இந்திய சுகாதார மற்றும் பொதுத் துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்; சீன விரைதூதர் சேவை ஓட்டுநர்கள் நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்கள் போராட்டங்கள்: ஆசியா

9 November 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தியா: வடக்கு டெல்லி மருத்துவமனை சுகாதார ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

ஆக்டோபர் 24 அன்று யூலை மாதத்திலிருந்து வழங்கப்படாத நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி இந்து ராவ் மருத்துவமனை, ராஜன் பாபு மருத்துவமனை மற்றும் கஸ்தூர்பா காந்தி மருத்துவமனை ஆகிய மூன்று வடக்கு டெல்லி மருத்துவமனைகளிலிருந்து மருத்துவர்கள் உட்பட 2,000 க்கும் அதிகமான சுகாதார ஊழியர்கள் இணைந்து ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர். இதே பிரச்சனைக்காக அக்டோபர் 7 இலிருந்து இந்து ராவ் மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவ ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்திவருகின்றனர்.

இந்து ராவ் மருத்துவமனை கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் பிரதான பங்கு வகிக்கிறது, மேலும் அதன் பல சுகாதார ஊழியர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தொற்றுநோயிலிருந்து முறையான பாதுகாப்பு வேண்டும் என்று இந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் செப்டம்பரில் ஒரு தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கின்றனர்.

ராஜஸ்தான் அரசு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கொரோனா வைரஸ் வேலைநிறுத்தப் போராட்டம்

ஜெய்பூரில் அக்டோபர் 21 அன்று அரசு நடத்தும் 108 மற்றும் 104 ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபடும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டனர். இதனால் சுமார் 850 ஆம்புலன்சுகள் சேவையில் ஈடுபடவில்லை. அவர்களுடைய கோரிக்கைகளில் ஒன்றாக அக்டோபர் 2019 ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க20 சதவீத சம்பள உயர்வு கோரிக்கை இருந்தது. வேலை நேரம் எட்டு மணிநேரமாக நிர்ணயிக்கவேண்டும் மற்றும் கோவிட்-19 நோயாளிளுடன் பணிபுரிபவர்களுக்கு சலுகைப் பணம் வழங்கவேண்டும் என்பன பிற கோரிக்கைகளாக இருந்தன.

கடந்த ஆண்டுகளில் அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்ற அரசாங்கத்தின் உறுதியளிப்புகளின் பேரில் பல வேலைநிறுத்தப் போராட்டங்களை ராஜஸ்தான் ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் முடிவுக்கு கொண்டுவந்தது. மீண்டும் அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற அரசாங்கத்தின் உறுதியளிப்பை அந்த தொழிற்சங்கம் ஏற்றுக்கொண்டதுடன் பின்னர் சில மணிநேரங்களுக்குப் பிறகு வேலைநிறுத்தம் முடித்துகொள்ளப்பட்டது.

ஜம்மு-காஷ்மீர் அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் வெளிநடப்பு போராட்டம்

நான்கு மாதங்களாக இருக்கும் நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்க கோரி ஜம்மு-காஷ்மீர் சாலைப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள், துப்புரவுப் பணியாளர்கள், வாகன பொறியாளர்கள், தொழில்நுட்ப மற்றும் எழுத்தர்கள் உட்பட 2,200 தொழிலாளர்கள், அக்டோபர் 23 அன்று வேலையை விட்டு வெளியேறி, போக்குவரத்தைத் தடைசெய்யும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர், இது லகான்பூர் மற்றும் குப்வாரா இடையே போக்குவரத்தை நிறுத்தியது.

ஜம்மு ரயில் நிலையம் அருகேயுள்ள ஜே.கே.ஆர்.டி.சி பிராந்திய தலைமை அலுவலகத்திற்கு வெளியே ஏராளமான தொழிலாளர்கள், லாரிகள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் சம்பளத்தைக் வழங்கக் கோரி பதாகைகள் மற்றும் பலகைகளை வைத்திருந்தனர்.

