பெருந்தொற்றுநோய் எழுச்சியடையும் போது, பிரெஞ்சு ஆசிரியர்களின் வேலைநிறுத்தங்கள் பள்ளிகளின் திறப்புகளுக்கு எதிராக அதிகரிக்கின்றன

Will Morrow
7 November 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரெஞ்சு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வேலைநிறுத்தங்களும் எதிர்ப்புக்களும், எந்தவொரு செயற்திறனுள்ள பாதுகாப்பும் இல்லாமல் பள்ளிகளை திறந்து வைத்திருக்கும் மக்ரோன் அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராக விரிவடைந்து வருகின்றன, இது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களிடையே கொரோனா வைரஸ் தடையின்றி பரவ அனுமதிக்கிறது.

உள்ளூர் பள்ளிக் கூட்டங்களில் பிரான்ஸ் முழுவதும் ஆசிரியர்கள் தொடர்ந்து வேலைநிறுத்த நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து வருகின்றனர். அவர்கள் பேரழிவு தரும் நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். சமூக இடைவெளி நடவடிக்கைகள் அத்தியாவசியமானதாகக்கூட இல்லாமல் இருக்கின்றன. 30 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பொதுவாக வகுப்பறைகளில் காற்றோட்டம் இல்லாமல் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர். நூற்றுக்கணக்கான மாணவர்கள் சிற்றுண்டி உணவகங்கள் மற்றும் நடைகூடத்தில் அருகருகே உட்கார்ந்தும் நடந்து செல்லுவதைக் காட்டும் படங்கள் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.

வியாழன், நவம்பர் 5, 2020 அன்று தென்மேற்கு பிரான்சிலுள்ள Cambo les Bains உள்ள பள்ளியை விட்டு மாணவர்கள் வெளியேறுதல் (AP Photo/Bob Edme)

சமூக இடைவெளி நடவடிக்கைகள் மற்றும் தங்களுடைய பள்ளிகளை மூட வேண்டும் என்று கோரி மாணவர்கள் பள்ளி நுழைவாயில்களில் எதிர்ப்பு போராட்டங்களை ஏற்பாடு செய்கிறார்கள், அன்புக்குரியவர்களின் மரணங்களுக்கு தாங்கள் தான் காரணம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

பிரான்சில் பெருந்தொற்று நோய் கட்டுப்பாட்டை மீறி எழுச்சியடைந்துவிட்டது. மேலும் 394 மக்கள் புதன்கிழமை, செவ்வாய்க்கிழமை 854, திங்களன்று 416 மக்கள் இறந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 540 மக்கள் அவசர சிகிச்சை படுக்கைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மொத்தமாக இப்போது 4,080 பேர்கள் அவசர சிகிச்சை படுக்கைகளில் உள்ளனர், மேலும் 40,000 க்கும் மேற்பட்டோர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று பாரிசில் Collège Guillaume Budé இல் உள்ள ஆசிரியர்கள் இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க சமூக இடைவெளி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கோரி பள்ளியில் 75 சதவிகித வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்து ஒரு அறிக்கையை வெளியிட்டனர். புதனன்று Le Blanc-Mesnil இல் உள்ள Mozart உயர்நிலைப் பள்ளியில் 20 ஆசிரியர்கள் முதலாவது நாளிலிருந்து வேலைநிறுத்த நடவடிக்கையைத் தொடர்ந்தனர். Montpellier இல், ஒரு பாதுகாப்பான சுகாதார பாதுகாப்பு நெறிமுறையை கொண்டு வரும் வரை செவ்வாயன்று ஆசிரியர்கள் காலவரையறையற்ற வேலைநிறுத்த நடவடிக்கைக்கு வாக்களித்தனர்.

