அமெரிக்காவில் மரண எண்ணிக்கை 250,000 ஐ கடந்து செல்கையில், அத்தியாவசியமற்ற உற்பத்தியை நிறுத்துவதற்குத் தொழிலாளர்களிடையே ஆதரவு அதிகரிக்கிறது

21 November 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கொரோனா வைரஸ் தொற்றுநோய் கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதால் அமெரிக்க தொழிற்சாலைகளிலும் வேலையிடங்களிலும் கோபம் அதிகரித்து வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கை 250,000 ஐ கடந்துவிட்டது, புதிய நோயாளிகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அண்மித்து நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் கூர்மையாக அதிகரித்து வருகிறது. ஆனாலும் தொழிலாளர்கள் வேலைக்கு இழுக்கப்பட்டு, இலாபத்திற்காக அவர்களின் உயிரையும் அவர்களின் அன்புக்குரியவர்களின் உயிர்களையும் பணயம் வைக்க நிர்பந்திக்கப்பட்டு வருகிறார்கள்.

தொழிலாளர்களின் கவலைகளும் எதிர்ப்பும் பெரிதும் பெருநிறுவன ஊடகங்களால் புறக்கணிக்கப்படுகின்றன. இருப்பினும் வேலையிடங்களில் இந்த தொற்றுநோய் பரவல் குறித்து உலக சோசலிச வலைத் தளம் (WSWS) பிரசுரிக்கும் கட்டுரைகள் தொழிலாளர்களால் பரவலாக வாசிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.

மிச்சிகன், ஃபிளின்ட் ஜிஎம் உற்பத்தி ஆலை தொழிலாளர் ஒருவர் WSWS க்கு பின்வருமாறு எழுதினார்: “ஒவ்வொரு ஆலையும் ஒவ்வொரு பணியாளரையும் பரிசோதித்து தனிமைப்படுத்திக் கொள்வற்காக இரண்டு வாரங்களுக்கு எங்களைத் வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென நினைக்கிறேன், இந்த வைரஸ் குறையும் வரையில் எல்லா மேலதிகநேர வேலைகளையும் நிறுத்த வேண்டும்!”

மிச்சிகனில் பியட் கிறைஸ்லர் உதிரி பாகங்கள் உற்பத்தி ஆலை தொழிலாளர் ஒருவர் எழுதினார், “இங்கே Marysville Axle ஆலையில் எங்களை மறந்து விடாதீர்கள். கோவிட் காரணமாக டஜன் கணக்கான தொழிலாளர்களும் மேற்பார்வையாளர்களும் பணிக்கு வரவில்லை, கதவருகே உடல் வெப்பநிலை பரிசோதனை தவிர ஏறக்குறைய வேறெந்த பாதுகாப்பு நெறிமுறைகளும் இல்லை. இங்கே எவரின் உயிரும் மதிப்புடையதாக கருதப்படுவதில்லை. எங்கள் உயிர்களை விட கார் உதிரி பாகங்கள் தான் மிகவும் முக்கியமாக உள்ளன.”

Workers assemble Ford trucks at the Ford Kentucky Truck Plant in Louisville, KY (AP Photo/Timothy D. Easley)

இதுபோன்ற நிலைமைகள் நாடெங்கிலும் ஒவ்வொரு தொழில்துறையிலும் மேலோங்கி உள்ளன. பாதிக்கப்பட்ட டெக்சாஸ் கல்வித்துறையாளரும் "உயிரிழப்பதற்கு எதிராக ஆசிரியர்கள்" என்ற பேஸ்புக் குழுவின் ஸ்தாபகருமான மைக் ஹுல் WSWS க்கு எழுதினார்: “நிறைய பேர் வெளியில் வர நிர்பந்திக்கப்படுகிறார்கள், நிறைய பேர் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள், எந்தளவுக்கு அது தடுக்கப்படக்கூடியது என்பது சோர்வூட்டும் விஷயமாக உள்ளது. அவசர நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.”

