பெடரல் முகமை பைடென் மாற்றத்தின் மீதிருந்த முட்டுக்கட்டைகளை நீக்குகிறது என்றாலும், ட்ரம்ப் தேர்தல் ஆட்சிக்கவிழ்ப்பு சதியைத் தொடர அறைகூவல் விடுக்கிறார்

Barry Grey
2 December 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

திங்கட்கிழமை மாலை, பெடரல் பொது சேவைகள் நிர்வாகத்தின் (GSA) நிர்வாகி எமிலி முர்பி, ஜனாதிபதி தேர்தலின் "வெளிப்படையான வெற்றியாளராக" ஜோ பைடெனை உத்தியோகப்பூர்வமாக ஒப்புக் கொண்டு, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்திடம் இருந்து அதை அவரின் ஜனநாயகக் கட்சி எதிர்ப்பாளருக்கு மாற்றும் நிகழ்ச்சிப்போக்கை உத்தியோகபூர்வமாக தொடங்கி வைத்தார்.

இந்த முடிவைக் குறித்து முர்பி பைடென் இடைக்கால குழுவுக்கு அறிவிக்கும் கடிதம் ஒன்றை அனுப்பினார், GSA மத்திய அரசுத்துறைகளுக்கு தகவல் வழங்கியது. இந்த முடிவு மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் 7 மில்லியனுக்கும் அதிகமான தொகையை இடைக்கால குழுவுக்கு ஒதுக்குவதாக அவரின் கடிதத்தில் முர்பி குறிப்பிட்டார். இதற்காக ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் பைடென் குழுவுடன் சந்திப்புகளைத் தொடங்க வேண்டியுள்ளது, மேலும் இது பைடென் இரகசிய உளவுத்துறை குறிப்புகளைப் பெற அனுமதிக்கிறது.

GSA ஒப்புதல் வழங்குவது என்பது வழமையான ஒரு சம்பிரதாயம் என்றாலும், இம்முறை தேர்தல் வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்கும் அதிக நாட்களுக்குப் பின்னர்தான் இது வந்துள்ளது என்ற நிலையில், இந்த அசாதாரண தாமதம் மில்லியன் கணக்கான பைடென் வாக்காளர்களின் வாக்குப்பதிவை ஒதுக்கிவிட்டு தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கான ட்ரம்ப் முயற்சியின் விளைவாக இருந்தது. பதவி மாற்ற நிகழ்ச்சிப்போக்கு உத்தியோகபூர்வமாக தொடங்கி உள்ளதற்கு மத்தியிலும், அரசியலமைப்புக்குப் புறம்பான தேர்தல் ஆட்சிக்கவிழ்ப்பு சதி தொடர்கிறது.

The General Services Administration building in Washington. (Credit: AP Photo/Jacquelyn Martin)

முர்பி கடிதம் குறித்து செய்திகளில் வெளியான ஒருசில நிமிடங்களுக்குப் பின்னர், ட்ரம்ப் GSA நகர்வுக்கான பாராட்டுக்களுக்கு உரிமைகோரி ஒரு ட்வீட் செய்தார். அதேவேளையில், அவரின் அடித்தளமற்ற சட்டவழக்குகளைத் தொடர்வதற்கும், 2016 தேர்தலில் அவர் ஜெயித்த ஆனால் இந்த தேர்தலில் அவர் தோல்வியடைந்த முக்கிய போட்டி நிலவிய மாநிலங்களில் பைடென் வெற்றிக்கு அங்கீகாரம் வழங்குவதை முடக்குவதற்கான முயற்சிகளிலும் அவர் தீர்மானகரமாக இருப்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். மிச்சிகன், பென்சில்வேனியா, விஸ்கான்சின், ஜோர்ஜியா மற்றும் அரிசோனா ஆகியவை இந்த மாநிலங்களில் உள்ளடங்குகின்றன.

பைடெனின் வெற்றி இறுதியானது. அவர் ட்ரம்பை விட சுமார் ஆறு மில்லியன் மக்கள் வாக்குகள் அதிகமாக இருந்ததுடன், ஜனாதிபதி தேர்வுக்குழுவில் 232 க்கு 306 என்ற வித்தியாசத்தில் இருந்தார், இது தேவையான 270 வாக்குகளைவிட மிகவும் அதிகம் என்பதோடு, இது தேர்வுக்குழுவில் 2016 இல் ஹிலாரி கிளிண்டனை விட ட்ரம்ப் பெற்ற வாக்குகளுக்குச் சமமாகும்.

