பரவலான எதிர்ப்புக்கு பின்னர் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் கணக்கை தற்காலிகமாக நிறுத்தியதை ட்விட்டர் முடிவிற்கு கொண்டுவந்தது

Our reporter
23 November 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்கள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளின் முக்கிய பாதுகாவலர்களின் உலகளாவிய எதிர்ப்பை தொடர்ந்து, ட்விட்டர் அமெரிக்காவில் உள்ள சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர் அமைப்பின் (IYSSE) கணக்கை மீட்டமைத்துள்ளது. தனிப்பட்ட உரிமைகளுக்கான போராட்டத்திலும் இணைய தணிக்கைக்கு எதிரான போராட்டத்திலும் இது ஒரு முக்கியமான நிகழ்வாகும்.

நேற்றிரவு ஒரு மின்னஞ்சலில், டுவிட்டர் எழுதியது: "உங்கள் கணக்கை தற்காலிகமாக தடுத்ததை நிறுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்." நவம்பர் 13 ம் தேதி IYSSE இன் கணக்கை நிறுத்தியதற்கான காரணங்கள் அல்லது தடையை இரத்து செய்வதற்கான முடிவு குறித்த கூடுதல் தகவல்கள் அந்த செய்தியில் இல்லை.

மீட்டமைக்கப்பட்ட IYSSE ட்விட்டர் கணக்கு

ஒரு வாரத்திற்கு முன்பு, IYSSE கணக்கின் மதிப்பீட்டாளர்கள் அதன் சுயவிவரம் மற்றும் தலைப்பு விபரம் அகற்றப்பட்டதைக் கவனித்தனர். அதன் சுயவிவரம் மற்றும் தலையங்க பகுதியிலிருந்து அகற்றப்பட்டதாகவும், டுவீட்களின் கணக்கின் தொடர்கால வரிசை காணப்படும் இடத்தில் “கணக்கு இடைநிறுத்தப்பட்டது. டுவிட்டரின் விதிகளை மீறும் கணக்குகளை, டுவிட்டர் இடைநிறுத்துகிறது”. இந்த அறிவிப்பின் ஒரு பகுதியாக டுவிட்டர் விதிகள் பற்றிய இணைப்பு சேர்க்கப்பட்டிருந்தது

கணக்கை மீண்டும் நிலைநிறுத்த IYSSE இன் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், ட்விட்டர் "உங்கள் கணக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது, ஏனெனில் நீங்கள் பல டுவிட்டர் கணக்குகளை நிர்வகிப்பதாக தோன்றுகிறது." என பதிலளித்தது.

இது அமெரிக்கா முழுவதும் உள்ள கல்லூரிகளில் பிரிவுகளைக் கொண்ட ஒரு இயக்கம் என்று IYSSE குறிப்பிட்டது. ஒவ்வொன்றும் அவற்றின் சொந்த ட்விட்டர் கணக்கைக் கொண்டிருந்தன. அவர்கள் ஒரே முன்னோக்கிற்காக போராடியதால், தனித்தனியான கணக்குகள் சில நேரங்களில் WSWS இலிருந்து ஒரே இணைப்புகளை வெளியிட்டன. ஆனால் நடைமுறையில் ஒத்த உள்ளடக்கத்தை இடுகையிடும் ஒரு நிறுவனத்தின் வெவ்வேறு பிரிவுகள் இந்த ட்விட்டரின் விதிகளில் வெளிப்படையாக அனுமதிக்கப்பட்டது.

IYSSE உடனடியாக ஒரு பொது பிரச்சாரத்தைத் தொடங்கியது. இணையத்தை தணிக்கை செய்ய அதிகாரிகளாலும் மற்றும் சமூக ஊடக நிறுவனங்களும் மேற்கொண்டுள்ள உந்துதலுக்கு ஏற்ப, கணக்கை இடைநிறுத்துவது ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் என்று எச்சரிக்கும் கட்டுரைகளை உலக சோசலிச வலைத் தளம் வெளியிட்டது.

கணக்கை இடைநிறுத்தியமையும், ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து அமெரிக்காவின் முன்னோடியில்லாத அரசியல் நெருக்கடியும் ஒரே காலத்தில் நிகழ்கின்றது என்று இக்கட்டுரைகள் குறிப்பிட்டன. மேலும், வேகமாக வளர்ந்து வரும் முதலாளித்துவ எதிர்ப்பு உணர்வுகளுக்கு மத்தியில் ஒரு உண்மையான சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கை இளைஞர்களிடம் கொண்டு செல்வதற்கு உதவிய சோசலிச சமத்துவக் கட்சியின் இளைஞர் பிரிவான IYSSE இன் திறனைக் கட்டுப்படுத்துவதற்கும் இது சேவை செய்தது.