தொழிலாளர்கள் கூட்டு நடவடிக்கையை கோருகிறார்கள். ஸ்டெர்லிங் ஹைட்ஸ் உற்பத்தி ஆலையில் (SHAP) குறைந்தபட்சம் ஒரு தொழிலாளி மார்க் பியான்சி சமீபத்தில் உயிரிழந்துள்ளார், தொழிலாளர்கள் "பிரதான உற்பத்தி பகுதி" குறித்து, அதாவது கருவிகளைப் போட்டுவிட்டு உற்பத்தி ஆலையிலிருந்து பாதுகாப்பான பகுதிக்கு நகர விவாதித்து வருகிறார்கள். இதைத் தான் SHAP தொழிலாளர்களும் மிச்சிகன், ஓஹியோ, இன்டியானா மற்றும் கனடாவின் விண்ட்சரில் ஏனைய பியட் கிறைஸ்லர் தொழிலாளர்களும் மார்ச் மாத மத்தியில் செய்தனர், அது வட அமெரிக்க வாகனத் தொழில்துறையை அடைக்கவும் ஏனைய அடைப்புகளுக்கும் நிர்பந்தித்து, பத்தாயிரக் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியது.

கல்வித்துறையாளர்களும், செவிலியர்களும் ஏனைய தொழிலாளர்களும் ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மருத்துவமனைகள் கோவிட்-19 நோயாளிகளால் வெள்ளமென நிரம்பி வழிகின்ற நிலையில், பென்சில்வேனியாவின் லாங்ஹோர்னில் செயின்ட் மேரி மருத்துவ மையத்தில் பிலடெல்பியாவைச் சேர்ந்த செவிலியர்கள் போதுமான பணியாளர்களை அமர்த்தவும் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் கண்ணியமான கூலிகள் வழங்கவும் கோரி செவ்வாய்கிழமை வெளிநடப்பு செய்தனர்.

கல்வித்துறையாளர்கள் பள்ளிக் கட்டிடங்களுக்குள் நுழைய அவர்கள் நிர்பந்திக்கப்படும் போது ஒவ்வொரு முறையும் அவர்களின் உயிர்கள் மீது சூதாட்டம் நடக்கும் நிலையில், உற்றாவில் ஆசிரியர்கள் கடந்த வாரம் மருத்துவ விடுப்பை ஒழுங்கமைத்தனர், டெக்சாஸின் மிட்லாண்ட் கல்வியாளர்களும் இதைச் செய்திருந்தனர், இங்கே மிட்லாண்ட் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜோன் ஆண்டனி கோவிட்-19 இல் உயிரிழந்ததாக செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை, அலபாமா ஆசிரியர்கள் ஒரு போராட்டம் ஒழுங்கமைக்கிறார்கள் என்பதுடன் மொன்ட்கொமெரியின் ஹூண்டாய் ஆலையில் வாகனத்துறை தொழிலாளர்களிடம் இருந்து ஆதரவைப் பெற முயன்று வருகிறார்கள். ஜனநாயகக் கட்சியால் நிர்வகிக்கப்படும் நியூ யோர்க் நகரம் மற்றும் மாநில அரசாங்கங்கள் பள்ளிகளைத் திறந்து வைக்க அவற்றின் பலமான முயற்சிகளை செய்ததற்கு மத்தியில், நோய்தொற்று அதிகரித்து ஆசிரியர்கள் நேரடி வகுப்புகளை நிறுத்த கோரியதற்குப் பல வாரங்களுக்குப் பின்னர், நியூ யோர்க் நகர பள்ளிகள் இன்று மூடப்பட உள்ளன.

இந்த தொற்றுநோய் கட்டுப்பாட்டில் வரும் வரையில் அத்தியாவசியமல்லாத வணிகங்களையும், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களையும் உடனடியாக மூடுவது என்ற, உயிர்களைக் காப்பாற்றுவதற்கான மிகவும் அடிப்படை நடவடிக்கையை ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் எதிர்க்கிறது.

