பைடென் வலதுசாரி இராணுவவாதிகளை கொண்ட தேசிய பாதுகாப்பு குழுவினை அமைக்கின்றார்

Patrick Martin
25 November 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடென் தனது அமைச்சரவைக்கும் மற்றும் வெள்ளை மாளிகைக்கும் நியமனம் செய்த உயர் பணியாளர்கள் பற்றிய முதல் அறிவிப்புடன் உலகிற்கும் அமெரிக்க மக்களுக்கும் ஒரு தெளிவான செய்தியை அனுப்பினார். அது, பதவிக்குவரும் ஜனநாயகக் கட்சி நிர்வாகத்தின் முதல் முன்னுரிமையாக அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகளின் முன்னணியை உருவாக்கி ரஷ்யா மற்றும் சீனா மீதான இராணுவ அழுத்தம் மற்றும் வெளிப்படையான போரை முடுக்கிவிடுவதாக இருக்கும்.

இன்று பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ள மற்றும் பத்திரிகை வெளியீடுகளில் திங்களன்று அறிவிக்கப்பட்ட அனைத்து நியமனங்களுக்கும் பரிந்துரைக்கப்பட்டவர்கள் வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்புத் துறையில் உள்ளவர்கள். அனைவரும் ஒபாமா-பைடென் நிர்வாகத்தின் முன்னாள் படையினராவார். இவர்களில் பலர் தமது முந்தைய பதவிகளுக்கு மிட்ச் மெக்கானெல் தலைமையிலான குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள செனட் மூலம் உறுதி செய்யப்பட்டனர். இது குடியரசுக் கட்சியின் வலதுசாரிகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசாங்கத்தை உருவாக்க பைடென் விரும்புகிறார் என்பதை நிரூபிக்கிறது.

முன்னாள் அமெரிக்க துணை வெளிவிவகாரச் செயலர் ரொனி பிளிங்கென் உக்ரேனின் கியேவ் நகரில் ஒரு செய்தி மாநாட்டில் 2015 மார்ச் 6 ஆம் திகதி பேசுகிறார். (AP Photo/Sergei Chuzavkov)

திங்கள் என்று பெயரிடப்பட்ட ஆறு அதிகாரிகள் பின்வருமாறு:

ன்டனி பிளிங்கென், வெளியுறவுத்துறை செயலர்: பிளிங்கென் அமெரிக்க செனட் மற்றும் பைடெனின் துணை ஜனாதிபதி பதவிக்காலத்தில் நீண்டகால பைடெனின் தேசிய பாதுகாப்பு உதவியாளராக இருந்துள்ளார். மேலும் அவர் 2015-2016 ஆம் ஆண்டில் துணை வெளியுறவுத்துறை செயலாளராக இருந்தார்.

ஜேக் சுலைவன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்: சுலைவன் பிளிங்கெனுக்குப் பின் துணை ஜனாதிபதி பைடெனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும், வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டனின் பணியாளர்களின் தலைவராகவும் பணியாற்றினார்.

அவ்ரில் ஹைன்ஸ், தேசிய புலனாய்வு இயக்குனர்: ஹைன்ஸ் செனட் வெளியுறவுக் குழுவில் பைடெனின் ஊழியராகவும், பின்னர் ஒபாமா-பைடென் தேசிய பாதுகாப்பு குழுவிலும், அதற்கு முன்னர் 2015-2016 இல் இரண்டு ஆண்டுகள் சிஐஏ இன் துணை இயக்குநராகவும் பணியாற்றினார்.

அலெக்ஸாண்டர் மாயோர்காஸ், உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர்: கியூபாவில் பிறந்த புலம்பெயர்ந்தோரின் மகன், மயோர்காஸ் ஒரு தொழில்ரீதியான உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரியாவார். அவர் ஒபாமா நிர்வாகத்தில் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் (DHS)துணைச் செயலாளராக இருந்தார். இந்த அமைப்பு முந்தைய அரசாங்கங்களை விட அதிகமான புலம்பெயர்ந்தோரை நாடு கடத்தியது.

