பாரிஸ் அகதிகள் முகாம் மீது பிரெஞ்சு பொலிஸ் வன்முறைத் தாக்குதலைத் தொடங்கியிருக்கிறது

Will Morrow
26 November 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

திங்கள்கிழமை மாலை, பிரெஞ்சு கலகப் பிரிவு பொலிசார் மத்திய பாரிஸில் உள்ள குடியரசு சதுக்கத்தில் (Place de la République) சுமார் 500 அகதிகளின் அமைதியான கூடார முகாமை கொடூரமாக தாக்கி பாசிச வன்முறையின் உண்மையான கலவரத்தில் ஈடுபட்டனர்.

பொலிசார் கண்ணீர்புகை குண்டுகளைப் பயன்படுத்தி, புலம்பெயர்ந்தவர்களை தடிகளால் அடித்து, அவர்களை கூடாரங்களில் இருந்து இழுத்தெடுத்து, தரையில் வைத்து தாக்கினர். இந்த மிருகத்தனமான காட்சியை படப்பிடிப்பு நடத்திய பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட டஜன் கணக்கான கூடாரங்களை கலகப் பிரிவு பொலிசார் லாரிகளில் வீசி, அவர்களை விரட்டியடித்தனர்.

குடியரசு சதுக்கத்திலிருந்து அகற்றப்பட்ட பின்னர், பல நூற்றுக்கணக்கான வீடற்ற அகதிகளின் ஒரு குழுவானது அவர்கள் நகரத்தைச் சுற்றியுள்ள புறநகரங்களை அடையும் வரை வடக்கு நோக்கி அணிவகுத்துச் செல்ல நிர்பந்திக்கப்பட்டனர், அவர்கள் செல்லும் போது பொலிசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசித் துரத்தினர். மற்றய குழுக்கள் தெற்கே நகரசபை நோக்கி செல்லத் தள்ளப்பட்டன, வழியில் பொலிஸ் பிரிவுகளால் பலமுறையும் தாக்கப்பட்டனர் மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளால் தாக்குதலுக்கும் உள்ளாகியிருந்தனர். அகதிகளை பொலிசார் சுற்றி வளைத்து, அவர்களை கைது செய்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரிஸ் அதிகாரிகள் குழுவையும் பொலிசார் சுற்றி வளைத்து, அகதிகளை தொடர்பாக பேசவிடாமல் தடுத்தனர்.

நவம்பர் 24, 2020 செவ்வாய்க்கிழமையன்று, பாரிஸிலுள்ள குடியரசு சதுக்கத்தில் நடைபெற்ற பேரணியில், "அவர்கள் கூறினார்கள், மக்ரோனுக்கு வாக்களியுங்கள்" என்ற ஒரு பதாகையுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுத்துச் செல்லுகின்றனர். பாரிஸில் ஒரு எதிர்ப்பு முகாமை விட்டு வெளியேற்றும் போது செவ்வாய்க்கிழமையன்று புலம்பெயர்ந்தோரை கூடாரங்களிலிருந்து வெளியேற்றும் அதிகாரிகள் படமாக்கப்பட்டதை அடுத்து பிரான்சின் உள்துறை அமைச்சர் ஒரு உள்ளக பொலிஸ் விசாரணைக்கு உத்தரவிட்டார். (AP Photo/Michel Euler)

இந்த தாக்குதல் பற்றிய வீடியோக்கள் நூறாயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளன, இது பிரான்சிலும் உலகெங்கிலும் வெறுப்பையும் சீற்றத்தையும் தூண்டிவிட்டது. நேற்றிரவு, மக்ரோன் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு வெகுஜன எதிர்ப்பின் வெளிப்பாடாக, கொரோனா வைரஸ் பொது முடக்கத்தின் மத்தியிலும், புலம்பெயர்ந்தோர் உடனான ஒற்றுமையை வெளிப்படுத்தவும் பொலிஸ் தாக்குதலை கண்டனம் செய்யவும் குடியரசு சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அகதிகள் எதிர்கொள்ளும் கொடூரமான நிலைமைகள் குறித்து கவனத்தை ஈர்க்கும் வகையில் திங்கள்கிழமை பிற்பகல் இந்த முகாம் அமைக்கப்பட்டது. கடந்த வாரம் செவ்வாயன்று, பாரிஸின் வடக்கே உள்ள சென்-செயிண்ட் டெனிஸில் 3,000 பேர்களைக் கொண்ட ஒரு முகாமை கலகப் பிரிவு பொலிசார் பலவந்தமாக வெளியேற்றினர். தற்காலிக விடுதி மையங்களுக்கு அழைத்துச் செல்லவதற்காக பஸ்ஸிற்காக மணிக்கணக்கில் காத்திருந்தபின், 500 முதல் 1,000 பேர் வரை அவர்களுக்கு இடமில்லை என்று பொலிசாரால் கூறப்பட்டது, மேலும் அந்தப் பகுதியை விட்டு கால்நடையாக வெளியேற அவர்களுக்கு உத்தரவிட்டது.

