அமெரிக்க தரகு போர் நிறுத்தம் முறிவடைந்ததால் ஆர்மீனிய-அஸெரி போரில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன

Alex Lantier
2 November 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்,

சர்ச்சைக்குரிய நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக முன்னாள் சோவியத் குடியரசுகளான ஆர்மீனியாவுக்கும் அஸர்பைஜானுக்கும் இடையே நடக்கும் போரில் உயிரிழப்புக்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. 1991ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்கு முன்னர் வெடித்த இந்த மோதல், 1988-1994 ல் 30,000 உயிர்களை பலி கொண்ட ஒரு போருக்கு வழிவகுத்தது மற்றும் இது ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நிர்பந்தித்தது.

செப்டம்பர் 27 அன்று மீண்டும் வெடித்த இந்த ஆண்டு மோதலில் இரு தரப்பினரும் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தியும், ஒருவருக்கொருவர் மக்கள் தொகையின் மீது குண்டுவீசிக் கொண்டிருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கானவர்கள் ஏற்கனவே மடிந்துள்ளனர். அக்டோபர் 10 மற்றும் 18 ம் திகதிகளில், ஆர்மீனியாவிற்கும் அஸர்பைஜானுக்கும் இடையே சண்டையை தடுத்து நிறுத்த கொண்டுவரப்பட்ட மாஸ்கோவின் தரகு போர் நிறுத்தங்களை முறித்துக் கொண்டு, அது நடைமுறைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே தோல்வியடைந்தது. இந்த வாரம், தனது சொந்த முயற்சியில் கொண்டுவரப்பட்ட வாஷிங்டனின் தரகுப் போர் நிறுத்தமும் தோல்வி அடைந்தது, அஸெரி படைகள் ஆர்மீனிய கட்டுப்பாட்டிலுள்ள பகுதிக்குள் முன்னேறிக் கொண்டிருந்ததால் அது முறிவடைந்துவிட்டது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் விடுத்த வேண்டுகோளுக்கு பின்னர் அமெரிக்க அதிகாரிகள் ஒரு உடன்பாட்டை பேச்சுவார்த்தை மூலம் கொண்டுவர முயன்றனர். கடந்த வாரம், ஒரு தொலைக்காட்சி கூட்டத்தில் புட்டின் அறிவித்தார்: "இரு தரப்பிலும் இருந்து நிறைய உயிரிழப்புக்கள் உள்ளன, ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் 2,000 க்கும் அதிகமான உயிரிழப்புக்கள் உள்ளன." இறப்பு எண்ணிக்கையானது "5,000 ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது" என்று அவர் கூறினார், இரு தரப்பிலும் பகிரங்கமாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதை விட மிக அதிகமான எண்ணிக்கையாக இருக்கிறது, ஆர்மீனிய பிரதம மந்திரி நிகோல் பஷின்யான் மற்றும் அஷெரி ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் ஆகிய இருவருடனும் "ஒரு நாளைக்கு பல முறை தொலைபேசியில்" பேசுவதாக அவர் கூறினார். காக்கசஸ் சண்டையை முடிவுக்குக் கொண்டு வர மாஸ்கோவுடன் "ஒருமுனையுடன் செயல்பட" வேண்டும் என்று வாஷிங்டனுக்கு புட்டின் அழைப்பு விடுத்தார்.

ஆர்மீனிய வெளியுறவு மந்திரி ஜோராப் மனாட்சகன்யான் மற்றும் அஸெரி வெளியுறவு மந்திரி ஜெய்ஹுன் பேராமோவ் (Jeyhun Bayramov) அக்டோபரில் வாஷிங்டனுக்கு பயணம் செய்து, துணை வெளியுறவு மந்திரி ஸ்டீபன் ஈ பியேகன் ஐ சந்தித்தனர். அதற்கு அடுத்த நாள், அமெரிக்க வெளிவிவகாரத்துறை அது மேற்பார்வையிட்ட "தீவிர பேச்சுவார்த்தைகளை" பாராட்டி ஒரு அறிக்கையை வெளியிட்டது, "அக்டோபர் 26, 2020 அன்று உள்ளூர் நேரப்படி காலை 8:00 மணிக்கு" "மனிதாபிமான போர் நிறுத்தம்" நடைமுறைக்கு வரும் என்று அது அறிவித்தது.