திருப்பூர் நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் வழங்கப்படாத ஊதியத்திற்காக வேலைநிறுத்தப் போராட்டம்

அக்டோபர் 21 ஆம் தேதி தமிழ்நாடு திருப்பூர் நகராட்சியைச் சேர்ந்த சுமார் 350 ஒப்பந்த துப்புரவுத் பணியாளர்கள் செப்டம்பர் மாதத்திற்கான ஊதியத்தை வழங்கவும் மேலும் எதிர்கால ஊதியங்கள் ஒவ்வொரு மாதமும் 10 ஆம் தேதிக்கு முன்னர் வழங்கப்பட வேண்டும் என கோரி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பணியாளர்கள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான ஊதியத்தை உடனே வழங்கக் கோரி ஜூன் மாதத்தில் வேலையை விட்டு வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பணியாளர்கள் ஒரு நாளைக்கு 420 ரூபாய் ($ 5.60 அமெரிக்க டாலர்) வேண்டும் என்று கோருகிறார்கள். தொழிராளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற சலுகைகளுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதத்தைக் கழித்த பின்னர், ஒப்பந்தக்காரர்கள் ஒரு நாளைக்கு 300 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது என்று கூறுகிறார்கள். துப்புரவுத் பணியாளர்களுக்கு வழக்கமான COVID-19 சோதனையை ஒழுங்கமைக்கவும், அவர்களுக்கு நல்ல தரமான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவேண்டும் என்றும் அதிகாரிகளிடம் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இமாசலப் பிரதேச அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்று கோருகின்றனர்

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமுல்படுத்தக் கோரி ஏராளமான இமாச்சல பிரதேச மாநில அரசு ஊழியர்கள் அக்டோபர் 24 அன்று மண்டியில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்தின் நுழைவு வாயில் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை இமாச்சல பிரதேச மாநில ஊழியர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS) 2004 இல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இது ஜனவரி 1, 2004 முதல் மத்திய அரசுப் பணியில் (மேலும் பெரும்பாலான மாநில அரசாங்கங்களால் செயல்படுத்தப்படுகிறது) புதிதாக சேர்க்கப்படுபவர்களுக்கு கட்டாயமாக வரையறுக்கப்பட்ட திட்டமாகும். இது ஒரு பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதிய முறையாகும், இதில் ஊழியர்கள் தங்கள் ஊதியத்தில் 10 சதவீதத்தை செலுத்த வேண்டும், இதற்கு சம்மாக அரசாங்கமும் வழங்க வேண்டும். மேலும் அது சாதாரண பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது.

தொழிலாளர்கள் தங்கள் ஓய்வூதிய கொடுப்பனவுகள் பங்குச் சந்தைகளின் ஏற்றத்தாழ்வுகளுடன் பிணைக்கப்பட்டுள்ளதால் அவை பாதுகாப்பானதாக இருக்கப்போவதில்லை என்று புகார் கூறினர். பழைய முறையில், முழு ஓய்வூதியத் தொகையும் அரசாங்கத்தால் செலுத்தப்படுகிறது, ஊழியர் கடைசியாக எடுத்த சம்பளத்தில் 50 சதவீதத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

ஒரு தேசியளவிலான பிரச்சாரத்தை ஒருங்கிணைக்க பழைய ஓய்வூதிய முறைக்கான தேசிய இயக்கத்தை (National Movement for Old Pension System - NMOPS) தொழிலாளர்கள் உருவாக்கியிருக்கின்றனர். புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஆறு மில்லியன் அரசு ஊழியர்கள் பணியில் உள்ளனர் என்று NMOPS தெரிவித்துள்ளது. இத்திட்டத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் தங்கள் NPS ஓய்வூதியத்தில் வாழ முடியாமலிருக்கிறது என்று கூறியுள்ளனர்.

புதுச்சேரி: அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் வழங்கப்படாத சம்பளத்தை கோருகின்றனர்

அக்டோபர் 26 ம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் வீதிகளில் உட்கார்ந்து போராட்டத்தை நடத்தினர். மாநில சட்டசபையை நோக்கி பேரணியாகச் செல்லும்போது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். ஆசிரியர்களுக்கு 11 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

பங்களாதேஷ் ஆடைத் தொழிலாளர்கள் காசிப்பூரில் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்புப் போராட்டம்

