கொரோனா தொற்று பங்களாதேஷில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை வெகுவாக பாதிக்கின்றது

Wimal Perera
29 November 2020

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

பங்களாதேஷில் சமீபத்தில் நடந்த இணைய வழி விரிவுரையில், நாடு முழுக்க மாணவர்களும் இளைஞர்களும் முகம் கொடுக்கும் அதிகரித்துவரும் சமூக நெருக்கடியை பற்றி சுட்டிக்காட்டப்பட்டது. அக்டோபர் பிற்பகுதியில் நடந்த இந்த இணையவழிக் கூட்டம், ஐ.நா.வினால் அமைக்கப்பட்ட தொடர்ச்சியான அபிவிருத்தி இலக்குக்கான (Susana be Development Goals-SDG) பிரஜைகள் தளத்தால் நடத்தப்பட்டது. "கொவிட்-19 மற்றும் பங்களாதேஷ்: மீட்சிக்கான ஒரு இளம் நிகழ்ச்சி நிரல்" என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகளும் இதில் அடங்கும்.

கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள், ஏனையோர் டாக்கா மற்றும் இதர நகரங்களை சேர்ந்தவர்களாவர். பங்களாதேஷில் தொழில் செய்யும் இளம் தலைமுறையினரில் 89 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் விதிமுறைசார துறையில் வேலை செய்கின்றனர்.

அக்டோபர் 18 முதல் 27 வரை நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், 18 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 1160 பேர் மட்டுமே பங்கேற்றனர். இதில் 28 சதவீதத்தினர், கொவிட் -19 பெருந்தொற்றால் கல்வியை கைவிட்டு, தங்கள் குடும்பங்களை ஆதரிக்க வேலைக்கு சென்றவர்களாவர். சமூகத்தின் மற்ற ஏழைத் தட்டினர் போலவே, மாணவர்களும் அவாமி லீக் அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 20, 2020 வியாழக்கிழமை, பங்களாதேஷின் டாக்காவில் உள்ள ஒரு புற்றுநோய் மருத்துவமனையில் மிஷன் சேவ் பங்களாதேஷின் தன்னார்வலர் உணவுப் பொதிகளை விநியோகிக்கிறார். (AP Photo/Al-emrun Garjon)

SDG இன் பிரஜைகள் தளமானது, 2015 ஐக்கிய நாடுகளின் “வறுமைக்கு முடிவுகட்டவும் பூமியைப் பாதுகாப்பதற்குமான நடவடிக்கைக்கான அழைப்பு” எனப்படுவதுடன் தொடர்புபட்ட, நாடுமுழுக்க 104 அமைப்புகளைக் கொண்ட இயக்கமாகும்.

கருத்துக்கணிப்பின் படி, பதிலளித்தவர்களில் சுமார் 80 சதவீதத்தினர் நோய்த்தொற்றின் போது தங்களின் வருமானம் குறைந்துள்ளதை உணர்கின்றனர். பல இளைஞர்கள் தங்கள் படிப்பை கைவிட்டு வேலை தேடி போனபோதும், பெரும்பாலானோருக்கு வேலை கிடைக்கவில்லை. சுமார் 33 சதவீதத்தினர் இன்னும் "வேலை தேடுவதாக" பதிலளித்துள்ளனர், இதில் 9 சதவீத பட்டம் பெற்ற மாணவர்கள் வேலை "பெற சிரமப்பட்டனர்."

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் படி, பங்களாதேஷ் உழைப்பு படையில் 94.4 சதவீதம் பேர் 18 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள். இதில் 4 மில்லியனுக்கும் மேற்பட்டோர், நாட்டின் 4,500 உத்தியோகபூர்வ ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கின்றனர்.

ஒரு பங்களாதேஷ் கற்கை அமைப்பான பொருளாதார வடிவமைப்புக்கான தெற்காசிய வலையமைப்பு (South Asian Network on Economic Modelling -SANEM) ஆய்வுவின் படி, ஆகஸ்டில் 5 சதவீதத்தில் இருந்து செப்டம்பரில் 8 சதவீத ஆடைத் தொழிலாளர்கள் வேலையின்றி இருந்தனர். தொற்றுநோய்க்கு பிரதிபலித்த முதலாளிகள், தொழில்களை அழித்து, குறைந்த கூலி பெறும் தொழிலாளர்களை மேலும் சுரண்டுகின்றனர்.

