ஐரோப்பாவின் கோவிட்-19 தொற்று பரவல் கட்டுப்பாட்டை மீறுகின்றது

4 November 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்,

ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஒரு புதிய பூட்டுதலை அறிவித்ததிலிருந்து மாணவர்கள் விடுமுறையில் இருந்து நேற்று முதல்தடவையாக வகுப்புகளுக்கு திரும்பியதால், பிரான்ஸ் முழுவதும் டஜன் கணக்கான பள்ளிகளில் ஆசிரியர்கள் வகுப்புகளை விட்டு வெளிநடப்பு செய்தனர். இப்போது ஐரோப்பா முழுவதிலும் உள்ள அரசாங்கங்களால் அறிவிக்கப்பட்டுள்ள பூட்டுதல்களின் அரசியல் மோசடி இளைஞர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் பரந்த அடுக்குகளுக்கு வெளிப்படையாக தெரிவதற்கு நீண்டநாட்கள் எடுக்கவில்லை.

கடந்த வாரம் பூட்டுதலை அறிவித்த மக்ரோன், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு சமூகமளிப்பார்கள் என்பதால் அவர்களின் பெற்றோர் தொடர்ந்து பணியாற்ற முடியும் என்றார். மூன்றில் இரண்டு பங்கு பரவும் இடங்களாக பள்ளிகள் அல்லது வேலையிடங்கள் இருப்பதாக சுகாதார அமைச்சகம் மதிப்பிட்டுள்ள நிலையில், வலுவான பாதுகாப்பு நெறிமுறைகள் வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தும் என்று மக்ரோன் உறுதியளித்தார். இந்த உறுதிமொழி பயனற்றது. தற்போதைய பாதுகாப்பு நெறிமுறைகள் சமூக விலகலை "சாத்தியமான அளவிற்கு" மட்டுமே செயல்படுத்த கூடியதாக இருப்பதால் அது "ஒரே வகுப்பு அல்லது ஒரே ஆண்டு மட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு தேவையில்லை" என்றும் வலியுறுத்துகின்றன.

சுகாதாரத்துறை தொழிலாளர்கள் கோவிட்-19 நோயாளிகளை செக் குடியரசின் கியோவ் வைத்தியசாலையிலிருந்து பிர்னோ வைத்தியசாலையின் அவசர உதவிப்பிரிவிற்கு அக்டோபர் 22, 2020 கொண்டுசெல்கின்றனர். (AP Photo/Petr David Josek)

எனவே, ஐரோப்பாவில் ஒவ்வொரு நாளும் கால் மில்லியன் புதிய தொற்றுக்கள் காணப்படுகின்றன. பிரான்சில் 52,518, இத்தாலியில் 22,253, சுவிட்சர்லாந்தில் 21,926, பிரிட்டனில் 18,950, ஸ்பெயினில் 18,340, போலந்தில் 15,578 மற்றும் ஜேர்மனியில் 13,125 ஆக உள்ளது. ஆசிரியர்களும் மாணவர்களும் பள்ளிகளில் ஒரு வகுப்பறைக்குள் 30 பேர் நெரிசலாக உள்ளனர்.

பாரிய பள்ளி ஆக்கிரமிப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களைத் தொடங்கிய கிரீஸ் மற்றும் போலந்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்களுடன் பிரான்சில் மாணவர்கள் இணைகிறார்கள். ஐரோப்பா முழுவதும் இளைஞர்கள் ஒரு அரசியல் போராட்டத்தை எதிர்கொள்கின்றனர்.

ஐரோப்பிய அரசாங்கங்கள் மக்களின் உயிர்களை அவமதிப்புடன் நடாத்துகின்றன. அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் 400,000 பிரெஞ்சு மக்கள் கோவிட்-19 காரணமாக இறக்கக்கூடும் என்று மக்ரோன் கூறிய பின்னர், பாரிஸ், லண்டன் மற்றும் பேர்லின் அனைத்தும் பூட்டுதல்களைச் செயல்படுத்தியுள்ளன. ஆனால் அவை இந்த வசந்தகால பூட்டுதல்களைப் போலல்லாமல், நோய்த்தொற்றுக்கு உள்ளாக குழந்தைகள் பள்ளிக்கும் மற்றும் அத்தியாவசியமற்ற சேவையிலுள்ள தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டும் என்று கோருகின்றன.

