ஜோ பைடெனின் அமைச்சரவை: ஏகாதிபத்திய பிற்போக்குத்தனத்தின் வெவ்வேறு வண்ணங்களின் கூட்டணி

27 November 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பெருநிறுவன ஊடகங்களும் ஜனநாயகக் கட்சியும் ஜோ பைடெனின் பதவிக்குவரும் அமைச்சரவையை "அமெரிக்க வரலாற்றில் மிகவும் பன்முகத்தன்மை" கொண்டது என்று கொண்டாடுவதுடன், பெண்கள், ஆபிரிக்க அமெரிக்கர்கள் மற்றும் இலத்தீன் மக்களை முக்கிய அமைச்சரவை பதவிகளுக்கு நியமிப்பது மிகப்பெரிய சமூக முன்னேற்றத்தின் அடையாளம் என்று அறிவிக்கின்றன. உண்மையில், ஏகாதிபத்திய பிற்போக்குத்தனத்தின் பைடென் வானவில் கூட்டணி அடையாள அரசியலின் வலதுசாரி சாரத்தை இணைத்து அம்பலப்படுத்துகிறது.

இன மற்றும் பாலின அரசியலின் முன்னணி ஆதரவாளரான நியூ யோர்க் டைம்ஸின் ஆசிரியர் அலுவலகத்தை விட வேறு எங்கும் இவ்வாறான உற்சாகம் இருக்கவில்லை. ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் "தனது மந்திரி சபையை கட்டமைப்பதற்கு அமெரிக்காவின் பலதரப்பட்ட மக்களில் இருந்து உள்கொண்டுவருவதற்கான தனது நோக்கத்தை அடையாளம் காட்டியுள்ளார்" என்று எழுதியது.

டைம்ஸ் எழுதுகிறது: "ஜனாதிபதி ட்ரம்பின் அமைச்சரவையைப் போலல்லாமல், இது கிட்டத்தட்ட கடந்த 40 ஆண்டுகளில் இருந்ததை விட வெள்ளை மற்றும் ஆண்களை கொண்டதாக இருப்பதுடன், திரு. பைடெனின் சிறந்த ஆலோசகர்களின் பட்டியல் 21 ஆம் நூற்றாண்டின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக உறுதியளிக்கிறது." பதவிக்குவரும் அமைச்சரவை "அமெரிக்காவைப் போலவே இருக்கும்" என்று பைடெனின் உதவியாளர்களின் அறிக்கைகளை அது மேற்கோளிட்டுள்ளது.

அமைச்சரவை உறுப்பினர்களின் தோல் நிறம் என்னவாக இருந்தாலும், பைடென் நிர்வாகம் அமெரிக்காவைப் போல நினைக்காது. கொடிய தொற்றுநோய் மற்றும் முன்னோடியில்லாத அளவிலான சமத்துவமின்மை மற்றும் சமூக விரக்திக்கு தீர்வு காண மக்கள் பெரும் சமூக மாற்றத்தை கோருகின்றனர்.

10 அமெரிக்கர்களில் ஏழுக்கும் மேற்பட்டவர்கள் பொதுவான சுகாதாரப் பாதுகாப்பு முறைக்கு ஆதரவளித்தாலும், அத்தகைய கொள்கைக்கு அமைச்சரவையில் எந்த அடித்தளமும் இருக்காது. கட்டணம் இல்லாத கல்லூரி மற்றும் மாணவர் கடன் தள்ளுபடியை ஆதரிக்கும் 10 அமெரிக்கர்களில் ஆறுக்கும் மேற்பட்டவர்களுக்கும் இது பொருந்தும். பல்வேறு இனங்கள் மற்றும் பாலினங்களை சேர்ந்த பங்கு நிதி முதலீட்டாளர்களை கொண்ட அமைச்சரவையால் அவர்கள் "பிரதிநிதித்துவப்படுத்தப்படுவார்கள்".

பொலிஸ் வன்முறைக்கு எதிரான இந்த கோடைகால நாடு தழுவிய, பல இன ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து 10 பேரில் எட்டு பேர் இப்போது சமூக திட்டங்களுக்கு உதவுவதற்காக காவல் துறைகளிடமிருந்து பணத்தை திசைதிருப்புவதை விரும்புகிறார்கள், பைடென் காவல்துறையினருக்கான நிதியை அதிகரிப்பதாக உறுதியளித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிலிருந்து துருப்புக்கள் அகற்றப்பட வேண்டும் மற்றும் பாதுகாப்பு செலவினங்களைக் குறைக்க விரும்பும் 75 சதவீதத்திற்கும் அதிகமான அமெரிக்கர்களுக்கு, பல இன பைடென் அமைச்சரவை சரியான எதிர்மாறானதை கொடுக்கும்.