ஐந்து ஆண்டுகளாக இத்தாலிய மொழியைக் கற்றுக் கொடுப்பவரும் இப்போது பாரிஸுக்கு வெளியே ஒரு மணி நேர தூரத்தில் அமைந்துள்ள மூன்று வெவ்வேறு பள்ளிகளில் கற்பிக்கும் சாரா என்பவர் அங்குள்ள நிலைமையை நேற்று உலக சோசலிச வலைத் தளத்திற்கு (WSWS) விபரித்தார். “செப்டம்பர் தொடக்கத்திலிருந்து சுகாதார நெறிமுறைகள் எதுவும் இல்லை. ஒரு பள்ளியில் அவர்கள் இப்போது அடிக்கடி சுத்தம் செய்கிறார்கள், வகுப்பில் கைகழுவும் ஜெல் மற்றும் முகக்கவசங்கள் உள்ளன. இல்லாவிட்டால் எல்லாமே ஒன்றுதான்: அதாவது சமூக இடைவெளி இல்லை, பள்ளி உணவகங்கள் திறந்திருக்கிறது மற்றும் கூட்டம் நிரம்பி வழிகிறது, நடைகூடம் நிரம்பியுள்ளன, பொது போக்குவரத்தும் நிரம்பியுள்ளது.

"மாணவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் போது அவர்கள் ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் வீட்டிலேயே இருப்பார்கள், ஆனால் பெரும்பாலும் எங்களுக்கு சொல்லப்படுவதில்லை. எனது வகுப்பில் அவர்கள் இல்லாததை நான் காண்கிறேன், விசாரித்த பின்னரே அவர்களுக்கு COVID-19 தொற்று என்பதைக் கண்டுபிடித்தேன். பொதுவாக, மாணவர்கள் இல்லாத காரணம் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது. எதுவும் நடக்காதது போல் எல்லாம் தொடர்கிறது. பொதுவாக ஒரே வகுப்பில் மூன்று மாணவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பின்னர், அதை மூட வேண்டும். ஆனால் இந்த வழிமுறையில், தெரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது.”

"பல நோய்களுடைய என் சக பணியாளருடைய மாணவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டு மருத்துவமனையில் இறந்து போனார்," என்று அவர் தொடர்ந்தார். "ஆனால் யாருக்கும் தெரியாது ஆனால் தலைமை ஆசிரியருக்கு மட்டுமே தெரியும். எனது சக பணியாளர் குழந்தைக்கான வீட்டுப் பாடம் கற்றுக் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தார். வீட்டுப் பாடம் கற்றுக் கொடுப்பதற்கு பெற்றோர் அவருக்கு கடிதம் எழுதியபோதுதான் அவர் தற்செயலாக அதைக் கண்டுபிடித்தார். நாங்கள் கண்டுபிடிப்பது அப்படித்தான்.”

இந்தச் சூழ்நிலையை தீர்க்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கேட்கப்பட்டதற்கு, சாரா கூறினார்: “செப்டம்பர் மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்ட தொடக்கத்திலிருந்தே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே பிரச்சினை. மாணவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மாற்று கட்டிடத் தொகுதிகளில் பள்ளியில் படித்திருக்க வேண்டும். எனது [இத்தாலிய] வகுப்புகளில், மாணவர்கள் வெவ்வேறு மட்டங்களில் இருந்து வருகிறார்கள். ஒவ்வொரு மொழிக்கும் அதுதான். அதாவது மாணவர்கள் தொடர்ச்சியாக ஒன்றுகலப்பது தொடர்கிறது. ஒரு வகுப்பிற்கு 10 முதல் 15 மாணவர்களுக்கு மேல் அல்லது அதற்கும் குறைவாக இருக்கக்கூடாது மற்றும் கடுமையான சமூக இடைவெளி இருக்க வேண்டும். இப்போது, மாணவர்கள் நாள் முழுவதும் ஒருவருக்கொருவர் மேல் இருக்கிறார்கள்!"

"இது ஒரு வெளிப்படையான நடவடிக்கையாக இருந்தது," என்று அவர் கூறினார், “ஆனால் அது செய்யப்படவில்லை. வகுப்புகளில் காற்றோட்டத்திற்கான ஒரு அமைப்புமுறை தேவை. இது முற்றிலும் இல்லை. அது எவ்வளவு முக்கியமானது என்பது இப்போது நமக்குத் தெரியும். என் வகுப்பில் என்னால் ஜன்னல்களைத் திறக்கக்கூட முடியாது. பல பள்ளிகளில் தற்கொலைகளைத் தடுக்க அவைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன."