ட்ரம்ப் எழுதினார்: “நமது வழக்கு பலமாக தொடர்கிறது, நாம் இந்த நல்லதொரு போராட்டத்தைத் தொடர்வோம், நாம் மேலோங்குவோமென நான் நம்புகிறேன்!

“இருப்பினும், நம் நாட்டின் சிறந்த நலன்களுக்காக, ஆரம்ப நிகழ்வுபோக்குகளுக்குத் என்ன தேவைப்படுகிறதோ அதைச் செய்யுமாறு எமிலி மற்றும் அவர் குழுவுக்கு நான் பரிந்துரைக்கிறேன், அதையே செய்யுமாறு என் குழுவிடமும் நான் கூறியுள்ளேன்.”

முடிவெடுக்க தன்னை வழிநடத்தியதாக ட்ரம்பின் கோரிக்கையை முர்பி மறுத்துரைத்தார், “சட்டத்தின் அடிப்படையிலும், கிடைத்திருக்கும் உண்மைகளின் அடிப்படையிலும், நானே தான் சுதந்திரமாக என் முடிவுக்கு வந்தேன்," என்றார்.

முர்பி அவர் கடிதத்தில் குறிப்பிடுகையில், “சட்டரீதியான சவால்கள் மற்றும் தேர்தல் முடிவுகளை அங்கீகரிப்பது சம்பந்தப்பட்ட சமீபத்திய அபிவிருத்திகளின்" வெளிச்சத்தில் திங்கட்கிழமையே அவர் முடிவுக்கு வந்திருந்ததாக அப்பெண்மணி தெரிவித்தார். மிச்சிகன் மாநிலத்தின் 83 உள்ளாட்சிகளின் உத்தியோகபூர்வ வாக்கு எண்ணிக்கை முடிவு 154,000 வாக்குகளுக்கும் அதிக வித்தியாசத்தில் பைடெனுக்கு அம்மாநிலத்தையும் அதன் 16 தேர்வுக்குழு வாக்குகளையும் வழங்கி இருந்த நிலையில், மிச்சிகன் மாநில தேர்தல் ஆணையர்கள் அதை அங்கீகரித்து வாக்களித்து ஒரு சில மணி நேரங்களில் அவர் கடிதம் அனுப்பி இருந்தார்.

இதற்கு முன்னதாக வெள்ளிக்கிழமை ஜோர்ஜியாவின் 16 தேர்வுக்குழு வாக்குகளுடன் அம்மாநிலத்தின் உத்தியோகபூர்வ அங்கீகரிப்பு பைடெனுக்கு வழங்கப்பட்டிருந்தது. பென்சில்வேனியாவில், 20 தேர்வுக்குழு வாக்குகளுடன், செவ்வாய்கிழமை பைடெனின் வெற்றி அங்கீகரிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

குடியரசுக் கட்சி தலைமையிலான மிச்சிகன் மாநில சட்டமன்றம், தேர்ந்தெடுக்கப்பட்ட பைடென் வேட்பாளர்களை உதறிவிட்டு ட்ரம்ப் ஆதரவு தேர்தல் வேட்பாளர்களை அதன் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்க அனுமதிக்கும் நோக்கில், தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்காக அல்லது அவர்களின் அங்கரீகரிப்பைத் தாமதப்படுத்துவதற்காக குடியரசுக் கட்சி மாநில சட்டமன்ற உறுப்பினர்களையும் உள்ளாட்சி தேர்தல் நிர்வாகிகளையும் தனிப்பட்டரீதியிலும் நேரடியாகவும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட தூண்டிவிடும் ஓர் அசாதாரணமான மற்றும் வாதங்களின் அடிப்படையில் சட்டவிரோதமான ஒரு முயற்சிக்கு மத்தியில் தான் மிச்சிகனில் ட்ரம்பின் பின்னடைவு வந்தது.

மிச்சிகன் தேர்தல் ஆணையத்தின் வாய்னெ உள்ளாட்சியினது நான்கு உறுப்பினர் குழுவில் உள்ள குடியரசுக் கட்சியின் துணை தலைவரும் அவரின் சக குடியரசுக் கட்சியினர்களும் பைடென் ஆதரவு வாக்குகளை உத்தியோகபூர்வமாக ஆக்கும் விதத்தில், ஜனநாயகக் கட்சி பலமாக உள்ள அந்த உள்ளாட்சியில் மொத்த வாக்குகளையும் அங்கீகரிக்க மறுத்த அவர்களின் முந்தைய வாக்குகளை மாற்றிக் கொண்டதும், கடந்த செவ்வாய்கிழமை, ட்ரம்ப் அந்த பெண்மணியைத் தொலைபேசியில் அழைத்து பேசினார்.

