அமெரிக்காவில் மருத்துவமனைகள் அவற்றின் கொள்திறனை தாண்டி நிரம்பி வழிகையில், அங்கு நாளாந்த புதிய கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 200,000 என்றளவிற்கு கடுமையாக அதிகரிக்கிறது

Benjamin Mateus
1 December 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்காவில் கோவிட்-19 பெருந் தொற்றுநோயின் மூன்றாவது அலை, நாட்டின் பெரும் பகுதிகளில் ஏற்கனவே மோசமடைந்துள்ள சுகாதார அமைப்புமுறைகளை பேரழிவுக்குள்ளாக்கி வருகிறது. வெள்ளியன்று மட்டும் அங்கு 200,000 புதிய நோய்தொற்றுக்கள் பதிவானதுடன், அண்ணளவாக 2,000 இறப்புக்களும் நிகழ்ந்துள்ளன. சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் (Institute for Health Metrics and Evaluation) குளிர்கால விடுமுறைகள் முடிவதற்கு முன்னர் மேலும் 50,000 இறப்புக்கள் நிகழும் என முன்கணிக்கிறது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் ஒரு நோயாளி [Source: Wikimedia Commons]

இந்த பேரழிவுகரமான எழுச்சிகள் ஒருபுறம் இருந்தாலும், வெளிச்செல்லும் ட்ரம்ப் மற்றும் உள்வரும் பைடென் நிர்வாகங்கள், தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் வகையில் தேசியளவிலான பூட்டுதல் நடவடிக்கைகள் எதுவும் இருக்காது என்பதை இந்த வாரம் மீள்உறுதி செய்துள்ளன.

இன்றுவரை, அமெரிக்காவில் 12.2 மில்லியன் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோய்தொற்றுக்கள் பரவியிருப்பதுடன், 260,000 க்கு மேற்பட்ட இறப்புக்கள் நிகழ்ந்துள்ளன. இதில், ஒட்டுமொத்த அமெரிக்க மக்கள்தொகையில் ஒரு சதவிகிதத்திற்கு மேலாக, உச்சபட்சமாக 4.5 மில்லியன் நோய்தொற்றுக்கள் தற்போது அங்கு செயலில் இருப்பதும், 80,000 க்கும் மேலாக கோவிட்-19 நோயாளிகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருப்பதும் அடங்கும். நோய்தொற்றுக்கள் மற்றும் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை என இரண்டு புள்ளிவிபரங்களும் கடுமையான அளவில் உச்சபட்சமாக இருப்பதோடல்லாமல், ஏப்ரல் மாதத்தை விட கட்டுப்பாடற்று அவை கூர்மையாக அதிகரித்து வருகின்றன, இவை அமெரிக்காவில் பெருந் தொற்றுநோய் எவ்வளவு பரவலாகிவிட்டது மற்றும் நோய் பரவல் வேகத்தை தணிப்பதற்கான நடவடிக்கைகள் எந்தளவிற்கு குறைவாக எடுக்கப்பட்டு வருகின்றன ஆகியவற்றுக்கான அளவீடுகளாக உள்ளன.

அதாவது, முகக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்துவது, மதுபானகங்கள் மற்றும் உணவகங்கள் செயல்படும் நேர அளவுகளை மட்டுப்படுத்துவது போன்ற குறுகிய கால மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை விதிப்பது, மற்றும் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆலோசகர்களின் நியமனம் ஆகியவை தொடர்புபட்ட நடவடிக்கைகள் குறைவாகவே அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொற்றுநோயை விரைந்து பரவச் செய்யும் இரண்டு முக்கிய இடங்களான பள்ளிகளும் பணியிடங்களும், தொழிலாளர்களும் மாணவர்களும் தொடர்ந்து இந்த நோய்க்கு பலியாகிக் கொண்டிருக்கையில் கூட திறந்து வைக்கப்பட்டுள்ளன.

நோய்தொற்றுக்கள் முற்றிலும் பரவலாகி வருவதையும், இறப்புக்கள் விரைந்து அதிகரித்து வருவதையும் எதிர்கொள்ள தேவையான மருத்துவ தளவாட வசதிகளைப் பெறுவது சவாலாக உள்ள நிலையில், தேசியளவில் நோய்தொற்றுக்கள் வெடித்து பரவுவதால் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் என்ற எந்தவொரு நம்பிக்கையையும் நாடு நம்புகிறது. பொது சுகாதாரத் துறையின் பலரது கருத்துப்படி, 4.5 பில்லியன் டாலர் கூட்டாட்சி நிதியுதவியுடன் கூட தடுப்பூசி விநியோக வலையமைப்பை கட்டமைத்து, அதன் பின்னர் பரவலாக தடுப்பூசி விநியோகிக்கப்படுவதற்கு அடுத்த ஆண்டின் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதி பிடிக்கும் எனத் தெரிகிறது.