அங்கே நான்கிலிருந்து ஆறு வாரங்களுக்கு அடைப்பு இருக்க வேண்டும், அத்துடன் சேர்ந்து அதில் பாதிக்கப்படுபவர்களுக்கு முழு வருமானம் வழங்கப்பட வேண்டும் என்று பைடெனின் கொரொனா வைரஸ் பணிக்குழுவின் உறுப்பினரான தொற்றுநோய் நிபுணர் மைக்கெல் ஓஸ்டர்ஹோல்மின் கடந்த வார வெறும் அறிவிப்பே வோல் ஸ்ட்ரீட்டில் விற்றுத்தள்ளல்களுக்கு இட்டுச் சென்றது, இதை பைடெனின் இடைக்காலக் குழு உடனடியாக மறுத்தளித்தது, “இந்த நிர்வாகம் ஓர் அடைப்பை மேற்கொள்ளாது,” என்ற ட்ரம்பின் அறிவிப்பு பின்னர் பங்கு மதிப்புகளின் மீட்சிக்கு இட்டுச் சென்றது.

இந்த பாரிய உயிரிழப்புகள், தீர்க்கமான வர்க்க நலன்களுக்குச் சேவையாற்றும் திட்டவட்டமான கொள்கைகளின் விளைவாகும். ட்ரம்ப் நிர்வாகமும் ஜனநாயகக் கட்சியும் பங்குச் சந்தையைப் பாதுகாக்கவும் மற்றும் தொழிலாளர்களின் பரந்த வெளிநடப்புகளைத் தடுக்கவும் முதலில் இந்த தொற்றுநோயின் அபாயங்களை மூடிமறைக்க முயன்றனர். மார்ச் மாத இறுதியில் இருகட்சிகளின் ஒப்புதலுடன் CARES சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், இரண்டு கட்சிகளும் பெரும் செல்வந்தர்களுக்கான பாரிய பிணையெடுப்புக்குத் தொழிலாளர்களை விலை கொடுக்க நிர்பந்திக்க வேலைக்குத் திரும்ப செய்வதற்கான பிரச்சாரத்தைத் தொடங்கின.

பின்னர் ஜூலையில் காங்கிரஸ் சபை வேண்டுமென்றே மத்திய அரசின் வேலையிழந்தோருக்கான உதவித்தொகை காலாவதியாக அனுமதித்தது, இது மலைப்பூட்டும் அளவுக்கு தனிநபர் வருமானத்தில் அரை ட்ரில்லியன் டாலர் வீழ்ச்சி அடைவதற்கு இட்டுச் சென்றது. அது ஒரு புதிய நிவாரண பொதி வழங்க மறுத்துள்ளதால், சுமார் 12 மில்லியன் வேலையற்ற தொழிலாளர்கள் கிறிஸ்மஸ் க்கு தங்களின் வேலையற்றோருக்கான உதவித்தொகையை பறிகொடுக்கும் அபாயத்தில் விடப்பட்டுள்ளனர். வேலைக்காக தங்களின் உயிர்களை ஆபத்திற்குட்படுத்த தொழிலாளர்களைப் பட்டினி கிடத்துவதே இதன் நோக்கமாகும்.

Footprints in the Community food bank in northern England receives recent donation (Image credit: Twitter/Footprints_UK)

இந்த வைரஸ் பரவலைத் தடுக்க தொழிலாளர்கள் நடவடிக்கை எடுக்க விரும்புகிறார்கள். தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் வேலைக்குச் செல்லும் போது அவர்கள் தங்கள் உயிரையும் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் உயிர்களையும் ஆபத்திற்குட்படுத்துகிறார்கள் என்பது அறிவார்கள். ஆனால் வேலைக்குப் போகவில்லையானால் அவர்களால் எப்படி சமாளிக்க முடியும் என்று பலர் கேட்கிறார்கள். “உண்மையிலேயே என்னால் வேலைக்குப் போகாமல் சமாளிக்க முடியாது என்பதால் நிஜமாகவே என்ன செய்வதென்றே எனக்கு தெரியவில்லை,” என்று மிச்சிகன் ஃபின்ட் இன் வாகனத்துறை தொழிலாளி WSWS க்குத் தெரிவித்தார். “இந்த அடைப்பால் நான் மார்ச்சிலிருந்து இன்னமும் பொருளாதாரரீதியாக அவதிப்பட்டு கொண்டிருக்கிறேன். ஆனால் மறுபுறம், இந்த நோயை என் அன்புக்குரியவர்களுக்கு பரப்ப நான் விரும்பவில்லை,” என்றார்.

