தேர்தல் நெருங்குகையில், ட்ரம்ப் மக்கள் வாக்குகளை நிராகரிக்க சதிசெய்கிறார்

29 October 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரத்திற்கும் குறைந்த நாட்களே உள்ள நிலையில், மக்கள் வாக்குகளை ட்ரம்ப் பெறத் தவறினாலும் கூட அவரது நிர்வாகம் பதவியிலேயே இருக்க அதுவொரு சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமி கொனெ பாரெட், இவர் நேற்று உத்தியோகபூர்வமாக பதவியேற்று கொண்ட நிலையில், அவரை அவசரகதியில் நியமித்தமை இந்த மூலோபாயத்தின் மையத்தில் உள்ளது. ட்ரம்ப் நேற்று மாலை வெள்ளை மாளிகை பதவியேற்பு விழாவை மேற்பார்வையிடுவதற்கு, 2000 ஆம் ஆண்டு புஷ் மற்றும் கோர் தேர்தல் வழக்கில் பெரும்பான்மையினரின் பாகமாக இருந்து முடிவெடுத்த, அந்நீதிமன்றத்தில் இருக்கும் ஒரே தலைமை நீதிபதியான கிளாரென்ஸ் தோமஸை தேர்ந்தெடுத்தார். அந்த வழக்கின் தீர்ப்பில், அந்நீதிமன்றம் புளோரிடாவின் வாக்கு மறுஎண்ணிக்கையை நிறுத்தி, மக்கள் வாக்குகளில் தோல்வியடைந்த புஷ் வசம் தேர்தலை ஒப்படைக்க 5 க்கு 4 என்று வாக்களித்தது.

இருபதாண்டுகளுக்குப் பின்னர் அதேபோன்றவொரு நடவடிக்கையில் பாரெட் நீதிமன்றத்திற்கு உதவ உள்ளார் என்ற சேதி இதை விட தெளிவாக இருக்க முடியாது. இந்த புள்ளியைப் புரிந்து கொள்வதற்காக, விஸ்கான்சின் மாநில தேர்தல் களத்தில் தேர்தல் தினத்திற்கு முன்னர் அனுப்பப்பட்டு ஆனால் நவம்பர் 3 க்குப் பின்னர் கிடைக்கும் தபால் வாக்குகளை எண்ண முடியாது என்று அதே நாளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விஸ்கான்சினில் வசிக்கும் பத்து நூறாயிரக் கணக்கானவர்களின் வாக்குரிமையைக் களவாடும் இந்த முடிவு, ட்ரம்புக்கு ஒரு மிகப்பெரிய வெற்றி என்பதுடன், நாடெங்கிலும் தேர்தல் முடிவுகளைச் சவால்விடுப்பதற்கான அவரின் முயற்சிகளுக்கு முக்கிய அரசியல் உதவியை வழங்குகிறது.

President Donald J. Trump delivers remarks during the swearing-in ceremony for Amy Coney Barrett as Associate Justice of the U.S. Supreme Court. (Image credit: Joyce N. Boghosian/ White House Flickr)

பெரும்பான்மையினர் ஒத்துப் போகும் ஒரு கருத்தாக, ட்ரம்பின் வேட்பாளர் பிரெட் கவனோவும் தபால் வாக்குகள் மோசடிக்கு உள்ளாக்கப்படலாம் என்ற ட்ரம்பின் அடித்தளமற்ற வாதத்தையே மீண்டும் முழங்கினார்: “தேர்தலில் வாக்களிக்காத ஆயிரக் கணக்கானவர்களின் வாக்குகள் தேர்தல் தினத்திற்குப் பின்னர் வந்து தேர்தல் முடிவுகளை ஒருவேளை மாற்றியமைக்கும் என்பதால் மாநிலங்கள் முன்னுக்குப்பின் முரணான குழப்பம் மற்றும் அவநம்பிக்கையைத் தடுக்க விரும்புகின்றன,” என்றார். அதாவது, எல்லா வாக்குகளையும் எண்ணுவதன் மூலமாக ஏற்படும் "குழப்பங்களை" மாநிலங்கள் தவிர்க்க விரும்புகின்றன.

