இலங்கை: பாதாள உலகத் தலைவரின் படுகொலை அரசாங்கத்தின் சர்வாதிகார பயணத்தின் கொலைகார குணாம்சத்தை அம்பலப்படுத்துகிறது

Pradeep Ramanayake
11 November 2020

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

பொலீஸ் காவலில் இருந்த பாதாள உலக கும்பல் தலைவரான மாகந்துரே மதுஷ், அக்டோபர் 20 அதிகாலை மாளிகாவத்தவில் உள்ள லக்செத செவன அடுக்குமாடி வளாகத்துக்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார் என்று பொலிசார் தெரிவித்தனர். குறித்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை போதைப்பொருட்களைக் காண்பிப்பதற்காக, ஒரு பொலிஸ் குழு அவரை அங்கு அழைத்துச் சென்றபோது, அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திலிருந்து அவரை மீட்டுச் செல்ல வந்த இரண்டு பாதாள உலக உறுப்பினர்களுக்கும் பொலிசுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரழந்ததாக பின்னர் அறிவிக்கப்பட்டது.

பொலிஸின் இந்த அறிக்கயை பொதுமக்கள் இழிவாக நிராகரிப்பார்கள். பாதாள உலக கும்பல் உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் பொலிஸ் காவலில் அல்லது சோதனைகளின் போது திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டு, அது நடந்த விதம் பற்றி இத்தகைய கட்டுக்கதைகளை கூறுவதை, அடுத்தடுத்து ஆட்சியில் இருந்து வந்த அரசாங்கங்களின் கீழ், இலங்கை பொலிசார் தொடர்ந்து செய்து வருகின்றனர் என்பதை பொது மக்கள் நன்கு அறிவர். தற்போதைய இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் இந்த படுகொலைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 29 அன்று, பாதாள உலக உறுப்பினரான “இந்திரா”, ஒழித்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் காண்பிக்கும் போது தப்பிக்க முயன்றதாகக் கூறி, பொலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதோடு, அதே மாதம் 11 ஆம் திகதி, முல்லேரியா பகுதியில் நடந்த சோதனையின் போது பொலிசார் மீது கை குண்டு வீச முயன்றதாகக் கூறி "சொல்டா" என்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

எவ்வாறாயினும், மிகவும் திறந்த மற்றும் கொடூரமான முறையில் நடத்தப்பட்ட மதுஷின் படுகொலைக்குப் பின்னர், இது பொலிசார் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட படுகொலை என்று சமூக ஊடகங்களில் இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் மிகவும் பரவலாக விவாதமின்றி பேசப்பட்டது. அத்தகைய கலந்துரையாடலுக்கு வழியமைக்கும் வகையில், இந்த சம்பவத்தில் பொலிசார் தங்கள் கட்டுக் கதையில் பொது அறிவுக்கு கூட புரிந்துகொள்ளக் கூடிய பல முரண்பாடுகளை விட்டுவைத்துள்ளனர்.

பொலிசார் கூறியவாறு, அன்றைய தினம் போதைப்பொருள் சோதனை ஒன்று, குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு பயிற்சி பெற்ற சுமார் பத்து உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட ஒரு நுட்பமான நடவடிக்கையாக இருந்தால், ஏனைய பாதாள உலக கும்பல் உறுப்பினர்கள், அதைப் பற்றி எவ்வாறு அறிந்து வைத்திருக்க முடியும்? தானியங்கி ஆயுதங்களுடன் ஆயுதம் ஏந்திய பொலிஸ் அதிகாரிகள் குழுவின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு இரண்டு குற்றவாளிகளால் எப்படி அவ்வளவு எளிதில் தப்பிக்க முடியும்? முதலியன அவற்றில் தெளிவாக புலப்படும் முரண்பாடுகள் ஆகும். இது, பொலிசார் தம்மால் செய்யப்பட்ட ஒரு படுகொலை என்ற உண்மையை மறைப்பதில் அவ்வளவு அக்கறை காட்டாமை, எதிர்காலத்தில் இதுபோன்ற சாக்குப்போக்குடன் அல்லது அவை இல்லாமலேயே படுகொலைகளைச் செய்ய பொலிசார் தயாராக இருப்பதைக் காட்டுகிறது.