குறிப்பாக நோய்தொற்று பரவும் வேகத்தை வைத்து, விஸ்கான்சினின் மருத்துவமனை சங்கம், மாநிலத்திற்குள்ளாக சுகாதார அமைப்புமுறை “பேரழிவின்” விளிம்பில் உள்ளது என்று எச்சரித்துள்ளது. மாநிலத்திற்கு அதிகளவு கள மருத்துவமனைகள் தேவைபடுகின்றன என்று விஸ்கான்சின் மருத்துவமனை சங்கத்தின் தலைவரான எரிக் போர்கெர்டிங், ஜனநாயகக் கட்சி ஆளுநரான டோனி எவெர்ஸூக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “மூன்று தலைமுறைகளில் நாங்கள் எதிர்கொள்ளாத பொது சுகாதார நெருக்கடியை விஸ்கான்சின் தற்போது எதிர்கொள்கிறது. மேலும், விஸ்கான்சின் முழுவதுமாக தெளிவாக பரவி வரும் ஒரு வைரஸ் ஏற்படுத்தியுள்ள இந்தளவிலான நெருக்கடிக்கு ஒரு ஒருங்கிணைந்த மற்றும் உறுதியான பதிலிறுப்பு தேவைப்படுகிறது” என்று குறிப்பிட்டிருந்தார். ஆயினும்கூட, உள்ளூர் வணிகங்களை மூடுவது அல்லது அதற்கான கட்டுப்பாடுகளை மீறும் எந்தவொரு நடவடிக்கைகள் தொடர்பாகவும் மாநில அரசாங்கம் மிகுந்த கெடுபிடியுடன் உள்ளது. தற்காலிகமாக ஒப்புக்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும், ஏற்கனவே நடைமுறையிலுள்ள முகக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்தும் உத்தரவை 2021 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கச் செய்கின்றன.

வியாழக்கிழமை, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (Center for Disease Control and Prevention-CDC) நன்றி பயணத்திற்கு எதிராக கடுமையான எச்சரிக்கை விடுத்தது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் மருத்துவர் டாக்டர் எரின் சாபர்-ஷாட்ஸின் கூற்றுப்படி, “இந்த ஆண்டு நன்றி கொண்டாட்டத்தை பாதுகாப்பதற்கான வழி உங்கள் வீட்டிலுள்ளவர்களுடன் சேர்ந்து நீங்கள் வீட்டிலேயே கொண்டாடுவது தான்”. இந்த எச்சரிக்கை ஒருபுறம் இருந்தாலும், இந்த காலகட்டத்தில் 50 மில்லியன் அமெரிக்கர்கள் வரை குடும்பத்தினரையோ அல்லது நண்பர்களையோ பார்க்கச் செல்வார்கள் என்றும், அதில் 95 சதவிகிதம் பேர் காரில் பயணம் செய்வார்கள் என்றும் AAA முன்கணிக்கிறது. பெருமளவில் மக்கள் இடம்விட்டு இடம் பயணிப்பது இந்த கடுமையான நிலைமையை இன்னும் மோசமாக்கும். 2019 ஆம் ஆண்டில், 55 மில்லியன் பேர் இந்த காலகட்டத்தில் பயணம் செய்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறையுடன், சுகாதாரப் பணியாளர்களின் கடும் பற்றாக்குறையும் சேர்ந்து சுகாதார அமைப்புமுறைகளை வீழ்ச்சியின் விளிம்பிற்குத் தள்ளுகின்றன. 25 மாநிலங்களில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் நிலவும் மருத்துவ ஊழியர்களின் கடுமையான பற்றாக்குறையானது, மிக மோசமாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு வெறுமனே மருத்துவமனை படுக்கை வசதிகளை ஏற்பாடு செய்வதற்கு கூட நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவிற்கும் மற்றும் மாநில எல்லைகள் கடந்தும் பயணிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது என்று STAT செய்திகள் தெரிவிக்கின்றன.

