இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் கொரோனா பரவல் காரணமாக ஆபத்தான நிலைமையை எதிர்கொள்கின்றனர்

M. Thevarajah
21 November 2020

இலங்கையின் பிரதான தொழிலாள வர்க்கத்தின் ஒரு பகுதியினரான வறுமை நிலையில் வாழும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் செறிந்து வாழும் மத்திய மாகாணத்தில் கொவிட்-19 வைரஸ் இதுவரை 170 இற்கும் மேற்பட்டோருக்கு பரவியுள்ளது. மததிய மாகாண சுகாதார அமைச்சின் கடந்த வார அறிக்கையின் படி மத்திய மாகாணத்தில் 168 தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் 69, கண்டி மாவட்டத்தில் 64 மற்றும் மாத்தளை மாவட்டத்தில் 35 பேரும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவற்றுக்கு மேலாக, கடந்த மூன்று நாட்களாக நுவரெலியா மாவட்டத்தில் தலவாக்கலை, கொட்டகலை, கினிகத்தேனை, மஸ்கெலியா, நோட்டன் மற்றும் பொகவந்தலாவ ஆகிய பிரதேசங்களில் உள்ள தோட்டங்களில் இன்னும் ஏழு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுடன் தொடர்புபட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

தொற்று நோய் வேகமாகப் பரவிவரும் தலைநகர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் இருந்து பெருந்தோட்டப் பிரதேசங்களுக்கு சென்றவர்களைத் தேடி பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்படாமையின் விளைவாகவே அங்கு புதிய தொற்றாளர்கள் உருவாகியுள்ளனர். குறிப்பாக பொகவந்தலாவையை சேர்ந்த இளைஞர் தானாகவே சென்று தன்னை பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டதாலேயே அவருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தோட்டத் தொழிலாளர்கள் சுகாதாரப் பாதுகாப்பு எதுவும் இன்றி தோட்டங்களில் தேயிலை கொழுந்து பறிக்க தள்ளப்பட்டுள்ளார்கள். அடிப்படை சுகாதார மற்றும் மருத்துவ வசதிகள் அற்ற அவர்களது வாழ்விடங்கள் வரிசையான லயன் அறைகளாகும். இங்கு சமூக இடைவெளியைப் பேணுவதற்கு வாய்ப்பே இல்லாத காரணத்தால் அவர்கள் மத்தியில் விரைவில் தொற்று பரவும் ஆபத்தை எதிர்கொள்கின்றனர். இன்னமும் அநேகமான தோட்டங்களில் தொழிலாளர்கள் பொது கழிப்பறைகளையும் பொது தண்ணீர் குழாய்களையும் பயன்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

தோட்டத் தொழிலாளர்கள் வாழும் லயன் (வரிசை) குடியிருப்புகள் [Photo: WSWS]

நுவரெலியா மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் இமேஷ் பிராதாப்சிங்கவின் படி, நுவரெலியா மாவட்டத்தில் நாளொன்றுக்கு 60-100 வரையிலான பி.சீ.ஆர். பரிசோதனைகளையே செய்யக் கூடிய வசதி உள்ளது. மஸ்கெலியா, வலப்பனை மற்றும் மல்தெனிய வைத்தியசாலைகள் கொவிட்-19 நோயாளர்ளுக்கு சிகிச்சையளிப்பதற்கு தயார் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். எனினும், இவை மிகவும் அடிப்படை வசதிகள் அற்ற வைத்தியசாலைகள் ஆகும். அத்துடன் ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியும், ஒரு தொழில் நுட்பக் கல்லூரியும் சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் ஆரம்பத்தில், கொழும்பு புறநகர் பகுதியான மினுவாங்கொடவில் உள்ள பிரன்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் சுமார் 1,400 தொழிலாளர்கள் தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர். குறித்த தொழிற்சாலையிலும் மேலும் பல சுதந்திர வர்த்தக வலய தொழிற்சாலைகளிலும் பெருந்தோட்டங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் வேலை செய்கின்றனர். அதன் பின்னர் கொழும்பு புறநகர் பகுதியான பேலியகொடவில் உள்ள மத்திய மீன் சந்தை ஊடாக நாடு பூராவும் கொவிட்-19 பரவியுள்ளது.

இப்போது இலங்கையில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கியுள்ளதோடு அன்றாடம் 400க்கும் அதிகமான புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். இதுவரை மரணித்தவர்களின் எண்ணிக்கை 73 ஆகும்.

ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவின் அரசாங்கம் கடந்த பல மாதங்களாக பி.சி.ஆர். பரிசோதனைகளை ஏறத்தாழ கைவிட்டிருந்ததன் விளைவாக நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பெரும் வீச்சில் பரவியுள்ளது. ஆயினும் அரசாங்கம் சில பிரதேசங்களை மட்டும் தனிமைப்படுத்திவிட்டு, நாட்டை பொது முடக்கம் செய்ய மறுத்து வருகின்றது. கம்பனிகளின் இலாபத்துக்காக தொழிலாளர்களின் உயிர்களை துச்சமாக மதித்து, வைரஸை உடலில் தாங்கிக்கொண்டு வேலை செய்ய நிர்ப்பந்திக்கும் “சமூக நோய் எதிர்ப்புச் சக்தி” என்ற விஞ்ஞானத்துக்கு விரோதமான கொள்கையை, உலகின் எல்லா அரசாங்கங்களைப் போலவே இலங்கை அரசாங்கமும் குற்றவியல் தனமாக பின்பற்றுகின்றது.

இந்த நடவடிக்கைக்கு ஏனைய தொழிற்சங்கங்களோடு அனைத்து பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களும் ஒத்துழைப்பு கொடுக்கின்றன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) செயலாளரும் இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தொழிலாளர் தேசிய சங்கத்தின் (NUW) தலைவர் முன்னால் அமைச்சர் பழனி திகாம்பரம் ஆகியோர், தொழிலாளர்களின் பாதுகாப்பை தாமே பார்த்துக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர். இந்த சங்கங்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வீடுகளுக்கு திரும்பும் தொழிலாளர்களின் பிள்ளைகளை பொலிஸ் மற்றும் இராணுவத்தினரைக் கொண்டு சோதனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

ஜீவன் தொண்டமான் கருத்து தெரிவிக்கையில், “அனைவரும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி வாழவேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணியவும், சுகாதார நடைமுறைகளை எவராவது பின்பற்ற மறுத்தால் அவர்களுக்கு நிலைமையை தெளிவுபடுத்தவும். அப்போதுதான் கொரோனா சவலை எதிர்கொள்ள முடியும்,” என தெரிவித்துள்ளார்.

‘’பொதுமக்கள் சுகாதார நடவடிக்கைகளை அலட்சியம் செய்து விடாமல் தமது சுய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வசதிகள் இல்லாவிட்டாலும் கூட நாம் கொரானாவிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்’’, என திகாம்பரம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். “தேசிய பாதுகாப்பு முக்கியமானது என்பதை உணர்ந்து கொண்டு அதற்கேற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமாகும். பொதுமக்களின் நலன்கருதி அரசாங்கம், மேற்கொள்ளும் சகல நடவடிக்கைகளும் வெற்றி பெறும்போது நிலமை சுமுகமாக மாறும்” என அவர் அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்கினார்.

தொற்று பரவுவதற்கு பொதுமக்களை குற்றம் சாட்டும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு இந்த வகையில் ஒத்து ஊதும் இந்த தொழிற்சங்கங்கள், இராஜபக்ஷ இராணுவத்தை அடிப்படையாகக் கொண்ட சர்வாதிகாரத் திட்டங்களை நாடுவதையும் மௌனமாக ஆதரிக்கின்றன. பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும் அரசாங்கத்துக்கும் நட்டம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதில் அக்கறை காட்டும் இந்த தொழிற்சங்கங்கள், மலையகத்தை முடக்குவது ஒரு புறம் இருக்க குறைந்தபட்சம் தொற்று பரவியுள்ள தோட்டங்களையேனும் முடக்கி, தொழிலாளர்களுக்கு அத்தியாவசியத் தேவைகளை வழங்கி தொற்று பரவமால் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அழைப்பு விடுப்பதை கூட தவிர்த்துக்கொண்டுள்ளன.

மார்ச் மாதம் நாடு பொதுமுடக்கம் செய்யப்பட்டதில் இருந்தே தோட்டத் தொழிலாளர்கள் பெரும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ளார்கள். அநேகமான குடும்பங்கள் ஆண், பெண் முதியோர் முதல் பிள்ளைகள் வரை தங்கள் குடும்ப உறுப்பினர்கள் குறிப்பாக கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளிலும் ஏனைய நகரங்களிலும் வீட்டு வேலையாட்களாக, கட்டிட தொழிலாளர்களாக மற்றும் கடைகளிலும் ஹோட்டல்களிலும் அதே போல் சுதந்திர வர்த்தக வலய தொழிற்சாலைகளிலும் உழைத்து குடும்பத்துக்கு பொருளாதார ஆதாரங்களாக இருந்து வருகின்றனர். இவர்கள் எண்ணிக்கையில் 7 ஆயிரத்திற்கும் அதிகமாகும்.