புஷ் மற்றும் கோர் வழக்கின் தீர்ப்பை கவனோ முழு மனதுடன் மேற்கோளிட்டார். அந்த 2000 ஆம் ஆண்டு வழக்கில், நீதிமன்றம் குறிப்பிடுகையில், எதிர்கால நீதிமன்ற முடிவுகளில் இந்த தீர்ப்பை முன்னுதாரணமாக பயன்படுத்த முடியாது என்பதை வெளிப்படையாக குறிப்பிட்டது, மேலும் கவனோவின் இந்த முழு மனதான ஒப்புதல்தான் அதற்குப் பின்னர் அதையொரு தலைமை நீதிபதி முதன்முறையாக மேற்கோளிடுவதாக இருந்தது. கவனோ அந்த வழக்கைக் குறித்து குறிப்பிட்டதன் மூலம், 2020 இல் ட்ரம்ப் என்ன செய்ய திட்டமிட்டு வருகிறார் என்பதை அவர் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி விட்டார்.

ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளதைப் போல, உள்ளபடி எந்தவொரு உண்மையின் அடித்தளமும் இல்லாமல், தபால் வாக்குகள் மோசடிக்கு உள்ளாக்கப்படலாம் என்று அவற்றை செல்லுபடியாகாமல் செய்ய மற்ற மாநிலங்களிலும் அதேபோன்ற தீர்ப்புகளை வழங்குவதற்காக ஏற்கனவே அவரின் ஆட்கள் குவிக்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்றத்தைப் பயன்படுத்துவதே ட்ரம்பின் நோக்கமாக உள்ளது. அந்த தீர்ப்பு வெளியிடப்பட்டு சில மணி நேரங்களில், ட்ரம்ப் ட்வீட்டரில் பின்வருமாறு அறிவித்தார்: “அமெரிக்காவில் தபால் வாக்குகளில் மிகப்பெரும் பிரச்சினைகள், முரண்பாடுகள். நவம்பர் 3 இல் ஒட்டுமொத்தமாக இறுதி எண்ணிக்கை இருக்க வேண்டும்.”

நவம்பர் 3 இல் தேர்தல் முடிவு தீர்மானிக்கப்பட வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்துவதற்கு, உண்மையில், அங்கே எந்த அரசியலமைப்பு அடித்தளமும் இல்லை. தேர்தல் முடிவுகளை மாநிலங்கள் கணக்கிடுகின்றன, அவை எல்லா வாக்குகளும் எண்ணப்பட்ட பின்னர் டிசம்பர் 8 ஐ "உரிய கால வரம்பாக" கொண்டு அவற்றின் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். நவம்பர் 3 க்குப் பின்னரோ அல்லது அத்தேதிக்கு அருகிலோ வரும் தபால் வாக்குகளில் பெரும்பான்மை பைடெனுக்காக இருக்கக்கூடும் என்பது ட்ரம்புக்குத் தெரியும், ஆகவே அவர் அவற்றை செல்லாததாக அறிவிக்க ஒரு சாக்குபோக்கை உருவாக்க முயன்று வருகிறார்.

மிச்சிகன், பென்சில்வேனியா, வடக்கு கரோலினா மற்றும் விஸ்கான்சின் உட்பட முக்கிய போட்டி நிலவும் மாநிலங்களில் குடியரசுக் கட்சி கட்டுப்பாட்டிலான மாநில சட்டமன்றங்கள், மக்கள் வாக்குகள் என்னவாக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் ட்ரம்ப் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் வென்றதாக சான்றளிப்பதற்கு, நீதிமன்றங்களின் உதவியுடன், ட்ரம்ப், தேர்தல் முடிவுகளின் மீது போதுமானளவுக்கு சந்தேகத்தை உருவாக்க முயன்று வருகிறார்.