மக்ரோன் நிர்வாகத்தின் பள்ளி தொடக்கக் கொள்கையை இயக்கும் பல முக்கிய காரணிகளை அறிவதாக சாரா கூறினார். "முதலாவதாக, செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் பல 'மருத்துவர்கள்', இது சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கத்தை அடைவதற்காக மக்களின் இளம் வயது குழுவினரிடையே வைரஸ் பரவுவதற்கான ஒரு 'உத்தி' என்று கூறினார்கள். இது ஒரு நோக்கங்கொண்டது என நான் நம்புகிறேன், ஏனென்றால், பள்ளிகள் திறக்கப்பட்டிருந்தாலும், பெற்றோர்கள் பணிக்குச் செல்ல முடியும், அது எந்தவொரு பாதுகாப்பு நடவடிக்கைகளும் முழுமையாக இல்லாததை விளக்கவில்லை. விநியோகிக்கப்பட்ட பருத்தி துணியிலான முககவசங்கள் தான், ஒரே ‘உண்மையான’ நடவடிக்கை ஆனால் அதுவும் பயனுள்ளதாக இல்லை.”

"அடுத்து பொருளாதார உந்துதல் உள்ளது. பெற்றோர் பணிக்குச் செல்ல வேண்டும், நாங்கள் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட முடியாது. ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளியில் நாங்கள் குழந்தைகள் பராமரிப்பாளர்கள் என்பது வெளிப்படையானது. மே மாதத்தில் [முதலாவது முடக்கத்திற்குப் பின்னர்] விடுமுறை இடைவேளைக்கு மூன்று வாரங்களுக்கு முன்பு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன: இதனுடைய கற்பித்தல் பயன்பாடு என்னவாக இருக்கும்? ”

பொறுப்புக்களானது அரசாங்கம், ஊடகங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் தரப்பிலும் உள்ளன என்று சாரா கூறினார். "விடுமுறைக்கு முன், பல மருத்துவமனைகளின் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், தொலைக்காட்சியில் செய்தி இவ்வாறு இருந்தது: உங்கள் விடுமுறையை அனுபவிக்க செல்லுங்கள், எல்லாம் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. ... இரண்டாவது அலை சாத்தியம் என்பதை தொழிற்சங்கங்கள் நன்கு அறிந்திருந்தன. ஆனால், அதற்கான முன் முயற்சி எதுவும் எடுக்கவில்லை. ஒன்றுமில்லை. கொரோனா வைரஸ் குறித்து முழுமையான அமைதிதான் இருந்தது."

தொழிற்சங்கங்கள், ஆசிரியர்களை வேலை நிறுத்தம் செய்ய அழைப்பு விடுக்கவில்லை என்றும், ஆனால் ஒரு ஆபத்தான சூழ்நிலை நிலவினால், ஆசிரியர்கள் தங்களுடைய உழைப்பை திரும்பப் பெறும் உரிமையை தனிப்பட்டமுறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தின. இது அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஆசிரியர்கள் மத்தியிலுள்ள எந்தவொரு எதிர்ப்பையும் தனிமைப்படுத்துவதற்கு நனவான நோக்கம் கொண்டிருந்தது.

"உண்மையில் உங்கள் உழைப்பைத் திரும்பப் பெறுவதற்கான உரிமை மிகவும் சிக்கலானது" என்று சாரா விளக்கினார். "நீங்கள் நிறைய ஆபத்தை சந்திக்கிறீர்கள், நிச்சயமாக, நீங்கள் ஒரு தனிநபர். இந்த உரிமையை செயற்படுத்த நிபந்தனைகள் இருக்க வேண்டும். செப்டம்பரில் இது நடைமுறையில் சாத்தியமற்றது, ஏனென்றால் பள்ளிகள் சுகாதார நெறிமுறையின் (இல்லாத ஒன்று) விதிகளைப் பயன்படுத்தின.

"இப்போது பள்ளிகளை மூடுவது, இணையவழிக் கற்றலை மீண்டும் தொடங்குவது அவசியம், இது ஒரு நீண்டகால தீர்வு அல்ல, மாற்றத்திற்கான ஒரு நடவடிக்கையாகும், இது தொற்றுநோயைக் கட்டுப்படுத்தவும், வகுப்புகளை அனுமதிப்பதற்கான உண்மையான உறுதியான நடவடிக்கைகளில் ஈடுபடவும் வேண்டும்" என்று சாரா கூறினார். "இது கீழிருந்து, மிகவும் கீழிருக்கும் ஆசிரியர்களுடன் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்."