உயிரிழந்த மதுஷுவின் வழக்கறிஞரான சமிந்த அதுகோரல, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் அனுப்பிய ஒரு கடிதத்தில், அவரது மரணம் குறித்து பொலிசார் கூறுவது "முழுமையான கட்டுக்கதை" என்று நேரடியாக குறிப்பிட்டார். "எந்தவொரு நாகரிக சமுதாயத்திலும் இது போன்ற செயல்களுக்கு மன்னிப்புக் கொடுக்க வேண்டும் என்று ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அவர் மேலும் கூறினார்.

அதே போல் அக்டோபர் 16 அன்று, தனது கட்சிகாரரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து கொழும்பு குற்றப் பிரிவுக்கு மாற்றியமை சட்டவிரோதமானது என்றும், அது மதுஷை படுகொலை செய்வதற்காக முன்கூட்டியே திட்டமிட்ட நடவடிக்கை என்றும் அவர் கூறினார். இராஜபக்ஷ அரசாங்கத்தின் முழு ஆதரவும் இல்லாமல், இத்தகைய ஒழுங்கமைக்கப்பட்ட படுகொலையை செய்வது சாத்தியமில்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. இந்த படுகொலைகளுக்கு எதிராக பல அமைப்புகள், இப்போது ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் புகார் அளித்துள்ளன.

ஒரு குற்றத்திற்கு குற்றவாளி ஆக்கப்பட்டுள்ள எவருக்கும், நீதிமன்றத்தில் உரிய செயல்முறையை எதிர்கொள்ள அடிப்படை மனித உரிமை உண்டு. ஆனால், நீதித்துறையை உதைத்து தள்ளிவிட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கொல்வதற்கு பொலிசாரையோ அல்லது இராணுவத்தினரையோ பயன்படுத்துவது இப்போது இராஜபக்ஷ அரசாங்கத்தின் கொலைகாரக் கொள்கையாகிவிட்டது. பாதாள உலக உறுப்பினர்கள் உட்பட குற்றவாளிகளுக்கு எதிராக தற்போது இந்த கொள்கையை அரசாங்கம் செயல்படுத்தி வருகின்ற போதிலும், அதன் முதன்மை இலக்கு, அரசாங்கத்தின் சர்வாதிகார வேலைத்திட்டத்தையும் சிக்கன நடவடிக்கைகளையும் எதிர்க்கும் அரசியல் ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் விசேடமாக தொழிலாள வர்க்கமுமே ஆகும்.

எந்தவொரு அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் புறக்கணித்து, ஜனாதிபதி சர்வாதிகாரத்தை கட்டியெழுப்புவதை நோக்கித் திரும்பியுள்ள கோடபாய இராஜபக்ஷவுக்கு, நீதித்துறை மற்றும் ஓரளவுவேனும் சுயாதீனத்தைக் கொண்டுள்ள அனைத்து நிறுவனங்களையும் முழுமையாக தனக்கு அடிபணிய வைக்கும் குறிக்கோளைக் கொண்டுள்ளார். அண்மையில் ஒரு நாள், "அவரது வாய்வழி உத்தரவுகளை சுற்றறிக்கைகளாக கருத வேண்டும்" என்ற இராஜபக்ஷவின் கர்ஜனைக்குப் பின்னால், இந்த நோக்கம் இருந்ததுடன், இப்போது அவர் நீதித்துறை செயற்பாடுகளை மீறி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு "மரண தண்டனை" நிறைவேற்ற அதிகாரம் வழங்கத் தொடங்கியுள்ளதும் இந்த சம்பவத்திலிருந்து தெளிவாகிறது.

இராஜபக்ஷ அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள், பிலிப்பைன்ஸின் அதிதீவிர வலதுசாரி ஜனாதிபதி ரொட்ரிகோ துதர்தேவின் படுகொலை வேலைத் திட்டத்துடன் சமாந்திரத்தைக் கொண்டுள்ளது. தெற்கு பிலிப்பைன்ஸில் ஒரு கொலைகார கும்பலின் நீண்டகால தலைவராக இருந்த அவர், 2016 இல் தனது வலதுசாரி தேர்தல் பிரச்சாரத்தை ஆதரித்த ஒரு முதலாளித்துவ மற்றும் நடுத்தர வர்க்க பெரும்பான்மையினரின் உதவியுடன் பிலிப்பைன்ஸின் ஜனாதிபதியானார். அவரது பிரச்சாரத்தின் மையத்தில், குற்றவாளிகள் என்று கருதப்படுபவர்கள் பொலிஸ் மற்றும் இராணுவத்தால் கொல்லப்படுவார்கள் என்ற வாக்குறுதியும் இருந்தது. ஏற்றுமதி மண்டலங்களில் தொழிற்சங்கங்களை உருவாக்க முயன்றால் தொழிலாளர்களைக் கொன்றுவிடுவதாகவும் அவர் அச்சுறுத்தினார்.