பரிந்துரைக்கப்பட்டவர்கள் தங்கள் இனம் அல்லது பாலினத்தின் முன்னோடிகள் அல்ல, அவர்கள் சமூக குற்றவாளிகளாவர்: முன்னாள் சிஐஏ துணை இயக்குநரான அவ்ரில் ஹைன்ஸ் தேசிய உளவுத்துறையின் முதல் பெண் இயக்குநராக இருப்பார். ஒபாமா நிர்வாகத்தின் ஆளில்லா விமான ட்ரோன் படுகொலை திட்டத்தின் ஒரு உருவாக்குனராக ஹைன்ஸ் இருந்தார். இத்திட்டம் பாதிக்கப்பட்டவர்களின் பாலினத்திற்கு எந்த கவனத்தையும் கொடுக்காமல் ஆயிரக்கணக்கான வறிய ஆபிரிக்கர்கள், அரேபியர்கள் மற்றும் மத்திய ஆசியர்களைக் கொன்றது.

அலெஜான்ட்ரோ மயோர்காஸ் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் தலைவராக வரவுள்ள முதல் இலத்தீன் அமெரிக்கராவார். எதிர்வரவிருக்கும் மாதங்கள் மற்றும் ஆண்டுகளில் அவர் நாடுகடத்தப்படும் லட்சக்கணக்கான இலத்தீன் (மற்றும் பிற) புலம்பெயர்ந்தோருக்கு அல்லது 2013 முதல் 2016 வரை துணை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் செயலாளராக இருந்தபோது அவரால் சிறையில் அடைக்கப்பட்ட புலம்பெயர்ந்த குழந்தைகளுக்கு இது எவ்வித ஆறுதலையும் கொடுக்காது.

புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகங்களின் போது மாதந்தோறும் பல்லாயிரக்கணக்கான டாலர்களை வங்கிகளுக்கு மாற்றும் பணத்தை அச்சடித்து புளக்கத்தில் விடும் கொள்கையை செயல்படுத்த உதவிய பின்னர், ஜெனட் யெல்லன் முதல் பெண் கருவூல செயலாளராக இருப்பார். அதே நேரத்தில் மில்லியன் கணக்கான வீட்டுக்கடன்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த ஆதரவும் வழங்காது.

ஆபிரிக்க அமெரிக்கரான லிண்டா தோமஸ்-கிரீன்ஃபீல்ட் ஐக்கிய நாடுகள் சபையின் தூதராக இருப்பார். அமெரிக்க எண்ணெய் மற்றும் சுரங்க நிறுவனங்களுக்கு உலகின் மிக வறிய நாடுகளிலிருந்து வளங்களை எடுக்க தோமஸ்-கிரீன்ஃபீல்ட் வெளியுறவுத்துறையில் பணியாற்றினார். முறையாக அமைச்சரவையில் உறுப்பினராக இல்லாவிட்டாலும், அந்தப் பதவியிக்கான முதல் பெண்மணியும் மற்றும் முதல் ஆபிரிக்க அமெரிக்கருமான துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் அவரால் சிறையில் அடைக்கப்படவும் பெரும்பாலும் வறிய மக்களின் வாழ்க்கையை மிதிப்பதன் மூலம் "கறுப்பின பெண் வழக்குரைஞராக" தனது தொழில்வாழ்க்கையை உருவாக்கினார்.

இதைவிட வெள்ளை ஆண்கள் உள்ளனர். அவர்களின் சொந்த வரலாறு தங்கள் பெண் மற்றும் சிறுபான்மை சகாக்களின் வரலாற்றைவிட குறைந்த குற்றவியல் தன்மை கொண்டதல்ல.

சிரியா, லிபியா மற்றும் யேமனில் நடந்த போர்களைத் திட்டமிட உதவிய அன்டனி பிளிங்கன் அரச செயலாளருக்கான வேட்பாளராக உள்ளார். அவர் ஒரு தனியார் முதலீட்டு நிறுவனத்தில் பங்குதாரராக இருந்ததுடன் மற்றும் WestExec Advisors இனை இணைந்து நிறுவினார். WestExec Advisors இஸ்ரேலிய உளவுத்துறையுடன் இணைந்து செயல்படுவதுடன் மற்றும் கூகுளின் தணிக்கை கருவிகளை உருவாக்க உதவியது. சிரியாவில் தலையீட்டிற்கும் மற்றும் எகிப்தில் கொலைகார அல்-சிசி சர்வாதிகாரத்தை நிறுவிய எகிப்தில் 2013 சதித்திட்டத்திற்கு ஆதரவழித்த முன்னாள் வெளியுறவு செயலாளர் ஜோன் கெர்ரி, ஜனாதிபதியின் "காலநிலைக்கான தூதுவர்" ஆகின்றார்.