"ஏன் என்று சொல்லாமல் போர்ட் டு லா சாப்பெல் என்ற இடத்தை நோக்கி செல்ல பொலிசார் எங்களிடம் கூறினர்," என்று இரண்டு மாதங்களாக முகாமில் இருந்த ஒரு இளம் ஆப்கான் புலம்பெயர்ந்தவர் Le Parisien இடம் கூறினார். "அங்கே கண்ணீர் புகைக்குண்டுகளால் நாங்கள் ஓட வேண்டியிருந்தது. அன்றிரவு, தெருக்களில் தூங்குவதற்கு ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க நம்மில் பலர் முயற்சித்துக் கொண்டிருந்தோம்" என்றார் அவர்.

பிரான்சில் ஒவ்வொரு இரவும் ஆயிரக்கணக்கான அகதிகள் வீடற்றநிலையில் உறங்குகிறார்கள். முழு பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகமும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் நிலைநாட்டும் அகதிகள்-விரோத கொள்கைகளின் கீழ், அவர்களுக்கு எந்த தங்குமிடமும் இல்லை, வருமானம் இல்லை, உணவு இல்லை, வேலை செய்ய சட்டபூர்வ உரிமை இல்லை, மற்றும் எந்த வகையான அரசாங்க ஆதரவும் இல்லை. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில், கூடார முகாம்கள் முழுவதும் பரவும் வைரஸ் ஆபத்துக்கு அரசாங்கத்தின் ஒரே விடையிறுப்பு, வன்முறையான பொலிஸ் ஒடுக்குமுறைகளுடன் மிகப்பெரிய முகாம்களை மீண்டும் மீண்டும் அடித்து நொருக்குவதாகும். அவர்கள் புலம்பெயர்ந்தவர்களுக்கு குறைந்த அல்லது எந்த ஆதரவையும் வழங்கவில்லை.

திங்களன்று மாலை போலீஸ் ஒடுக்குமுறை மீதான கோபம் அதிகரித்தபோது, மக்ரோன் அரசாங்கம் சேதத்தைக் கட்டுப்படுத்துதற்கு நிர்பந்திக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதம் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மனன், "பொலிஸ் வன்முறை" என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைக் கேட்டபோது அவர் "மூச்சுத்திணறி" இருப்பதாக கூறினார், அந்த நடவடிக்கையின் பிம்பங்களால் தான் "அதிர்ச்சியடைந்ததாக" பாசாங்குத்தனமாகக் கூறினார், மேலும் பாரிஸ் பொலிஸ் தலைமையிடம் இருந்து ஒரு "அறிக்கை" கோருவதாகவும் கூறினார்.

உண்மையில், பொலிஸ் தாக்குதல் என்பது மக்ரோன் அரசாங்கத்தின் கொள்கைகளை செயற்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாகும். இது சமூக சமத்துவமின்மை, தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்கள் மற்றும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்ப்புக்களுக்கு எதிரான "மஞ்சள் சீருடை" எதிர்ப்புக்கள் மீது பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட கொடூரமான பொலிஸ் ஒடுக்குமுறைகளை தொடர்ந்து வருகிறது. எதிர்ப்பாளர்கள் தாக்கப்பட்டும், அவர்களை பீன்பாக் தோட்டாக்களால் சுட்டும், இழுத்துச் செல்லப்பட்டதும், உதைக்கப்பட்டதும், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு, மில்லியன் கணக்கான மக்களால் பார்க்கப்பட்டுள்ளன.

ஜனநாயக உரிமைகள் இடைநிறுத்தப்பட்ட 2015-2017 ம் ஆண்டின் அவசரகால நிலை முதல், அடுத்தடுத்த அரசாங்கங்கள் காவல்துறையினருக்கு இன்னும் கடுமையான வன்முறைகளைப் பயன்படுத்த பச்சை விளக்கு காட்டியுள்ளன. கலே மற்றும் கிரான்ட் சின்தே அகதிகள் முகாம்களை பிடுங்கி அகற்றுதல் போன்ற புலம்பெயர்ந்தோர் மீதான மிருகத்தனமான தாக்குதல்கள், முழு தொழிலாள வர்க்கத்திற்கும் எதிராக இரத்தக்களரி வன்முறைகளை நடத்தக்கூடிய பொலிஸ் படையை வளர்க்க உதவியுள்ளது. மக்ரோனின் ஆட்சியின் கீழ், ஆர்ப்பாட்டங்களில் அமைதியான வயதான பெண்களான Zineb Redouane என்பவரைக் கொன்றும் மற்றும் Geneviève Legay ஐ மோசமாக காயப்படுத்திய பொலிஸ் பிரிவுகள், பதக்கங்களைப் பெற்றன.

