COVID-19 வைரஸினால் மருத்துவமனைகள் நிரம்பிவழிகையில், பிரான்சில் மக்ரோன் இரண்டாவது பொது முடக்கம் பற்றி விவாதிக்கிறார்

Alex Lantier
29 October 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதும் தொற்றுநோய் கட்டுப்பாட்டை மீறி வெடித்து பரவி வரும் நிலையில், புதிய கொள்கைகளை அறிவிக்க பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் இன்று மாலை ஒரு தேசிய தொலைக்காட்சி உரையை வழங்கவுள்ளார்.

உடனடியான, தீர்க்கமான நடவடிக்கைகள் இல்லாவிட்டால், நோயாளிகளின் வருகை முதலில் வெள்ளமாக அலைமோதி பின்னர் பிரான்சின் மருத்துவ அமைப்புமுறையை மூழ்கடிக்கும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். ஐரோப்பாவானது ஒவ்வொரு நாளும் குறைந்தது 200,000 புதிய வைரஸ் தொற்றுக்களைப் பதிவுசெய்கிறது, அதில் பிரான்ஸ் ஒரு நாளைக்கு 30,000 முதல் 50,000 புதிய தொற்றுக்களினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த எண்ணிக்கைகள் ஒவ்வொரு 10 நாட்களுக்கும் இரட்டிப்பாகின்றன. ஏற்கனவே, பிரான்சின் 5,800 வென்டிலேட்டர் பொருத்தப்பட்ட படுக்கைகளில் 2,900 தற்போது COVID-19 நோயாளிகளால் நிரப்பப்பட்டுள்ளன. வைரஸால் தினசரி இறப்புகளும் கடுமையாக அதிகரித்து வருகின்றன, ஐரோப்பாவில் நேற்று 2,693 இறப்புகளும், பிரான்சில் மட்டும் 523 மக்கள் இறந்துபோனார்கள்.

ஸ்பெயின், பெல்ஜியம் மற்றும் செக் குடியரசு போன்ற பிற ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து, COVID-19 வைரஸின் உலகளாவிய எழுச்சி நிலை கடந்து செல்லும் முதல் நாடுகளில் பிரான்சும் ஒன்றாக இருக்கிறது. உலகளவில் தினசரி புதிய தொற்றுக்களானது ஜூலை முதல் அக்டோபர் ஆரம்பம் வரை 200,000 முதல் 300,000 வரை ஊசலாடியது, அவைகள் இந்த மாதம் கிட்டத்தட்ட 500,000 ஆக வெடித்துப் பெருகியுள்ளன.

Emmanuel Macron (en.kremlin.ru)

உலக சுகாதார அமைப்பு (WHO) மூன்று மாதங்களுக்கு முன்னர் வசந்த காலத்தில் பொது முடக்கம் முன்கூட்டியே முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பாவில் வைரஸ் மீளெழுச்சிக்கு இட்டுச் செல்லும் என்று எச்சரித்து இருந்தபோதிலும், மக்ரோன் நிர்வாகமும் மற்றய ஐரோப்பிய அரசாங்கங்களும் ஒரு வீட்டில் தங்கியிருத்தலுக்கான உத்தரவை நடைமுறைப்படுத்துவதை எதிர்த்தன. மில்லியன் கணக்கான மக்கள் மிகவும் தொற்றும் கொடிய வைரஸினால் நோய் ஏற்பட்டு விட்ட நிலையில், அவர்கள் இன்னும் அத்தியாவசியமற்ற பணித் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை வீட்டில் தங்க வைக்க அனுமதிக்க மறுக்கின்றனர்.

வைரஸின் எழுச்சி குறித்து பொதுமக்களின் கவலை மற்றும் கோபத்திற்கு மத்தியில், மக்ரோன் பிரான்சின் தேசிய பாதுகாப்பு சபையின் கூட்டத்தை காலை 10 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடத்தினார். நேற்று, பிரதமர் ஜோன் காஸ்டெக்ஸ் பிரான்சின் முக்கிய நாடாளுமன்றக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்தார். இன்று இரவு தொலைக்காட்சியில் உரையாற்றுவதற்கு முன் மக்ரோன் மற்றொரு தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தை நடத்துவார்.

COVID-19 வைரஸ் பெருந்நோய் எழுச்சியினால் தொற்றுகள் மற்றும் இறப்புகள் வசந்த காலத்தை விட மிகவும் அழிவுகரமான நிலையில் நாட்டின் சுகாதார அமைப்புமுறை உடனடியாக நிலைகுலைவதை எச்சரிக்க முன்னணி மருத்துவர்கள் சமீபத்திய நாட்களில் முக்கிய ஊடகங்களில் நேர்காணல்களை வழங்கியுள்ளனர்.

