அமெரிக்க தேர்தல் நெருங்குகையில், நியூ யோர்க் டைம்ஸ் அதன் ரஷ்ய-விரோத பொய்-தகவல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்துகிறது

26 October 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி வாரங்களில், ட்ரம்ப் நிர்வாகம் அதன் ஆட்சி சதித் திட்டங்களைத் தீவிரப்படுத்தி பாசிசவாத வன்முறையைத் தூண்டிவிட்டு வருகையில், அமெரிக்க உளவுத்துறை முகமைகளோ நியூ யோர்க் டைம்ஸின் உதவியுடன், தேர்தல்களில் ரஷ்யா "குறுக்கிடவும்" மற்றும் அமெரிக்காவில் "குழப்பத்தை விதைக்கவும்" முயன்று வருவதாக மீண்டுமொருமுறை ஆதாரமற்ற பிரச்சாரத்தைப் பரப்பி வருகின்றன.

இவ்வாரம் மூன்று நாட்களில், ஜனநாயகக் கட்சியுடன் அரசியல்ரீதியில் அணிசேர்ந்த பிரதான பத்திரிகையான டைம்ஸ் ரஷ்ய சதியாக இருக்கலாம் என்பதன் மீது ஒருமுனைப்பட்ட மூன்று கட்டுரைகளைப் பிரசுரித்தது. அந்த கட்டுரைகளை டைம்ஸின் மிகவும் நம்பிக்கைக்குரிய சிஐஏ இன் சுருக்கெழுத்தாளர் டேவிட் சாங்கர் இணை-எழுத்தாளராக இருந்து எழுதியிருந்தார்.

The second and final presidential debate between Donald Trump and Joe Biden, Thursday, Oct. 22, 2020, at Belmont University in Nashville, Tenn. (AP Photo/Morry Gash, Pool)

டைம்ஸின் மெக்கார்த்திச ரஷ்ய-விரோத பிரச்சாரத்தின் இந்த சமீபத்திய தாக்குதலும் அதே முன்மாதிரியான வடிவத்தைத் தொடர்கிறது. எந்தவித உறுதியான உண்மைகளையும் தட்டிக்கழித்து விட்டு, நம்பகரமற்ற வலியுறுத்தல்களும் வாதங்களும் உண்மையென முன்வைக்கப்படுகின்றன. அரசுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ள பாதுகாப்பு நிறுவன அறிக்கைகளால் ஆதரிக்கப்பட்டு, பொதுவாக ஒவ்வொன்றும், பெயர் வெளியிட விரும்பாத "உளவுத்துறை அதிகாரிகள்" மீது சாட்டப்படுகிறது.

செவ்வாய்கிழமை, சாங்கரும் நிகோல் பெர்ல்ரோத்தும், “தேர்தல் நெருங்குகையில், அரசும் தொழில்நுட்ப நிறுவனங்களும் ரஷ்யாவை (மற்றும் ட்ரம்பை) திரும்ப முன்நகர்த்துகின்றன,” என்ற தலைப்பின் கீழ், "வரும் நவம்பரில் சந்தேகத்திற்குரிய ரஷ்ய வலையமைப்பால் தேர்தல் முறை கட்டுப்பாட்டில் எடுக்கப்படலாமென அவர்கள் அஞ்சுவதால் அதன் ஓர் ஆக்ரோஷமான பிரச்சாரத்தை" எதிர்க்க அமெரிக்க இணையவழி கட்டளையகத்திற்கும் தொழில்நுட்ப பெருநிறுவனங்களுக்கும் இடையே ஓர் கூட்டுறவு வேண்டுமென எழுதினர்.