ஏப்ரலில், ஆலைகளில் குறைந்த உற்பத்தியை செய்த போது, பெண்கள் மற்றும் ஆண்களின் சராசரி மாத வேலை நேரம் முறையே 43 மற்றும் 42 ஆகும். ஜூன், ஜூலை மற்றும் செப்டெம்பரில், 2019 வேலை நேரமான, மாதத்திற்கு 246 மணி நேரமாக உயர்ந்தது. பெரும்பாலான ஆடைத்தொழிற்சாலை தொழிலாளர்கள் தங்கள் மாத செலவீனங்களுக்கு மேலதிக நேர ஊதியத்தை நம்பியிருக்கின்றனர். அது மாத வருமானத்தில் சுமார் 20 சதவீதம் ஆகும்.

ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் சில்லறை வணிகத்திற்கு ஆடைகள் விநியோகிக்கும் ஒரு முதலாளி, bdnews24.com இற்கு கூறியதாவது: "தற்போது இரண்டாவது அலை தொடங்கியுள்ளது. எதிர்காலம் நமக்கு என்ன வைத்துள்ளது என்பது பற்றி நாம் அறியோம்." ஆலையில் ஐந்தில் ஒரு பங்கு தொழிலாளர்களை தான் குறைத்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

மாத சம்பளம் வாங்குவோர் மற்றும் தினக்கூலிகளின் வருமானம் கொவிட்-19 தொற்று வருவதற்கு முன் இருந்ததை விட 37 சதவீதம் குறைந்துள்ளது என உலக வங்கி கடந்த மாதம் தெரிவித்தது,

இந்த தொற்று நோயின் இன்னொரு சமூக நெருக்கடி, குறிப்பாக இளந்தலைமுறையினர் மத்தியில் மனச்சோர்வு மற்றும் உளவியல் பாதிப்பு அதிகரித்து வருவது ஆகும். இந்த தளத்தின் கருத்து கணிப்பின் படி, இதில் பதில் அளித்த மூன்றில் இரண்டு பங்கினர், எதிர்கால வருமானம் குறித்து கவலை அடைந்துள்ளதாக கூறியதுடன், 96 சதவீதத்தினருக்கு உளவியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினர்.

இந்த அழிவுகரமான புள்ளிவிபரங்களை அலட்சியம் செய்யும் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசாங்கம், சரவதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் உத்தரவுப்படி சமூக செலவீனங்கள் மீதான வெட்டுக்களை அமுல்படுத்தி வருகின்றது.

ஐ.எல்.ஓ. மற்றும் ஐக்கிய நாடுகளின் ஆசியா மற்றும் பசிபிக்கின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் கூட்டாக தயாரிக்கும், "நமக்கு வேண்டிய பாதுகாப்பு: ஆசியா மற்றும் பசிபிக்குக்கான சமூக கண்ணோட்டம்" என்ற அறிக்கையின்படி, பங்களாதேஷ் தற்போது மொத்த தேசிய வருமானத்தின் ஒரு சொற்ப தொகையையே நலத்திட்டங்களுக்காகப் பயன்படுத்துகிறது,

அக்டோபர் 15 அன்று வெளியான இந்த கட்டுரையின் படி, பங்களாதேஷ் மொத்த தேசிய உற்பத்தியின் 0.7 சதவீதத்தை மட்டுமே "சமூக பாதுகாப்பிற்கு" செலவிடுகிறது. இதில் இலங்கை 5.2 சதவீதமும், இந்தியா 3.2 சதவீதமும், பாகிஸ்தான் 1.9 சதவீதமும் செலவிடுகின்றன. பங்களாதேஷ் இவை அனைத்திலும் பின்நிற்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளிவிபர அலுவலகம், சமூக பாதுகாப்பை தனிநபர் மற்றும் குடும்பத்திற்கான நலன்புரி திட்டங்கள் அல்லது பணம் அல்லது அது போன்ற கைமாறுகின்ற ஒன்றாக வரையறுக்கின்றது.

நவம்பர் 6, ஆசிய-ஐரோப்பாவின் நிதி அமைச்சர்களின் 14 வது சர்வதேசிய மாநாட்டில் உரையாற்றும் போது, பிரதமர் ஹசினா, தனது அரசாங்கம், "பல்வேறு துறைகளுக்கும் மற்றும் சமூகத்தின் பல்வேறு தட்டுக்களுக்கும், 14.14 பில்லியன் அமெரிக்கன டொலர்கள் மதிப்புக்கு ஈடான 21 ஊக்கப் பொதிகளை அளித்துள்ளதாக" தம்பட்டம் அடித்துக் கொண்டார்.

ஹசீனாவின் பாசாங்கு கூற்றுக்கள், எஸ்.டி.ஜி. ஆய்வுக்கான பிரஜைகள் தளத்திற்கான அறிக்கையில் அம்பலத்துக்கு வந்துள்ளது. இந்த அறிக்கையில் 80 சதவீதத்தினர் "அரசாங்கத்திடம் இருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை" என்று பதில் அளித்தனர்.