பாரிசிலுள்ள Tenon மருத்துவமனையின் தொற்று நோய்ப் பிரிவின் தலைவரான பேராசிரியர் Gilles Pialoux என்பவர் BFM-TV இடம் "இது ஒரு போர் நிலைமையாக இருக்கிறது" என்றும் "ஐயத்திற்கிடமின்றி வீட்டில் தங்கியிருத்தலுக்கான ஒரு உத்தரவிற்கும் அழைப்பும் விடுக்கிறேன்" என்றும் அவர் கூறினார். வசந்த காலத்தில் முன்னைய இறப்புகளை விட "விரைவான, மிக சிக்கலான மற்றும் வலுவான இரண்டாவது அலை" என்று அவர் எச்சரித்தார். "ஆகஸ்ட் மாதத் தொடக்கத்திலேயே வைரஸ் பரவலின் கட்டுப்பாட்டை நாங்கள் இழந்திருக்கிறோம்," என்று அவர் கூறினார்.

வீட்டில் தங்கியிருத்தலுக்கான ஒரு பொது உத்தரவு பொருளாதார ரீதியாக சாத்தியமற்றது என்று கூறும் மக்ரோன் அரசாங்கம் போன்றவைகளை Pialoux வெளிப்படையாக விமர்சித்தார், அவைகள் "நீங்கள் பொருளாதாரத்தை மீண்டும் கொண்டு வர முடியும், ஆனால் உயிரைப் பாதுகாக்க ஆதரவு கிடைக்காத ஒருவரை மீண்டும் கொண்டு வர முடியாது" என்றார்.

நேற்றைய அவசரக் கூட்டத்திற்குப் பின்னர், பாரிஸிலுள்ள Pitié-Salpêtrière மருத்துவமனையின் தொற்று நோய்ப் பிரிவின் தலைவரான Eric Caulmes என்பவர் Pialoux இன் அறிக்கைகளை எதிரொலித்தார். "வைரஸ் நம்மிடையே மிகவும் பரவலாக பரவி உள்ளது, இப்போது, இன்று எங்களுக்கு வேறு வழியில்லை என்று நினைக்கிறேன். நாங்கள் ஒரு புதிய பொது முடக்க உத்தரவை வழங்க வேண்டும்” என்றும் “சில வாரங்களுக்கு முன்பு தொற்றுநோயின் கட்டுப்பாட்டை இழந்தோம். இதை பிரதமரும் சுகாதார அமைச்சரும் கூட அங்கீகரித்தார்கள்” என்று Caulmes, France Info தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.

மக்ரோனின் தற்போதைய இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரையான ஊரடங்கு உத்தரவு நடவடிக்கை "ஒரு ஆபத்தான பந்தயம்" என்று விமர்சித்த Caulmes, "ஒரு தொற்று நோய்க் கண்ணோட்டத்தில், இது ஒரு சிறந்த முறையில் நிறுவப்பட்டுள்ள ஒரு முறை அல்ல" என்று மேலும் கூறினார். "செப்டம்பரில் வீட்டில் இருந்து வேலை செய்வதை நிறுத்துமாறு மக்களுக்கு கூறப்பட்டது, அது ஒரு தவறு என்று நான் நினைக்கிறேன்" என்று அவர் விமர்சித்தார். நாம் முடிந்தவரை வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும். இது பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு ஆயுதமாகும்."

தொற்றுகுள்ளாகுபவர்களின் வெடிக்கும் அதிகரிப்பானது மருத்துவமனைகளை சதுப்பு நில மூழ்கடிப்பிற்கு அச்சுறுத்துகிறது என்று Caulmes எச்சரித்தார்: “மருத்துவ அமைப்புமுறை COVID-19 வைரஸால் வரம்பு மீறிப்போகும் போது, விரைவில் நாங்கள் COVID-19 வைரஸ் நோயாளிகளை வென்டிலேட்டர் படுக்கைகளில் மட்டுமே வைத்திருப்போம், இனி நாங்கள் மற்றய நோயாளிகளைக் கையாள முடியாது. சரியான முடிவுகளை எடுக்க நீண்ட காலம் காத்திருப்பதானது, விளைவுகளை ஏற்படுத்துவதற்கு அவர்கள் அதிக காலம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை ஒருவர் நினைவில் கொள்ள வேண்டும்” என்று அவரது எச்சரிக்கையில் குறிப்பிட்டார்.

