பள்ளிகளை மூடுவதற்கான பொது வேலைநிறுத்தத்திற்கு தயார் செய்வோம்! ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் சமானிய பாதுகாப்புக் குழுக்களை உருவாக்குவோம்!

Parti de l’égalité socialiste (France)
11 November 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கொரோனா வைரஸ் பிரான்ஸ் முழுவதிலுமுள்ள பள்ளிகள் மூலமாக வேகமாக பரவ அனுமதித்த பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் பள்ளித் திறப்புக் கொள்கைக்கு எதிரான வேலைநிறுத்தங்கள் பரவி வருகின்றன.

இன்று நாடு தழுவிய ஒரு வேலைநிறுத்தத்தில் ஆயிரக்கணக்கான பிரெஞ்சு ஆசிரியர்கள் இணையவுள்ளனர். கடந்த திங்கட்கிழமையன்று பள்ளி விடுமுறைகள் முடிவடைந்ததிலிருந்து, ஆசிரியர்கள் உள்ளூர் பணியாளர்களின் கூட்டங்களை நடத்தி, பணிக்குச் செல்ல மறுத்து வாக்களித்ததால், டஜன் கணக்கான பள்ளிகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. ஃபைசரின் (Pfizer) வெற்றிகரமான தடுப்பூசி பரிசோதனைகள், ஒரு பொது முடக்க கொள்கையானது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை வீட்டிலேயே தங்கயிருக்க அனுமதிக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது, இதன் மூலம் தற்போதைய தொற்று அலைகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் முடியும்.

பள்ளிகளின் நிலைமைகள் மோசமானவையாக உள்ளன. "பலப்படுத்தப்பட்ட" சுகாதார நெறிமுறைகள் பற்றிய மக்ரோன் நிர்வாகத்தின் வாக்குறுதிகள் பொய்களாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. பள்ளிகளில் சமூக விலகல் கிட்டத்தட்ட அரிதாகவே உள்ளது. வகுப்பறைகள் 35 மாணவர்கள் வரை எங்கும் நிரம்பியுள்ளன. சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட படங்களில் நூற்றுக்கணக்கான இளைஞர்களால் நடைபாதைகளும் சிற்றுண்டிச்சாலைகளும் நிரம்பியுள்ளன. வகுப்பறைகளில் நல்ல காற்றோட்டம் இல்லை, பல ஜன்னல்கள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன.

அரசின் கொள்கை பள்ளிகளில் வளர்ந்து வரும் கொரோனா வைரஸ் கொத்தணிகளை கண்டறிவதல்ல, மாறாக பள்ளிகளில் வெளிப்படும் கொத்தணிகளை மூடிமறைக்கிறது. வைரஸ் பாதிப்புக்கு பின்னர் மாணவர்கள் இல்லாதபோது தங்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர், இதனால் ஆசிரியர்கள் மற்றும் பிற மாணவர்களை எச்சரிக்க முடியாதுள்ளனர்.

மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து, பள்ளி நுழைவாயில்களை குப்பைத் தொட்டிகளுடன் தடுத்து, பள்ளிகளை மூடுமாறு கோரியுள்ளனர். கடந்த செவ்வாயன்று பாரிஸ் மற்றும் தெற்கு பிரான்சில் ஒரு டஜன் பள்ளிகள் மூடப்பட்டன, "கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகள் இல்லாததை நாங்கள் கண்டிக்கிறோம்," என்று ஒரு மாணவர் கூறினார். “நாங்கள் இங்கே இருக்கக்கூடாது. நோய்த்தொற்று ஏற்படுவதற்கும் வைரஸை எங்கள் பெற்றோருக்கு பரப்புவதற்குமான ஆபத்து உள்ளது.”

பொலிஸ் அடக்குமுறை மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளுடன் மாணவர் போராட்டங்களுக்கு மக்ரோன் அரசாங்கம் பதிலளித்தது. பாதுகாப்பற்ற பொதுக் கூட்டங்களில் பங்கேற்றதற்காக டஜன் கணக்கான மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது, இருப்பினும் அவர்களின் ஆர்ப்பாட்டங்கள் துல்லியமாக மக்ரோனால் நிராகரிக்கப்பட்ட பாதுகாப்பான பூட்டுதல் நடவடிக்கைகளைப் பயன்படுத்தக் கோருகின்றன.

