கோவிட்-19 நோய்தொற்றுக்கள் கடுமையாக பரவி வரும் நிலையில், அமெரிக்க சுகாதார அமைப்புக்கள் அதிகரித்தளவிலான நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன

Benjamin Mateus
31 October 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வடக்கு அரைக்கோள நாடுகளில் குளிர்கால காய்ச்சல் பெரிதும் பரவத் தொடங்கியுள்ளதுடன், உலகளாவிய கோவிட்-19 நோய்தொற்று சுகாதார நெருக்கடி இன்னும் வேகமாக கட்டவிழ்ந்து வரும் நிலையில், உலக முதலாளித்துவத்தின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடைந்து வருகிறது. மேலும், பொது சுகாதார பேரழிவால் உருவாகியுள்ள கடுமையான மனித தேவைகளை நிறைவேற்ற, இலாப நோக்கால் உந்தப்படும் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறைகளுக்கு போதிய திறன் இல்லை என்பது நிரூபணமாகியுள்ள நிலையில், தேசிய மற்றும் உலக அளவில் அரசியல் குழப்பங்கள் மீதான நனவு அதிகரித்து வருகிறது.

நோய்தொற்றுக்களின் அதிவேக வளர்ச்சிக்கு பதிலிறுக்கும் வகையில் பகுதியளவில் தேசியளவிலான சமூக முடக்கத்திற்கு பிரான்சும் ஜேர்மனியும் அறிவித்துள்ளன. மேலும் ஐரோப்பாவைப் போலவே, பல அமெரிக்க மாநிலங்களில் சுகாதார அமைப்புக்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன, அத்துடன் நாடெங்கிலுமாக நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை தொடர்ந்து உச்சபட்சமாக அதிகரித்து வரும் நிலையில், வசந்தகாலத்திலும் கோடைக்காலத்திலும் அந்த மாநிலங்களில் நிகழ்ந்த முன்னைய நோய்தொற்று அதிகரிப்புக்களை காட்டிலும் தற்போது உச்சத்தை எட்டுகின்றன.

கடந்த வாரத்தில் மட்டும் 500,000 புதிய கோவிட்-19 நோய்தொற்றுக்கள் பதிவானது உட்பட, அமெரிக்காவில் கோவிட்-19 நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை நேற்று ஒன்பது மில்லியனைக் கடந்தது. இந்த நெருக்கடி தீவிரமாவதன் அறிகுறியாக, புதிய நாளாந்த நோய்தொற்றுக்களின் ஏழு நாள் போக்கு சராசரி அக்டோபர் 1 அன்று 43,106 என்றிருந்தது அக்டோபர் 28 அன்று 75,072 என்ற அளவிற்கு கடுமையாக அதிகரித்திருந்தது, அதாவது இது ஒரே மாதத்தில் நிகழ்ந்த 75 சதவிகித அதிகரிப்பாகும். அதே நேரத்தில் பரிசோதனையின் படி நோய்தொற்று பரவலின் நேர்மறை விகிதம் 4.3 சதவிகிதத்திலிருந்து 7.3 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

டெக்சாஸின் ஹூஸ்டனில் உள்ள மெக்சிகன் தூதரகத்தில் ஒரு இலவச கோவிட்-19 பரிசோதனைத் தளத்தில் பரிசோதனைக்காக மக்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள் (Image Credit: David J.Philip/AP)

இறப்பு விகிதம் அக்டோபர் 17 அன்று அதன் ஆரம்பகட்ட அதிகரிப்பை காணத் தொடங்கியது. பல வாரங்களாக நாளாந்த இறப்புக்களின் மட்டம் 700 ஆக தொடர்ந்து நிலைத்திருந்ததன் பின்னர், அமெரிக்காவில் நோய்தொற்றின் மூன்றாவது எழுச்சி அலையின் போது நோய்தொற்று எண்ணிக்கையின் ஆரம்பகட்ட அதிகரிப்பிலிருந்து இது 16 நாள் பின்னடைவாகும். புதன்கிழமை மட்டும் 1,000 க்கும் மேற்பட்ட இறப்புக்கள் நிகழ்ந்ததுடன், நாளாந்த இறப்பு விகிதம் தற்போது 842 ஆக உள்ளது. இருந்தாலும், சுகாதார அமைப்புக்கள் அவற்றின் முழுமையான கொள்திறனை எட்டிக் கொண்டிருக்கும் நிலையில், அவசர மற்றும் ஆரம்பகட்ட தலையீடுகளை நிர்வகிப்பது சாத்தியமற்றதாகியுள்ளது, மேலும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் மீண்டும் நோயாளிகளால் நிரம்பி வழியும் நிலையில், இன்னும் பலர் இறக்கக்கூடும் என்று அனுபவம் காட்டியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் Dr. Tedros Adhanom Ghebreyesus, திங்களன்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், புதிய நோய்தொற்றுக்கள் பயங்கரமாக பெருகி வருவது தொடர்பான ஆபத்துக்களை உலக தலைவர்கள் கவனிக்க வேண்டும் என்று உணர்ச்சிவசப்படாமல் அழைப்பு விடுத்தார்.