ஏனைய அமைச்சரவை பதவிகளுக்கான குறுகிய பட்டியலில் இருப்பவர்களைப் பொறுத்தவரை, டாமி டக்வொர்த் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றவுள்ள முதல் ஊனமுற்ற, தாய்லாந்து பெண் என்ற எதிர்பார்ப்புக்கு டைம்ஸ் ஆதரவாக மூச்சு விடுகிறது. முன்னாள் சவுத் பெண்ட், இந்தியானா மேயர் பீட் பட்டிகீக் முதல் ஓரின சேர்க்கை போக்குவரத்து அமைச்சராக இருக்கக்கூடும்.

வோல் ஸ்ட்ரீட் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்த ஊழியர்களுக்கு "தங்கள் சொந்த" இனம், பாலினம் அல்லது பாலியல் நோக்குநிலைக்கும் உழைக்கும் மக்களுக்கும் பொதுவானது எதுவுமில்லை. அமெரிக்க சமுதாயத்தில் அடிப்படையாக பிரிக்கும் கோடு வர்க்கமே தவிர இந்த அடையாளம் அல்ல.

நேற்று அமைச்சரவையை அறிவிக்கும் ஒரு விசித்திரமான பத்திரிகையாளர் சந்திப்பின் போது இது காட்சிக்கு வைக்கப்பட்டது. இதில் பைடென் மேலே பெயரிடப்பட்ட வேட்பாளர்களின் "தனிப்பட்ட கதைகளில்" கவனம் செலுத்துவதை தவிர தற்போது நாட்டையும் உலகையும் அழிக்கும் கொரோனா வைரஸ் தொற்றுநோயைப் பற்றி சிறிதளவே குறிப்பிடவில்லை. அவர்கள் பேசுவதற்கான முறை வந்தபோது, பரிந்துரைக்கப்பட்டவர்கள் தங்களையும் தங்கள் அன்புக்குரியவர்களையும் தொழில் முன்னேற்றத்திற்காக வாழ்த்தினர்.

இதற்கிடையில், அழிவுகரமான குளிர்காலம் வரவுள்ள நிலையில் நிஜ உலகில் 260,000 அமெரிக்கர்கள் தொற்றுநோயால் இறந்துவிட்டனர். இறந்தவர்களில் பெருநிறுவன இலாபத்திற்காக வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்ட அனைத்து இனங்களையும் சேர்ந்த ஏழை மற்றும் உழைக்கும் மக்களின் எண்ணிக்கையும் அடங்கும். நாட்டின் உட்பக்கங்களில் உள்ள இரண்டாவது அல்லது மூன்றாவது வீடுகளுக்கு அவர்களால் செல்ல முடியவில்லை. அவர்கள் போதுமான சுகாதார சேவையை பெற்றுக்கொள்ள முடியவில்லை மற்றும் பலருக்கு தலைமுறையாக உள்ள வறுமை மற்றும் அடக்குமுறையின் அடையாளங்களான இதய நோய், உடல் பருமன், புகைத்தல் போன்ற அடிப்படை சுகாதார பிரச்சனைகளை கொண்டிருக்கின்றனர்.

நிலக்கரி ஒரு நீராவி இயந்திர ரயிலுக்கு எரிபொருள்களாக இருப்பதுபோல சந்தைகளுக்கு மரணத்தை கொடுப்பதே ஆளும் வர்க்கத்தின் இரு கட்சி கொள்கையாக உள்ளது. பெருநிறுவன அமெரிக்காவிற்கு "தேசிய பூட்டுதல் இருக்காது" என்று பைடென் உறுதியளித்துள்ளார். அதே நேரத்தில் ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் வேலையற்றவர்களுக்கான உதவிகளில் கணிசமான அதிகரிப்பு இல்லாதிருப்பதை உறுதி செய்ய சதி செய்துள்ளனர்.

