எண்ணிக்கைகளை நீதிமன்றம் தீர்மானிக்கின்ற நிலையில்

ட்ரம்ப் தேர்தலைச் செல்லாததாக்கும் முனைவைத் தொடர்கிறார்

Patrick Martin
1 December 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடென் சிறிய வித்தியாசத்தில் வென்ற ஆறு மாநிலங்களில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான சட்டரீதியான தோல்விகள் மற்றும் அரசியல் பின்னடைவுகளுக்கு மத்தியிலும், 2020 தேர்தல் முடிவுகளைத் தலைகீழாக ஆக்குவதற்கும் மற்றும் மில்லியன் கணக்கான வாக்குகளை முடக்குவதற்குமான முயற்சிகளுக்கு அழுத்தமளிப்பதை அவர் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

பென்சில்வேனியாவில் பெடரல் நீதிமன்றத்தின் கடுமையான தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யவிருப்பதாக ட்ரம்ப் அறிவித்தார், பெடரல் நீதிமன்றத்தில் பழமைவாத பெடரல் மாவட்ட நீதிபதி—ஒரு முன்னாள் குடியரசுக் கட்சி நிர்வாகி—ஒரு ஆதாரமும் இல்லாமல் ஆறு மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறிக்க முயலும் ட்ரம்ப் தேர்தல் குழுவைக் கண்டித்திருந்தார்.

President Donald J. Trump talks to members of the press [Official White House Photo by Joyce N. Boghosian]

சட்ட தத்துவங்களை இணங்குவிப்பதற்கான எந்தவொரு முயற்சியும் இல்லாமல் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகாத சட்ட தத்துவங்களை ஒன்றாக ஒட்டுப்போட்ட ஒரு "பிரங்கன்ஸ்ரைன் அரக்கன்" என்பதாக ட்ரம்ப் சட்ட வாதங்களைக் குணாம்சப்படுத்தும் 37 பக்க கருத்துரையை வினியோகித்து, ட்ரம்ப் சட்ட வழக்கை நிராகரிக்குமாறு கோரிய பென்சில்வேனியாவின் மாநில செயலர் கேத் பூக்வரின் கோரிக்கையை நீதிபதி மாத்தீவ் பிரான் ஏற்றுக் கொண்டார்.

“தகுதியான மற்றும் அனுமான குற்றச்சாட்டுக்கள் இல்லாமல், நடைமுறை புகாரின் மீது வழக்காடாத, ஆதாரமும் இல்லாமல், பலவந்தமான சட்ட வாதங்கள் இந்த நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன, என்று பிரன் எழுதினார். “அமெரிக்காவில், அதிக மக்கள்தொகை கொண்ட அதன் ஆறாவது மாநிலத்தின் எல்லா வாக்காளர்களது வாக்குரிமையும் பறிப்பது சம்பந்தமாக இல்லாவிட்டாலும், ஒரேயொரு வாக்காளரின் வாக்குரிமை பறிப்பதையும் கூட இதைக் கொண்டு நியாயப்படுத்த முடியாது. நமது மக்களும், சட்டங்களும், அமைப்புகளும் இன்னும் அதிகமாக கோருகின்றனர்.”

“பெரும் எண்ணிக்கையிலான வாக்குகளைச் செல்லாதவை ஆக்கக் கோரும் அர்த்தத்தில், ஒரு தேர்தல் போட்டியில் ஒரு வழக்காளி இதுபோன்று ஒரு கடுமையான தீர்வு கோரும் எந்தவொரு வழக்கையும் இந்நீதிமன்றத்தால் காண முடியவில்லை,” என்று தொடர்ந்த அவர், “இதுபோன்று திடுக்கிடும் முடிவைக் கோரும் போது, வழக்காளி நிராகரிக்க முடியாத சட்ட வாதங்கள் மற்றும் பிரமாண்டமான மோசடி குறித்து உண்மையான ஆதாரத்துடன் தோற்கடிக்க முடியாதவாறு ஆயுதபாணியாகி வர வேண்டும்… அது நடந்திருக்கவில்லை,” என்றார்.

