைந்து கொண்டு பொது வேலைநிறுத்தங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அத்தகைய குழுக்களை அமைப்பதில் பங்கேற்பது தொடர்பாக எங்களை இங்கே தொடர்பு கொள்ளுங்கள்.