அவரின் நீதிமன்ற வழக்குகளுக்கு முட்டுக்கொடுக்க, ட்ரம்ப், தேர்தல் தினத்தின் போதும் அதற்கு முன்னரும் பின்னரும் வலதுசாரி மற்றும் பாசிசவாத வன்முறையைத் தூண்ட முயன்று வருகிறார். அவர் கடும் தேர்தல் போட்டி நிலவும் முக்கிய மாநிலங்களில் அவரின் இறுதி பிரச்சார கூட்டங்களில் ஒருமுனைப்பட்டுள்ளார், இம்மாநிலங்களில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் இப்போது ஆட்சியிலிருக்கும் ஆளுநர்களை இலக்கில் வைத்து சதிகளை ஏற்பாடு செய்துள்ளனர்.

மிச்சிகன் ஆளுநர் கிரெட்சென் விட்மரைக் கடத்தி கொல்வதற்கான சதி அம்பலமாகி மூன்று வாரங்களுக்கும் குறைந்த நாட்களில், ட்ரம்ப் நேற்று அம்மாநில தலைநகர் லான்சிங்கில் ஒரு பிரச்சார கூட்டத்தை நடத்தினார். விட்மரைக் கொல்வதற்கான சதியைக் குறிப்பிட்டு ட்ரம்ப் கூறுகையில், அவருக்கு "பிரச்சினை" இருப்பதாக தெரிவித்ததுடன், “நான் என்ன சொல்கிறேன் என்றால், அதுவொரு பிரச்சினை என்றால் நாம் பார்த்துக் கொள்வோம், சரிதானே? அதுவொரு பிரச்சினையா, இல்லையா என்பதைக் கூற மக்களுக்கு உரிமை உள்ளது,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

தேர்தல் நாளில் வாக்காளர்களைப் பயமுறுத்துவதில் பாசிசவாத அமைப்புகளுக்கு உதவ பொலிஸிற்குள் இருக்கும் ஆதரவையும் அவர் சார்ந்துள்ளார். மிச்சிகனில், பல உள்ளூர் நகர உயரதிகாரிகள் (ஷெரீஃப்) வாக்குச்சாவடிகளில் வெடிபொருட்கள் கொண்டு செல்வதற்கு மாநில அரசு பிறப்பித்துள்ள தடை உத்தவுகளை அவர்கள் அமலாக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.

முன்னாள் குடியரசுக் கட்சி ஆளுநர் ஜோன் எங்லெர் நியமித்த மிச்சிகன் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கிறிஸ்தோபர் முர்ரே, வெடிபொருட்களைக் கொண்டு செல்வதற்குத் தடைவிதித்த மாநில தலைமை செயலர் ஜோஸ்லின் பென்சனின் உத்தரவை நடைமுறையளவில் தடுத்து, செவ்வாய்கிழமை, பூர்வாங்க தடை உத்தரவாணைப் பிறப்பித்தார். இந்த முடிவு குடியரசுக் கட்சியின் அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் வரவேற்கப்பட்டது, அவர்கள் விட்மர் நிர்வாகத்தின் "உயர்வை" கண்டித்திருந்தனர்.

பென்சில்வேனியாவில் ட்ரம்ப் அவரின் திங்கட்கிழமை கூட்டத்தில், “நாங்கள் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறோம்,” என்று அச்சுறுத்தி, ஜனநாயகக் கட்சியின் ஆளுநர் ரொம் வொல்ஃப்புக்கு எதிராக சீறினார். அவர் நாடெங்கிலும் இருந்து பொலிஸின் ஆதரவைப் பெருமைப்பீற்றினார்: “சட்டம் ஒழுங்கு நெவாடாவைக் கவனித்துக் கொண்டிருகிறது என்பதைத்தான் மொத்தத்தில் எங்களால் கூற முடியும், பிலடெல்பியா மற்றும் பென்சில்வேனியாவில் நிறைய வித்தியாசமான விசயங்கள் இருப்பதால் அவை கவனிக்கப்பட்டு வருகின்றன… நாங்கள் வடக்கு கரோலினாவைக் கவனித்துக் கொண்டிருக்கிறோம், நாங்கள் மிச்சிகனைக் கவனித்துக் கொண்டிருக்கிறோம்,” என்றார்.