ஆசிரியர்களின் வளர்ந்து வரும் போராட்டத்தை அடக்குவதற்கு தொழிற்சங்கங்கள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றன. நேற்று, தேசிய கல்வி ஒன்றியம் SUD அடுத்த செவ்வாய்க்கிழமை, நவம்பர் 10 அன்று ஒரு தேசிய ஒருநாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. இது ஆசிரியர்கள் ஏற்கனவே பள்ளிகளில் வேலைநிறுத்த நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து வரும் சூழ்நிலையிலும், ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான வைரஸ் தொற்று பரவும் இந்த நிலைமையின் கீழ் அழைப்பு விடப்படுகிறது.

உண்மையில், தொழிற்சங்கங்கள் ஆரம்பத்தில் இருந்தே அரசாங்கத்தின் பள்ளிகளை மீண்டும் திறக்கும் கொள்கையை ஆதரித்தன. பள்ளிகள் திறந்த நிலையில் இருக்க முடியும் என்பதையும், பெற்றோர்கள் பணியில் தொடர்ந்து இருக்க முடியும் என்பதையும், எவ்வளவு மக்கள் இறந்தாலும் இலாபங்கள் தொடர்ந்து பாய வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்த அவர்கள் மக்ரோனுடன் ஒத்துழைக்கின்றனர். சமீபத்திய வேலைநிறுத்த அழைப்பு ஆசிரியர்களின் வளர்ந்து வரும் நடவடிக்கையின் மீது கட்டுப்பாட்டைப் பேணுவதையும் திறமையாக மூச்சு திணறடிக்கச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

அதற்கு பதிலாக ஆசிரியர்கள் வேறு அடிப்படையில் வேலைநிறுத்தம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் கல்வியாளர்களை உள்ளடக்கிய சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். தொற்றுநோய் தடுக்கப்படும் வரை பள்ளிகளை உடனடியாக மூடக் கோரி வேலைநிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். தங்கள் குழந்தையை மனதில் கொண்டு வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும், குறைந்தபட்சம் ஒரு பெற்றோருக்கு முழு ஊதியம் வழங்கப்பட வேண்டும். கல்வியாளர்களின் குழுக்களால் நிர்ணயிக்கப்பட்டபடி, இணையவழிக் கல்வி மற்றும் சிறிய குழுக்கள் முறைக் கல்வி உட்பட உயர்தர கற்றலை வழங்க பாரிய வளங்களை கல்வி அமைப்புமுறைக்கு முதலீடு செய்யப்பட வேண்டும்.

பள்ளிகளில் வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் அதனுடைய விரோதப் போக்கை மக்ரோன் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. புதன்கிழமை, அரசாங்கம் வகுப்பு அளவுகளைக் குறைப்பதைக் கருத்தில் கொள்வதாக அறிவித்தது, ஆனால் இது ஒவ்வொரு நிலைமையையும் கருத்தில் கொள்ளும் அடிப்படையில் மட்டுமே, மற்றும் மிக மேல்நிலை மாணவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.

பள்ளிகளை மூடுவதற்கு மாணவர்கள் நடத்திய போராட்டங்களுக்கு கலவரம் அடக்கும் பொலிசார் கண்ணீர்ப்புகை குண்டுகளைக் கொண்டு அதற்கு விடையிறுக்கிறது. முதலாளித்துவ வர்க்கத்தின் இலாபங்களுக்காக நூறாயிரக்கணக்கான மக்களின் உயிர்களை தியாகம் செய்ய அது உறுதிபூண்டுள்ளது. ஆளும் வர்க்கத்தின் படுகொலைக் கொள்கைக்கு எதிராக, ஒரு தொழிலாளர் அரசாங்கத்திற்கும் சோசலிசத்திற்குமான போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட உயிர்களைப் பாதுகாப்பதற்கு தனது சொந்த சுயாதீனமான அரசியல் முன்னோக்கை தொழிலாள வர்க்கம் முன்னெடுக்க வேண்டும்.