அக்டோபர் 28 ஆம் தேதி, உபகரணங்களை சேதப்படுத்தியதாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து செலவின வெட்டுக்களை திரும்ப பெற வலியுறுத்தி காசிப்பூரில் உள்ள திகந்தா ஸ்வெட்டர் தொழிற்சாலையைச் சேர்ந்த தொழிலாளர்கள் டாக்கா-டங்கைல் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் சாலைமறியல் போராட்டத்தை மேற்கொண்டனர். தொழிலாளர்கள் காலையில் தொழிற்சாலைக்குள் நுழைந்தபோது, சில மின் விளக்குகள் மற்றும் இயந்திரங்கள் சேதமடைந்துள்ளதை அவர்கள் கவனித்ததாகக் கூறினர், அவர்களை வேண்டுமன்றே அதில் சம்பந்தப்படுத்துவதற்காக அப்படி செய்யப்பட்டிருப்பதாக .தொழிலாளர்கள் கூறினார்கள்.

எதிர்ப்பு பரவிவிடும் என்ற அச்சத்தில் மற்ற தொழிற்சாலைகளின் அதிகாரிகள் விடுமுறை அறிவித்தனர் மற்றும் அமைதியின்மையைத் தடுக்க பொலிசார் வரவழைக்கப்பட்டனர்.

திகாந்தா ஸ்வெட்டர் தொழிற்சாலை தொழிலாளர்கள் ஆட்குறைப்புக்கு எதிராக அக்டோபர் 22 அன்று எதிர்ப்புப் போராட்டத்தினை நடத்தியிருந்தனர். புதிய உத்தரவு வரும் என்று எதிர்பார்க்கப்படும்போது டிசம்பர் 26 அன்று பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு திரும்ப அழைக்கும்வரை அவர்களுக்கு ஒரு அடிப்படை சம்பளம் வழங்கப்படுவதாக நிர்வாகம் உறுதியளித்துள்ளது. ஆனால் அவர்களது உறுதிமொழியில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தொழிலாளர்கள் கூறினார்.

பங்களாதேஷ் தொலைத்தொடர்பு தொழிலாளர்கள் திட்டமிடப்பட்ட பணிநீக்கங்களுக்கு எதிராக போராட்டம்

அக்டோபர் 28 அன்று பங்களாதேஷின் மிகப்பெரிய மொபைல் போன் ஆபரேட்டர் கிராமன்போன் (Grameenphone - GP) நிறுவனத்தின் தொழிலாளர்கள் GP ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து டாக்காவில் உள்ள தலைமை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிறுவனத்தின் திட்டமிட்ட பெருமளவிலான பணிநீக்கங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தொழிற்சங்கத் தலைவர் வேலையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர். இந்த பிரச்சனையில் தலையிடுமாறு அரசாங்கத்திடம் முறையிடப்போவதாக தொழிற்சங்கம் அறிவித்தது.

சீனா: ஷாங்காயில் விரைவு சேவை தொழிலாளர்கள் ஊதியம் வழங்காததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

அக்டோபர் 19 ம் தேதி ஷாங்காயில் பெஸ்ட் எக்ஸ்பிரஸின் விரைதூதர் சேவை தொழிலாளர்கள் வழங்கபடாமலிருக்கும் நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் ஷாங்காயில் ஒரு கிளை மூடப்பட்டதைத் தொடர்ந்து வந்துள்ளது மற்றும் நவம்பர் 11 அன்று “ஒற்றையர் தினத்தின்” ஆன்லைன் விற்பனைத் திருவிழாவுக்கு முன்னதாகவும் நடக்கிறது.

தாமதமான ஊதியத்திற்கு கூடுதலாவும், சீனா முழுவதும் காணப்படும் தொற்றுநோய்க்கு மத்தியிலும் முறைசாரா வேலைவாய்ப்பு மற்றும் வேலை பாதுகாப்பு அல்லது சமூக காப்பீடு இல்லாத மற்றும் மோசமான நிர்வாக நடைமுறைகள் ஆகியவற்றை விரைவு சேவை தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர். அவர்களின் நிலையற்ற தொழில் காரணமாக சம்பளம் மற்றும் நிலுவை ஊதியங்களை கோருவது கடினமான ஒன்றாக இருக்கிறது.

2019 முழுவதும் 27 ஆர்ப்பாட்டங்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு விரைதூதர் சேவை தொழிலாளர்களால் 25 ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. எக்ஸ்பிரஸ் டெலிவரி நிறுவனங்கள் வருவாயில் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன மேலும் அவைகள் வேலைகளை குறைத்து வருகின்றன.