பிரன் "ஒபாமாவினால் நியமிக்கட்ட நீதிபதி" என்று ட்ரம்ப் வழக்குரைஞர்கள் பரிகாசம் செய்தாலும், உண்மையில் அவர் அம்மாநிலத்தின் மாநிலந்தழுவிய ஒரே குடியரசுக் கட்சி நிர்வாகியான செனட்டர் பேட் டூமெயின் ஆதரவின் கீழ் நியமிக்கப்பட்ட பழமைவாத பெடரலிஸ்ட் சமூகத்தின் ஓர் உறுப்பினரும் ஒரு முன்னாள் குடியரசுக் கட்சி தலைவரும் ஆவார். பிரனனை "நீண்டகால பழமைவாத குடியரசுக் கட்சியாளர், இவரை ஒரு நியாயமான, பாரபட்சமற்ற நீதியரசராக எனக்கு தெரியும்,” என்று டூமெ பாராட்டி இருந்தார்.

பிரனின் தீர்ப்புக்கு எதிராக ட்ரம்ப் தேர்தல் குழு பிலடெல்பியாவின் மூன்றாம் சுற்று அமெரிக்க மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இறுதியில் இந்த வழக்கை அமெரிக்க உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கும், அதில் ட்ரம்ப் நியமித்த மூன்று நீதிபதிகள் உட்பட 6-3 வலதுசாரி பெரும்பான்மை உள்ளது.

இந்த மேல்முறையீடு பென்சில்வேனியாவில் 20 தேர்தல் குழு வாக்குகள் உள்ளடங்கலாக பைடெனின் வெற்றியை அங்கீகரிப்பதில் இருந்து அம்மாநிலத்தை தடுத்துவிடாது, அனேகமாக திங்கட்கிழமை இது நடக்கலாம், அப்போது உள்ளாட்சி தேர்தல் அதிகாரிகள் மாநில தலைமை செயலர் பூக்வருக்கு அவர்களின் முடிவுகளை உத்தியோகபூர்வமாக தெரிவிப்பார்கள். பைடென் 80,000 க்கும் அதிக வாக்குகளுடன் பென்சில்வேனியாவில் ஜெயித்தார், இது 2016 இல் ட்ரம்ப் ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக அம்மாநிலத்தில் பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட இரண்டு மடங்கு அதிகம்.

Election workers, right, verify ballots as recount observers, left, watch during a Milwaukee hand recount of presidential votes at the Wisconsin Center, Friday, Nov. 20, 2020, in Milwaukee. (AP Photo/Nam Y. Huh)

ட்ரம்ப் தேர்தல் குழு தாக்குதல் செய்துள்ள ஏனைய பல நீதிமன்ற நடவடிக்கைகள் போலவே, பத்திரிகையாளர் கூட்டங்களில் கிலானியும் ஏனைய வழக்குரைஞர்களும் கூறிய பெருமளவில் மூர்க்கமான மோசடி வாதங்களுடன் அது பென்சில்வேனியாவிலும் அதைச் செய்துள்ளது. தபால் வாக்குச்சீட்டுக்களைக் கையாள்வதில், குறிப்பாக தபால் வாக்குகளின் உறையின் வெளியே கையெழுத்திட தவறியமை போன்ற வாக்காளர்களின் தொழில்நுட்ப பிழைகளைக் "களைய" அனுமதிப்பதில், உள்ளாட்சிகள் வெவ்வேறு தரமுறைகளைக் கையாள்கின்றன என்ற உண்மை மீது அது ஒருமுனைப்பட்டிருந்தது.

இழிவார்ந்த புஷ்-கோர்வழக்கின் தீர்ப்பில் அதிதீவிர வலது நீதிபதி அன்டோனின் ஸ்காலியா பரிசீலித்திருந்த "சம பாதுகாப்பு" (“equal protection”) கோட்பாட்டைப் பயன்படுத்துவதே இந்த சட்ட வாதத்தின் நோக்கமாகும், அந்த வழக்கு 2000 இல் ஜனாதிபதி பதவியை குடியரசுக் கட்சி வேட்பாளருக்கு வழங்கியது. புளோரிடாவின் வெவ்வேறு உள்ளாட்சிகள் "துளை அட்டை" (hanging chads) வாக்குச்சீட்டுக்களைக் கையாள்வதில் வெவ்வேறு தரமுறைகள் பயன்படுத்தப்பட்டது என்ற அடித்தளத்தில் புளோரிடாவின் வாக்கு எண்ணிக்கையை முடக்க, நீதிமன்றம் தலையிடலாம் என்று ஸ்காலியா வாதிட்டார்.

