ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அணுகுண்டு வீச்சுக்குப் பிந்தைய 75 ஆண்டுகள்

11 August 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நிராயுதபாணியான அப்பாவி மக்களுக்கு எதிராக ஏகாதிபத்தியம் முன்னொருபோதும் இல்லாத விதமாக நடத்திய மிகவும் கொடூரமான போர் குற்றங்களில் ஒன்றான ஹிரோஷிமா மீதான அணுகுண்டுவீச்சின் 75 ஆம் நினைவாண்டை இன்று குறிக்கிறது.

பயங்கரங்களின் மேகக் குவியலையும், நச்சு கதிரியக்கம் மற்றும் உலகளாவிய நிர்மூலமாக்கலுக்கான சாத்தியக்கூறையும் மனிதகுலத்திற்கு அறிமுகப்படுத்திய இந்த குற்றகர நடவடிக்கையின் நினைவாண்டு ஏதேனும் குறிப்பிடத்தக்க உத்தியோகபூர்வ நினைவுகூர்தலைப் பெறும் என்பதற்கு அங்கே எந்த அறிகுறியும் இல்லை. இருப்பினும் அமெரிக்க ஏகாதிபத்தியம் அமெரிக்க மற்றும் உலக மக்களின் முதுகுக்குப் பின்னால் ஒரேசீராக பாரியளவில் அணுஆயுத தளவாடங்களைக் கட்டமைத்து, ஓர் ஆக்ரோஷமான அணுஆயுத போர் கோட்பாட்டைப் பின்தொடர்கின்ற நிலையில், அதன் முக்கியத்துவம் ஒருபோதும் இல்லாதளவிற்கு மிக பெரியளவில் உள்ளது.

1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6, தெளிவான வானம் சூழ்ந்த அதிகாலை, 8.15 மணிக்கு, “Little Boy” என்று குறியீட்டுப் பெயர் கொண்ட ஓர் அணுகுண்டை, அமெரிக்க B-29 ரக ஆற்றல் வாய்ந்த குண்டுவீசி விமானமான Enola Gay ஜப்பானிய நகரமான ஹிரோஷிமா மீதும் அதன் ஒரு கால் மில்லியன் மக்கள் மீது வீசியது.

15 இல் இருந்து 20 கிலோ டன் TNT வெடிமருந்தின் வெடிப்பாற்றலுடன், அந்த குண்டின் அழிவுகரமான சக்தி அதற்கு முன்னர் எந்தவொரு போர்க்களத்திலும் பயன்படுத்தப்படுத்தப்பட்ட வெடிகுண்டை விட பல ஆயிரம் மடங்கு அதிகமாக இருந்தது.

உடனடியாகவோ அல்லது ஒரு சில மணி நேரத்திலோ அந்த குண்டு ஏற்படுத்திய நெருப்புப்புயலில் மதிப்பிடப்பட்ட 80,000 பேர் கொடூரமாக எரிந்து, கருகி, பஸ்பமாக காற்றில் கரைந்து இறந்தனர், அந்த குண்டு உருவாக்கிய அதிர்ச்சி அலையுடன் சேர்ந்து அது அந்நகரையே தரைமட்டமாக்கியது. வெறும் மூன்று நாட்களுக்குப் பின்னர், அமெரிக்க குண்டுவீசி விமானம் ஒன்று நாகசாகி நகரம் மீது இரண்டாவது அணுகுண்டை வீசியது, அதில் மேலும் 40,000 பேர் ஒட்டுமொத்தமாக கொல்லப்பட்டார்கள். இவ்விரு தாக்குதல்களுக்கும் இடையே, உடனடியாகவோ அல்லது சில நாட்களிலேயோ வாரங்களிலேயோ தீக்காயங்களாலும், வேறு காயங்களாலும், கதிர்வீச்சு நோய்களாலும் உயிரிழந்து பலியானவர்களின் எண்ணிக்கை 250,000 மற்றும் 300,000 க்கும் இடையே இருக்குமென மதிப்பிடப்படுகிறது, அவர்களில் 90 சதவீதத்தினர் அப்பாவி ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் ஆவர்.

ஹிரோஷிமாவில் உயிர்பிழைத்தவர்களின் விபரங்கள் பெருந்திரளான மக்கள் உயிரிழப்புகள் மற்றும் மனித அவலங்களின் நரக சித்திரத்தைச் சித்தரித்துக் காட்டின.

அந்த குண்டுவெடிப்புக்குப் பின்னர் டாக்டர் Michihiko Hachiya கற்பனை செய்யவியலாத அந்த காட்சியைப் பின்வருமாறு விவரித்தார்: “வீதிவழி பேருந்துகள் நின்றிருந்தன. அவற்றுக்குள் டஜன் கணக்கிலான சடலங்கள் அடையாளம் காணமுடியாது கருகிப்போய் நிரம்பியிருந்தன. தீயணைப்பு நீர்த்தாங்கிகளில் மனிதர்களை வைத்து உயிருடன் கொதிக்கவைத்தது போல் விளிம்பு வரையில் நிரம்பியிருந்ததை நான் பார்த்தேன்... அங்கே மக்களின் நிழல்போன்ற உருவங்கள் மங்கலாக தெரிந்தன, அவர்களில் சிலர் பேய்கள் நடந்து செல்வதைப் போல தெரிந்தார்கள். மற்றவர்களோ வலியினால் சோளக்காட்டு பொம்மைகளைப் போல நகர்ந்து கொண்டிருந்தார்கள், அவர்களின் கைகள் உடலிலிருந்து வெளியே தள்ளிக்கொண்டு முன்கைகளும் மணிக்கட்டுகளும் தொங்கிக்கொண்டிருந்தன. எரிக்கப்பட்டிருந்த அந்த மக்கள் தமது கைகள் தோலில்லாத உடலில் உராய்ந்து வலி ஏற்படுவதைத் தடுக்கவே அவர்கள் தங்கள் கரங்களைத் தூக்கிப் பிடித்திருந்தார்கள் என்பதை நான் தற்செயலாக புரிந்து கொள்ளும் வரையில் இவர்களின் நடவடிக்கை எனக்கு புதிராக இருந்தது.”