செப்டம்பர் 27, 2020 ஞாயிற்றுக்கிழமை அஸர்பைஜானின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட காட்சிகளிலிருந்து எடுக்கப்பட்ட இந்த படத்தில், அஜர்பைஜானின் சுய-பிரகடனப்படுத்தப்பட்ட நாகோர்னோ-கராபாக் குடியரசின் முன்னரங்கு வரிசையில் ஒரு மோட்டரிலிருந்து அஜர்பைஜானின் சிப்பாய்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். (அஸர்பைஜானின் பாதுகாப்பு அமைச்சகம் AP வழியாக)

பொதுமக்கள் மீது கொடிய தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. புதன்கிழமை, அஸெரி நகரமான பார்தாவில் ஆர்மீனியா கிளஸ்டர் குண்டுகளைத் தாங்கிய ஸ்மெர்ச் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதாக அஸெரி அதிகாரிகள் குற்றம் சாட்டினர். இந்த தாக்குதல் குடிமக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளை தாக்கி குறைந்தது 25 பேரைக் கொன்றதாகவும், மேலும் டஜன் கணக்கானவர்களைக் காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு மாறாக, அஸெரி படைகள் நாகோர்னோ-கராபாக் தலைநகர் ஸ்டெபனாகெர்ட்டில் ஐந்து ஏவுகணைகளால் தாக்கின, இதில் நகரத்தின் மகப்பேறு மருத்துவமனையும் அழிக்கப்பட்டது என்று ஆர்மீனிய அதிகாரிகள் குற்றம் சாட்டினர். "சர்வதேச மனிதாபிமான சட்டத்தையும், மரபுச் சட்டத்தையும் அப்பட்டமாக மீறும் இந்த போர்க் குற்றம், அர்த்சாக் நகரில் அஜர்பைஜானின் இலக்கு, பொது மக்களான கைக் குழந்தைகள், தாய்மார்கள், முதியவர்கள் தான் என்பதை தெளிவாக காட்டுகிறது" என்று ஆர்மீனிய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.

அஸெரி படைகள் நாகோர்னோ-கராபாக் சூழ் பிரதேசத்தை நோக்கி லாச்சின் கணவாய் வழியாக முன்னேறி வருகின்றன, இந்த சூழ் பிரதேசத்தை ஆர்மீனியாவை முறையாக இணைக்கும் வழி இதுவாகும். தங்களுடைய துருப்புகளுக்கும் கணவாய்க்கும் இடையிலுள்ள 60 முதல் 30 கிலோமீட்டர்களுக்கும் அதிகமான தூரத்தை அவர்கள் மூடியுள்ளார்கள், ஆர்மீனியாவிற்கும் கராபாக்கிற்கும் இடையேயுள்ள சாலை இணைப்பில் அஸெரியின் கனரக பீரங்கிகளை தாக்குதல் எல்லை வரம்பில் நிறுத்தியுள்ளனர். அஸெரி துருப்புக்கள் ஏற்கனவே அந்த கணவாயை கைப்பற்றிவிட்டன என்று பாங்காக் போஸ்ட் இன் ஒரு அறிக்கை கூறுகிறது — அதாவது 146,000 குடிமக்களில் பாதிப்பேர் தப்பிச் செல்ல முடியாமல் பொறிக்குள் அகப்பட்டிருக்கலாம், பெரும்பாலும் மறுவிநியோகத்தில் இருந்து அவர்கள் துண்டிக்கப்பட்டுள்ளார்கள்.

அஸர்பைஜானுக்கு விற்கப்பட்ட துருக்கிய மற்றும் இஸ்ரேலிய ட்ரோன்கள் ஆர்மீனிய படைகள் மீது ஒரு தீர்க்கமான இராணுவ வெற்றி கொள்ளலை கொடுத்துள்ளன என்று பல தகவல்கள் உள்ளன. ஒரு அஸெரி அதிகாரியான ஹிக்மெட் ஹாஜியேவ் பைனான்சியல் டைம்ஸிடம் கூறினார்: “ஆர்மீனியா பல ஆண்டுகளாக பிரச்சாரம் செய்ய முயன்றும் வெல்லமுடியாத ஒரு காரணி இருந்தது… ஆனால் அவர்கள் பழைய இராணுவக் கோட்பாடுகளையும் மற்றும் சிந்தனைகளையும் அதிகம் நம்பியிருந்தனர்: அதாவது டாங்கிகள், கனரக பீரங்கிகள் மற்றும் அரண்கள். இது வெறுமனே இரண்டாம் உலகப் போரை நமக்கு நினைவூட்டியது. மாறாக, நகரும் துருப்புக்கள், ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் ஒரு நவீன அணுகுமுறை ஆகியவைகள் எங்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன.”