பைடென் தனது அமைச்சரவை தேர்வுகளை அறிவிக்கத் தொடங்கிய இரண்டு நாட்களில், டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி கிட்டத்தட்ட 1,000 புள்ளிகளால் உயர்ந்து, முன்னைய பதிவுகளை முறியடித்தது 30,000 புள்ளிகளைக் கடந்தது. ஒவ்வொரு இனத்திலும் பாலினத்திலும் உள்ள பணக்கார பிரிவுகள் நெறிதவறிய முறைகளால் செல்வந்தர்களாக வளர்கின்றன. அதே நேரத்தில் அனைத்து இனங்களின் தொழிலாளர்களும் தீவிரமடையும் அளவிலான பேரழிவுகளை எதிர்கொள்கின்றனர்.

இனம், பாலினம் மற்றும் பாலியல் ஆகியவற்றை அரசியல் அடிப்படையாகக் கொண்ட பைடெனின் அமைச்சரவைத் தேர்வு, தொழிலாளர்களைப் பிளவுபடுத்துவதற்கும், தங்களை செழுமைப்படுத்திக் கொள்வதற்கும், அரசாங்கத்தின் எந்தவொரு பிரிவிலும் பிரதிநிதித்துவமற்ற பரந்த மக்களை "பிரதிநிதித்துவம்" செய்வதாக பொய்யாக முன்வைப்பதற்குமான ஜனநாயகக் கட்சியின் முயற்சிகளில் ஒரு அடிப்படை பகுதியாக மாறியுள்ளது என்பதைக் காட்டுகிறது.

இதற்கிடையில், ட்ரம்ப்பும் அவரது பாசிச ஆதரவாளர்களும் அடையாள அரசியலில் ஊறிப்போயுள்ள ஜனநாயகக் கட்சியினர் மீது வளர்ந்து வரும் அதிருப்தியைப் சாதகமாக பயன்படுத்துகிறார்கள். டிரம்ப் 2020 தேர்தலில் கறுப்பின ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் தனது ஆதரவை இரட்டிப்பாக்கியதுடன், ஓர்பாலின, ஈர்பாலின, பாலின மாற்றம் செய்து கொண்ட மக்களிடையே தனது ஆதரவை மூன்று மடங்காக உயர்த்தினார். அதே சமயம், எதிர்காலத்திற்கான முன்னோக்குகள் இல்லாத இளம் வெள்ளை மக்களிடையே ஆட்சேர்ப்பதற்கான வாய்ப்புகளை தீவிர வலதுசாரிகள் காண்கிறார்கள். இவர்கள் ஜனநாயகக் கட்சியினரால் அவர்களின் விரக்திக்கு தகுதியான இனவெறிமிக்க "இழிவானவர்கள்" என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை என்று கூறப்படுகின்றனர்.

உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் சமூகத் தேவைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய, பணக்காரர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள டிரில்லியன் கணக்கான டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டு மனித துன்பங்களைத் தீர்க்க கிடைக்க வேண்டும். இதற்கு ஒரு பொதுவான போராட்டத்தில் அனைத்து தொழிலாளர்களின் மிகப்பெரிய சாத்தியமானளவு ஒற்றுமை தேவைப்படுகிறது.

உலகத் தொழிலாள வர்க்கம் ஆயிரக்கணக்கான வெவ்வேறு வேலைகளைச் செய்கிற, நூற்றுக்கணக்கான வெவ்வேறு மொழிகளைப் பேசும் மற்றும் நூற்றுக்கணக்கான வெவ்வேறு மதங்களையும் உள்ளூர் பழக்கவழக்கங்களையும் கொண்ட பில்லியன்கணக்கான மக்களைக் கொண்டுள்ளது. அவர்களின் தோல், முடி மற்றும் கண்கள் பல வண்ணங்களில் இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக போலி அறிவியல், பொய்கள் மற்றும் வன்முறை ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவருக்கொருவர் வெறுக்கும்படி தொழிலாளர்களுக்கு கற்பிக்க முதலாளித்துவம் முயன்றது.

சோசலிஸ்டுகளின் மிகப்பெரிய வரலாற்றுப் பணி, இந்த பாரிய, பன்முகத்தன்மை வாய்ந்த சமூக சக்தியை அதன் மகத்தான சமூக சக்தியை உணர்ந்து கொள்வதற்காக, இனவாதம் மற்றும் இன அரசியலின் நீண்ட மரபுகளை எதிர்த்துப் போராடுவதாகும். "இடதுசாரி" என்று பாசாங்கு செய்யும் அடையாள அரசியலின் வசதிமிக்க ஆதரவாளர்கள் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஒன்றிணைக்கும் வரலாற்றுப் போராட்டத்தின் கடுமையான எதிர்ப்பாளர்களாவார். இந்த காரணத்திற்காக அவர்களுக்கு சமரசமின்றி எதிர்ப்பை காட்டவேண்டும்.

Eric London