அதற்கடுத்த நாள், இரண்டு குடியரசுக் கட்சியினர் தங்களின் வாக்குகளை மீண்டுமொருமுறை "இல்லை" என்று மாற்றுமாறு கோரி மனு தாக்கல் செய்தனர், இது அங்கீகாரத்தை முடக்கி இருக்கும், ஆனால் அது வெற்றியடையவில்லை.

பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் செனட் சபையின் பெரும்பான்மையினர் அணி தலைவர் உட்பட வெள்ளை மாளிகையின் முன்னணி குடியரசுக் கட்சி மாநில சட்ட வல்லுனர்களை மூடிய கதவு விவாதங்களுக்காக ட்ரம்ப் வெள்ளிக்கிழமை அழைத்திருந்தார். ஆனால் மிச்சிகனில் மக்கள் வாக்குகளை நிராகரிப்பதற்கான அவர் திட்டத்துடன் இணைந்து செல்வதற்கு அவர்களை உடன்பட செய்வதில் கண்கூடாகவே அது வெற்றியடையவில்லை.

வாரயிறுதி வாக்கில், குடியரசுக் கட்சியின் தேசிய குழுவும் மிச்சிகன் மாநில குடியரசுக் கட்சியும் அம்மாநிலத்தின் 83 உள்ளாட்சிகள் சமர்பித்த உத்தியோகபூர்வ முடிவுகளை அங்கீகரிக்க மறுக்குமாறு மிச்சிகன் மாநில தேர்தல் ஆணையர்களில் இரண்டு குடியரசுக் கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டனர். ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதிக்கான தேர்வுக்குழு வாக்கெடுப்புக்கு உத்தியோகபூர்வ நாளான டிசம்பர் 14 க்கு முன்னதாக மாநில வெற்றியாளர்களை உறுதிப்படுத்துவதற்கான இறுதிநாளுக்கு ஒரு நாள் முன்னதாக, டிசம்பர் 7 வரையில் அங்கீகரிப்பதைத் தாமதிக்குமாறு அவர்கள் கோரினர்.

நான்கு உறுப்பினர் குழுவின் திங்கட்கிழமை வாக்கெடுப்பில், ஒரு குடியரசுக் கட்சியாளரும், ஜனாதிபதியின் மறுதேர்வுக்காக பகிரங்கமாக பிரச்சாரம் செய்த ட்ரம்ப் ஆதரவாளருமான நோர்ம் ஷின்கில், தேர்தலை அங்கீகரிக்கும் தீர்மானத்தில் கலந்து கொள்ளாமல், தேர்தலை அங்கீகரிக்க மறுத்தார். உள்ளாட்சிகள் மற்றும் மாநில தேர்தல் அதிகாரிகளின் பரிந்துரைகளை நிராகரிக்கவோ அல்லது தவிர்ப்பதாகவோ மற்றொரு குடியரசுக் கட்சியாளர் வாக்களித்திருந்தால், அங்கீகரிப்பதற்கான தீர்மானம் தோல்வி அடைந்திருக்கக்கூடும். ஆனால் உள்ளாட்சிகள் சமர்பித்து அங்கீகாரம் அளித்த உத்தியோகபூர்வ முடிவுகளை செல்லுபடியாக்குவதே குழுவின் சட்டரீதியான பொறுப்பு என்பதால், வேறு எதையும் செய்ய அக்குழுவுக்கு எந்த சட்ட அடித்தளமும் இல்லை என்று குறிப்பிட்டு, அதை அவர் அங்கீகரிக்க வாக்களித்தார்.

ட்ரம்பை விட 73,000 வாக்குகள் அதிகம் பெற்றிருந்த பென்சில்வேனியாவில், அந்த தேர்தலைத் தகுதியிழக்கச் செய்ய கோரிய ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரக் குழுவின் சட்டவழக்கை நிராகரித்து பென்சில்வேனியாவின் ஒரு பெடரல் நீதிமன்ற நீதிபதி சனிக்கிழமை வழங்கிய ஒரு கடுமையான தீர்ப்பைப் பின்தொடர்ந்து மிச்சிகனில் ட்ரம்பின் பின்னடைவு வந்திருந்தது. மிகப்பெருமளவிலான வாக்கு முறைகேடுகள் குறித்து இட்டுக்கட்டுப்பட்ட வாதங்களின் அடிப்படையில் ட்ரம்பின் சட்டக் குழு பல்வேறு மாநிலங்களில் தாக்கல் செய்திருந்த 34 க்கும் அதிகமான சட்ட வழக்குகள் அனைத்திலுமே நடைமுறையில் அது தோல்வி அடைந்துள்ளது.