பேரழிவு தரும் உயிர் இழப்புக்கள் அதிகரித்து வருவதால் பிரான்சில் ஆசிரியர்களும் மாணவர்களும் அணிதிரண்டு வருகின்றனர். சனிக்கிழமையன்று, பிரான்ஸ் மற்றொரு கடுமையான மைல்கல்லை தாண்டியது: 40,000 இறப்புகள். கடந்த 24 மணி நேரத்தில், மேலும் 306 பேர் இறந்துள்ளனர், மேலும் 60,000 பேர் வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்யப்பட்டுள்ளனர். அவசர சிகிச்சை நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு வாரத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் உயர்ந்து 4,421 ஆக உள்ளது. ஒரு மாதத்திற்குள், பிரான்சின் அவசர சிகிச்சை படுக்கைகள் அதிகமாகிவிடும்; 92 சதவீதம் பேர் ஏற்கனவே பாரிஸ் பகுதியில் நிரம்பியுள்ளனர்.

பிரான்சின் சொந்த விஞ்ஞான சபை, பொதுப் போக்குவரத்து, பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற தொழில்கள் ஆகியவற்றின் வரையறுக்கப்பட்ட பூட்டுதல்கள், வைரஸின் இனப்பெருக்க விகிதத்தை (ஒரு நோய்வாய்ப்பட்ட நபரால் பாதிக்கப்பட்டவர்களின் சராசரி எண்ணிக்கை) 0.9 முதல் 1.2 வரை குறைக்கும் என்று எச்சரித்துள்ளது. இதன் பொருள் புதிய வழக்குகளின் எண்ணிக்கை மிக மெதுவாக வீழ்ச்சியடையும், அல்லது அதிவேகமாக வளர்ந்து கொண்டே இருக்கும். ஆனால் செப்டம்பர் மாதத்தில் விஞ்ஞானிகள் ஒரு புதிய அலை பற்றி ஏற்கனவே எச்சரித்திருந்தனர்.

பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பகுதி பூட்டுதல்கள் —பார்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டதோடு சமூகத் தொடர்புகள் முடிவடைந்தன, ஆனால் பள்ளிகளும் அத்தியாவசியமற்ற தொழில்களும் திறந்த நிலையில் உள்ளன— தொற்றுநோயைத் தடுக்கவில்லை. வைரஸ் மீண்டும் எழுவதாக விஞ்ஞானிகள் ஏற்கனவே எச்சரித்தபோது, செப்டம்பர் மாதத்தில் பூட்டுதலுக்கு உத்தரவிடப்பட்டிருந்தால் எண்ணற்ற உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம்.

ஐரோப்பிய அரசாங்கங்களின் கொள்கைகள், விஞ்ஞானக் கணக்கீடுகளால் தீர்மானிக்கப்படுவதில்லை, ஆனால் ஐரோப்பிய நாடுகளின் கொள்கையை ஆணையிடும் முதலாளித்துவ வர்க்கத்தின் இலாப நலன்களால் தீர்மானிக்கப்படுகின்றன. அவர்கள் பணியிடங்களைத் திறந்து வைத்திருக்கிறார்கள், இதனால் இலாபங்கள் தொடர்ந்து குவிந்து கொண்டே இருக்கும். அவர்களைப் பொறுத்தவரை, பள்ளிகளைத் திறந்து வைத்திருப்பது அவசியம்: பெற்றோர்கள் வேலைக்குச் செல்லுமாறு கட்டாயப்படுத்த பள்ளிகள் தினப்பராமரிப்பு மையங்களாக செயல்படுகின்றன.

மிக அடிப்படையான சமூக-இடைவெளி நடவடிக்கைகளை கூட திணிக்க அரசு மறுப்பது, அது வைரஸ் பரவுவதை எதிர்க்கவில்லை என்பதைக் காட்டுகிறது. இது பெயரைத் தவிர மற்ற அனைத்திலும் “சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்க” கொள்கையை பின்பற்றுகிறது.

பாரிய உயிர் இழப்பைத் தடுக்க அவசர நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற தொழில்கள் மூடப்பட வேண்டும், தொழிலாளர்கள் தங்களை பாதுகாப்பாக இருத்திக்கொள்ள போதுமான ஆதாரங்களை வழங்க வேண்டும்.