இதைத் தொடர்ந்து புதன்கிழமை "ஈரானும் ரஷ்யாவும் தேர்தல் இறுதி நாட்களில் செல்வாக்கு செலுத்த முனைகின்றன, அமெரிக்க அதிகாரிகளே உஷார்,” என்று தலைப்பிட்டு சாங்கரும் ஜூலியன் பார்னெஸூம் இணைந்து ஒரு கட்டுரை எழுதினர். "ஜனாதிபதி தேர்தல் அதன் இறுதி இரண்டு வாரங்களில் நுழைகையில் அதன் மீது செல்வாக்கு செலுத்தும் முயற்சிகளை அவ்விரு நாடுகளும் அதிகரித்து வருவதற்கு உறுதியான முதல் ஆதாரத்தை" டைம்ஸ் வாதம் வழங்கி இருப்பதாக தேசிய உளவுத்துறை இயக்குனர் ஜோன் ராட்க்ளிஃப் மற்றும் FBI இன் இயக்குனர் கிறிஸ்டோபர் வாரேயின் அதே நாள் அறிவிப்பை அக்கட்டுரை குறிப்பிட்டது.

பின்னர் வியாழக்கிழமை, சாங்கர், பெர்ல்ரோத் மற்றும் பார்னெஸ் மூவரும் "ஈரானை விட ரஷ்யாவே மிகப்பெரும் தேர்தல் அச்சுறுத்தலை நிறுத்துகிறது, பல அமெரிக்க அதிகாரிகளும் கூறுகின்றனர்,” என்ற மூன்றாவது கட்டுரையில் ரஷ்யா மீது கவனத்தை மையப்படுத்த அவர்களின் சக்திகளை ஒருங்கிணைத்தனர். ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகளின் முயற்சிகளை ஈரான் மீது ஒருங்குவிப்பதை நோக்கி திரும்பவும் அழுத்தமளிக்க, “பல உளவுத்துறை அதிகாரிகளும் அவர்கள் ரஷ்யா குறித்து அதிகமாக கவலை கொண்டிருப்பதாகவும், அமெரிக்க வாக்குப்பதிவு உள்கட்டமைப்பை மாஸ்கோ பரந்தளவில் அணுக அனுமதிக்கும் முறைகேடுகளில் இறங்க அது சமீபத்திய நாட்களில் மாநில மற்றும் உள்ளாட்சி கணினி வலையமைப்புகளை ஊடுருவி இருப்பதாகவும் அவர் தெரிவித்தனர்,” என்று டைம்ஸ் வலியுறுத்தியது.

இந்த அறிக்கைகள் அனைத்தும் முட்டாள்தனமான இட்டுக்கட்டல்கள் மீது அமைக்கப்பட்டுள்ளன. சான்றாக, “ஜனாதிபதி போட்டியில் குறுக்கிடுவதற்கான ரஷ்யாவின் திட்டங்கள் என்று அமெரிக்க உளவுத்துறை முகமைகள் எதை நம்புகின்றனவோ அதன் துண்டு துண்டான விபரங்களை… அவை பெற்றிருப்பதாகவும், “ரஷ்யாவின் அரசு ஊடுருவல் நிபுணர்கள் செப்டம்பர் தொடக்கத்தில் இருந்தே டஜன் கணக்கான மாநில மற்றும் உள்ளாட்சி அரசாங்கங்களின் வலையமைப்புகளையும் மற்றும் வான்வழி வலையமைப்புகளையும் இலக்கில் வைத்திருப்பதாக" “FBI மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள்" அறிவித்துள்ளதாகவும் வியாழக்கிழமை கட்டுரை மூச்சு முட்டும் அளவுக்கு அறிவிக்கிறது.