“இதுவரை பதிவான கோவிட்-19 நோய்தொற்று எண்ணிக்கைகளில் கடந்த வாரம் உயர்ந்தபட்ச எண்ணிக்கை பதிவானது. வடக்கு அரைக்கோளத்தில் உள்ள பல நாடுகள் கவலைப்படும் வகையில் நோய்தொற்றுக்களும் மருத்துவமனைகளில் நோயாளிகளின் சேர்க்கைகளும் கடுமையாக அதிகரித்து வருவதை காண்கின்றன, மேலும் சில பகுதிகளில், குறிப்பாக ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (ICUs) அவற்றின் கொள்திறனைக் கடந்து நிரம்பி வழிகின்றன.

“உண்மையில் சோர்வு ஏற்பட்டுள்ளது, என்றாலும் நாம் அப்படியே விட்டுவிட முடியாது. நாம் விட்டுவிடக் கூடாது. தீவிர சிகிச்சைப் பிரிவுகள் நிரம்பி வழியும் நிலையில், சுகாதாரப் பணியாளர்களையும் சுகாதார அமைப்புக்களையும் பாதுகாக்க வேண்டிய அவசியத்துடன் சேர்த்து உயிர்களுக்கும் வாழ்வாதாரங்களுக்கும் ஏற்படும் இடையூறுகளை தலைவர்கள் சமாளிக்க வேண்டும். மிகுந்த மன அழுத்தத்திற்கும் அதிர்ச்சிக்கும் ஆளாகும் சுகாதாரப் பாதுகாப்புப் பணியாளர்களில் பலர், புதிய நோயாளிகளின் புதிய அலையை எதிர்கொள்வதில் இன்னமும் முதன்மை பொறுப்பில் உள்ளனர். எனவே, சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாக்க நம்மால் முடிந்த அனைத்தையும் நாம் செய்ய வேண்டும்.”

“போலி செய்திகளை” வழங்கும் ஊடக சதிகளும் மற்றும் அதிகப்படியான பரிசோதனைகளும் தான் நாடெங்கிலும் நிலவும் நோய்தொற்றுக்களின் அதிகரிப்பிற்கு பொறுப்பாகும் என்று வற்புறுத்தக்கூடிய மற்றும் இடைவிடாத ட்ரம்பின் கூற்றுக்கள் ஒருபுறம் இருந்தாலும், மருத்துவமனைகள் கடும் சிரமங்களை எதிர்கொள்வது உண்மையே. நாட்டின் மையப்பகுதி எங்கிலுமான மருத்துவமனைகள் புதிய நோயாளிகளின் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், இருபத்தி ஒன்பது மாநிலங்கள் நோய்தொற்றுக்களின் உச்சபட்ச எண்ணிக்கைகளை பதிவு செய்துள்ளன. கோவிட்-19 கண்காணிப்பு திட்ட அளவீடுகளின் படி, அமெரிக்காவில் தற்போது 44,212 கோவிட்-19 நோயாளிகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர், இது செப்டம்பர் மாதம் மத்தியில் நிலவிய குறைந்த எண்ணிக்கைகளில் இருந்து அதிகரித்த 46 சதவிகித உயர்வாகும். இவர்களில், 8,909 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதுடன், 2,287 பேருக்கு செயற்கை சுவாச வசதி பொருத்தப்பட்டுள்ளது.

மூன்று மில்லியன் மக்கள் வசிக்கும் ஒரு நெருக்கடியான பெருநகரப் பகுதியை உள்ளடக்கிய, எல் பாசோவின் இரட்டை நகரங்கள், டெக்சாஸ் மற்றும் மெக்சிக்கோவின் சியுடாட் ஜூவரெஸ் ஆகிய நகரப்பகுதிகள், சுகாதாரப் பாதுகாப்புக்களை வழங்க இடையூறு விளைவிக்கும் நோய்தொற்றுக்களின் கடும் அதிகரிப்பை எதிர்கொண்டு, ஞாயிற்றுக்கிழமை அந்நகரங்களில் சுகாதார அமைப்புமுறைகளின் 100 சதவிகித திறன் பயன்படுத்தப்பட்டது. திங்களன்று, எல் பாசோ மாகாணத்தில் 1,443 நோய்தொற்றுக்கள் பதிவாகின. இதில் 850 க்கும் மேலானவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர், மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 180 பேரும், செயற்கை சுவாச வசதியுடன் 99 பேரும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை மாலையில், இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான முழு ஊரடங்கு அங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், குடிமை மையம் நோயாளிகளால் நிரம்பி வழியும் தளமாக மாறி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, அனைத்து மருத்துவமனை சேர்க்கைகளில் 41 சதவிகித அளவிற்கு கோவிட்-19 நோயாளிகள் சேர்ந்துள்ளனர்.