தொழிலாளர்கள் தங்கள் உடல்நலன் அல்லது தங்கள் பொருளாதார நலனுக்கு இடையே எதையேனும் ஒன்றை தியாகம் செய்து, ஒன்றை "தேர்ந்தெடுக்க" நிர்பந்திக்கப்பட்டு வருகிறார்கள் என்பது இந்த தொற்றுநோய்க்கான விடையிறுப்பை பெருநிறுவனங்களுக்கான இலாபங்களுக்கும் ஆளும் வர்க்கத்தின் செல்வ செழிப்புக்கும் அடிபணிய வைப்பதை அடித்தளத்தில் கொண்டுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி அத்தியாவசியமல்லாத எல்லா உற்பத்தியை நிறுத்தவும், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை உடனடியாக மூடவும் கோருகிறது. முகக்கவசங்களும் சமூக இடைவெளியும் அவசியம் என்றாலும் அதேவேளையில், அந்த முறைமைகள் மட்டுமே வேலையிடங்களில் இந்த வைரஸ் பரவுவதைத் தடுத்துவிடாது. ஒரு தடுப்பூசி அடுத்தாண்டு தான் பரவலாக கிடைப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது என்பதால், இப்போது உயிர்களைக் காப்பாற்றுவதற்கு அவசியமான ஒவ்வொரு நடவடிக்கையும் எடுப்பது அவசியமாகும்.

இத்துடன் சேர்ந்து அடைப்புகளால் பாதிக்கப்படும் எல்லா தொழிலாளர்களுக்கும் முழு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும், அவர்கள் வாழ்வதற்கு ஏற்ப வாரத்திற்கு 1,000 டாலரும் இதில் உள்ளடங்கும், அத்துடன் மாணவர் கடன்கள் மற்றும் கடன் அட்டை கடன்கள், வாடகை மற்றும் அடமானக் கடன்களும் இரத்துச் செய்யப்பட வேண்டும். சிறுவணிகங்களும் இதில் உள்ளடங்கும், அவ்விதத்தில் தான் இந்த தொற்றுநோய் கட்டுப்பாட்டில் வரும் வரையில் அவர்கள் உயிர்வாழ முடியும்.

குழந்தைகள் தொலைதூரத்திலிருந்து கல்வி பயில்வதற்கு ஏற்ற அதிநவீன தொழில்நுட்பமும் உயர்வேக இணைய இணைப்புகளும் அவர்களுக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்தவும், குழந்தைகளைப் பராமரிக்க பெற்றோர்களுக்கான வருவாய்களும், தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் காலத்தில் ஏற்படும் உளவியல்ரீதியான பிரச்சினைகள் மற்றும் சமூக பிரச்சினைகளைப் போதுமானளவுக்குப் பொறுமையாக தீர்க்கவும் தேவையான ஆதாரவளங்கள் பாரியளவில் ஒதுக்கப்பட வேண்டும். தடுப்பூசி தயாராகி விடும் போது அதை வினியோகிக்க அவசியமான உள்கட்டமைப்பைக் கட்டமைக்கவும் மற்றும் வழமையான பரிசோதனைகளை மேற்கொள்ளவும், நோய்தொற்று ஏற்படுத்துபவர்களைத் தடமறியவும் மற்றும் அந்நோயைக் கட்டுப்படுத்தி இறுதியில் முற்றிலுமாக ஒழிக்க இலவச மருத்துவச் சிகிச்சைக்கும் பாரியளவில் ஒரு பொது வேலைத்திட்டம் தொடங்கப்பட வேண்டும்.