“ரஷ்யா" “டஜன் கணக்கான" உள்ளாட்சி அரசாங்கங்களை இலக்கில் வைத்திருப்பதாக குறிப்பிடும் கூற்றை டைம்ஸ் அறிவிக்கையில், அது FBI மற்றும் இணையவழி பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு முகமையின் வெளியீடுகளை இணைத்துக் காட்டுகிறது. அந்த அறிக்கை கூறும் ஒருவரின் நடவடிக்கைகளை ரஷ்யா ஊக்குவிப்பதாக அது எந்தவித ஆதாரமும் இல்லாமல் குறிப்பிடுகிறது. குற்றஞ்சாட்டப்படும் ஊடுருவலில் பயன்படுத்தப்பட்ட இணைய எண் முகவரிகள் (IP addresses) உண்மையில் துருக்கியில் இருந்த வந்தவை என்பதால், ரஷ்ய அரசைத் தொடர்புபடுத்துவது ஒருபுறம் இருக்க, அந்த நடவடிக்கையை ரஷ்யாவில் யாரோ ஒருவர் மீது தொடர்புபடுத்தவும் கூட அங்கே எந்த முயற்சியும் இல்லை என்பதை அந்த அறிக்கையின் தொழில்நுட்ப விபரங்கள் காட்டுகின்றன.

வாக்குகளில் தில்லுமுல்லு செய்ய ரஷ்யா முயன்று வருகிறது என்ற கூற்றுகளைப் பொறுத்த வரையில், அவர்கள் அறிவிக்கும் அனைத்தும் உண்மை என்று அனுமானிப்பதாக இருந்தாலும் கூட, அந்த கட்டுரையில் டைம்ஸ் அதற்கும் வெகு கீழே நிற்கிறது: “அமெரிக்க தேர்தல்கள் எந்தளவுக்கு கடுமையாக உள்ளன என்பதைக் கொண்டு பார்க்கையில், தேசியளவில் வாக்கு எண்ணிக்கைகளை மாற்றுவதற்கான ரஷ்யாவின் ஆற்றல் சிரமமானதே என்று அதிகாரிகள் கூறுகின்றனர்,” என்றது.

“இரண்டொரு மட்டுப்பட்ட விடயங்களில், தேர்தல் சம்பந்தமான வலையமைப்பான தேர்தல் ஆணையத்தை" அணுகும் ஊடுருவல்கள் நடக்கலாமென்றும், அதற்கும் வாக்குகள் "இடுவது மற்றும் எண்ணுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்பதையும் இணையவழி பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு முகமையின் இயக்குனர் கிறிஸ்தோபர் கிரெப்ஸ் ஒப்புக் கொண்டதாக அவரை அவர்கள் மேற்கோளிட்டனர்.

“மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் ரஷ்ய குழுவின் ஊடுருவலைப் பின்தொடரும் பாதுகாப்பு நிறுவனமாக" குறிப்பிடப்படும் FireEye நிறுவனத்தின் அறிக்கைகளை மேற்கோளிடுவதன் மூலமாக டைம்ஸ் அதன் வாதங்களைப் பலப்படுத்துகிறது. அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி கெவின் மாண்டியா சிறப்பு விசாரணைகளுக்கான விமானப்படை அலுவலகத்தில் முன்னாள் சிறப்பு முகவராவார், அத்துடன் இராணுவத் தொழில்துறை பெருநிறுவனம் Lockheed இன் முன்னாள் ஒப்பந்ததாரரும் ஆவார். 2018 இல், பேஸ்புக், ட்வீட்டர் மற்றும் ஏனைய சமூக ஊடக தளங்களில் பிரபலமான இடதுசாரி பக்கங்களையும், மற்றும் "ஒருங்கிணைந்த தாறுமாறான நடவடிக்கை" என்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கணக்குகளையும் தணிக்கை செய்து முடக்கும் ஒரு நகர்வில் FireEye நிறுவனம் முக்கியமாக ஈடுபட்டிருந்தது.

"தேர்தல் முறையில் குறுக்கிடுவதற்கான எந்த முயற்சியும்" தேர்தல் முடிவுகளை நிச்சயமின்றி ஆக்குவதை "நோக்கமாக கொண்டிருக்கக்கூடியது என்று அனுமானிக்க [யாரால்] காரணமுள்ளது,” என்று அச்சுறுத்தல் பகுப்பாய்வு பிரிவின் FireEye நிறுவன இயக்குனர் ஜோன் ஹல்ட்குவிஸ்ட் கூறுவதாகவும், அவர் "முன்னர் அமெரிக்க இராணுவத்தில் கிளர்ச்சி தடுப்பு நடவடிக்கைகளில் இருந்தவர்" என்று அவரின் நிறுவன வலைத்தள விபரங்கள் குறிப்பிடுவதாகவும் டைம்ஸ் மேற்கோளிடுகிறது.