இவர்களில் அநேகமானோருக்கு மீண்டும் வேலை கிடைக்காமல் வருமானமின்றி வீடுகளில் இருக்கத் தள்ளப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு நிவராணங்களை வழங்குவதற்கு அரசாங்கமோ அல்லது அரசியல் கட்சிகளாக இயங்கும் தொழிற்சங்கங்களோ நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த தொழிலாளர்களின் வருமானத்தில் தங்கியிருந்த குடும்பங்கள் இப்போது திண்டாட்டத்தில் தள்ளப்பட்டுள்ளன. மீண்டும் வேலையில் இணைந்துகொண்டவர்களும் கூட தற்போதைய தனிமைப்படுத்தல் நிலைமைகளுக்குள் சிக்குண்டு, வருமானமின்றியும் வீடுகளுக்கு செல்ல முடியாமலும் உள்ளனர்.

தாம் எதிர்கொள்ளும் நிலைமை சம்பந்தமாக தோட்டத் தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசினர்.

மஸ்கெலியா கிளனூஜி தோட்டத்தைச் சேர்ந்த எஸ். திருச்செல்வம், “இங்கு தனி வீடுகள் குறைவு, பெரும்பான்மையான தொழிலாளர்கள் சிறிய லயன் அறைகளிலே வாழ்கின்றார்கள், இங்கு ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் மிக விரைவாக மற்றவர்களுக்கும் பரவும் ஆபத்து உள்ளது” என்றார்.

அவர் மேலும் கூறியதாவது: “இங்கு சுகாதார நிலமைகள் மிகவும் மோசமாக உள்ளது. எங்கள் தோட்டத்திலும் ஒரு குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது, அவர்களும் பாதுகாப்பற்ற நிலமையிலேயே வாழ்கின்றார்கள். இன்றுள்ள சூழ்நிலையில் சகல தோட்டங்களிலும் உள்ள வீடுகளுக்கும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். ஆனால் இது சம்பந்தமாக அரசாங்கமோ, தோட்ட நிர்வாகமோ அல்லது தொழிற்சங்கங்களோ கவனம் செலுத்துவதாக இல்லை. 4 மணித்தியாலத்திற்கு மேல் ஒரு முகக்கவசத்தை பாவிப்பது உகந்தது அல்ல எனக் கூறுகிறார்கள். குறைந்த பட்சம் நாளொன்றுக்கு மூன்று முகக்கவசம் தேவை. எங்களுடைய சம்பளம் சாப்பாட்டுக்கே போதாத நிலமையில் இதை வாங்குவது எப்படி? தோட்ட நிர்வாகமும் இதை வழங்குவதில்லை.”

2018 பிற்பகுதியில் தங்களது அடிப்படை ஊதியத்தை இரட்டிப்பாக்கக் கோரி தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுத்த நீண்ட போராட்டத்தை தொழிற்சங்கங்கள் காட்டிக் கொடுத்ததை நினைவுபடுத்திய அவர், “சகல தொழிற்சங்கங்களும் எங்களுடைய 1,000 ரூபாய் நாட் சம்பளக் கோரிக்கையை காட்டிக்கொடுத்துவிட்டன. இ.தொ.கா. தேர்தல் காலத்தில் 1,000 ரூபாயை பெற்றுத் தருவதாக உறுதியளித்தது. இப்பொழுது அதைப்பற்றி பேசுவதில்லை. இப்பொழுது 700 ரூபா நாள் சம்பளம் மட்டுமே கிடைக்கின்றது,’’ எனக் கூறினார்.

அதேதோட்டத்தை சேர்ந்த எஸ். சிவஞானம், கொரானா வைரஸில் இருந்து பாதுகாக்க தாங்களே நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் கூறுவதை எதிர்த்தார். “எமது லயன் வீடுகளில் எவ்வாறு தனிமைப்படுத்தலைப் பேணுவது? நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு சத்துள்ள சாப்பாடு சாப்பிட வேண்டும் என்று கூறுகின்றார்கள், எங்களுடை பொருளாதார நிலமையில் அது சாத்தியமாகுமா?” என அவர் கேட்டார்.

தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க சுயாதீன நடவடிக்கை குழுக்களை அமைக்க வேண்டும் என்ற சோசலிச சமத்துவக் கட்சியின் வேண்டுகோளுக்கு சிவஞானம் இணங்கினார். “வசதிபடைத்தவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வார்கள். பாதிக்கப்படுவது ஏழை மக்களே. அரசாங்கத்தையோ தொழிற்சங்கங்களையோ நம்புவதில் பிரயோசனம் இல்லை. நீங்கள் கூறியவாறு தொழிற்சங்கங்களிலிருந்து விலகி, ஒரு நடவடிக்கை குழுவை அமைத்து எமது பாதுகாப்புக்காக நாமே போராட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்,’’ என அவர் தெரிவித்தார்.