தேர்தலைக் களவாட ட்ரம்ப் ஒரு மூலோபாயத்தை கொண்டிருக்கிறார் என்ற அதேவேளையில், ஜனநாயகக் கட்சியினரோ அதை எதிர்க்க எந்த மூலோபாயமும் வகுக்கவில்லை. உண்மையில் அவர்கள், மிகவும் அடிப்படை ஜனநாயக உரிமையான வாக்குரிமைக்கான அச்சுறுத்தலை மூடிமறைக்க அவர்களால் ஆனமட்டும் அனைத்தும் செய்து வருகிறார்கள்.

செவ்வாய்கிழமை ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடென் அவரின் சொந்த பிரச்சார நிகழ்வில் கூட இந்த தேர்தல் கவிழ்ப்பு குறித்தோ, விட்மர் மற்றும் ஏனைய ஆளுநர்களைக் கடத்தி படுகொலை செய்வதற்கான சதிகளைக் குறித்தோ, பாரெட் நியமிக்கப்பட்டமை குறித்தோ, விஸ்கான்சினில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்தோ, அல்லது இத்தேர்தலில் ஜனநாயக உரிமைகள் மீதான அச்சுறுத்தல் சம்பந்தமான வேறெது விசயமாகவோ ஒன்றுமே குறிப்பிடவில்லை. கடந்த வாரம் நடந்த இறுதி விவாதத்தில், அதிகாரத்தில் தங்கியிருப்பதற்கான ட்ரம்பின் சதிகள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து தலைப்பில் கூட குறிப்பிடப்படவில்லை.

பாரெட்டின் நியமனத்தைத் தடுக்க மிகவும் தொடக்கத்திலிருந்தே எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்ற முற்றிலும் ஜனநாயகக் கட்சியினரினது முடிவின் காரணமாகவே, அரசை முடக்குவதில் இருந்து செனட்டின் பல நடைமுறை விதிகளைப் பயன்படுத்துவது வரையில் தேர்தலுக்கு முன்னதாக இறுதி விசாரணைகளைத் தடுப்பது வரையில், மிகவும் கடினமான அரசியல் சூழல்களில், குடியரசு கட்சியினரால் வெறும் ஒரு சில வாரங்களில், பாரெட்டின் நியமனத்தைக் கொண்டு முன்நகர முடியும்.

பாரெட் நியமனத்தையே ஜனநாயகக் கட்சியினரால் தடுக்க முடியவில்லை என்றால், அவர்கள் ஜெயிக்கும் ஒரு தேர்தல் முடிவை அவர்களால் பாதுகாக்க முடியுமென யார் நம்புவார்கள்?

வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவத்தின் ஒரு கட்சியான ஜனநாயகக் கட்சியினர், வெறுமனே ட்ரம்புக்கு எதிராக மட்டுமல்ல, மாறாக ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் எதிராக ஓர் இயக்கமாக அபிவிருத்தி அடையக்கூடிய பாரிய அமைதியின்மையைத் தூண்டிவிடும் எதையொன்றையும் குறித்து பீதியுற்றுள்ளனர்.

வாரயிறுதி வாக்கில் Politico இன் ஒரு பேட்டியில், ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் சபை பெண் உறுப்பினரும் முன்னாள் சிஐஏ முகவருமான எலிஸ்சா ஸ்லோட்கின் தெரிவிக்கையில், ஜனநாயகக் கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் ட்ரம்ப் பதவியிலிருந்து இறங்க மறுக்கும் தருணத்தில் என்ன நடக்கும் என்பதைக் குறித்து மிகவும் செயலூக்கத்துடன் திரைக்குப் பின்னால் விவாதித்து வருவதைத் தெளிவுப்படுத்தினார். “அமெரிக்கா ஓர் உள்நாட்டு போர் மற்றும் அரசியலமைப்பு நெருக்கடியை நோக்கி நகர்ந்து வருவதாக [ஸ்லோட்கின்] கவலைப்படுகிறார்,” என்று Politico குறிப்பிட்டது. உண்மையில் அப்பெண்மணியால் "இந்நாட்களில் வேறு விசயங்களை மிகக் குறைவாகவே யோசிக்க முடிகிறது.”