“ரஷ்ய குறுக்கீடு" என்று இந்த தீவிரப்படுத்தப்பட்ட நியூ யோர்க் டைம்ஸ்-சிஐஏ நடவடிக்கை ஒன்றோடொன்று இணைந்த பல அரசியல் நோக்கங்களுக்குச் சேவையாற்றுகிறது.

முதலாவதாக, வெளியுறவுக் கொள்கை திசையில் அங்கே அரசுக்குள் தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. டைம்ஸில் வியாழக்கிழமை வெளியான கட்டுரை ரஷ்யாவை விலையாக கொடுத்து ஈரான் மீது ஒருங்குவிய ட்ரம்ப் நிர்வாகத்திற்குத் திரும்பவும் அழுத்தமளிக்கும் முயற்சிகளை நோக்கமாக கொண்டிருந்தது. கடந்த நான்காண்டுகளாக, அரசுக்குள் ட்ரம்புக்கு எதிரான எதிர்ப்பானது, ரஷ்யாவுக்கு எதிராக ட்ரம்ப் போதுமானளவுக்கு ஆக்ரோஷமாக இல்லை என்று ஜனநாயகக் கட்சியினர் யாருக்காக பேசுகிறார்களோ அந்த இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் கன்னைகளுக்குள் நிலவும் கவலைகள் மீது மையமிட்டுள்ளது.

“இங்கே ரஷ்யா தான் வில்லன்,” என்று டைம்ஸ் நான்சி பெலோசியை மேற்கோளிடுகிறது. “பொதுக் களத்தில் நாம் என்ன பார்க்கிறோமோ அதிலிருந்து பார்க்கையில், ஈரான் ஒரு மோசமான பாத்திரம் வகிக்கிறது என்றாலும் எந்த விதத்திலும் சமஅளவில் இல்லை,” என்றது.

வியாழனன்று இரவு ஜனாதிபதி விவாதத்தில், பைடென் ரஷ்யா மீது ட்ரம்ப் மென்மையாக இருக்கிறார் என்று தாக்குவதற்காக, “ரஷ்யா மற்றும் ஈரான் இரண்டுமே இந்த தேர்தலில் செல்வாக்கு செலுத்த செயல்படுகின்றன" என்ற செய்திகளைக் குறித்த நெறியாளர் கிரெஸ்டென் வெல்கரின் கேள்வியைச் சாதகமாக்கிக் கொண்டார். “நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்கள் விலை கொடுக்க வேண்டியிருக்கும்,” என்றவர் அச்சுறுத்தினார். “அவர்கள் அமெரிக்க இறையாண்மையில் தலையிடுகிறார்கள். என் அறிவுக்கு எட்டிய வரையில், ஜனாதிபதி அது குறித்து புட்டினுக்கு எதுவும் கூறியதாக நான் நினைக்கவில்லை,” என்றார்.

இரண்டாவதாக, வாக்கு முடிவுகள் என்னவாக இருந்தாலும் பதவியில் தங்கியிருக்க பாசிசவாத வன்முறையை முடுக்கி விடுதவற்காக ட்ரம்ப் நிர்வாகம் செய்து வரும் மிகவும் நிஜமான சூழ்ச்சியை அது உத்தியோகபூர்வமாக மூடிமறைப்பதன் பாகமாக உள்ளது.