இந்த வாதம் மேலோட்டமாக நம்பத்தகுந்ததாகவும் உண்மையில் தவறானதும் ஆகும், அத்தீர்ப்பு எதிர்காலத்தில் எந்தவொரு தீர்ப்புக்கும் முன்மாதிரியாக பயன்படுத்தப்படக்கூடாது என்று 5 இக்கு 4 வலதுசாரி பெரும்பான்மை வலியுறுத்தியது. ஆனால் ட்ரம்பின் வழக்குரைஞர்கள் இந்தாண்டு அடிக்கடி அதை பயன்படுத்த முயன்றுள்ளனர், ஏனென்றால் தேர்வுக் குழு வாக்குகளுக்கு மாநில நிர்வாகங்கள் அங்கீகாரம் வழங்கும் அவற்றின் நடவடிக்கைகளில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு மாற்றுவதற்கு ஒரு வழிவகையை அது வழங்குகிறது.

பைடென், இதை விட அதிக பெரும்பான்மையில், 150,000 இக்கும் அதிக வாக்குகளுடன், ஜெயித்த மிச்சிகனில் வேறொரு தந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ட்ரம்பும் குடியரசுக் கட்சியும் அம்மாநில பிரச்சாரக் குழுவின் (Board of State Canvassers) குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் மீது மிகப் பெரியளவில் அழுத்தமளித்து வருகிறது, அது அம்மாநிலத்தின் 83 உள்ளாட்சிகளின் வாக்குகளைப் பெற்று ஒப்புதல் வழங்குவதற்காக இன்று ஒன்றுகூட உள்ளது.

ட்ரம்ப் தேர்தல் குழு மிகவும் மக்கள்தொகை நிறைந்த அம்மாநில உள்ளாட்சியான வாய்னே உள்ளாட்சியில் அண்மித்து 800,000 வாக்குகளைச் செல்லாததாக்குவதற்காக அங்கே வாக்கு எண்ணிக்கையில் இருந்த சிறிய சிறிய வாக்கு வித்தியாசங்களையும் பெரிதாக்க முயன்று வருகிறது. அந்த வாக்கு வித்தியாசங்கள் உண்மையிலேயே மிகச் சிறியவை—டெட்ராய்ட் நகரில் 250,000 வாக்குகளில் 357 வாக்குகள். குறிப்பாக ஒரு குடியரசுக் கட்சி அதிகாரி வெள்ளையினத்தவர் அதிகளவில் வசிக்கும் வாய்னே உள்ளாட்சி புறநகர் பகுதிகளின் வாக்குகளை அங்கீகரிக்க முன்மொழிந்தார்—அங்கேயும் இதேபோன்ற சிறிய முரண்பாடுகள் உள்ளன—அதேவேளையில் 80 சதவீத ஆபிரிக்க அமெரிக்கர்களும் 95 சதவீத ஜனநாயகக் கட்சியினரும் உள்ள டெட்ராய்டில் வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

இரண்டு குடியரசு கட்சியினரைக் கொண்ட நான்கு உறுப்பினர் மாநில குழு 2 இக்கு 2 என்ற முட்டுச்சந்துக்குக் கொண்டு வரும் என்று ட்ரம்ப் தேர்தல் குழு நம்புகிறது. குடியரசுக் கட்சியின் தேசிய குழு தலைவர் ரொன்னா மெக்டேனியலும் அம்மாநில குடியரசுக் கட்சியும் நடவடிக்கைகளை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்க அந்த ஆணையத்திடம் மேல்முறையீடு செய்தது, இது ஜனாதிபதி தேர்வுக் குழுவுக்கான மிச்சிகனின் 16 வாக்குகளை அங்கீகரிப்பதற்கான டிசம்பர் 8 இறுதிநாளுக்கு கிட்டத்தட்ட நெருக்கமாக இட்டுச் செல்லும்.

இந்த நேரத்தில், வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பைடென் வேட்பாளர்களுக்கு மாற்றாக ட்ரம்ப் ஆதரவு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக நியமிக்க குடியரசுக் கட்டுப்பாட்டிலான மாநில சட்டமன்ற தலைவர்களுக்கு கூடுதல் அழுத்தம் அளிக்கப்படும். வெள்ளிக்கிழமை ட்ரம்ப் மிச்சிகன் மாநில சட்டமன்ற தலைவர்களைச் சந்தித்தார் ஆனால் அரசியலமைப்புக்குப் புறம்பான இந்த ஜனநாயக விரோத ஆணவ சூழ்ச்சிக்கு இதுவரையில் ஆதரவு கிடைக்கவில்லை.