தொழிற்சங்கங்கள் போராட்டத்தை ஒழுங்கமைக்க இன்றைய வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடவில்லை. வேலைநிறுத்தத்திற்கான முன்முயற்சி கடந்த வாரம் பொதுக்கூட்டங்களில் வாக்களித்த அடிமட்ட ஆசிரியர்களிடமிருந்து வந்தது. அவர்கள் கடந்த வாரம் உள்ளூர் பள்ளி கூட்டங்களில் வேலைநிறுத்தம் செய்ய வாக்களித்தனர். ஆனால் தொழிற்சங்கங்கள் உண்மையில் மக்ரோனின் பள்ளி தொடக்கக் கொள்கையை ஒழுங்கமைக்க உதவின. மேலும் பள்ளிகளில் ஏற்பட்ட பேரழிவு நிலைமைகளுக்கு எதிர்ப்பைத் திரட்ட எதுவும் செய்யவில்லை. ஆசிரியர்கள் விஷயங்களை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தவுடன், அதன் கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் தொழிற்சங்கங்கள் இன்றைய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விட்டன. SUD மற்றும் பிற தொழிற்சங்கங்கள் பள்ளிகளை மூடுவதற்கு அழைப்பு விடுக்கவில்லை, ஆனால் மக்ரோனின் சுகாதார நெறிமுறையில் தெளிவற்ற மேம்பாடுகளைச் செய்ய வேண்டும் என கோருகின்றன.

சோசலிச சமத்துவக் கட்சி ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஒவ்வொரு பள்ளியிலும் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக தங்களது வேலைநிறுத்தத்தின் கட்டுப்பாட்டை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது. ஐரோப்பா முழுவதும் கல்வியாளர்களுடன் ஐக்கியப்பட்ட போராட்டத்திற்கு முறையீடு செய்யப்பட வேண்டும்.

நேருக்கு நேர் கற்றலின் எந்தவொரு அறிமுகமும், COVID-19 தொற்றுக்களின் பாரிய குறைப்பு மற்றும் விஞ்ஞான அடிப்படையிலான சுகாதார நெறிமுறைகளை ஏற்றுக்கொள்வது குறித்து கணிக்கப்பட வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் இத்தகைய நெறிமுறைகள் நடைமுறையில் இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரே வழி, சாமானிய குழுக்களை கட்டமைப்பது மட்டுமே.

இணையவழி கற்றலுக்கு மாற்றத்தை அனுமதிக்க மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தேவையான வளங்களையும் பணியாளர்களையும் வழங்க கல்வியில் பாரிய மற்றும் உடனடி முதலீடு தேவைப்படுகிறது. இதற்கு "பணம் இல்லை" என்ற அரசாங்கத்தின் கூற்றுக்கள் அப்பட்டமான பொய்களாகும். 2020 ஆம் ஆண்டில், ட்ரில்லியன் கணக்கான யூரோக்கள் ஐரோப்பாவில் உள்ள வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. வளங்கள் உள்ளன; இருப்பினும், அவை பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்கினரின் ஏகபோகமாக உள்ளன.

தீர்க்கமான அரசியல் கேள்வி: நெருக்கடிக்கான பதிலை எந்த வர்க்கம் தீர்மானிக்கும்? என்பதாகும். முதலாளிகளின் கொள்கை "சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கம்" மற்றும் பாரிய மரணம். தொழிலாளர்கள் தமது உயிரைக் காப்பாற்றவும், தொற்றுநோயைத் தடுக்கவும் போராடுகிறார்கள். இந்தப் போராட்டத்தை நடத்துவது என்பது தொழிலாள வர்க்கம் ஆட்சியைப் பிடிப்பதற்கும், ஐரோப்பா முழுவதும் அரசாங்கங்களை சோசலிசக் கொள்கைகளை பின்பற்றுவதற்கும் போராடுவதாகும். வங்கிகளையும் பெருநிறுவனங்களையும் தொழிலாள வர்க்கத்தால் ஜனநாயக ரீதியாக கட்டுப்படுத்தப்படும் பொது பயன்பாடுகளாக மாற்றுவது, தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான ஆதாரங்களை வழங்கும் மற்றும் உண்மையான சமத்துவத்தின் அடிப்படையில் அனைவருக்கும் உயர் வாழ்க்கைத் தரங்களுக்கு உத்தரவாதம் அளிக்கும்.