உயிர்பிழைத்த மற்றொருவர் அவர் என்ன பார்த்தார் என்பதை விவரிக்கையில், “நூற்றுக் கணக்கானவர்கள் இன்னமும் உயிரோடு இருக்கிறார்கள் … வெற்றுவெளியில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். சிலருக்கு அரைவாசி உயிர் போய்விட்டது, அவர்களின் துயரத்தில் துடித்துக்கொண்டிருந்தார்கள்... அவர்கள் உயிருடன் இருக்கும் பிரேதங்கள் என்பதை விட வேறொன்றுமில்லை,” என்றார்.

ஜேர்மன் ஏசு விசுவாசியும் மதபோதகருமான அருட்தந்தை Wilhelm Kleinsorge சிப்பாய்களின் ஒரு குழுவை எதிர்கொண்டதைக் குறித்து பேசினார். அவர்களின் "முகங்கள் முற்றிலுமாக எரிந்து போயிருந்தன, அவர்களுக்குக் கண் இமைகளே இல்லாமல் போயிருந்தது, அவர்களின் உருகிய கண்களில் இருந்து ஒழுகிக் கொண்டிருந்த திரவம் அவர்களின் தாடை எங்கிலும் வழிந்து கொண்டிருந்தது... அவர்களின் வாய் புடைத்து வீங்கி போயிருந்தன, காயங்களில் சீழ் படிந்திருந்தன, போதுமானளவு உடலை நீட்டி அவர்களால் தேனீர் கோப்பையைக் கூட எடுக்க முடியவில்லை,” என்றார்.

மனித வரலாற்றின் மிகவும் கொடூரமான மற்றும் இரத்தக்கறை படிந்த மோதலான இரண்டாம் உலக போரில் 70 மில்லியன் பேர் கொல்லப்பட்டிருந்தார்கள். மனிதகுலத்தின் எந்தவொரு மிகவும் மோசமான பயங்கரங்களை விடவும் மிதமிஞ்சிய அட்டூழியங்களை அது கண்டது. அப்பாவி மக்களை நிர்மூலமாக்குதல் என்பது அரசு கொள்கையாக நடத்தப்பட்டது, அது ஆறு மில்லியன் யூதர்களை நாஜிக்கள் படுகொலை செய்வதில் சென்றுமுடிந்தது.

வெறுக்கத்தக்க போர் குற்றங்களுக்கு, ஆசியா மீது ஜப்பானிய ஏகாதிபத்திய மேலாதிக்கத்தைத் தொடர்வதற்கான ஜப்பானின் ஏகாதிபத்திய ஆட்சியுமே கூட பொறுப்பாகும். இதில் நான்ஜிங் படுகொலை உள்ளடங்கும், இதில் 1937 இல் கைதுசெய்யப்பட்ட ஏறக்குறைய 300,000 சீன சிப்பாய்கள் மற்றும் அப்பாவி மக்களை ஜப்பானிய இராணுவம் படுகொலை செய்தது.

ஒரு கணப்பிடப்பட்ட போர் குற்றம் பொய்களால் நியாயப்படுத்தப்பட்டது

எந்தவொரு இராணுவ அவசியமும் இல்லாமல் அப்பாவி மக்களை நிர்மூலமாக்கியததற்கும் மற்றும் அந்த குற்றத்தை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட அப்பட்டமான பொய்களுக்காகவும், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அணுகுண்டுவீச்சுக்களின் காட்டுமிராண்டித்தனம் ஓர் உணர்வார்ந்த கணக்கீட்டிலிருந்து, இன்னமும் அப்பாற்பட்டு நிற்கிறது.

அந்த குண்டுவீச்சை முதன்முதலில் போர் குற்றங்களாக கண்டித்தவர்களில் அமெரிக்க ட்ரொட்ஸ்கிஸ்டுகள் இருந்தனர். அமெரிக்க ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஸ்தாபகரான ஜேம்ஸ் பி. கனன் (மெக்சிகோவில் ஆகஸ்ட் 21, 1940 இல் ஒரு ஸ்ராலினிச முகவரால் படுகொலை செய்யப்பட்ட) லியோன் ட்ரொட்ஸ்கிக்காக ஆகஸ்ட் 22, 1945 இல் நியூயோர்க்கில் நடந்த ஒரு நினைவுக் கூட்டத்தில் கூறுகையில், “இரண்டு அணுகுண்டுகளுடன், இரண்டு கணக்கிட்ட தாக்குதல்களில் அமெரிக்க ஏகாதிபத்தியம் அரை மில்லியன் கணக்கான மனித உயிர்களைக் கொன்றது அல்லது காயப்படுத்தியது. இளைஞர்களும், வயதானவர்களும், மழலைக் குழந்தைகளும், உடல் தளர்ந்த வயோதிகர்களும், புதிதாக திருமாணவர்களும், ஆரோக்கியமான மற்றும் நோய்வாய்ப்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அவர்கள் அனைவருமே வோல் ஸ்ட்ரீட்டின் ஏகாதிபத்தியவாதிகளுக்கும் ஜப்பானில் இருந்த அதேபோன்ற கும்பலுக்கும் இடையிலான ஒரு போட்டியின் இரண்டு தாக்குதல்களில் உயிரிழக்க வேண்டியிருந்தது... வார்த்தையால் கூறவியலாத என்னவொரு அட்டூழியம்! அமெரிக்காவுக்கு, உலகிற்கே அறிவொளி வழங்கும் நியூயோர்க் துறைமுக சுதந்திர தேவி சிலை நிறுவப்பட்ட இந்த அமெரிக்காவுக்கு, என்னவொரு அவமானம் ஏற்பட்டுள்ளது. இப்போது அதன் பெயரால் உலகம் திகிலூட்டப்படுகிறது,” என்றார்.