ஆனால் ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் அபாயம் குறித்து பொதுமக்களை எச்சரிப்பதற்குப் பதிலாக, ஜனநாயகக் கட்சியினர் இராணுவம் மற்றும் உளவுத்துறை முகமைகளின் தலைவர்களுக்கு முறையிடுகிறார்கள். பதவியில் தங்கியிருக்க, ட்ரம்புக்கு "அவரது மந்திரிசபையின், குறிப்பாக தலைமை அரசு வழக்கறிஞரின், பாதுகாப்புச் செயலர், முப்படைகளின் தலைமை தலைவர் மற்றும் உள்நாட்டு பாதுகாப்புத்துறை தலைவரின் உதவி தேவைப்படும்,” என்று ஸ்லோட்கின் தெரிவித்தார். “உண்மையில், ஜனாதிபதி தேர்தல் தோல்வியை ஏற்க தவறினால், அவர்கள் விரும்பி என்ன செய்ய போகிறார்கள் விரும்பாமல் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை, இவர்கள் தங்களின் சொந்த கட்டுப்பாட்டு வரம்புகள் மூலமாக சிந்திக்க,” ஜனநாயகக் கட்சியினர் "அவர்களுக்கு… " கடிதங்கள் எழுதியிருப்பதாக அப்பெண்மணி தெரிவித்தார்.

இவை எல்லாமே, கொரொனா வைரஸ் தொற்றுநோய் நிலைமைகளின் கீழ் நடந்து வருகின்றன, அது ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்து வருகிறது. ஏற்கனவே 230,000 ஐ கடந்து விட்ட மரண எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. புதிய நோயாளிகளின் எண்ணிக்கை முன்பில்லாத மட்டங்களில் உள்ளது.

ட்ரம்பின் சூழ்ச்சிகள் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" ஆளும் வர்க்க கொள்கையிலிருந்து பிரிக்கவியலாது உள்ளது, இது கொரொனா வைரஸ் தொற்றுக்கள் மற்றும் உயிரிழப்புகளின் பாரிய அதிகரிப்புக்கு இட்டுச் செல்லும். ட்ரம்ப் அவரின் எல்லா சொற்பொழிவுகளிலும், இந்த தொற்றுநோயின் அபாயத்தை இன்னும் அதிக ஆத்திரமூட்டும் விதத்தில் நிராகரித்து, அது மேற்கொண்டு கூடுதலாக பரவுவதைத் தடுக்கும் எல்லா கட்டுப்பாடுகளையும் நீக்குமாறு கோரிக்கை விடுப்பதுடன், பாசிசவாத வன்முறை தூண்டுதல்களையும் சேர்த்துக் கொள்கிறார்.

ட்ரம்பின் வேலைத்திட்டத்தில் மக்களுக்கான அடித்தளம் இல்லை. அது மரண மற்றும் சமூக சீரழிவின் ஒரு வேலைத்திட்டமாக உள்ளது. இந்த தொற்றுநோய்க்கு விடையிறுப்பதில் ஆளும் உயரடுக்கின் ஒட்டுமொத்த கொள்கையை நோக்கியும் தொழிலாள வர்க்கத்தில் அளப்பரிய சமூக கோபம் அதிகரித்து வருகிறது. இத்தகைய நிலைமைகளில் பதவியில் இருப்பதற்கான ட்ரம்பின் எந்தவொரு முயற்சியும் பாரிய போராட்டங்கள் மற்றும் சமூக கொந்தளிப்புகளுக்கு இட்டுச் செல்லும்.