வலதுசாரி கூட்டாட்சி சமூக அமைப்பின் (Federalist Society) ஒரு குடியரசுக் கட்சி உறுப்பினரான நீதிபதி மாத்தீவ் பிரன், “தகுதியான மற்றும் அனுமானிக்கத்தக்க குற்றச்சாட்டுக்கள் இல்லாமல், ஆதாரங்களின்றி அழுத்தமான நடைமுறை புகார்களை மட்டுமே கொண்ட, பலவந்தமான சட்ட வாதங்கள் இந்த நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது,” என்று எழுதினார்.

அந்த தீர்ப்பை அடுத்து, முன்னர் ட்ரம்பின் சர்வாதிகார அதிகார பிடியை எதிர்க்க மறுத்த குடியரசுக் கட்சி சட்ட வல்லுனர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலரும் தேர்தலை ஒப்புக் கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தனர், குடியரசுக் கட்சி முன்னாள் ஆளுநர் கிறிஸ் கிறைஸ்டி, பென்சில்வேனியா செனட்டர் பட் டூமே மற்றும் பிரதிநிதிகள் சபையின் குடியரசுக் கட்சி குழு தலைவர் லிஸ் செனெ ஆகியோர் அதில் உள்ளடங்குவர். திங்கட்கிழமை அவர்களுடன் ஓஹியோ செனட்டர் ரோப் போர்ட்மன் மற்றும் மேற்கு வேர்ஜினியாவின் செனட்டர் ஷெல்லெ மூர் கேபிடோவும் இணைந்தனர்.

உலகின் மிகப்பெரிய தனியார் முதலீட்டு நிறுவனமான பிளாக்ஸ்டோன் குழுமத்தின் (Blackstone Group) பில்லியனர் தலைமை செயலதிகாரி ஸ்டீபன் சுவார்ஸ்மனும், திங்கட்கிழமை பைடெனைத் தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதியாக அங்கீகரித்தார், மேலும் ஒப்புக் கொள்ளுமாறு ட்ரம்பை வலியுறுத்தினார். சீனாவுடனான வர்த்தகத்தில் சுவார்ஸ்மன் ட்ரம்புக்கு ஓர் ஆலோசகராக சேவையாற்றியவர். நவம்பர் 6 இல், சக தலைமை செயலதிகாரிகள் உடனான ஒரு தொலைபேசி அழைப்பில், தேர்தல் முடிவுகளைச் சவால் விடுப்பதற்கான ட்ரம்பின் அறைகூவலை சுவார்ஸ்மன் பாதுகாத்திருந்தார்.

சுவார்ஸ்மன் CNN க்கு வழங்கிய ஓர் அறிக்கையில், “முடிவு இன்று மிகவும் நிச்சயமாக உள்ளது, நாடு அதை நோக்கி நகர்ந்தாக வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி பைடெனும் அவர் குழுவும் கோவிட் க்குப் பிந்தைய பொருளாதாரத்தைக் கட்டமைப்பதில் குறிப்பிடத்தக்க சவால்களை அவர்கள் முகங்கொடுத்திருப்பதால், வணிக சமூகத்தில் உள்ள பலரைப் போலவே, நானும் அவர்களுக்கு உதவ தயாராக உள்ளேன்,” என்றார்.

தேர்தல் முடிவுகளை ட்ரம்ப் ஏற்றுக் கொண்டு பைடெனுக்கு இணக்கமாக இருக்க வேண்டுமென வலியுறுத்தி, குடியரசுக் கட்சிக்கு நன்கொடை வழங்கிய பலர் உள்ளடங்கலாக 164 உயர்மட்ட வணிக செயலதிகாரிகள் கையெழுத்திட்ட ஒரு கடிதம் திங்கட்கிழமை மாலை வெளியிடப்பட்டது. மாஸ்டர்கார்டு (Mastercard) நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி அஜய் பங்கா, கோல்டுமன் சாச்ஸ் தலைவரும் தலைமை செயலதிகாரியுமான டேவிட் எம். சாலமன் மற்றும் Condé Nast இன் தலைமை செயலதிகாரி ரோஜர் லென்ச் ஆகியோர் அதில் கையெழுத்திட்டிருந்தவர்களில் உள்ளடங்குவர்.