சனிக்கிழமை இரவு ஒரு ட்வீட் செய்தியில், ட்ரம்ப் பகிரங்கமாக இந்த சூழ்ச்சியைத் தழுவினார். அவர் எழுதினார், “நமது தேர்தல்களின் ஒருமைப்பாட்டை, அமெரிக்காவின் ஒருமைப்பாட்டையே கூட, பேணுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வதற்கான தைரியம், நீதிமன்றங்களுக்கும் மற்றும்/அல்லது சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இருக்கும்,” என்று "நம்புவோமாக.”

ஆனால் பழமைவாத Detroit News பத்திரிகை பைடெனின் வெற்றியை அங்கீகரிக்குமாறு மாநில பிரச்சாரக் குழுவுக்கு அழைப்பு விடுத்து ஒரு தலையங்கம் வெளியிட்டது, சனிக்கிழமை மாநில தலைநகரில் நடந்த ஒரு பேரணியில் வெறும் 75 ட்ரம்ப் ஆதரவாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

தேர்தல்களில் பைடெனின் வெற்றியை மாற்றுவதற்கு ட்ரம்ப் முயன்று வரும் ஏனைய நான்கு மாநிலங்களில், சட்டரீதியான நகர்வுகளும் சரி அரசியல் நகர்வுகளும் சரி தோல்வி அடைந்திருப்பதாக தெரிகிறது.

ஜோர்ஜியாவில், சிறிய வித்தியாசத்தில் என்றாலும் குறிப்பிடத்தக்க 12,670 வாக்குகள் வித்தியாசத்தில் பைடென் வெற்றியை அங்கீகரிக்க வெள்ளிக்கிழமை இயந்திரமின்றி நேரடியாக மறுஎண்ணிக்கை நடத்தப்பட்டது. ஜோர்ஜியாவின் மாநில தலைமை செயலர் Brad Raffensperger மற்றும் ஜோர்ஜியாவின் ஆளுநர் பிரைன் கெம்ப், இருவரும் குடியரசுக் கட்சியினர் மற்றும் ட்ரம்ப் விசுவாசிகள், வாக்காளர்களின் விருப்பத்தைப் பிரதிபலிப்பதாக வாக்கு எண்ணிக்கையில் கையெழுத்திட்டதால், அம்மாநிலத்தின் 16 தேர்வுக்குழு வாக்குகளும் பைடெனுக்கு அங்கீகரிக்கப்பட்டது. ட்ரம்ப் தேர்தல் குழு உடனடியாக மாநில செலவில் இரண்டாவது மறுஎண்ணிக்கை நடத்தப்பட வேண்டுமென மனு தாக்கல் செய்தது.

விஸ்கான்சினில், அம்மாநிலத்தின் அதிக மக்கள்தொகை மிகுந்த மற்றும் மிகவும் பலமான ஜனநாயகக் கட்சி உள்ளாட்சிகளான டேன் உள்ளாட்சி (மாடிசன்) மற்றும் மில்வான்கி உள்ளாட்சி இரண்டிலும் மறுஎண்ணிக்கைகள் தொடங்கின. மறுஎண்ணிக்கை செலவுகளை ஏற்றிருந்த ட்ரம்ப் தேர்தல் குழு ஒவ்வொரு தபால் வாக்குகளையும்—பரந்த பெரும்பான்மையினர் இவ்விதமாகவே வாக்களித்திருந்த நிலையில்— தனிப்பட்டரீதியில் நிராகரித்து அந்த நிகழ்முறையையே சீர்குலைக்க முயன்றது. அம்மாநிலத்தின் தேர்தல் முடிவு அறிவிப்புக்கான டிசம்பர் 1 இறுதி நாளுக்கு முன்னதாக உரிய நேரத்தில் ஆய்வுகளை முடிப்பதற்காக எல்லா வாக்குகள் மீதும் பொதுவான சவால்களைப் பதிவு செய்ய அங்கே உள்ளூர் தேர்தல் அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர். பைடென் விஸ்கான்சினில் 20,000 இக்கும் அதிகமான வாக்குகளில் ஜெயித்தார்.