2019 ஆம் ஆண்டில், "மஞ்சள் சீருடை" எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த பிரெஞ்சு இராணுவத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டது. நாஜி-ஒத்துழைப்பு விச்சி ஆட்சியின் வீழ்ச்சிக்கும், 1948 ஆண்டு சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்திற்கும் பின்னர் இராணுவம் அத்தகைய அங்கீகாரத்தைப் பெற்றது இதுவே முதல் முறையாகும்.

ஜனவரி மாதம் செனட் வாக்களிக்கவுள்ள அரசாங்கத்தின் “விரிவான பாதுகாப்புச் சட்டத்திற்கு” (la Loi sécurité globale) தேசிய சட்டமன்றம் ஒப்புதல் அளித்த சில மணி நேரங்களிலேயே திங்களன்று பொலிஸ் ஒடுக்குமுறை நடந்துள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ், ஒரு பொது நிகழ்வில் ஒரு பொலிஸ்காரரின் படங்களை “காவலரின் உடல் அல்லது உளவியல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில்” இடுகையிடும் எவருக்கும் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் மற்றும் 45,000 யூரோ அபராதமும் விதிக்கப்பட முடியும். முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை கொண்ட ட்ரோன்களை நிறுத்தவும் இந்த சட்டம் அனுமதிக்கிறது.

காவல்துறையின் குற்றங்களையும், நடவடிக்கைகளையும் ஆவணப்படுத்துவதை எதிர்க்கும் இச் சட்டத்தை சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், ஐக்கிய நாடுகள் சபையும் கண்டித்துள்ளன. ஒப்புதல் அளிக்கப்பட்டால், அது மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பிரகடனத்தையும், ஐரோப்பிய மனித உரிமைகள் உடன்படிக்கையையும் மீறுவதாகும் என்று ஐ.நா. கூறியுள்ளது.

இந்த நிகழ்வுகள் மிகவும் வலுவான ஒரு எச்சரிக்கையாகும். பிரான்சிலும் உலகெங்கிலும் ஆளும் வர்க்கத்தின் பரந்த அடுக்குகள், பெருகிவரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை நசுக்குவதற்கு ஒரு பாசிச பொலிஸ் அரசைத் தயாரிக்கின்றனர்.

COVID-19 தொற்று, ஒரு தூண்டுதல் நிகழ்வாக சேவை செய்துள்ளது, இது முதலாளித்துவ எதேச்சாதிகார ஆட்சிக்கு திரும்புவதை விரைவுபடுத்தியுள்ளது. இது முன்னொருபோதும் இல்லாத ஒரு பொருளாதாரச் சரிவிற்கு வழிவகுத்துள்ளது, பின்பற்றும் கொலைகார "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கைகளின் காரணமாக, ஒரு கொடூரமான இறப்பு எண்ணிக்கைக்கு ஐரோப்பா எங்கிலும் முதலாளித்துவ வர்க்கத்தால் நன்றிகள் கூறப்படுகின்றது. உலகம் முழுவதும் 1.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்தநிலையில், உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட COVID-19 இறப்புக்களின் எண்ணிக்கை பிரான்சில் நேற்று மட்டும் 592 பேர் உட்பட 50,000 மக்களைக் கொன்றுள்ளது.

கடந்த வாரம், நவ-பாசிச சஞ்சிகையான Valeurs actueles இல் -ஓய்வுபெற்ற ஜெனரல் பியர் டு வில்லியே, இந்த நெருக்கடிகளுக்கு சட்டத்தின் ஆட்சியை- அதாவது சர்வாதிகாரத்திற்கு திரும்பவேண்டும் என்று வாதிட்டார்.