நாட்டின் எதிர்ப்புற பகுதியில், விஸ்கான்சினில், மாநில சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, மருத்துவமனை படுக்கைகளின் கொள்ளளவுத் திறன் ஞாயிறன்று 82 சதவிகிதத்தை எட்டியது. 1,385 கோவிட்-19 நோயாளிகளில் இருப்பத்தைந்து சதவிகிதம் பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். நேற்று, மாநிலத்தில் 3,815 புதிய நோய்தொற்றுக்களும், 45 இறப்புக்களும் பதிவாகின. இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த மாநிலத்தில் நோய்தொற்று வெடித்துப் பரவ ஆரம்பித்தமை நாட்டிலேயே மிக மோசமான வகையினதாகும், டெக்சாஸ், இல்லினோய் மற்றும் கலிபோர்னியா போன்ற மிகஅதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள் மட்டும் புதிய நாளாந்த நோய்தொற்றுக்களின் சராசரி எண்ணிக்கைகளில் பின்தங்கியிருந்தன. மேலும், நோய்தொற்று பரவலுக்கான நேர்மறை விகிதம் 27 சதவிகிதத்தை எட்டியுள்ளது.

சுகாதார சேவைகள் துறையின் தலைமை மருத்துவ அதிகாரியான ரியான் வெஸ்டர்கார்ட் (Ryan Westergaard), ஒரு உள்ளூர் பத்திரிகை மாநாட்டில், “இது ஒரு கனவுக் காட்சியே, வெளிப்படையாக, இது குறைவதற்கு முன்னர், அடுத்த பல வாரங்கள் அல்லது மாதங்களில் இன்னும் சற்று மோசமான நிலையில் இருக்கும்” என்று குறிப்பிட்டார். மேலும், மின்னசோட்டாவின் ரோசெஸ்டரில் உள்ள மாயோ மருத்துவமனையில் உள்ள ஒரு தடுப்புமருந்து ஆராய்ச்சிக் குழுவின் இயக்குநரான டாக்டர் கிரிகோரி போலந்து (Dr. Gregory Poland), இது “தாறுமாறான வேகம் கொண்ட ஒரு பேரழிவு” என்று கூர்மையாக விவரித்தார்.

உட்டா மாநிலம் எங்கிலுமான நாளாந்த நோய்தொற்றுக்களின் வீதம் ஒரு மாதத்தில் மும்மடங்காக அதிகரித்துள்ளது, தற்போது ஒரு நாளுக்கு 1,500 க்கும் மேற்பட்ட நோய்தொற்றுக்கள் அங்கு பதிவாகி வருகின்றன. மேலும், தற்போது 111 கோவிட்-19 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெறுவது உட்பட, 309 கோவிட்-19 நோயாளிகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். சால்ட் லேக் சிட்டியில் உள்ள உட்டா சுகாதார மருத்துவமனை பல்கலைக்கழகம் 104 சதவிகித திறனை மருத்துவமனை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. நோயாளிகளின் வருகை அதிகரிப்பதற்கு ஏற்ப கூடுதல் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளுக்கு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன. அவர்களது வலைத் தளம் கூறுவது போல, இந்த மருத்துவமனை, “அமெரிக்க கண்டத்தின் 10 சதவிகிதத்திற்கும் அதிகமான பகுதியை உள்ளடக்கிய ஒரு பரிந்துரைப்புப் பகுதியில் உள்ள உத்தான்கள் மற்றும் சுற்றியுள்ள ஐந்து மாநிலங்களில் வசிப்பவர்களுக்கான” ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளது.

உட்டா மருத்துவமனை சங்கத்தின் தலைவரான கிரெக் பெல், இந்த போக்கு தொடர்ந்தால் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் தொடர்பான அவர்களது தற்செயல் திட்டங்களின் வரம்பை அவை எட்டக்கூடும் என்பதுடன், கவனிப்பு யாருக்கு மறுக்கப்பட வேண்டும் என்பதை மதிப்பீடு செய்ய மருத்துவமனைகளை அனுமதிக்கும் “பராமரிப்பு வழிகாட்டுதல்களின் நெருக்கடி தரநிலைகளை,” சார்ந்து பரிசீலிக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்தார்.