ரஷ்ய குறுக்கீடு சம்பந்தமாக இட்டுக்கட்டப்பட்ட வாதங்களை டைம்ஸ் விஷமத்தனமாக அறிவிக்கின்ற அதேவேளையில், அது வெள்ளை மாளிகையால் ஊக்குவிக்கப்பட்ட மற்றும் பொலிஸின் பிரிவுகளுடன் தொடர்பு வைத்துள்ள, மிச்சிகன் மற்றும் வேர்ஜினியாவின் ஜனநாயகக் கட்சி ஆளுநர்களைக் கடத்தி படுகொலை செய்வதற்கான பாசிசவாத போராளிகள் குழுவின் சதியைக் குறித்த செய்திகளை முற்றிலுமாக கைவிட்டுள்ளது. வியாழக்கிழமை பைடெனும் ட்ரம்பும் மாற்றி மாற்றி ரஷ்யா மற்றும் சீனாவின் கைப்பைகளில் இருப்பதாக ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்ட போதினும், ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான ட்ரம்பின் முயற்சிகள் அல்லது இத்தகைய சதிகளைக் குறித்து ஒரேயொரு வார்த்தை கூட கூறப்படவில்லை.

வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவத்தின் ஒரு கட்சியாக, ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்பின் வளர்ச்சி ஆளும் வர்க்கம் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு பரந்த போராட்டமாக அபிவிருத்தி அடையுமென பீதியுற்றுள்ளனர். இதனால், ட்ரம்ப் அவரின் ஆதரவாளர்களை கையில் ஆயுதங்களுடன் வாக்குச்சாவடிகளைக் கண்காணிக்க அழைப்பு விடுக்கின்ற நிலையில், டைம்ஸ் கூறுவதன் அடிப்படையில், ரஷ்யா தான் "தேர்தலில் அமெரிக்க நம்பிக்கைக்குக் குழிபறிப்பதிலும்" மற்றும் "முடிவுகள் மீது பிரச்சினைகளை அதிகரிக்கவும்" பொறுப்பாகிறதாம்.

இறுதியாக, ஜனநாயகக் கட்சியினர் மற்றும் உளவுத்துறை முகமைகளின் ரஷ்ய-விரோத பிரச்சாரம் எப்போதுமே அதிகரித்த இணைய தணிக்கை மற்றும் ஜனநாயக எதிர்ப்பை குற்றகரமாக்கும் கோரிக்கைகளுடன் இணைந்துள்ளது. அமெரிக்காவில் பாரிய கோபம் அதிகரிப்பது முன்னொருபோதும் இல்லாத சமூக சமத்துவமின்மை மட்டங்கள் மீதோ, அண்மித்து 230,000 அமெரிக்கர்கள் உயிரிழப்பதில் போய் முடிந்துள்ள ஆளும் வர்க்கத்தின் குற்றகரமான தொற்றுநோய் கொள்கை மீதோ அல்லது பொலிஸ் படுகொலைகளின் முடிவில்லா நடவடிக்கைகள் மீதோ சாட்டப்படுவதில்லை, மாறாக "அதிருப்தியை விதைக்க" ரஷ்யாவின் முயற்சிகள் மீது சாட்டப்படுகின்றன.

தேர்தல்களில் இறுதி வாரங்களில் ட்ரம்பின் சதித்திட்டங்களை ஜனநாயகக் கட்சி மூடிமறைக்கின்ற அதேவேளையில் ட்ரம்ப் தோல்வியடைந்தாலும் அவர் பதவியில் தங்கியிருக்க முயன்றால் என்ன செய்வது என்பதன் மீது அரசு மற்றும் குடியரசுக் கட்சியின் பிரிவுகளுடன் திரைக்குப் பின்னால் அது விவாதங்களில் ஈடுபட்டுள்ளது. அடுத்தாண்டு ஜனநாயகக் கட்சியினர் அதிகாரத்திற்கு வந்தாலும், அது வெளிநாடுகளில் போரைத் தீவிரப்படுத்தவும், அமெரிக்காவுக்குள் ஜனநாயக உரிமைகள் மீது கூடுதலாக தாக்குதல்களை நடத்தவும், மற்றும் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் அதிகாரத்தைப் பலப்படுத்துவதற்கும் பொறுப்பேற்பதன் அடிப்படையிலேயே இருக்கும்.

Joseph Kishore—SEP candidate for US president