ராயல் யுனைட்டட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட் சிந்தனைக் குழுவின் ஜாக் வாட்லிங்கையும் FT பத்திரிகை மேற்கோளாக காட்டியது: அதாவது "ஆர்மீனியர்கள் வழக்கமானதை விட மிகக் கீழான சிந்தனைகளால் பீடிக்கப்பட்டுள்ளனர். ஒரு பக்கம் நவீன ஆயுதங்களை பயன்படுத்துகிறது, மற்றொரு புறம் 1970 கள் மற்றும் 1980 களில் இருந்த ஆயுதங்களை பயன்படுத்துகிறது." ஆர்மீனியாவுக்கு எதிராக டிரோன்களைப் பயன்படுத்துவதில் அஸெரி திறமையுடன் இருப்பதால், "துருக்கியிடமிருந்து கணிசமான அளவு ஆலோசனைகளை அவர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது வெளிப்படை" என்று வாட்லிங் மேலும் கூறினார்.

இந்தப் போரில், சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் ஊக்குவிக்கப்பட்ட தேசியவாத மோதல்கள், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதிலிருந்து மூன்று தசாப்தகால ஏகாதிபத்திய போரினால் தூண்டிவிடப்பட்ட வெடிப்புத் தன்மை கொண்ட புவிசார் அரசியல் மோதல்களுடன் ஒன்றுசேர்ந்து வருகின்றன. துருக்கிய-இன அஸெரிகளை ஆக்கிரோஷமாக துருக்கி ஆதரிக்கையில், ரஷ்யாவும் ஈரானும் ஆர்மீனியாவிற்கு அனுதாபம் காட்டியுள்ளன, அதே நேரத்தில் இன்னும் நடுநிலையாக இருக்க முயற்சிக்கின்றன.

சிரியாவில் தசாப்த காலமாக நீடித்த நேட்டோ போரின் விளைவாக ஏற்கனவே கடுமையான மோதலில் இருக்கும் இந்த முக்கிய பிராந்திய சக்திகளுக்கு இடையேயான பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை கவிழ்ப்பதை நோக்கமாகக் கொண்ட நேட்டோ ஆதரவு சுன்னி இஸ்லாமிய போராளிகளை துருக்கி அரசாங்கம் ஆதரிக்கும் அதே வேளையில், நேட்டோ சக்திகளுக்கு எதிராக அசாத் ஆட்சியை ஆதரிக்க ரஷ்யா மற்றும் ஈரான் இரண்டும் சிரியாவிற்கு படைகளை அனுப்பியுள்ளன. கராபாக் மீதான நீண்டகால ஆர்மீனியா-அஸெரி மோதல் இந்த பதட்டங்களை மேலும் தூண்டுகிறது, இது துருக்கிய மற்றும் ரஷ்ய படைகள் சிரியாவிற்குள் நேரடியாக மோதிக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.

மோதலில் அஸர்பைஜானின் பெருகிய முறையிலான சக்திவாய்ந்த நிலைப்பாடானது ரஷ்ய மற்றும் ஈரானிய அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது. அஸெரி மற்றும் ஆர்மீனிய ஷெல் குண்டுகளும் மற்றும் ஏவுகணைகளும் ஈரானில் தரையிறங்கி தாக்கிய பின்னர், ஈரானிய அரசாங்கம் செவ்வாயன்று அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியாவுடனான தனது எல்லைகளில் தனது வான் பாதுகாப்பை பலப்படுத்தியது. புதன்கிழமையன்று, அது எல்லையை வலுப்படுத்த தரைப் படைகளை தரையிறக்கியது, ஈரானிய அதிகாரியான அப்பாஸ் அராச்சி ஒரு போர் நிறுத்தத்தை மேற்கொள்ள முயற்சிப்பதற்காக அஸெரி, ஆர்மீனிய மற்றும் ரஷ்ய அதிகாரிகளை பார்வையிட ஒரு சுற்றுப் பயணத்தைத் தொடங்கினார்.

ஆர்மீனியாவிலுள்ள கியூம்ரியில் இராணுவத் தளத்தைக் கொண்ட மாஸ்கோ, கராபாக் உடனான ஆர்மீனிய எல்லையில் எல்லைகாவல் படைகளை நிறுத்தியதால் இது வந்தது. கராபாக்கை வெற்றிகொண்டால் ஆர்மீனியா மீது படையெடுப்பதை அஸெரி படைகள் ஊக்கப்படுத்துவதை தடுப்பதை இது நோக்கமாகக் கொண்டது.