அவர் தொடர்ந்து கூறினார்: “புரட்சிகர மார்க்சிஸ்டுகள், மனிதகுலம் எதிர்கொள்ளும் மாற்றீடு சோசலிசமா அல்லது ஒரு புதிய காட்டுமிராண்டித்தனமா என நீண்ட காலத்திற்கு முன்னரே கூறினர். முதலாளித்துவம் அழிவிற்குள் செல்லவும், மனிதசமுதாயத்தை அதனுள் இழுத்துச் செல்லவும் அச்சுறுத்துகிறது. ஆனால் இந்தப் போரில் அபிவிருத்தி செய்யப்பட்டு, எதிர்காலத்திற்காக திட்டமிடப்பட்டவற்றின் வெளிச்சத்தில், மாற்றீட்டானது இன்னும் துல்லியமாக என்னவென்பதை இப்போது தெளிவாகச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்: மனிதகுலம் எதிர்கொள்ளும் மாற்றீடு சோசலிசமா அல்லது நிர்மூலமாக்கலா! என்பதே. முதலாளித்துவம் நிலைத்திருக்க அனுமதிக்கப்படுகிறதா அல்லது இந்த கோளத்தில் மனித இனம் தொடர்ந்து உயிர்வாழ வேண்டுமா என்பதுதான் பிரச்சினை.”

இந்த அணு குண்டுவெடிப்புக்கு உத்தரவிட்ட ஜனாதிபதி ஹாரி ட்ரூமனின் நிர்வாகம், அதை அவசியமானதாகவும், டோக்கியோவின் சரணடைதலை கட்டாயப்படுத்துவதற்கும் அதன் மூலம் ஜப்பானின் மீது இரத்தக்களரி அமெரிக்க படையெடுப்பைத் தவிர்ப்பதற்கும் தேவையான மற்றும் மனிதாபிமான வழிமுறையாக அவற்றை அமெரிக்க மக்களுக்கு விற்றது.

அந்த குண்டுவீச்சுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் நாஜிசத்தின் தோல்வியையும், ஐரோப்பிய வெற்றி தினத்தையும் (Victory in Europe - VE தினம்) கொண்டாடி இருந்த போரினால் களைத்துப் போன அமெரிக்க மக்களைப் பொறுத்த வரையில், ட்ரூமனின் வாதம் செயலுக்கு உதவாததாக நிரூபணமானது. ஐரோப்பாவின் போர்க்களங்களில் இருந்து ஒரு மில்லியன் கணக்கான துருப்புக்கள் பசிப்பிக்கிற்கு மாற்றுவதற்கான உத்தரவுகள் பகிரங்கமாக வெளியிடப்பட்டிருந்தன. அனைத்திற்கும் மேலாக அமெரிக்க இராணுவம் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியின் மனிதப் படுகொலையின் அளவை முடிமறைத்திருந்தது.

ஆனால் அந்த குண்டுவீச்சால் ஒரு "கால் மில்லியன்,” “அரை மில்லியன்" அல்லது "ஒரு மில்லியன்" அமெரிக்கர்களின் உயிர்களே கூட காப்பற்றப்பட்டதாக ட்ரூமன் வெவ்வேறு விதமாக விளக்கிய வாதங்கள் பொய்யாக இருந்தன. இது வெறுமனே அமெரிக்க ஏகாதிபத்தியம் மீதான "திருத்தல்வாத" வரலாற்றாளர்கள் மீதான இடதுசாரி விமர்சனத்தின் தீர்மானமாக மட்டும் இருக்கவில்லை, மாறாக அவர் நிர்வாகத்தின் மற்றும் அமெரிக்க இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள், அணுகுண்டு தாக்குதல்கள் அல்லது ஒரு படையெடுப்பு இல்லாமலேயே ஜப்பான் சரணடைய தயாராக இருந்தது என்பதில் நிச்சயமாக இருந்தனர்.

ஐரோப்பாவில் தலையாய நேசநாட்டுப் படைகளின் தளபதியும் அமெரிக்க ஜனாதிபதியாக பின்னர் வரவிருந்தவருமான ஜெனரல் ட்வைட் டி. ஐசன்ஹோவர், அந்த திட்டமிடப்பட்ட குண்டுவீச்சுக்கள் குறித்து போர்த்துறை செயலர் ஹென்றி லீவிஸ் ஸ்டிம்சன் (Henry Lewis Stimson) அவருக்குக் கூறிய போது அவரின் விடையிறுப்பைக் குறித்து அவரின் நினைவுக்குறிப்பில் பின்வருமாறு எழுதினார்: “தொடர்புடைய உண்மைகள் மீதான அவரின் ஒப்பித்தலின்போது, என் உணர்வு மிகவும் தளர்ந்திருந்ததை உணர்ந்தேன், ஆகவே முதலாவதாக ஜப்பான் ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டிருந்தது என்பதுடன் அந்த குண்டைவீசுவது முற்றிலும் அவசியமற்றது என்ற அடிப்படையிலும், இரண்டாவதாக அமெரிக்கர்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான ஒரு நடவடிக்கையாக கட்டாயம் இனி அதை பயன்படுத்த வேண்டியதில்லை என்று நான் நினைத்ததால் அந்த ஆயுதத்தைப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் அதிர்ச்சிகரமான உலக கருத்தை நம் நாடு தவிர்க்க வேண்டுமென நான் நினைத்தேன் என்பதாலும் நான் என்னுடைய கடுமையான மனக்கசப்புகளை வெளியிட்டேன்.”