அரிசோனாவில், அம்மாநிலத்தின் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் வசிக்கும் குடியரசு கட்டுப்பாட்டிலான மரிகோபா உள்ளாட்சியின் மேற்பார்வையாளர்கள் ஆணையம், ட்ரம்பின் சட்ட சவால்கள் அனைத்தும் நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டதும் அந்த உள்ளாட்சியின் தேர்தல் முடிவுகளை அங்கீகரிக்க வெள்ளிக்கிழமை ஒருமனதாக வாக்களித்தது. பைடென் அம்மாநிலத்தில் வெறும் 10,000 இக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வென்றார், இதில் மரிகோபா உள்ளாட்சில் 40,000 வாக்கு பெரும்பான்மை பங்கு வகித்ததற்கு தான் நன்றி கூற வேண்டும்.

“வாய்சவடால்கள், தந்திரங்கள் மற்றும் மோசடி வாதங்களைக் குறைத்துக் கொள்வதற்கான நேரம் இது,” என்று குடியரசுக் கட்சி ஆணைய தலைவர் கிளின்ட் ஹிக்மன் தெரிவித்தார். “சுதந்திர ஜனநாயகத்தில், தேர்தல்கள் சில வேட்பாளர்கள் தோற்பதில் போய் முடிகிறது,” என்றார். இந்த உள்ளாட்சி முடிவுகள் ஜனநாயகக் கட்சியாளரான மாநில தலைமை செயலர் கேத் ஹோப்ஸிற்கு அனுப்பப்படும், இவர் அரிசோனாவின் 11 தேர்வுக்குழு வாக்குகளை பைடெனுக்கு அளிக்கும் விதத்தில் நவம்பர் 30 இல் அவற்றை அங்கீகரிப்பார்.

நெவாடாவில், எல்லா உள்ளாட்சிகளும் அவற்றின் வாக்குகளை ஆராய்வதை கடந்த வாரம் முடித்துக் கொண்டதுடன், முடிவுகளை ஒரு குடியரசுக் கட்சியாளரான மாநில தலைமை செயலர் Barbara Cegavske இக்கு அனுப்பினார். மாநில சட்டத்தின்படி, நெவாடா உச்ச நீதிமன்றம் செவ்வாய்கிழமை, நவம்பர் 24 இல் வாக்குகளை ஆராயும், பின்னர் ஆளுநர் ஸ்டீவ் சிசோலக் அம்மாநிலத்தின் ஆறு தேர்வுக் குழு வாக்குகளை பைடெனுக்கு வழங்கும் ஒரு பிரகடனத்தை வெளியிடுவார். பின்னர் ட்ரம்ப் மறுஎண்ணிக்கை கோர முடியும், ஆனால் நெவாடாவில் பைடென் 33,000 க்கும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

பென்சில்வேனியா நீதிமன்ற தீர்ப்பு ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் தாக்கத்தைக் கொண்டிருந்தது. ட்ரம்பின் மேம்போக்கான எல்லா சட்ட சவால்களும் தீர்ந்து போய்விட்டன, அவர் இப்போது தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டுமென செனட்டர் பட் டூமெ அறிவித்தார். “ஜனாதிபதியாக தேர்வாகி உள்ள பைடென் மற்றும் துணை ஜனாதிபதியாக தேர்வாகி உள்ள கமலா ஹாரீஸ் ஆகியோரின் வெற்றிக்காக அவர்களை நான் வாழ்த்துகிறேன். அவர்கள் இருவரும் அர்ப்பணிக்கப்பட்ட பொது சேவகர்கள், அவர்களுக்காகவும் நம் நாட்டுக்காகவும் நாம் பிரார்த்திக்கிறேன்,” என்றார்.

இதுபோன்ற அறிக்கைகள் பொதுவாக அமெரிக்க தேர்தல் முடிவு வந்த ஒரு சில மணி நேரத்திலேயே கூறப்பட்ட போதினும், குடியரசுக் கட்சி செனட்டர்கள், பிரதிநிதிகள் மற்றும் ஆளுநர்களில் பரந்த பெரும்பான்மையினர் ஜனாதிபதி தேர்தலில் பைடென் ஜெயித்திருப்பதைப் பகிரங்கமாக ஒப்புக் கொள்ளவில்லை என்பதோடு, அவர் பதவியேற்பதற்கான இடைப்பட்ட காலத்தில் மத்திய அரசின் ஆதாரவளங்களை அவர் அணுகுவதற்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி அந்தஸ்து வழங்குவதற்கும் அவர்கள் ஒத்துழைக்கவில்லை.