வடக்கு டக்கோட்டா முழுவதும் நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, மொத்த ஊழியர்களின் 1,851 படுக்கைகளில் வெறும் 14 சதவிகிதம் மட்டுமே நோயாளிகளுக்கு கிடைக்கும் நிலையில், மாநிலத்தின் மருத்துவமனை திறனுக்கு இது அழுத்தம் கொடுத்துள்ளது. திங்கட்கிழமை நிலவரப்படி, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள 29 பேர் உட்பட, 173 கோவிட்-19 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தெற்கு டக்கோட்டாவில், 412 மருத்துவ சேர்க்கைகள் உட்பட, 1,270 புதிய கோவிட்-19 நோய்தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளன.

துல்சாவின் மிகப்பெரிய மருத்துவமனை அமைப்பான செயிண்ட் பிரான்சிஸ், முக்கியமான மருத்துவ பராமரிப்புகள் தேவையுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை எதிர்கொள்கிறது. தலைமை நிர்வாக அதிகாரி ஜேக் ஹென்றி கூறுகையில், “மருத்துவமனைகளில் நோயாளிகளின் சேர்க்கை பெரிதும் அதிகரித்துள்ளது… கோவிட்-19 இறப்புக்களும் தொடர்ந்து நிகழ்கின்றன, அத்துடன் கிராமப்புறங்களிலும் நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருகிறது” என்றார். செயிண்ட் பிரான்சிஸ் கடுமையான ஊழியர் பற்றாக்குறையை எதிர்கொண்டிருப்பதுடன், பருவகால காய்ச்சலின் பாதிப்பும் சேர்ந்து மேலதிகமாக நோயாளிகள் மருத்துவமனையில் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கிறது. இந்நிலையில், இந்த நோய்தொற்று அலையை திருப்புமாறு சமூகத்திடம் மன்றாடும் ஒரு விளம்பரத்தை மருத்துவமனை பயன்படுத்துகிறது.

வாஷிங்டன் போஸ்டின் கூற்றுப்படி, ஓஹியோ, மேலும் அயோவா, கென்டக்கி, மின்னசோட்டா, நியூ மெக்சிக்கோ, தெற்கு டக்கோட்டா, மேற்கு வேர்ஜீனியா மற்றும் விஸ்கான்சின் உட்பட ஏழு மாநிலங்களுடன் இணைந்து, மருத்துவமனை சேர்க்கைகான ஏற்பாட்டிற்கு திங்களன்று அதிகபட்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டமை சாதனையாக இருந்தது. ஜனாதிபதி ட்ரம்பின் மறுதேர்தல் போட்டிக்கான முக்கியமான மாநிலங்களான மிச்சிகன், பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகியவை நோய்தொற்றுக்கள் மற்றும் மருத்துவமனை சேர்க்கைகளின் கடுமையான அதிகரிப்பை எதிர்கொண்டன.

நோய்தொற்றுக்கள் வெள்ளமென பெருகுவதும் மேலும் அதனுடன் இணைந்த துயரங்களும் முடிவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை என்றாலும், ட்ரம்ப் தனது குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்றாக “கோவிட்-19 நோய்தொற்று முடிவுக்கு கொண்டுவரப் படுகிறது” என்று சமீபத்தில் வெட்கக்கேடான வகையில் தெரிவித்தார். இந்த அறிக்கையை விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப கொள்கை தொடர்புபட்ட செய்தி வெளியீடாக வெள்ளை மாளிகை அலுவலகம் வெளியிட்டது. மேலும், விஸ்கான்சினில் தேர்தல் பிரச்சார பேரணியின்போது ட்ரம்ப் பார்வையாளர்களிடம், நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, ஏனென்றால் அதிகரித்தளவிலான திருப்பிச் செலுத்தல்களை பெற, கோவிட்-19 இறப்புக்களை பொய்யாக அதிகப்படியாக கூற மருத்துவர்கள் தூண்டப்படுகிறார்கள் என்று கூறினார்.

ஒட்டுமொத்த ஆளும் உயரடுக்கும் தொற்றுநோயை முழுமையாக கட்டுப்படுத்தவோ அல்லது இந்த சுகாதார அவசரத்தின் சுமைகளைத் தாங்கி நிற்கும் உழைக்கும் வர்க்கம் எதிர்கொள்ளும் துயரங்களைத் தணிக்கவோ நோக்கம் கொண்டிருக்கவில்லை என்பதை இத்தகைய வெட்கக்கேடான மற்றும் ஆத்திரமூட்டும் பொய்கள் நிரூபிக்கின்றன.