லிண்டா தோமஸ்-கிரீன்ஃபீல்ட், ஐக்கிய நாடுகள் சபையின் தூதர்: தொழில்ரிதியாக வெளிநாட்டு சேவையில் மிக உயர்ந்த தரவரிசையில் உள்ள ஆபிரிக்க அமெரிக்கரான தோமஸ்-கிரீன்ஃபீல்ட் லைபீரியாவிற்கான தூதராக ஜோர்ஜ் டபிள்யூ புஷ் இனால் நியமிக்கப்பட்டார். பின்னர் ஒபாமாவின் கீழ் துணை-வெளியுறவுத்துறை பணியாளர் தலைவரும் பின்னர் ஆபிரிக்க விவகாரங்களுக்கான உதவி செயலருமானார். அவர் 2017 ஆம் ஆண்டில் ட்ரம்பால் வெளியேற்றப்பட்டார். பின்னர் முன்னாள் வெளியுறவு செயலாளர் மட்லைன் ஆல்பிரைட் தலைமையிலான ஜனநாயகக் கட்சியினருக்கான வெளியுறவுக் கொள்கை சிந்தனைக் குழுவான Albright-Stonebridge குழுமத்தின் ஆலோசகராக ஆனார்.

ஜோன் கெர்ரி, காலநிலைக்கான சிறப்பு ஜனாதிபதி தூதர்: முன்னாள் செனட்டரும், ஜனாதிபதி வேட்பாளரும் மற்றும் வெளியுறவுச் செயலருமான இப்போது 76 வயதான இவர், பைடெனின் காலநிலை மாற்ற பணிக்குழுவில் காங்கிரஸ் பிரதிநிதி அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்ட்டெஸுடன் இணைத் தலைவராக இருந்தார். பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் சேர அமெரிக்காவின் முயற்சிக்கு அவர் தலைமை தாங்குவார்.

ஆறு பரிந்துரைக்கப்பட்டவர்களைப் பற்றிய முதல் மற்றும் மிகத் தெளிவான உண்மை என்னவென்றால், அவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதும் மற்றும் வோல் ஸ்ட்ரீட்டின் நலன்களின் அர்ப்பணிப்புள்ள பாதுகாவலர்களாவர். பலர் மில்லியனர்களும், அனைவரும் நிதி ரீதியாக உயர்மட்டத்திற்குள் வசதியாக உள்ளனர். உதாரணமாக, பிளிங்கென், Warburg Pincus முதலீட்டு வங்கியின் நிறுவனர் டொனால்ட் பிளிங்கெனின் மகன் ஆவார். இவர் நியூயோர்க் மாநில பல்கலைக்கழகத்தின் குழுவின் தலைவராக 12 ஆண்டுகள் இருந்தார்.

ஒரு ஆபிரிக்க அமெரிக்கர், ஒரு ஹிஸ்பானிக், இரண்டு பெண்கள் அடங்கிய இந்த ஆரம்ப நியமனங்களின் “பன்முகத்தன்மை” குறித்து ஊடகங்களில் உள்ள அனைத்து புகழ்பாடல்களுக்கும் மத்தியில் அவர்களின் அடையாளங்களின் இந்த அம்சங்கள் முற்றிலும் பொருத்தமற்றவை. சி.ஐ.ஏ இரகசிய சிறைச்சாலையில் சித்திரவதைக்கு ஆளானவருக்கு சித்திரவதை செய்யப்பட்டவர் (அல்லது வாஷிங்டனில் உள்ள அவரது தலைவர்) பெண் என்பது ஒரு பொருட்டல்ல. உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் செயலர் ஹிஸ்பானிக் இனத்தவர் என்பது குடிவரவு முகமையின் முகவர்களால் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்ட அகதி குழந்தைகளுக்கு இது தேவையில்லை. அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த வன்முறையை உலகின் முன் பாதுகாக்கும் இராஜதந்திரி கறுப்பினத்தவராக இருக்கிறார் என்பது ஒரு பொருட்டல்ல.

பதவிக்கு வரும் பைடென் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை நோக்குநிலையின் பிற்போக்குத்தன தன்மையிலிருந்து திசைதிருப்ப பன்முகத்தன்மைக்கு வழங்கும் முக்கியத்துவம் பயன்படுத்தப்படுகிறது. அவருக்காக வாதிடுபவர்கள் தோல் நிறம், பாலினம் மற்றும் தேசிய வம்சாவளியைப் பயன்படுத்தி பிற்போக்குத்தனத்திற்கு மூடுதிரையிட முயல்கின்றனர்.