ஜனாதிபதி ட்ரூமனின் தலைமை தளபதி அட்மிரல் வில்லியம் லீஹெ 1950 இல் எழுதுகையில் இன்னும் அதிக வெளிப்படையாக இருந்தார்: “ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது இந்த கொடூரமான ஆயுதத்தைப் பிரயோகிப்பது ஜப்பானுக்கு எதிரான எனது போரில் எந்தவிதத்திலும் சடரீதியில் உதவியாக இருக்கவில்லை... அதை முதலில் பயன்படுத்தியதில், நாம்… இருண்ட காலங்களின் காட்டுமிராண்டித்தனத்தின் வழிவந்த ஒரு பொதுவான தரமுறையை ஏற்றோம். அந்த விதத்தில் போர் நடத்த நான் கற்றுக் கொடுக்கப்படவில்லை என்பதோடு பெண்கள், குழந்தைகளை அழிப்பதன் மூலமாக போர்களை ஜெயிக்க முடியாது.”

1949 இல், இராணுவ விமானப் படை தளபதி ஜெனரல் ஹென்றி "Hap” ஆர்னால்ட் பின்வருமாறு எடுத்துரைத்தார்: “அணுகுண்டோ அல்லது அணுகுண்டு இல்லாமலோ ஜப்பானியர்கள் ஏற்கனவே தோல்வியின் விளிம்பில் இருந்தார்கள் என்பது எப்போதும் நமக்கு தெரிந்ததே” என்றார்.

1945 வாக்கில், வாஷிங்டன் ஜப்பானிய தகவல்தொடர்பைக் குறுக்கீடு செய்ததன் மூலம், அந்த ஆண்டு வசந்தகாலத்தில் இருந்து சரணடைய ஓர் ஏற்புடைய வடிவத்தைத் தேடிக் கொண்டிருந்தது என்பதையும் ஜப்பானிய சாம்ராஜ்ஜிய பேரரசர் அவரே போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஆதரவாக அவர் இராணுவத்துடன் தலையீடு செய்ய தயாராக இருந்தார் என்பதையும் அது நன்கு அறிந்திருந்தது. ஆனாலும் அமெரிக்கா ஒரு "நிபந்தனையற்ற சரணடைவை" கோரி, ஜப்பானிய சமாதான ஆர்வலர்களை மறுத்தளித்தது. பேரரசர் ஹிரோஹிடோ அரியணையிலிருந்து விலகுவார், ஆனால் ஜேர்மனியின் மூன்றாம் குடியரசின் உயிர்தப்பிய தலைவர்களைப் போல இவர் போர் குற்றவாளியாக வழக்கில் இழுக்கப்பட மாட்டார் என்று ஜப்பான் வலியுறுத்தியது என்பதே ஒரே நிபந்தனையாக இருந்தது. இறுதியில் அமெரிக்கா இந்த விட்டுக்கொடுப்புக்கு எவ்விதத்திலும் உடன்பட்டிருந்தது.

போர்த்துறை உருவாக்கி இருந்த ஓர் ஆலோசனை குழுவான அமெரிக்க மூலோபாய குண்டுவீச்சு ஆய்வு மையம் 1946 இல் நிறைவாக குறிப்பிடுகையில், “அந்த அணுகுண்டு தாக்குதல்கள் இல்லாமலேயே கூட, ஜப்பான் மீதான வான்வழி மேலாதிக்கமே நிபந்தனையற்ற சரணடைவைக் கொண்டு வருவதற்குப் போதுமான அழுத்தத்தை அளித்து, படையெடுப்புக்கான அவசியத்தையே ஏற்படுத்தவில்லை... அந்த அணுகுண்டுகள் வீசப்படாமல் இருந்திருந்தாலும் கூட, ஜப்பானுக்கு எதிராக ரஷ்யா போரில் இறங்கி இருக்காவிட்டாலும் கூட, படையெடுப்பு திட்டமிடப்படாமல் அல்லது பரிசீலிக்கப்படாமல் இருந்திருந்தாலும் கூட ஜப்பான் சரணடைந்திருக்கும்,” என்று குறிப்பிட்டது.

அணுகுண்டும், அமெரிக்க மேலாதிக்கத்திற்கான முனைவும்

இரண்டாம் உலக போரை முடிவுக்குக் கொண்டு வர ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணுகுண்டுவீச்சு தேவைப்பட்டிருக்கவில்லை என்றால், அவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய மேலாதிக்கத்தைத் திணிப்பதற்காக அதன் இடைவிடாத முயற்சியால் உந்தப்பட்ட ஒரு மூன்றாவது பாதையில் தீர்க்கமான படிகளைப் பிரதிநிதித்துவம் செய்தன.