கோடாபய இராஜபக்ஷவின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்று "போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை" ஒழிப்பதாகும். தனது அரசியல் எதிரிகளையும், போராட்டங்களில் குதிக்கும் தொழிலாளர்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும் நசுக்குவதை வரை அதை விரிவுபடுத்தும் நோக்கத்துடனேயே அவர் அத்தகைய நடவடிக்கையைத் தொடங்கினார்.

பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தலில் உயர் மட்டத்தில், ஏராளமான அரசியல்வாதிகள் மற்றும் பெரு வணிகர்கள் செயற்படுகின்றனர் என்பது பேர்போன விடயமாக இருக்கின்ற அதே வேளை, அவர்கள் ஒருபோதும் சட்டத்திற்கு முன் கொண்டு வரப்பட்டதாக எந்த செய்தியும் கிடையாது. போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒழிப்பது பற்றி இராஜபக்ஷவின் பிரச்சாரத்தின் உண்மையான நோக்கம், தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக ஒரு பொலிஸ்-இராணுவ அடக்குமுறை இயந்திரத்தை உருவாக்குவதே என்பதை இது மீண்டும் நிரூபிக்கிறது.

அந்த திட்டத்தின் கீழ், கடந்த ஜூன் மாதம் "ஒழுக்கமான சமூகத்தை உருவாக்குவது" என்ற தனது இலக்கை இராஜபக்ஷ அறிவித்தார். அதற்காக இராணுவம், பொலிஸ் மற்றும் புலனாய்வுத் துறையை ஒன்றிணைத்து பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தலைமையில் ஒரு செயலணியை அமைத்தார். அந்த செயலணியினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில், போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை நசுக்குகின்ற பட்டியலில், சட்டவிரோத மற்றும் சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரைப் பின்தொடர்வதும் அடங்கும். அத்தகைய நடவடிக்கைகள் என்ன என்பதை இராஜபக்ஷ விரிவாகக் கூறவில்லை என்றாலும், அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு போராட்டத்திலும் ஈடுபடும் எவருக்கும் எதிராக பொலிஸ்-இராணுவ வேட்டையாடலை முன்னெடுப்பது அந்த செயலணியிடம் ஒப்படைக்கப்படும் என்பது அதன் அர்த்தமாகும்.

இந்த செயலணியின் போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் தலைவராக நியமிக்கப்பட்ட உப பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், ஜூலை மாதம் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “அடுத்து வரும் நாட்களில் பாதாள உலகத் தலைவர்கள் என்று கூறிக்கொள்பவர்களுக்கு என்ன நடக்கும் என்பதைப் பார்க்க முடியும். எங்களுக்கு வேலை செய்ய சரியான சூழல் இப்போது உருவாகியுள்ளது,” என்றார்.

இதன் நேரடி அர்த்தம், மக்களின் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் அலட்சியம் செய்து பொலிசார் தங்கள் அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ள இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் அனுமதி கிடைத்துள்ளது என்பதாகும். இந்த நடவடிக்கைகளை ஆரம்பித்து பொது மக்களை பொலிஸ் உளவுத்துறை வலையமைப்பில் சிக்க வைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, பொலிசார் வாடகைக்கு கொழும்பில் குடியிருப்பாளர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கத் தொடங்கினர். ,

இந்த படுகொலை பாராளுமன்றத்தில் ஒரு "விவாதத்தை" தூண்டிய போதிலும், அனைத்து எதிர்க்கட்சி குழுக்களும், இந்தப் படுகொலையில் அம்பலப்படும் ஜனநாயக உரிமைகளுக்கு விடுக்கப்படும் ஆபத்துகள் பற்றி பேசுவதைத் தவிர்த்துக்கொண்டன. அதற்கு பதிலாக, பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் ஆதாரங்களை அழிப்பதற்காக மதுஷை படுகொலை செய்துவிட்டனர் என்ற வாதத்தில் அனைவரும் ஒட்டிக்கொண்டனர்.

முழு முதலாளித்துவ அமைப்பிற்கும் எதிரான ஒரு சவாலாக வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டத்தை கொடூரமாக நசுக்குவதற்கு, சர்வாதிகார வடிவங்களுக்கு மாறுவது குறித்து அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான முழு ஒருமித்த உடன்பாடே இதற்கு பிரதான காரணம் ஆகும்.