ஏற்கனவே கால் மில்லியன் அமெரிக்கர்களின் உயிரைப் பறித்த நாடு தழுவிய மற்றும் உலகளாவிய பொது சுகாதார பேரழிவின் மத்தியில், பைடென் தனது வெளியுறவுக் கொள்கைக் குழுவை முதலில் தேர்ந்தெடுப்பதை அறிவித்ததன் முக்கியத்துவம் குறித்து ஊடகங்களில் சிறிய விவாதம் நடந்துள்ளது. தனது முன்னைய பிரச்சாரத்தின்போது பைடென் கூறியது போல, கொரோனா வைரஸுக்கு எதிராக வெற்றிகொள்வது முதலிடத்தில் இருந்தால், தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தின் முக்கிய பொறுப்புடன் சுகாதார மற்றும் பொதுசேவைகள் துறை மற்றும் பிற நிறுவனங்களுக்கு தலைமை தாங்குவோரை ஏன் முதலில் அறிவிக்கக்கூடாது?

கோவிட்-19 தொடர்பாக ஜனநாயகக் கட்சியினருக்கும் ட்ரம்பிற்கும் இடையிலான வித்தியாசத்தின் உண்மையான புள்ளி அது தொடர்பான அவரது பேரழிவுகரமான செயற்பாடு அல்ல என்பதற்கான சமிக்ஞையாகும். ட்ரம்ப் இப்போது "சமூக நோய் எதிர்ப்பு சக்தியை" வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு, இறப்பு எண்ணிக்கையை முக்கியத்துவமற்றது என்று நிராகரிக்கும் அதே வேளையில், ஜனநாயகக் கட்சியினர் அடிப்படையில் அதே கொள்கையையே பின்பற்றுவார்கள். மேலும் அமெரிக்க பொருளாதாரத்தின் எந்தவொரு புதிய பூட்டுதலையும் பைடென் நிராகரித்தார்.

ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து, ஜனநாயகக் கட்சியின் எதிர்ப்பின் கவனம் வெளியுறவுக் கொள்கையிலேயே உள்ளது. குறிப்பாக ட்ரம்ப் ரஷ்யா மீது "மென்மையான" நிலைப்பாடு மற்றும் பெரும்பாலும் வாயடிப்பாக கூறப்பட்ட சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க கடமைப்பாடுகளிலிருந்து அவரது வெளியேற்றம் பற்றியதாகவே இருந்தது. இப்போது 60 நாட்களுக்குள் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும் என்று பைடென் எதிர்பார்க்கிறார். இது கொள்கை மாற்றங்களின் ஆரம்ப மையமாக இருக்கும் என்பதை அவர் நிரூபித்து வருகிறார்.

ஜனநாயகக் கட்சி சார்பு இரு முக்கிய செய்தித்தாள்களும் பைடென் நியமனங்களின் வெளியீட்டைப் பற்றி வலியுறுத்தின. வாஷிங்டன் போஸ்ட், "பைடென் தனது நிர்வாகத்தில் ஒரு முக்கிய தூணாக வெளியுறவுக் கொள்கையை முன்னுரிமைப்படுத்த திட்டமிட்டுள்ளார். உலகளாவிய கூட்டணிகளை மீண்டும் ஒன்றிணைப்பதற்கும், உலக அரங்கில் அமெரிக்காவை மிக முக்கியமான நிலையில் இருத்துவதற்கும் சபதம் செய்கிறார்." என எழுதியது.

நியூ யோர்க் டைம்ஸ் இன்னும் அப்பட்டமாக இருந்தது. புதிய நிர்வாகத்தின் முக்கிய இலக்காக சீனாவை அடையாளம் காட்டியது. ஒரு முதல் பக்க கட்டுரையில், டைம்ஸ் பிளிங்கெனை "உலகளாவிய கூட்டணிகளின் பாதுகாவலர்" என்று விவரித்ததுடன், "சீனாவுடனான ஒரு புதிய போட்டியில் சந்தேகம் கொண்ட சர்வதேச பங்காளிகளை இணைக்க அவர் முயற்சிப்பார்" என்று கூறியது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வர்த்தகம், தொழில்நுட்ப முதலீடுகள் மற்றும் ஆபிரிக்காவை, அமெரிக்கா “சீனாவுடன் போட்டியிடும்” பகுதிகளாக இது அடையாளம் கண்டது.