வைரஸின் மீளெழுச்சி என்பது உலகெங்கிலுமுள்ள முதலாளித்துவ அரசாங்கங்களால் நிதி பிரபுத்துவத்தின் இலாப நலன்களுக்கு சுகாதாரக் கொள்கையை அரசியல்ரீதியான குற்றத்திற்கு கீழ்ப்படுத்தலின் விளைவாக இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியமானது (EU) COVID-19 வைரஸ் தொற்றுநோய்க்கு விடையிறுக்கும் வகையில் வங்கி மற்றும் பெருநிறுவன பிணையெடுப்புகளில் முன்னோடியில்லாத வகையில் 2 டிரில்லியன் டாலர்களை கடந்து செல்லுகிறது. இருப்பினும், இந்தப் பொது நிதியில் ஒரு மிகச் சிறிய பகுதியே மோசமான வேலையின்மை காப்பீட்டு திட்டங்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கான கடன் திட்டங்களுக்கு நிதியளிக்க சென்றுள்ளது.

அதற்கு பதிலாக, வங்கிகளானது இளைஞர்களை பள்ளிக்கு மீண்டும் திரும்பக் கோரியது, ஆகவே அவர்களின் பெற்றோர்களையும் பணிக்குத் திரும்ப வைக்க முடிந்தது, இது ஆளும் வர்க்கம் பொது பணப்பையில் இருந்து எடுத்துள்ள பெரும் செல்வத்தில் இலாபத்தை பெறுவதற்காகும். தவறான பாதுகாப்பு உணர்வோடு தொழிலாளர்களை தூங்க வைக்கும் முயற்சியில், Caulmes குறிப்பிட்டுள்ளபடி, கண்டிப்பாக அவசியமில்லாதபோது கூட பணியிடத்திற்குச் செல்வது போன்ற குற்றமான பொறுப்பற்ற கொள்கைகளை அரசாங்கங்கள் ஆதரித்தன. இதன் விளைவாக, COVID-19 வைரஸ் பரவலாக பரவியுள்ளது.

ஆளும் வர்க்கத்தின் பரந்த பிரிவுகள் இன்னும் இந்த கொலைகாரப் பொய்களின் இழையை ஒட்டிக்கொண்டு தான் உள்ளன. நேற்று மாலை, பிரெஞ்சு செய்தி ஊடகங்கள், இன்றிரவு மக்ரோன் முன்மொழியக்கூடிய நடவடிக்கைகளுக்கான சாத்தியக்கூறுகளையிட்டு மிதந்துகொண்டிருக்கின்றன, அவைகள் அனைத்தும் தொற்றை நிறுத்தப்போதுமானதாக இல்லை. ஒரு இரவு நேர ஊரடங்கு உத்தரவுடன் சேர்ந்து வார இறுதி நாட்களில் ஒரு வீட்டில் தங்கியிருத்தல் உத்தரவு, மிக மோசமாக பாதிக்கப்பட்ட சில நகரங்களில் வீட்டில் தங்கியிருத்தல் உத்தரவு அல்லது நான்கு வார தேசிய பொது முடக்கத்துடன் ஆரம்ப மற்றும் இளநிலை உயர்நிலை பள்ளிகள் திறந்து இருக்கும், எனவே பெற்றோர்களை பணிகளுக்குச் செல்ல வைக்க முடியும்.

இந்த நடவடிக்கைகள் பொதுவான ஒரு அம்சத்தைக் கொண்டுள்ளன: அதாவது அவைகள் அனைத்தும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை பணி மற்றும் பள்ளிக்கு தொடர்ந்து செல்லுவதற்கு கட்டாயப்படுத்துகின்றன, அங்கு மூன்றில் இரண்டு பங்கு COVID-19 வைரஸ் பரவல் கொத்தணிகளை ஏற்படுத்துகின்றன. ஆகவே, உழைக்கும் மக்களிடையே வைரஸ் தொடர்ந்து பரவுவதை உறுதி செய்வதன் மூலம், நிதிய பிரபுத்துவத்தின் பைகளில் இலாபங்கள் தொடர்ந்து இறைக்கப்படும் என்பதை அவர்கள் உறுதி செய்கிறார்கள்.