இதுபோன்ற பூட்டுதல்கள் கோவிட்-19 இன் பெருக்க வீதத்தை (R0) 0.9 முதல் 1.2 வரை மட்டுமே குறைக்கும் என்று பிரான்சின் விஞ்ஞானக் கழகம் வெள்ளிக்கிழமை மதிப்பிட்டுள்ளது. அதாவது தினசரி புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை மிக மெதுவாக வீழ்ச்சியடையும் அல்லது அதிவேகமாக அதிகரித்துக்கொண்டே இருக்கும். "புதிய, குறைவான கடுமையான நடவடிக்கைகளின் செயல்திறன் குறித்து பெரும் நிச்சயமற்ற தன்மை உள்ளது" என்று விஞ்ஞானக் கழகத்தின் உறுப்பினர் Simon Cauchemez எச்சரித்தார். கோவிட்-19 நோயாளிகளுடன் பிரான்சின் செயற்கை சுவாச கருவிகள் உள்ள படுக்கைகள் ஏற்கனவே பாதி நிரம்பியுள்ளன, ஸ்பெயினின் கால் பகுதி நிரம்பியுள்ளது, மற்றும் ஐரோப்பாவின் எஞ்சிய பகுதிகள் சில வாரங்களுக்குப் பின்னர் இதேபோன்ற நிலைமையே தோன்றும். சுகாதார அமைப்புமுறையின் ஒரு முறிவு விரிவடைகின்றது.

தொற்றுநோயை ட்ரம்ப் நிர்வாகத்தை விட மிகவும் புத்திசாலித்தனமாக கையாண்டதாக கூறிய ஐரோப்பிய அரசாங்கங்களின் பாசாங்குகள் ஒரு இழிந்த மற்றும் கொடிய மோசடி என அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. ஐரோப்பிய அரச தலைவர்கள், ஒருவேளை, அமெரிக்காவின் பில்லியனர் கட்டிட-நில ஊகவாணிப ஜனாதிபதியின் அதேமாதிரியான ஆணவத்துடன் செயல்படாதிருந்திருக்கலாம். அவர்கள் முகமூடிகளை அணிய மறுக்கவில்லை, கோவிட்-19 ஐ காய்ச்சலுடன் ஒப்பிட்டுப் பார்க்கவில்லை, அல்லது தங்களுக்கு வைரஸைப் பிடித்த பின்னர் தங்கள் நாடுகளில் உள்ள பெரும்பான்மையான தொழிலாளர்களுக்குக் கிடைத்த மருத்துவ கவனிப்புடன் ஒப்பிடும்போது அவர்கள் பெற்ற மருத்துவ சேவையின் விதிவிலக்கான தரத்தின் பெருமை பேசவில்லை.

எவ்வாறிருப்பினும், இந்த திறமையின் தோற்றத்திற்கு பின்னால், ஒரு பெரிய அளவில் பொய் இருந்தது. சுவீடனின் “சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்க” கொள்கை நாடு முழுவதையும் வைரஸ் பரவ அனுமதித்திருக்கின்றது. மக்கள் இறுதியில் நோய் எதிர்ப்பு சக்தியுள்ளவர்களாக மாறுவர் என்று நம்பினார்கள். இது அதன் இறப்பு விகிதத்தை அண்டை நாடான பின்லாந்தை விட ஒன்பது மடங்கு அதிகமாக்கியது. ஆயினும்கூட இந்தக் கொள்கையை அனைத்து ஐரோப்பிய அரசாங்கங்களும் ஏற்றுக்கொண்டன.

ஐரோப்பா முழுவதிலும் உள்ள அதிகாரிகளைப் போலவே, சுவீடனின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் ஆண்டர்ஸ் டெக்னெல் ஒரு சமூக நோய் எதிர்ப்பு சக்தி கொள்கையை பின்பற்றுவதாக மறுத்தார். ஆயினும்கூட, பின்லாந்து அதிகாரிகளுக்கு அவர் அனுப்பி, வெளிப்பட்ட மார்ச் 14 மின்னஞ்சலில், டெக்னெல் "சமூக நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அடைய பள்ளிகளைத் திறந்து வைத்திருக்குமாறு" வாதிட்டுள்ளார். அதாவது, இன்று மக்ரோன் அரசாங்கத்தைப் போலவே, பள்ளிகளையும் திறந்த நிலையில் வைத்திருக்குமாறு அவர் வாதிட்டார். இதனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியிலும், பின்னர் இதனால் பரந்த உழைக்கும் மக்களுக்கும் வைரஸ் பரவுகிறது.