இவை எல்லாவற்றுக்கும் ஆதாரவளங்கள் உள்ளன. பாரிய மரணங்கள் மற்றும் சமூக சீரழிவுக்கு மத்தியில், பங்குச் சந்தைகள் சாதனையளவுக்கு அதிகரிப்பதற்கு எரியூட்ட வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு ட்ரில்லியன் கணக்கிலான டாலர்கள் கையளிக்கப்பட்டுள்ளன. ஜெஃப் பெஸோஸ், எலொன் முஸ்க் மற்றும் அமெரிக்காவின் ஏனைய பில்லியனர்களின் தனிப்பட்ட சொத்துக்கள் 637 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளன. ஜிஎம், ஃபோர்ட் மற்றும் FCA ஆகியவை மூன்றாம் காலாண்டில் மட்டும் சுமார் 8 பில்லியன் டாலரை இலாபமாக குவித்தன. HCA, Tenet மற்றும் Universal போன்ற சங்கிலித்தொடர் போன்ற இலாபத்திற்கான இந்த மிகப்பெரும் மருத்துவமனைகள், மக்கள் நிதியியிலிருந்து இவற்றுக்கு வாரிவழங்கப்பட்டிருந்த நிலையில், மூன்றாம் காலாண்டு இலாபங்களில் அதிகரிப்பைக் கண்டன.

இந்த தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் என்பது பிரதானமாக ஒரு மருத்துவப் பிரச்சினை அல்ல. உயிர்களைக் காப்பாற்றுவதற்கு அவசியமான நடவடிக்கைகளுக்கு, இரண்டு அரசியல் கட்சிகளையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ள பெருநிறுவன மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்களின் செல்வவளம் மற்றும் அதிகாரம் மீது ஒரு தலையாய தாக்குதல் அவசியப்படுகிறது.

அவசியமான நடவடிக்கை எடுக்க, தொழிலாளர்கள், வெளிநடப்புகளுக்கு ஆதரவைக் கட்டமைக்கவும் மற்றும் உற்பத்தியை நிறுத்துவதற்கான ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கும், தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, அவர்களுக்குப் போராட்டத்திற்கான புதிய அமைப்புகள் தேவைப்படுகின்றன. இந்த நெருக்கடி நெடுகிலும், தொழிற்சங்கங்கள் ஒன்றுக்கும் உபயோகமற்று இருந்துள்ளன. அவை இருந்த இடங்களில் எல்லாம், நோய் வெடிப்பைக் குறித்த தகவல்களை மூடிமறைத்ததுடன் "மீண்டும் பாதுகாப்பாக திறந்துவிடுவது" குறித்த பெருநிறுவன செயலதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் பொய்களையே அவை சர்வசாதாரண உச்சரித்துள்ளன.

வாகனத்துறை தொழிலாளர்களும், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்களும் இந்த போராட்டத்தை ஒருங்கிணைக்க சாமானிய தொழிலாளர்களின் பாதுகாப்புக் குழுக்களின் ஒரு வலையமைப்பைக் கட்டமைத்து வருகின்றனர். தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவையும் இதில் உள்ளடக்கவும் மற்றும் ஐரோப்பா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் உலகெங்கிலுமான தொழிலாளர்களுடன் அமெரிக்க தொழிலாளர்களின் போராட்டங்களை ஒன்றுபடுத்தவும் இந்த முன்முயற்சிகள் பரப்பப்பட்டு விரிவாக்கப்பட வேண்டும்.

தொழிலாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைப் பெறுவதற்கான போராட்டமானது, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் சக்தி வாய்ந்த அரசியல் இயக்கம் ஒன்று கட்டமைக்கப்படுவதுடன் இணைக்கப்பட வேண்டும், பெரும் செல்வந்தர்களின் திருட்டுத்தனமாக கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களைப் பறிமுதல் செய்து, மனித நல்லிணக்கம் மற்றும் சமூக சமத்துவ கோட்பாடுகளின் அடிப்படையில் பொருளாதார வாழ்வை சோசலிச அடித்தளத்தில் மறுஒழுங்கமைக்க தொழிலாளர்களின் அதிகாரத்தை ஸ்தாபிப்பதே இதன் நோக்கமாகும்.

Jerry White