ஒபாமா நிர்வாகத்தின் போது வெளியுறவுக் கொள்கை பிரச்சினைகளில் லிபியா மீதான அமெரிக்க தாக்குதல் மற்றும் சிரியா மீதான அமெரிக்க கொள்கை ஆகிய இரண்டு சந்தர்ப்பங்களில் தவிர பிளிங்கென் மற்றும் பைடென் பொதுவாக இணைந்திருந்தனர் என்று மற்ற சுயவிவரங்கள் குறிப்பிட்டுள்ளன. பிளிங்கென் மிகவும் ஆக்கிரோஷமான அமெரிக்க தலையீட்டை ஆதரித்தார் மற்றும் பைடென் மிகவும் கவனமான நிலைப்பாட்டை கொண்டிருந்தார்.

கிரிமியாவின் பிரிவினை மற்றும் ரஷ்யாவுடன் மீண்டும் ஒன்றிணைவது ஒரு பெரிய சர்வதேச நெருக்கடியாக மாற்றுவதில் பிளிங்கென் ஒரு முக்கிய பொதுப் பங்கைக் கொண்டிருக்கையில், இருவருமே உக்ரேன் தொடர்பாக முற்றிலும் ஒத்த கருத்தை கொண்டிருந்தனர். புட்டின் அரசாங்கத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டின் மக்களையும் தண்டிக்க ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை முன்வைக்கும் அமெரிக்காவின் முக்கிய ஆதரவாளராக பிளிங்கென் இருந்தார். அந்த நேரத்தில் ஒரு உரையில், "புட்டின் போன்ற சர்வதேச குற்றவாளிகளை ஆதரிப்பதற்கு மிகப் பெரிய அபராதம் இருப்பதை ரஷ்ய மக்களுக்கு நிரூபிக்க பொருளாதாரத் தடைகள் தேவை” என்று அவர் கூறினார்.

ஏனைய நியமனம் செய்யப்பட்டவர்களில், அவ்ரில் ஹைன்ஸ் பைடெனின் நெருங்கிய தனிப்பட்ட கூட்டாளி ஆவார். பைடென் தலைவராக இருந்தபோது செனட் வெளியுறவுக் குழுவின் ஊழியராக அவர் பணியாற்றினார். பின்னர் ஒபாமா-பைடென் வெள்ளை மாளிகையில் உள்ள தேசிய பாதுகாப்பு குழுவிற்கு மாற முன்னர் இரண்டு ஆண்டுகளுக்கு சிஐஏ இல் பணியாற்றி இருந்தார். ட்ரம்ப் பதவிக்கு வந்தபோது அரசாங்கத்தை விட்டு வெளியேறிய பின்னர், ஹைன்ஸ் புதிதாக அமைக்கப்பட்ட WestExec Partnersஇல் பிளிங்கெனுடன் சேர்ந்தார். இந்த தேசிய பாதுகாப்பு சிந்தனைக் குழுவானது அமெரிக்க நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியது. இவ்வமைப்பின் மற்றொரு கூட்டாளி ஒபாமாவின் கீழ் முன்னாள் பென்டகன் அதிகாரி ஆக இருந்த மைக்கல் ஃப்ளூர்னாய் ஆவார். அவர் பைடெனின் பாதுகாப்பு செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கள் பிற்பகுதியில், பைடென் "உச்சம்" என்று அழைத்த தனது தேசிய பாதுகாப்புக் குழுவின் வெளியீட்டிற்குப் பின்னர், பைடெனின் மாற்றம் அவரது அடுத்த பெரிய அமைச்சரவை தேர்வு முன்னாள் பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெனட் யெல்லன் கருவூல செயலாளராக பணியாற்றலாம் என்று தெரியவந்தது. இது உள்வரும் நிர்வாகத்தின் வோல் ஸ்ட்ரீட்டிற்கான முழுமையான அடிபணிதலை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஏனெனில் 2008-2009 வோல் ஸ்ட்ரீட் வீழ்ச்சியின் போது நிதிச் சந்தைகளை ஆதரிப்பதற்காக நிதிய கதவுகளை தடையின்றி திறக்கும் மத்திய வங்கிக் கொள்கையுடன் யெல்லன் அடையாளம் காணப்பட்டார்.

யெல்லன் 2004 முதல் ஒரு பெடரல் ரிசர்வ் உயர் அதிகாரியாக இருந்தார். அப்போதைய தலைவரான பென் பெர்னான்கேவுடன் பணிபுரிந்ததுடன், 2009 இல் துணைத் தலைவராக இருந்தார். 2013 இல் பெர்னான்கேவுக்குப் பின் அவ்விடத்திற்கு ஒபாமாவால் நியமிக்கப்பட்டார். 2017 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக அவரை மீண்டும் நியமிக்க ட்ரம்ப் மறுத்துவிட்டார்.