குண்டுவீச்சு என்பது அதன் வார்த்தையளவிலான அர்த்தத்தில் பயங்கரவாத நடவடிக்கைகள் ஆகும். ஹிரோஷிமா மக்கள் வழமையான குண்டுவீச்சுக்கு உள்ளாகவில்லை என்பதாலும், ஆகவே புதிய ஆயுதத்தின் மலைப்பூட்டும் பாதிப்புகளை எடுத்துக்காட்டுவதில் அது பரிசோதனை பொருளாக சேவையாற்றும் என்பதாலுமே துல்லியமாக ஹிரோஷிமா ஓர் இலக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த குண்டைப் பிரயோகிப்பதைத் தீர்மானிப்பதற்காக உருவாக்கப்பட்டிருந்த இடைக்கால குழுவின் செயலக நடவடிக்கைக் குறிப்புகள், “ஓர் ஆழ்ந்த உளவியல்ரீதியிலான பாதிப்பை" உருவாக்கும் நோக்கில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதிலும், “பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களையும் நெருக்கமாக தொழிலாளர்களின் வீடுகள் சூழ்ந்த இடத்திலும் உள்ள இன்றியமையா போர் ஆலை மிகவும் விரும்பத்தக்க இலக்காக இருக்க வேண்டும்" என்பதிலும் அங்கே உடன்பாடு இருந்ததாக குறிப்பிடுகிறது.

இந்த பயங்கரம் வெறுமனே ஜப்பானிய மக்களை மட்டுமல்ல, மாறாக ஒவ்வொரு நாட்டின் தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் சேர்த்து, ஒட்டுமொத்த உலகையும், முதலும் முக்கியமுமாக சோவியத் ஒன்றியத்தை, பீதியூட்டுவதை நோக்கமாக கொண்டிருந்தது.

நாஜி ஜேர்மனிக்கு எதிரான போரில் அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் ஒன்றியம் கூட்டணி நாடுகளாக இருந்தன. இருப்பினும், அமெரிக்கா மற்றும் பிரிட்டனும் ஜப்பான் உடனான போரில் இருந்த நிலையில், மாஸ்கோவும் டோக்கியோவும் 1941 இல் இருந்து 1945 வரையில் ஒரு நடுநிலையான உடன்படிக்கையைப் பேணியிருந்தன.

பெப்ரவரி 1945 இல் அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட், பிரிட்டிஷ் பிரதம மந்திரி வின்ஸ்டன் சேர்ச்சில் மற்றும் சோவியத் தலைவர் ஜோசப் ஸ்ராலின் கலந்து கொண்ட யால்டா மாநாட்டில், ஸ்ராலின் நடுநிலை உடன்படிக்கையை முறித்துக் கொள்ளவும் மற்றும் நாஜி ஜேர்மனியின் தோல்வியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் ஜப்பானுக்கு எதிராக போரில் நுழையவும் உடன்பட்டார். ஜப்பானின் வேகமாக தோல்வியை உறுதிப்படுத்துவதில் சோவியத் தலையீடு தீர்க்கமானதாக பார்க்கப்பட்டது. இராணுவத் தியாகங்கள் மற்றும் செம்படையின் வெற்றிகளில் தன்னைத் அடித்தளமாக கொண்ட ஸ்ராலின் கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் சோவியத் செல்வாக்கெல்லையை அங்கீகரிக்குமாறும், அத்துடன் 1905 ரஷ்ய-ஜப்பானிய போரில் மாஸ்கோவிடமிருந்து பறிக்கப்பட்டிருந்த மங்கோலியா மற்றும் ஆசிய பகுதிகள் மீதான கட்டுப்பாட்டிற்கும் அழுத்தமளித்தார்.

டோக்கியோவுடனான நடுநிலை உடன்படிக்கை முடித்துக் கொள்வதாகவும், ஜப்பானுக்கு எதிராக போரில் இறங்க ஆகஸ்ட் 8 ஆம் தேதியைக் குறித்திருப்பதாகவும் ஏப்ரல் 1945 இல் மாஸ்கோ டோக்கியோவுக்குத் தகவல் அனுப்பியது.

இப்போது பாசாங்குத்தனமாக ஜப்பானுக்கு எதிரான போரில் அதே தரப்பில் இருந்தாலும், அவை ஜேர்மனி உடனான போரில் இருந்ததால், ஏகாதிபத்திய சக்திகளுக்கும், அமெரிக்கா மற்றும் பிரிட்டன், சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான பதட்டங்கள் சீராக அதிகரித்திருந்தன. ஸ்ராலினிச அதிகாரத்துவம் தொழிலாள வர்க்கத்திடமிருந்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்த சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச சீரழிவு இருந்தாலும், 1917 அக்டோபர் புரட்சியால் ஸ்தாபிக்கப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட சொத்துறவுகள் நீடித்திருந்தன. ஏகாதிபத்திய சக்திகளுடன் ஏற்பாட்டை செய்து கொள்வதற்கான ஸ்ராலினின் பெரும் முயற்சிகள் இருந்தாலும், பிரிட்டிஷ் ஆளும் உயரடுக்கோ அல்லது அமெரிக்க ஆளும் உயரடுக்கோ ஒருபோதும் இத்தகைய சொத்துறவுகள் நீடித்திருப்பதற்கு தங்களை இணங்குவித்துக் கொள்ளவில்லை, அந்த சொத்துறவுகள் சர்வதேச அளவில் புரட்சிக்குத் தூண்டுதளிக்குமென அவை அஞ்சின.