பிரிட்டனின் தலைமை விஞ்ஞான ஆலோசகர் Sir Patrick Vallance கூறுகையில், “அனைவருக்கும் இதைப் பெறுவதைத் தடுக்க முடியாது, அது விரும்பத்தக்கதும் அல்ல” என்றார். ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கலின் உள்துறை அமைச்சகம் கட்டுப்பாடற்ற பரவல் 2020 இல் 1 மில்லியன் மக்களை பலிகொள்ளலாம் என்று இரகசியமாக அறிவித்தது. ஆயினும், பத்திரிகைகள் “அம்மா மேர்க்கெல்” என்று ஜேர்மனிய மக்களுக்கு சந்தைப்படுத்தும் அவர், பொதுமக்கள் முன் சென்று, ஜேர்மனிய மக்களில் 70 சதவீதம் பேர் தொற்றுக்குள்ளாகிவிடுவார்கள் என்று அப்பட்டமாக முற்கூறினார்.

ட்ரம்பையோ அல்லது மற்றொரு தனிப்பட்ட முதலாளித்துவ அரசியல்வாதியையோ பதவியில் இருந்து நீக்குவதன் மூலம் தொற்றுநோயின் நெருக்கடியை தீர்க்க முடியாது. ஐரோப்பிய அரசாங்கங்கள் அனைத்தும் அடிப்படையில் ட்ரம்ப்பின் அதே கொள்கையை பின்பற்றின, ஆனால் திறமையான அரசியல் வஞ்சகத்திற்கு ஓரளவு கவனம் செலுத்தின. இன்று, ஐரோப்பா முழுவதும் சுமார் 2,500 பேர் ஒவ்வொரு நாளும் கோவிட்-19 ஆல் இறக்கின்றனர். இது வட அமெரிக்காவை விட 1,000 அதிகமாகும்.

ஐரோப்பாவில் பூட்டுதல்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது தொழிலாள வர்க்கத்தின் தலையீட்டினால் ஆகும். மார்ச் மாதத்தில், இத்தாலி முழுவதும் வாகன, எஃகு மற்றும் பொறியியல் ஆலைகளில் வீட்டில் பாதுகாப்பாக தங்கியிரு என்ற கொள்கையை கோரி தன்னியல்பான வேலைநிறுத்தங்களின் அலை எழுந்தது. ஆரம்பத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடான ஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அதற்கு அப்பாலும் இப்போராட்டம் பரவியது. மறுபுறம், ஐரோப்பாவின் முதலாளித்துவ அரசாங்கங்கள், முடிந்தவரை சுயமனநிறைவை ஊக்குவிக்க முயன்றன. புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாகக் குறைவதற்கு முன்பே வேலைக்கு மற்றும் பள்ளிக்கு முன்கூட்டியே திரும்புவதற்கு அழுத்தம் கொடுத்தன. இந்தக் கொள்கையின் பேரழிவு விளைவுகள் இப்போது தெளிவாகத் தெரிகிறது.

ஐரோப்பாவின் கொலைகார கோவிட்-19 கொள்கைக்கு எதிரான போராட முன்வரும் தொழிலாளர்களும் மற்றும் இளைஞர்களும் வைரஸைக் கட்டுப்படுத்தவும் மருத்துவமனை அமைப்பின் சீர்குலைவை தவிர்க்கவும் ஒரே வழியான வீட்டில் பாதுகாப்பாக தங்கியிரு கொள்கைக்கு பணம் இல்லை என்பதை அவமதிப்புடன் நிராகரிக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் 2 டிரில்லியன் டாலர் வங்கி மற்றும் பெருநிறுவன பிணை எடுப்புத் திட்டத்தையும், பிரிட்டன் 645 பில்லியன் டாலர் வங்கி பிணை எடுப்பு திட்டத்தையும் ஏற்றுக்கொண்டுள்ளன. உண்மையில், தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் சிறு வணிக உரிமையாளர்கள் வீட்டிலேயே இருக்கும்போதே தங்கள் வருமானத்தையும் வாழ்வாதாரத்தையும் பராமரிக்கும் முடியும் என்பதை உறுதிப்படுத்த ஏராளமான பணம் இருக்கின்றது.