கணக்கை மீண்டும் நிலைநிறுத்தக் கோரி ட்விட்டருக்கு எதிர்ப்பு தெரிவுக்குமாறு விடுத்த IYSSEஇன் வேண்டுகோள்கள், உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் சமூக ஊடக தளத்தின் பல பயனர்களால் கவனத்தில் எடுக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை, புகழ்பெற்ற இசைக்கலைஞரும் பிங்க் ஃபுளோய்ட்டின் இணை நிறுவனருமான ரோஜர் வாட்டர்ஸ் பதிவிட்டதாவது: “ட்விட்டர் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்களை [IYSSE] தடை செய்துள்ளது. தணிக்கை செய்வதற்கான இந்த முயற்சி குறித்து மக்களுக்கு அறிவிக்கப்படுவது மிகவும் முக்கியமானது”. வாட்டர்ஸின் ட்வீட் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பகிரப்பட்டுள்ளது, மேலும் 3,000 க்கும் மேற்பட்ட பயனர்களால் விரும்பப்பட்டது. அதே நேரத்தில் அவரது பேஸ்புக் இடுகை இதேபோன்ற பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சின் சுதந்திரத்துக்காகவும், பாலஸ்தீனியர்களின் அடக்குமுறைக்கு எதிராகவும் போராடிய வாட்டர்ஸின் பதிவுகள் நூற்றுக்கணக்கான ஆதரவான கருத்துக்களால் வரவேற்கப்பட்டன.

"மாணவர்கள், இயற்கையாகவே, புறநிலை உண்மையை பெற்றுக்கொள்ள விளைவதோடு, அநீதியையும் அறிந்துகொள்கின்றார்கள். இந்த தகைமைகளால் அவர்களின் பிரச்சாரத்தை கேள்விக்குள்ளாக்குவதுடன், மற்றும் போருக்கு எதிராக கிளர்ச்சி செய்கின்றனர். ஆளும் வர்க்கம் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட, வர்க்க உணர்வுள்ள மாணவர் இயக்கத்தை இறுதிவரை விரும்பாது” என்று ஒருவர் கூறினார்.

மற்றொருவர் பின்வருமாறு எழுதினார். “@Twitter மாணவர்களுக்கு ஏன் பயப்படுகின்றது? எவ்வாறான மன்னிப்புகளை கூறினாலும் இது கொடுமைப்படுத்துதல், கோழைத்தனம் மற்றும் பேச்சு சுதந்திரம் மீதான தணிக்கையாகும். அமெரிக்காவின் நலன்களை பாதுகாக்க மட்டும்தான் சமூக ஊடகங்கள் இருக்கின்றவா என்பது யாருக்கு தெரியும்[?]. சர்வதேச சமூகமானது அமெரிக்க தொழில்நுட்பத்தில் தங்கியிருப்பதை இல்லாதொழிக்க வேண்டும்”.

ஒரு முன்னணி சர்வதேச மாடல் கலைஞரான ஆண்ட்ரியா பெஜிக் தனது டுவிட்டர் கணக்கில், “அன்புள்ள டுவிட்டர் @IYSSE_US இனை மீட்டமை @டுவிட்டர் ஆதரவு. உலக வலைத் தளத்தை தணிக்கை செய்வதை நிறுத்துங்கள். புகழ்பெற்ற இடதுசாரி வெளியீடுகள் / அமைப்புகளை தணிக்கை செய்வதை நிறுத்துங்கள். குறிப்பாக பாசிசத்திற்கு எதிராக அதிக குரல் கொடுத்தவர்களை தணிக்கை செய்வதை நிறுத்துங்கள்” என அதில் எழுதினார்.

இதேபோன்ற பதிவுகள் உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களால் இடப்பட்டதுடன், அதே போல் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள IYSSE உறுப்பினர்கள் மற்றும் பிரிவினராலும் வெளியிடப்பட்டன.

உதாரணமாக, ஒரு மெக்சிகன் ட்விட்டர் பயனரின் அறிக்கை இவ்வாறு அறிவித்தது: “@IYSSE_US இன் கணக்கு தொடர்ந்து தணிக்கை செய்யப்படுகிறது. ட்விட்டரும் பேஸ்புக்கும் இளைஞர்களின் சிந்தனையைத் திசைதிருப்ப முயற்சிக்கின்றன .... போர் மரணத்தையும் செல்வத்தையும் உருவாக்குகிறது. அதைப்பற்றி நீங்கள் அறிவிக்க ஏற்பாடு செய்தால், நீங்கள் தணிக்கை செய்யப்படுவீர்கள்”.

தணிக்கைக்கு எதிரான செய்திகள் ஜப்பானிய, ஜேர்மன், சிங்கள, தமிழ், பிரெஞ்சு மற்றும் பல மொழிகளில் வெளியிடப்பட்டன. இது IYSSE இன் பிரச்சாரத்தின் உலகளாவிய நோக்கத்திற்கு சாட்சியமளிக்கிறது.

கணக்கு மறுசீரமைக்கப்பட்டமை சந்தேகத்திற்கு இடமின்றி இந்த முக்கியமான சர்வதேச பிரதிபலிப்பினால் ஆளுமை உட்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ ஆளும் உயரடுக்கு சர்வாதிகாரத்தை நோக்கி திரும்புவதற்கு எதிரான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, இணைய தணிக்கைக்கு எதிரானதும் மற்றும் வலைத் தள சுதந்திரத்திற்குமான ஒரு உலகளாவிய பிரச்சாரத்தின் அவசியத்தை இந்த இடைநிறுத்தலை பின்வாங்கியமை எடுத்துக்காட்டுகின்றது.