டெக்சாஸ் கிராமப்புற மற்றும் சமூக மருத்துவமனைகளின் (Texas Organization of Rural & Community Hospitals) தலைமை நிர்வாகியான ஜோன் ஹென்டர்சன், “படுக்கை வசதியுடன் கூடிய ஒரு அறையைக் காட்டிலும் நோயாளிகளை கவனிப்பது மிகவும் முக்கியம். இது நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் மருத்துவ நிபுணர்களைப் பற்றியது. அதைச் செய்ய உங்களிடம் போதுமான ஊழியர்கள் இல்லையென்றால், மக்கள் இறந்து போவார்கள்” என்று அப்பட்டமாக தெரிவித்தார். மருத்துவமனைகளில் சேரக்கப்பட்டிருந்த நோயாளிகளின் எண்ணிக்கை செப்டம்பரில் 3,000 ஆக இருந்தது தற்போது 8,000 பேருக்கு மேலாக அதிகரித்துள்ளது.

ஒடெஸா பிராந்திய மருத்துவ மையத்தில், பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு கோவிட்-19 தீவிர சிகிச்சைப் பிரிவாக மாற்றப்பட்டுள்ளது. அவர்களது தீவிர சிகிச்சைப் பிரிவு அதன் கொள்திறனைத் தாண்டி நிரம்பிவிட்ட நிலையில், மேலும் ஒரு பிரிவு நிறுவப்படுவதற்கான தேவை அங்கு ஏற்பட்டுள்ளது. ஒரு முக்கிய பராமரிப்பு செவிலியர் நோயாளிகளை கவனிக்கும் வழமையான வரம்பு இரண்டு நோயாளிகள் என்றிருந்தது தற்போது ஆறு அல்லது எட்டு பேர் என்றாகிவிட்டது. மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ரோஹித் சரவணன், “தற்போது நோயாளிகளால் நிரம்பி வழியாத ஒரே இடம் மருத்துவமனை நடகூடங்கள் மட்டுமே. நீங்கள் இங்கே பார்க்கும் ஒவ்வொரு நோயாளிக்கும், சில மருத்துவ கவனிப்புக்களை பெறும் வகையிலான சாத்தியமுள்ள பல விடயங்கள் மருத்துவமனைக்கு வெளியே உள்ளன, ஆனால் இடம் தான் இல்லை. இந்நிலையில், மிக மோசமான நிலையிலுள்ள நோயாளிகள் மட்டுமே மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற அனுமதிக்கப்படுகின்றனர், எஞ்சியவர்கள் வீட்டிற்கு திருப்பியனுப்பப்படுகின்றனர்” என்று CNN க்கு தெரிவித்தார்.

இந்த காட்சிகள், கான்சாஸ், மிசூரி, உடாஹ், டக்கோட்டாஸ் கிராமப்புற பகுதிகள் முதல், லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் உள்ள பெருநகர சமூகங்கள் மற்றும் சிக்காக்கோ புறநகர்ப்பகுதிகள் வரையிலும் காணப்படுகின்றன. கிராமப்புற சமூகங்களில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களின் நீண்டகால பற்றாக்குறையைத் தாண்டி, சுகாதார பாதுகாப்புப் பணியாளர்களும் கூட கோவிட் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு அல்லது தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், வசந்த காலத்தில் கிடைக்கக்கூடிய கூடுதல் செவிலியர்கள் வசதி கூட தற்போது அங்கு நடைமுறையில் இல்லை.

ஒஹியோ மருத்துவமனை சங்கத்தின் செய்தித் தொடர்பாளரான ஜோன் பால்மர், மாநிலம் எங்கிலுமுள்ள 240 மருத்துவமனைகளில் 20 சதவிகித மருத்துவமனைகள் ஊழியர்களின் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன என்று விளக்கிக் கூறினார்.

 

மேலதிக வாசிப்புக்கு ஆசிரியர் பரிந்துரைக்கும் கட்டுரைகள்:

அத்தியாவசியமற்ற உற்பத்தியை நிறுத்தவும், பள்ளிகளை மூடவும் தொழிலாளர்கள் போராட வேண்டும்
[23 November 2020]

அமெரிக்காவில் மரண எண்ணிக்கை 250,000 ஐ கடந்து செல்கையில், அத்தியாவசியமற்ற உற்பத்தியை நிறுத்துவதற்குத் தொழிலாளர்களிடையே ஆதரவு அதிகரிக்கிறது
[21 November 2020]