அமெரிக்காவினை போல் தொற்றுநோயை தீவிரமாக தடுக்க ஐரோப்பாவில் உள்ள அரசாங்கங்களின் இயலாமை முதலாளித்துவத்தின் திவால்தன்மையை பிரதிபலிக்கிறது. இத்தகைய நடவடிக்கை ஆளும் வர்க்கத்தின் பொருளாதாய நலன்களைக் குறுக்கறுக்கும். ட்ரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சியினரைப் போன்ற ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களும், இந்த வளங்களை கோடீஸ்வரர்களின் பங்கு இலாபங்களை பிணை எடுப்பதற்கும், பெருவணிகங்களின் இலாபங்களை உயர்த்துவதற்கும் பயன்படுத்த விரும்புகின்றனரே தவிர உயிர்களைக் காப்பாற்றுவதற்கு அல்ல.

இந்த நிதிகளின் ஒரு பகுதி எண்ணற்ற பெருநிறுவன தொழிற்சாலை தொழிலாளர் குழுக்கள் மற்றும் அமைப்புகள் மூலம் தொழிற்சங்க அதிகாரிகள் மற்றும் அவர்களின் அரசியல் கூட்டாளிகளுக்கு திருப்பப்பட்டுள்ளது. எனவே அவர்கள் வேலைக்குத் திரும்பும் கொள்கைகளை செயல்படுத்த உதவுவர். இந்த இலையுதிர்காலத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்தபோது, பொதுமக்கள் கோபம் அதிகரித்து மற்றும் பூட்டுகளைச் செயல்படுத்த அரசாங்கங்களுக்கு அழுத்தம் அதிகரித்தது. தொழிற்சங்கங்களும் அவற்றின் கூட்டாளிகளும் எந்த நடவடிக்கைக்கும் ஏற்பாடு செய்யவில்லை. நேற்று கூட, ஸ்பெயினின் சமூக ஜனநாயகவாதிகளுடன் ஒரு கூட்டணி அரசாங்கத்தில் உள்ள "இடது ஜனரஞ்சக" பொடேமோஸ் கட்சி, வீட்டில் பாதுகாப்பாக தங்கியிரு கொள்கைக்கான அஸ்டூரியாஸ் பிராந்திய அதிகாரிகளின் அழைப்புகளை நிராகரித்தது.

தொற்றுநோய்க்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு முன்னோக்கி செல்லும் வழி, தொழிற்சங்க அதிகாரத்துவங்களிலிருந்து சுயாதீனமாக, பணியில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பைக் கண்காணித்தல் மற்றும் ஒரு பரந்த போராட்டத்தைத் தயாரிக்க பணியிடங்கள் மற்றும் பள்ளிகளில் தங்களது சொந்த பாதுகாப்புக் குழுக்களை அமைப்பதாகும். ஒரு பேரழிவுகரமான உயிர் இழப்பை அச்சுறுத்தும் முதலாளித்துவ அமைப்பின் உலகளாவிய தோல்வியை எதிர்த்துப் போராடுவதற்கு தொழிலாள வர்க்கத்தின் கூட்டு தொழில்துறை மற்றும் சமூக பலத்தினை அணிதிரட்ட வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் ஐரோப்பிய பிரிவுகள் ஒரு ஐரோப்பிய மற்றும் சர்வதேச பொது வேலைநிறுத்தத்திற்கான அழைப்பை முன்வைத்துள்ளன.

எவ்வாறாயினும், அத்தகைய நடவடிக்கையை தயாரிப்பது என்பது சோசலிசத்திற்கான ஒரு அரசியல் போராட்டத்தை மேற்கொள்வதாகும். அதீதசெல்வந்தர்களின் தவறான முறையில் சேர்க்கப்பட்ட செல்வத்தை பறிமுதல் செய்வதும், தனியார் இலாபத்தை விட சமூக தேவையின் அடிப்படையில் பொருளாதார வாழ்க்கையை ஒழுங்கமைக்க தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை எடுப்பதற்கான போராட்டத்தால் மட்டுமே சுகாதாரப் பேரழிவை தவிர்க்க முடியும். ஐரோப்பாவில் இதன் பொருள், ஐரோப்பிய ஒன்றியத்தை வீழ்த்துவதற்கும், அரச அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும், ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளை கட்டியமைப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தை ஆதரிப்பதாகும்.

Alex Lantier