ட்ரம்பின் சூழ்ச்சிகளுக்கு விடையிறுப்பதில் ஜனநாயகக் கட்சியினரின் கோழைத்தனமோ பரவிவரும் இந்த தொற்றுநோயை அல்லது 1930 களுக்குப் பின்னர் பார்த்திராத எதுவொன்றையும் போலில்லாத ஒரு சமூக நெருக்கடியைக் கையாள்வதற்கான எந்த கொள்கைக்கும் ஒட்டுமொத்தமாக அவர்களின் சொந்த எதிர்ப்புடன் பிணைந்துள்ளது. முகக்கவசங்களைக் குறித்து பேசுவதற்கு அப்பாற்பட்டு, ஜனநாயகக் கட்சியினர் எதையும் முன்மொழியவில்லை, அதேவேளையில் பெருநிறுவன மற்றும் நிதியியல் உயரடுக்கின் நலன்களை அச்சுறுத்தும் எந்தவொரு நடவடிக்கைகளையும் அவர்கள் நிராகரிக்கிறார்கள்.

ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் கிஷோர் மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர் நோரிஸ்சா சான்டா குரூஸ் ஆகியோரின் எங்கள் தேர்தல் பிரச்சாரக் குழுவும் சோசலிச சமத்துவக் கட்சியும் தொழிலாளர்களைப் பின்வருமாறு எச்சரிக்கிறது: ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஜனநாயகக் கட்சியைச் சார்ந்து செல்வது தற்கொலைக்கு குறைவின்றி வேறொன்றுமில்லை. அவர்கள் எதையும் பாதுகாக்க மாட்டார்கள், அவர்களின் சொந்த தேர்தல் வெற்றியைக் கூட பாதுகாக்க மாட்டார்கள்.

ஜனநாயகக் கட்சியினர் மற்றும் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்திற்கு எதிரான எதிர்ப்பில் மட்டுமே, ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு எதிரான ஒரு உண்மையான போராட்டம் அபிவிருத்தி ஆக முடியும்.

ட்ரம்பின் சூழ்ச்சிகளுக்கு எதிரான போராட்டமானது, விரிவடைந்து வரும் பேரழிவுக்கு விடையிறுப்பதில், ஆளும் வர்க்கத்தின் நலன்களின் அடிப்படையில் அல்ல தொழிலாளர் நலன்களின் அடிப்படையில், ஒரு சோசலிச வேலைத்திட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். இந்த தொற்றுநோய் பரவி வருகையில், அத்தியாவசியமல்லாத பொருட்களின் உற்பத்தியை நிறுத்துவது மற்றும் பள்ளிகளை மூடுவதும் இதில் உள்ளடங்கும். வேலையிழந்துள்ள பத்து மில்லியன் கணக்கானவர்கள் உட்பட பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும், பாரியளவில் செல்வ வளத்தை மறுஒதுக்கீடு செய்வதன் மூலமாக முழுமையான வருமானம் வழங்கப்பட வேண்டும்.

ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே மிகவும் அடிப்படை ஜனநாயக உரிமையான வாக்குரிமையைப் பாதுகாப்பதில் ஒரு தீவிர இயக்கத்தை அபிவிருத்தி செய்ய முடியும்.

ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 1, கிழக்கத்திய நேரம் மாலை 1.00 மணிக்கு, சோசலிச சமத்துவக் கட்சி, “உள்நாட்டு போர் தேர்தலுக்கு முன்னதாக: அமெரிக்க ஜனநாயகத்தின் முறிவும் சோசலிசத்திற்கான போராட்டமும்" என்ற தலைப்பில், ட்ரம்பின் சூழ்ச்சிகள் மீதான ஆய்வுகளை எடுத்துரைக்கவும் அதை எவ்வாறு எதிர்த்து போராடுவது என்பதன் மீதும் ஓர் இணையவழி தேர்தல் கூட்டத்தை நடத்துகிறது.

Socialist Equality Party Political Committee