புளோரிடாவின் செனட்டர் ரிக் ஸ்காட்டுக்கும் மற்றும் ஜோர்ஜியாவின் செனட்டர் கெல்லி லொஃப்லருக்கும் கோவிட்-19 தொற்று ஏற்பட்டிருப்பதாக வாரயிறுதியில் அறிவிப்பு வெளியான நிலையில், பைடெனை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவராக ஒப்புக் கொண்ட (ஏழு பேர்) குடியரசுக் கட்சி செனட்டர்களை விட கொரொனா வைரஸ் (எட்டு பேர்) தொற்று ஏற்பட்டிருப்பதாக ஒப்புக் கொண்டவர்கள் அதிகமாக உள்ளனர்.

உத்தியோகப்பூர்வ வாஷிங்டனுக்குள் இருந்து ட்ரம்ப் மீது மிகவும் பலமான விமர்சனம், 2012 இன் குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரான செனட்டர் மிட் ரொம்னியிடம் இருந்து வந்தது, அவர் "மக்கள் விருப்பத்தைச் சீர்கெடுக்க மாநில மற்றும் உள்ளாட்சி அதிகாரிகள் மீது அதிக அழுத்தம் அளிப்பதற்காக" ஜனாதிபதியைக் கண்டித்தார். அவர் அறிவித்தார், “பதவியிலிருக்கும் ஓர் அமெரிக்க ஜனாதிபதியின் மிக மோசமான, அதிக ஜனநாயக விரோத நடவடிக்கையைக் கற்பனை செய்வதும் சிரமமாக உள்ளது.”

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி பைடென் அல்லது வேறெந்த முன்னணி ஜனநாயகக் கட்சியினரிடம் இருந்து வந்த எந்தவொரு வார்த்தையையும் விட ரொம்னியின் வார்த்தைகள் அதற்கும் அதிகமாக வந்தன. ஜனநாயக உரிமைகள் மீதான அபாயங்களை மூடிமறைப்பதும், ட்ரம்ப் இணங்க மறுப்பதன் முக்கியத்துவத்தைக் குறைத்துக் காட்டுவதுமே ஜனநாயகக் கட்சியின் கொள்கையாக உள்ளது. ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சி உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களிடையே பாரிய எழுச்சியைத் தூண்டிவிடலாம் என்றும், அது ட்ரம்ப் சதிக்கூட்டத்தை அல்ல மாறாக ஒட்டுமொத்தமாக முதலாளித்துவ அமைப்புமுறையையே அச்சுறுத்தக்கூடும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.

வெள்ளை மாளிகையும் சரி ட்ரம்ப் தேர்தல் குழுவும் சரி இரண்டுமே, அரசியல்ரீதியாக மட்டுமல்ல, ஆழ்ந்த நெருக்கடியில் உள்ளன. அவர் மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியருக்கு கோவிட்-19 ஏற்பட்டிருப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். பாசிசவாத இறுமாப்பு தன்மையில் ட்ரம்ப் ஜூனியர் கூறுகையில் அவர் துப்பாக்கிகளைச் சுத்தப்படுத்த இந்த தனிமைப்படும் காலத்தை அவர் பயன்படுத்திக் கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையில் பணியாற்றும் கிலானியின் மகன் ஆண்ட்ரூவுக்கும் கோவிட்-19 தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, கிலானி மிச்சிகன் சட்டமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதியுடன் ட்ரம்பின் வெள்ளிக்கிழமை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அமெரிக்க தேர்தல்களைச் சீர்குலைக்க சீன-வெனிசுவேலாவின் ஒரு சூழ்ச்சி என்று வாதிட்டு, வியாழக்கிழமை ட்ரம்பின் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் மிகவும் ஆத்திரமூட்டும் குற்றச்சாட்டுக்களைச் சுமத்திய அரசு தரப்பு வழக்குரைஞர் சிட்னி பாவெல், இனி ட்ரம்ப் தேர்தல் குழுவில் பணியாற்றப் போவதில்லை என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு வந்தது.