ஜூலை 1945 இல், அமெரிக்க, பிரிட்டன் மற்றும் சோவியத் ஒன்றிய தலைவர்கள் மீண்டும் ஜேர்மனியின் போட்ஸ்டாமில் சந்தித்தனர். ஏப்ரல் 1945 இல் ரூஸ்வெல்ட் மரணத்திற்குப் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி பதவியை ஏற்றிருந்த ட்ரூமனின் தூண்டுதலின் பேரில் அந்த மாநாடு பின்போடப்பட்டிருந்தது. ஸ்ராலினோடு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு முன்னதாக அவர் கட்டுப்பாட்டின் கீழ் அணுகுண்டு பரிசோதனையை வெற்றிகரமாக செய்ய விரும்பிய ட்ரூமன், காலத்தை கடத்தினார்.

போட்ஸ்டாமில் புதிய அமெரிக்க ஜனாதிபதியின் தொனி குறிப்பிட்டளவுக்கு யால்டாவில் ரூஸ்வெல்டின் தொனியிலிருந்து மாறியிருந்தது. ஜூலை 16, 1945 இல் நியூ மெக்சிகோவின் அலமொகொர்டோவில் முதன்முதலாக வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட அணுகுண்டு, (சோவியத் மக்களைக் குறிப்பிடும் விதத்தில்) "அச்சிறுவர்களுக்கு சுத்தியல்" வழங்கியிருப்பதாக ட்ரூமன் அங்கே ஜம்பமடித்ததுடன், மன்ஹட்டன் திட்டம் மீது செயல்பட்டு வந்த சோவியத் உளவாளிகளால் அமெரிக்காவின் புதிய ஆயுதம் குறித்து தகவல் பெற்றிருந்த ஸ்ராலினுடனான பேச்சுவார்த்தையில் அவர் மிகவும் ஆக்ரோஷமாகவும் அகந்தையோடும் இருந்தார்.

ஜப்பான் உடனடியாக, அதுவும் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் அல்லது "காலந்தாழ்த்தாத முழு அழிவை" முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்ற ஓர் இறுதி எச்சரிக்கையுடன் போட்ஸ்டாம் மாநாடு நிறைவடைந்தது. டோக்கியோவால் அத்தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு சூழலை உறுதிப்படுத்தி வைக்கும் விதத்தில் அத்தீர்மானம் எழுதப்பட்டிருந்தது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சீனாவின் சியாங் கேய் ஷேக் அதில் கையெழுத்திட்டிருந்தனர் என்றாலும் சோவியத் ஒன்றியம் அதில் கையெழுத்திடவில்லை.

வேகமாக அந்த குண்டுகளை அனுப்பி குண்டுவீசுவதற்கான பரபரப்பே அதற்குப் பின்னர் நடந்தது. ஜப்பானைத் தோற்கடிப்பதற்கான எந்தவொரு இராணுவ அவசியதாலும் தேதி இலக்கு நிர்ணயிக்கப்படவில்லை, மாறாக பசிபிக்கிற்குள் சோவியத் ஒன்றியம் போரில் நுழைவதன் தாக்கத்தை தடுப்பதற்கான அவசியத்தால் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆசியா மற்றும் ஜப்பானிலுமே சோவியத் செல்வாக்கு விரிவாவதை வாஷிங்டன் தடுக்க விரும்பியது. அவ்விதத்தில் சோவியத்கள் அவற்றின் இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, முதல் அணுகுண்டு ஆகஸ்ட் 6 இல் வீசப்பட்டதுடன், சோவியத் தலையீட்டுக்கு ஒரு நாள் முன்னதாகவும் ஹிரோஷிமாவின் நிர்மூலமாக்கலை ஜப்பானிய அரசாங்கம் புரிந்து விடையிறுப்பதற்கு நேர அவகாசம் கிடைப்பதற்கு முன்னரே ஆகஸ்ட் 9 இல் அடுத்த குண்டு வீசப்பட்டது.

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அணுகுண்டுவீச்சுடன் இரண்டாம் உலக போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில், ஜனநாயகத்திற்காக போராடுவதற்காகவும், பாசிசவாதம் மற்றும் இராணுவவாதத்தைத் தோற்கடிப்பதற்குமே அமெரிக்க போருக்குள் நுழைந்திருந்ததாக அமெரிக்க ஏகாதிபத்தியம் எல்லா பொய் வாதங்களையும் வழங்கியது. மில்லியன் கணக்கான அமெரிக்க தொழிலாளர்கள் அதுபோன்ற ஜனநாயக உணர்வுகளால் உந்தப்பட்டு போருக்குச் சென்றிருந்த நிலையில், ஆளும் முதலாளித்துவ உயரடுக்கு மிகவும் வேறுபட்ட நோக்கங்களை மனதில் கொண்டிருந்தது.

வரலாற்றாளர் கேப்ரியல் ஜேக்சன் பொருத்தமாக குறிப்பிட்டவாறு, “... மனோரீதியில் மிகவும் சாதாரணமான ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை நிர்வாகி ஒருவர் அக்குண்டை நாஜி சர்வாதிகாரி பயன்படுத்தி இருக்கக்கூடிய விதத்தில் பயன்படுத்த முடியும் என்பதையே அந்த அணுகுண்டின் பயன்படுத்தல் எடுத்துக்காட்டியது. இவ்விதத்தில், வெவ்வேறு விதமான அரசுகளிடையே தார்மீக வித்தியாசங்கள் இருப்பதாக நினைத்திருந்த எவரொருவரைப் பொறுத்த வரையிலும் பாசிசத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை அமெரிக்கா இல்லாதொழித்தது.