சிரிய இஸ்லாமிய போராளிகள் மற்றும் துருக்கிய தனியார் பாதுகாப்புப் படைகளை ஆர்மீனியாவை எதிர்த்துப் போராட அஸர்பைஜானுக்கு அனுப்புகின்றன என்ற பல அறிக்கைகளால் மாஸ்கோ மற்றும் தெஹ்ரான் பெருகிய முறையில் கவலைகள் கொண்டுள்ளன. சீனாவிலுள்ள சிஞ்சியாங்கில் வீகர்ஸ் சிறுபான்மையினர் முஸ்லிம்களிடையே ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு அல் கெய்தாவுடன் தொடர்புடைய துருக்கிஸ்தான் இஸ்லாமியக் கட்சியால் (TIP) அஜர்பைஜானுக்கு அனுப்பப்படுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் உள்ளன. இந்த அனுப்புதல்கள் அனைத்தும் சிஐஏ ஆதரவுடைய இஸ்லாமிய போராளிகளை ரஷ்யா, ஈரான் அல்லது சீனாவிற்குள் மத அல்லது இன மோதல்களை சுரண்டுவதற்காக அனுப்பப்படுகின்றனவா என்ற கேள்வியை எழுப்புகின்றது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்களில் நிச்சயமற்ற தன்மையின் இருப்பும், அந்தத் தேர்தல்களுக்குப் பிறகு அமெரிக்க ஏகாதிபத்தியம் எத்தகைய வெளியுறவுக் கொள்கையைத் பின்தொடரும், அது ஈரானைத் தாக்குமா என்பது அஸெரி-ஆர்மீனியப் போரின் அடிப்படையை இன்னும் கூடுதலான வெடிப்புத் தன்மையுடையதாக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த மோதல்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. அல் மானிட்டர் செய்தி வலைத் தளம் இவ்வாறு குறிப்பிட்டது: “அஸர்பைஜானுக்கு இஸ்ரேல் மற்றும் துருக்கி ஆகிய இரண்டும் துணைபுரிகின்றன, இது ஈரானுக்கு கவலையை ஏற்படுத்துகிறது, எனவே தான் ஈரான் தனது எல்லைகளில் இரு நாட்டிற்கும் அதிக செல்வாக்கைக் கொடுக்கும் என்ற அச்சத்தில் சண்டையை விரைவில் முடிக்க விரும்புவதில் கூடுதல் அவசரமாக உள்ளது, இல்லாவிட்டால் ஒரு பரந்த போர் வெடிக்கச் செய்யும்."

காக்கசஸில் போரினால் எழுந்திருக்கும் அசாதாரண விரிவாக்கத்தின் ஆபத்தையும், இது ஒரு பெரிய அளவிலான பிராந்திய அல்லது உலகளாவிய போரின் அபாயத்திற்கு தூண்டப்படுவதற்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை சர்வதேச அளவில் ஒரு சோசலிச, போர் எதிர்ப்பு இயக்கத்தில் அணிதிரட்டப்பட வேண்டியதன் அவசியத்தை இந்த மோதல்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

போர் நிறுத்த ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்தியதற்காக அமெரிக்க அதிகாரிகளை பாராட்டி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ட்டுவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். "பல உயிர்கள் காப்பாற்றப்படும். என்னுடைய குழுவின் [வெளிவிவகாரச் செயலர் மைக் பொம்பியோ] & ஸ்டீவ் பியேகன் & [தேசிய பாதுகாப்புச் சபை] ஒப்பந்தம் செய்ததற்காக பெருமைப்படுகிறேன்!" என்று அதில் தெரிவித்துள்ளார்.

ஆனால் அஸெரி அதிகாரிகள் போர் நிறுத்த உடன்படிக்கை நடைமுறைக்கு வந்த சில நிமிடங்களிலேயே ஆர்மீனிய படைகளின் "அப்பட்டமான மீறலாக" டெர்ட்டர் நகரத்தின் மீது ஷெல் குண்டுகள் வீசின என்று குற்றம் சாட்டினர், அதே நேரத்தில் ஆர்மீனிய அதிகாரிகள் இதை மறுத்தனர், போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்த பின்னர் தங்களுடைய துருப்புக்கள் மீது அஸெரி பீரங்கித் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டினர்.