பிரெஞ்சு வர்த்தகக் கூட்டமைப்பின் (Medef) தலைவரான Geoffroy Roux de Bézieux என்பவர் RMC இடம், வசந்த காலத்தைப் போலவே பிரான்சிலும் வீட்டில் தங்கியிருத்தலுக்கான ஒரு உத்தரவை கொடுக்க முடியாது என்று கூறினார். "மார்ச் மாதத்தைப் போலவே நாங்கள் மொத்தமாக பொது முடக்கம் ஏற்பட்டால், அது பொருளாதாரத்தில் 10 சதவிகித வீழ்ச்சியாக இருக்காது, அது வெறுமனே சரிந்துவீழ்ந்து விடும்," என்று அவர் கூறினார்.

திரு Roux de Bézieux, அவரினால் என்ன முடியும் அல்லது கொடுக்க முடியாது என்று நம்புகிறார் என்பதில் குறிப்பாக அக்கறை காட்டுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. சுகாதார அமைப்புமுறைப் பாதுகாப்பதற்கும், தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் சிறு வணிகர்கள் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் வரை வீட்டிலேயே தங்கவைக்கத் தேவையான நிதியானது ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் சட்டவிரோதமாக பெரும் செல்வந்தர்களுக்கு வழங்கிய பொதுச் செல்வத்தின் பெரும் தொகையிலிருந்து எடுக்கப்பட வேண்டும். நூறாயிரக்கணக்கான அல்லது மில்லியன் கணக்கான மக்களின் உயிர்வாழ்வு ஒரு ஒட்டுண்ணி ஆளும் வர்க்கத்தின் சுயநலங்களுக்கு அடிபணிய வைக்க முடியாது, அது தன்னைத்தானே கலாத்திற்கு ஒவ்வாததாக்கியுள்ளதோடு இனிமேல் ஆட்சி செய்ய அதற்கு தகுதியற்றும் இருக்கிறது.

தொற்று நோய் கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டதை பொறுப்பான மருத்துவ அதிகாரிகள் அறிவிக்கும் வரை அனைத்து இளைஞர்களுக்கும் அத்தியாவசியமற்ற பணித் தொழிலாளர்களுக்கும் வீட்டில் தங்கியிருத்தலுக்கான ஒரு பொது உத்தரவுதான் COVID-19 வைரஸின் பேரழிவு தரும் மீளெழுச்சியைத் தடுப்பதற்கான ஒரே வழியாக இருக்கிறது.

எவ்வாறாயினும், முன்னாள் முதலீட்டு வங்கியாளரான மக்ரோன் போன்ற முதலாளித்துவ அரசியல்வாதிகளை தொழிலாளர்கள் நம்பக் கூடாது அல்லது அத்தகைய கொள்கையைப் பெறுவதற்கு Roux de Bézieux மற்றும் பிரான்சின் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஊழல்நிறைந்த கொள்ளையிடும் கொடுக்கல் வாங்கல் பேச்சுவார்த்தைகளிலும் தங்கியிருக்க முடியாது. இன்று மக்ரோன் என்ன முடிவு எடுத்தாலும், அதே அடிப்படை வர்க்க நலன்களைப் பாதுகாக்க அவர் முயலுவார், அவைகள் பெரும்பான்மையான மக்களின் ஆரோக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் விரோதமானவைகளாக இருக்கும். இந்த வசந்தகால பொது முடக்கத்தை நினைவுகூர வேண்டும், அதில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் நிதிப் பாதுகாப்பு இல்லாமல் அல்லது பல சந்தர்ப்பங்களில் போதுமான உணவு கூட இல்லாமல் கைவிடப்பட்டார்கள்.

சோசலிச சமத்துவக் கட்சியும் (Parti de l’égalité socialiste - PES) நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) சகோதரக் கட்சிகளும் விளக்கியவாறு, தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமாக தொழிலாள வர்க்கத்தையும் இளைஞர்களையும் ஒழுங்கமைப்பதும் பொது வேலைநிறுத்த நடவடிக்கைகளை தயாரிப்பதும் தான் முன்னோக்கிச் செல்வதற்கான ஒரே வழியாக இருக்கிறது. அத்தகைய போராட்டமானது தொழிலாள வர்க்கத்திற்கு அதிகாரத்தை மாற்றவும், COVID-19 வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக ஒரு விஞ்ஞான அடிப்படையிலான கொள்கையை நடைமுறைப்படுத்த தேவையான நிதி மற்றும் தொழில்துறை வளங்களைப் பயன்படுத்துவதற்காகவும் ஒரு சர்வதேச அடிப்படையில் நடத்தப்படும் போராட்டம் மட்டுமே இந்த பெருந்தொற்று நோயை நிறுத்துவதற்கான ஒரே வழியாக இருக்கிறது.