வாஷிங்டனில் அமைந்திருந்த முதலாளித்துவ ஜனநாயகத்திற்கும் பேர்லினின் நாஜி ஆட்சிக்கும் இடையே என்ன தான் கூர்மையான அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும், இரண்டுமே ஏகாதிபத்திய போர் நோக்கங்களையே பின்தொடர்ந்து கொண்டிருந்தன: அதாவது பேர்லினைப் பொறுத்த வரையில், ஐரோப்பா மீதான அதன் மேலாதிக்கத்திற்கானது, வாஷிங்டனைப் பொறுத்த வரையில் உலகெங்கிலுமான அதன் மேலாதிக்கத்திற்கானது.

இறுதியில் அந்த அணுகுண்டு ட்ரூமன் நம்பிய "சுத்தியலை" விட பலவீனமானதாக நிரூபணமானது. ஆகஸ்ட் 1949 இல், சோவியத் ஒன்றியம் அதன் சொந்த அணுகுண்டைப் பரிசோதித்தது. இதேபோல அமெரிக்காவின் அணுகுண்டு பயங்கரவாத முயற்சி 1949 சீனப் புரட்சியைத் தடுப்பதிலும் மற்றும் இரண்டாம் உலக போருக்குப் பின்னர் பெருந்திரளான மக்களின் காலனித்துவ-எதிர்ப்பு போராட்டங்களின் அலையைக் கட்டுப்படுத்துவதிலும் தோல்வி அடைந்தது.

அணுஆயுத போர் அச்சுறுத்தல்

ட்ரூமன் நிர்வாகம் கொரிய போரில் அணுகுண்டுகளைப் பயன்படுத்த கருதியிருந்த நிலையில், அது ரஷ்யாவுடன் ஓர் அணுஆயுதப் போரைத் தூண்டுமென்ற அச்சத்தில் அது பின்வாங்கியது. கொரியாவுக்கான அமெரிக்க படைகளின் தளபதி ஜெனரல் டக்ளஸ் மெக்ஆர்தர் இத்தகைய ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்குத் தொடர்ந்து அழுத்தமளித்தார்.

1961 இல் பேர்லின் நெருக்கடி மற்றும் அக்டோபர் 1962 இல் கியூப ஏவுகணை நெருக்கடி இரண்டிலும் ஜனாதிபதி ஜோன் கென்னடியின் அமெரிக்க நிர்வாகம் உலகை ஓர் பேரழிவுகரமான அணுஆயுத போரின் விளிம்புக்குக் கொண்டு வந்தது. அதேபோல, மனித சமூகத்தையே முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய அணுஆயுத பரிவர்த்தனைகளின் அச்சுறுத்தல், 1980 களின் ஆரம்பத்தில் பனிப்போர் உச்சத்தில் இருந்த போது அமெரிக்க ஆயுதமயமாக்கலின் போதும் பல சந்தர்ப்பங்களிலும் நூலிழையில் தவிர்க்கப்பட்டன.

ட்ரூமனில் இருந்து ஒவ்வொரு அமெரிக்க நிர்வாகமும், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசு கட்சி ஒன்றுபோல, அணுஆயுத போருக்கான சாத்தியக்கூறை எப்போதுமே "மேசையில்" வைத்துள்ளன என்பதே யதார்த்தமாக உள்ளது.

அண்மித்து மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு பனிப்போர் முடிந்த நிலையில், ஓர் அணுஆயுத மனித அழிவு குறித்த அச்சுறுத்தல் பின்புலத்திற்கு தள்ளப்பட்டுவிட்டதான பரந்த கருத்து நிலவுகிறது. இதைவிட மிகப் பெரிய அபாயகரமான பிரமை இருக்க முடியாது.

கொரியாவில் இருந்து ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியா வரையில் முன்னாள் காலனித்துவ நாடுகள் வரையில் மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ள தசாப்த கால போர்களில், அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் இராணுவக் கோட்பாட்டை "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்றழைக்கப்படுவதில் இருந்து அணுஆயுதமேந்திய ரஷ்யா மற்றும் சீனாவுடனான "வல்லரசு" மோதலுக்கான தயாரிப்பு என்பதாக மாற்றி உள்ளது.

ஒபாமா நிர்வாகம் 1 ட்ரில்லியன் டாலர் அணுஆயுத நவீனமயமாக்கல் திட்டத்தைத் தொடங்கினார், அது வெறுமனே ட்ரம்பின் கீழ் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, அதேவேளையில் நடைமுறையளவில் ஒவ்வொரு அணுஆயுத கட்டுப்பாட்டு உடன்படிக்கையும் கைவிடப்பட்டுள்ளன.