அவர் கூறினார், “இன்று பாதுகாப்பு நெருக்கடி மட்டுமல்ல, தொற்றுநோய் நெருக்கடியும் உள்ளது. இந்த அனைத்து பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், நமது தலைவர்கள் இனி எந்தவிதமான பரந்த நம்பிக்கையையும் அனுபவிக்கப்போவதில்லை. இந்த அச்சுறுத்தல்களை நாம் ஒன்றாக இணைக்கும்போது, குறுகிய காலத்தில் பயப்படுவதற்கு எல்லா காரணங்களும் உள்ளன. இந்த அடக்கப்பட்ட கோபங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் வெடிக்கக்கூடும் என்று நான் அஞ்சுகிறேன். ஆமாம், இது பிரான்சில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் ஒரு வரலாற்று முக்கிய அம்சமாகும். … நாம் எதிர்கொள்ளும் மாற்றங்கள் அனைத்தும் ஆழ்ந்த மாற்றங்களை நோக்கிச் செல்கிறது என்று நினைக்கிறேன். நாம் சிந்திக்க முடியாதவைகளை சிந்திக்க வேண்டும்.”

இதன் பொருள் என்ன என்று கேட்டபோது, அவர் பதிலளித்தார், "சமூக அமைப்பின் பொதுவாக மாறாத கட்டமைப்பை சவால் செய்ய முடியும். சட்டத்தின் ஆட்சி வெளிப்படையாக மரியாதைக்குரியது, ஆனால் சில சமயங்களில் நாம் மூலோபாயரீதியான சிந்தனையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்".

சர்வாதிகாரத்தை நோக்கிய முதலாளித்துவத்தின் விரைவான திருப்பத்திற்கு எதிராகப் போராடுவதற்கு, தேசியவாத வெறுப்புகளுக்கு எதிராகவும், தொழிலாள வர்க்கத்தின் ஒற்றுமைக்காகவும், சோசலிசத்துக்காகவும், போராடும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச இயக்கத்தை உருவாக்குவது அவசியம். எல்லாவற்றிற்கும் முதலாக, புலம்பெயர்ந்தோரை தீவிர வலதுசாரி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பொலிஸ்-அரசு கொள்கைகளுக்கு எதிராக பாதுகாக்க வேண்டும். இத்தகைய போராட்டம் முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்திலிருந்து முற்றிலும் சுயாதீனமாக இருக்க வேண்டும்.

திங்களன்று பொலிஸ் தாக்குதலானது குடியரசுக் கட்சி மற்றும் தீவிர வலதுசாரி தேசிய பேரணியால் ஆதரிக்கப்பட்டது, பசுமைக் கட்சி, சோசலிஸ்ட் கட்சி (PS), மற்றும் ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் கட்சி ஆகியவை கண்டித்தன. எவ்வாறெனினும், மக்ரோனை பற்றிய அவர்களின் விமர்சனங்கள் முற்றிலும் சிடுமூஞ்சித்தனமானவைகளாகும். இக்கட்சிகள் அனைத்தும் PS ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் கீழ் இரண்டாண்டு கால அவசரகால நிலைக்கு வாக்களித்தன, அப்பொழுது முதல் பொலிஸ் அதிகாரங்களைக் கட்டமைப்பதற்கு இக்கட்சிகள் உதவின.

திங்களன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், மெலோன்சோன் பொலிஸ் தாக்குதல் பற்றிய காணொளிகள் "குடியரசின் ஜனாதிபதியால் ஒரு எதேச்சாதிகார ஆட்சியை நோக்கி நகர்வதைக் குறிக்கும் அரிய காட்டுமிராண்டித்தனத்தின் காட்சிகளை" காட்டுகிறது என்று கூறினார். ஆயினும்கூட ஸ்பெயினில் மெலன்சோனின் கூட்டாளியான பொடேமோஸ், ஆயிரக்கணக்கான அகதிகளை தடுத்து வைக்க கேனரி தீவுகளில் சிறை முகாம்களைக் கட்டி வரும் ஒரு சோசலிஸ்ட் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் ஒரு பகுதியாக உள்ளது. அதனுடைய ஐரோப்பிய ஒன்றிய சகாக்களைப் போலவே, அது மத்தியதரைக் கடலை கடந்து ஐரோப்பாவிற்கு வரும் அகதிகளுக்கு மீட்பு நடவடிக்கைகளை நிறுத்தி, தஞ்சம் கோரும் உரிமையைப் பயன்படுத்துவதில் இருந்து மற்றவர்களைத் தடுக்க ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோரை மூழ்கடிப்பதற்கு அனுமதித்தது.

தொற்றுநோய்க்கு எதிரான விஞ்ஞானபூர்வமான கொள்கையைப் போல, புலம்பெயர்ந்தோர் மீதான மனிதாபிமான கொள்கையை ஏற்படுத்த, அரச அதிகாரத்தையும் உலகப் பொருளாதாரத்தின் வளங்களையும் உழைக்கும் மக்களுக்கு மாற்றுவதற்கான அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.