அமெரிக்க முதலாளித்துவத்தின் உள்நாட்டு நெருக்கடி மற்றும் இராணுவ வழிவகைகள் மூலமாக உலகளாவிய மேலாதிக்கத்தைத் திரும்ப கொண்டு வருவதற்கான வாஷிங்டனின் பெரும் பிரயத்தன முயற்சியால் உந்தப்பட்டுள்ள ஈவிரக்கமற்ற அமெரிக்க வெளியுறவுக் கொள்கை, தென் சீனக் கடலில் ஆத்திரமூட்டும் அமெரிக்க கடற்படையின் நிலைநிறுத்தல்களில் இருந்து போலந்து-ரஷ்ய எல்லையில் அமெரிக்க துருப்புகளை நிலைநிறுத்துவதற்கான அச்சுறுத்தல் வரையில், அபாயகரமாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய அமெரிக்க இராணுவ மூலோபாயவாதிகள் அணுஆயுத போர் சட்டபூர்வமானது என்பது மட்டுமல்ல, மாறாக ஜெயிக்கக்கூடியதாகவும் பார்க்கிறார்கள். தந்திரோபாய அணுஆயுதங்கள் என்றழைக்கப்படும் குறைந்த பாதிப்பேற்படுத்தும் அணுஆயுதங்கள், அதாவது ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீசப்பட்ட குண்டுகளை விட சிறிய குண்டுகள் உருவாக்கப்பட்டு வருவதுடன், ஓர் முழு அளவிலான அணுஆயுத தூண்டுதல் இல்லாமல் இராணுவங்களை நிர்மூலமாக்குவதற்காக பயன்படுத்த முடியும் என்ற சாக்குபோக்கில் அவை நிலைநிறுத்தப்படுகின்றன. ஆனால் எந்தவொரு அணுஆயுத பிரயோகமும் சம்பந்தப்பட்ட ஒரு மோதலின் தர்க்கம் என்னவென்றால் அது கட்டுப்பாட்டை மீற ஓர் உலகளாவிய மோதலாக தீவிரமடையும் என்பதாகும்.

அதுபோன்ற ஆயுதங்களை உற்பத்தி செய்வது வாஷிங்டனின் வெளி எதிரிகளுக்கு மட்டும் ஓர் அச்சுறுத்தல் அல்ல. அமெரிக்க அதிகாரிகள் ஏற்கனவே பாரிய போராட்டங்களுக்கு விடையிறுப்பாக, அமெரிக்க வீதிகளை "போர்க்களம்" என்றும் அவற்றில் இராணுவமயப்படுத்தப்பட்ட படைகளின் "மேலாதிக்கம்" இருக்க வேண்டுமென விவரித்து வருகின்ற நிலையில், அமெரிக்க ஆளும் வர்க்கம் அதுபோன்ற கோரமான ஆயுதங்களை அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர மேலெழுச்சிக்கு எதிராகவும் திருப்ப முயலும் என்பதை எந்த விதத்திலும் தவிர்த்து விட முடியாது.

அதிகாரப்பூர்வ அமெரிக்க வெளியுறவுக் கொள்கை ஆய்விதழான Foreign Affairs இல் ஆகஸ்ட் 3 கட்டுரை ஒன்றில், முன்னாள் ஆஸ்திரேலிய பிரதம மந்திரி கெல்வின் ரூட் சமீபத்தில் தூதரகங்கள் மூடப்பட்டதைச் சுட்டிக்காட்டி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைத் (CCP) தூக்கியெறிவதற்கு அழைப்பு விடுத்து எழுதினார்:

“உலகெங்கிலுமான தலைநகரங்களில், இது எங்கே போய் முடியும்? என்ற கேள்வி தான் இப்போது சத்தமில்லாமலும் பதட்டத்துடனும் கேட்கப்பட்டு வருகிறது. ஒருகாலத்தில் சிந்தித்தே பார்க்கவியலாத விளைவு—அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே உண்மையான ஆயுதமேந்திய மோதல் என்பது இப்போது கொரிய போருக்குப் பின்னர் முதல்முறையாக சாத்தியமாக தெரிகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாம் புதிய பனிப்போருக்கான சாத்தியக்கூறை மட்டும் எதிர்கொண்டிருக்கவில்லை, மாறாக சூடான ஒரு போரின் சாத்தியக்கூறையும் எதிர்கொண்டுள்ளோம்.”

ஒவ்வொரு தலைநகரிலும் இதுதான் "சத்தமில்லாமலும் ஆனால் பதட்டத்துடனும்" கேட்கப்பட்டு வருகிறது என்றால், தெளிவாக சீனா, ரஷ்யா அல்லது ஐரோப்பாவில் இதுவரையிலான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கூட்டாளிகளுடனும் கூட அதுபோன்றவொரு போர் ஏற்படுமா என்பதல்ல நிஜமான கேள்வி, மாறாக எப்போது ஏற்படும் என்பதும், அதை நிறுத்த என்ன செய்ய முடியும் என்பதே நிஜமான கேள்வியாகும்.

கோவிட்-19 தொற்றுநோயும் மற்றும் ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் அவநம்பிக்கை மற்றும் அடாவடித்தனத்தையும் மட்டுமே தீவிரப்படுத்தி உள்ளன. போர் அச்சுறுத்தல்களும் போரே கூட அமெரிக்காவுக்குள் கட்டமைந்து வரும் அளப்பரிய சமூக மற்றும் அரசியல் அழுத்தங்களை வெளியே திருப்பி விடுவதற்கான வழிவகைகளாக ஆகியுள்ளன.

ஒரு புதிய உலக போர் மற்றும் அணுஆயுத நிர்மூலமாக்கலுக்கான அச்சுறுத்தல் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியின் அட்டூழியங்களுக்குப் பின்னர் இருந்த எந்தவொரு நேரத்தையும் விட இன்று மிகவும் பெரியளவில் உள்ளது. சோசலிசத்திற்கான உலகளாவிய போராட்டத்தின் பாகமாக அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் ஒரு சக்தி வாய்ந்த போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைப்பதன் மூலமாக மட்டுமே, அணுகுண்டு வீச்சின் 75 நினைவாண்டை நிஜமாக நினைவுகூர்வதும் மற்றும் பலியான நூறாயிரக் கணக்கான அப்பாவி மக்களைக் கௌரவப்படுத்துவதும் சாத்தியமாகும்.

Bill Van Auken