தேர்தலைக் களவாடுவது மக்கள் எதிர்ப்பின் ஒரு வெடிப்பைத் தூண்டிவிட்டு, அது முதலாளித்துவ அமைப்புமுறையின் ஸ்திரப்பாட்டையே அச்சுறுத்தும் என்ற பயம் தான், பெருநிறுவன-நிதியியல் செல்வந்த தட்டுக்களுக்குள் ட்ரம்புக்கான ஆதரவை குறைய செய்துள்ளது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இரண்டு தரப்பிலும் ஆக்ரோஷமாக பெருவணிகங்களின் நலன்களைப் பாதுகாக்கும் ஒரு வலதுசாரி, இராணுவவாத நிர்வாகத்தை பைடென் ஒருங்கிணைத்து வரும் அதேவேளையில் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக நிலைமைகள் மீது தீவிரப்படுத்தி வருகிறார் என்பதையும் அது அங்கீகரிப்பதாக உள்ளது.

மற்றொரு பகிரங்க கடிதத்தில், குடியரசுக் கட்சியின் 100 க்கும் மேற்பட்ட முன்னாள் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் ட்ரம்ப் தேர்தலை ஒப்புக் கொண்டு பதவி மாற்றத்தைத் தொடங்க அனுமதிக்க வேண்டுமென காங்கிரஸ் சபை குடியரசுக் கட்சியினர் கோருமாறு அழைப்பு விடுத்திருந்தனர். அந்த கடிதம் தேர்தலை ட்ரம்ப் அவமதிப்பிலிருந்து எழும் "நமது தேசிய பாதுகாப்பு அபாயங்கள்" மீது ஒருமுனைப்பட்டிருந்தது என்றாலும், “தேர்வுக்குழுவின் வாக்கெடுப்பைத் தடுப்பதற்கான" அவரின் "அபாயகரமான" முயற்சி குறித்தும் அது பேசியிருந்தது.

இதில் கையெழுத்திட்டிருந்தவர்களில் அடாவடித்தனமான போர் குற்றவாளிகளின் ஒரு கும்பல் உள்ளடங்கி இருந்தது, NSA மற்றும் CIA இன் முன்னாள் இயக்குனர் மைக்கெல் ஹேடென், தேசிய உளவுத்துறையின் முன்னாள் இயக்குனர் ஜோன் நெக்ரோபொன்டெ மற்றும் ட்ரம்பின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டனும் இதில் உள்ளடங்குவர்.

இத்தகைய அபிவிருத்திகளுக்கு மத்தியிலும், அதிகாரத்தில் தங்கியிருப்பதற்கும் மற்றும் ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கும் ட்ரம்ப் அனைத்து உத்தேசங்களையும் கொண்டுள்ளார் என்பது பென்சில்வேனியாவின் சனிக்கிழமை தீர்ப்புக்கு எதிராக பிலடெல்பியாவின் மூன்றாவது சுற்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்திருப்பதில் எடுத்துக்காட்டப்பட்டது. தேர்தல் முடிவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்வதற்கு களம் அமைக்கும் விதத்தில், திங்கட்கிழமை, மேல்முறையீட்டு நீதிமன்றம் கீழ் நீதிமன்ற தீர்ப்பு மீது அவசர மீளாய்வுக்கு ஒப்புதல் வழங்கியது. ட்ரம்பின் அதிவலது நியமனமான அமி கொனெ பாரெட் உடன் சேர்ந்து, இந்த நியமனத்தை ஜனநாயகக் கட்சியினர் தீவிரமாக எதிர்க்கவில்லை என்ற நிலையில், அந்த உயர் நீதிமன்றத்தில் குடியரசுக் கட்சி வலது 6-3 பெரும்பான்மையைக் கொண்டுள்ளது.

அதே நேரத்தில், ட்ரம்ப் இன்னும் அதிக வன்முறையான வாய்ப்புகளுக்கும் தயாரிப்பு செய்து வருகிறார். அவர் மிச்சிகன் ஆளுநர் கிரெட்சென் விட்மரைக் கடத்தி கொல்ல கடந்த மாதம் சதித்திட்டம் தீட்டியதற்காக பிடிபட்டவர்கள் உள்ளடங்கலாக பாசிசவாத குடிப்படைகளையும் மற்றும் சட்டத்தைத் தம் கைகளில் எடுக்கும் குழுக்களையும் தூண்டிவிடுவதைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். அவரது முயற்சிகளைச் செய்து முடிக்கக் கூடியவர்களாக கணக்கில் எடுக்கப்படும் பாசிச மனோநிலை அடிவருடிகளை பென்டகனில் நியமித்து, பென்டகனின் உயர்மட்ட கட்டளையகத்தில் பணிநீக்கங்களையும் மாற்றங்களையும் அவர் செய்துள்ளார்.

பதவியேற்பு தினமான ஜனவரி 20 க்கு இன்னும் எட்டு வாரங்களுக்கும் அதிக நாட்கள் உள்ளன. அதுவரையில் ட்ரம்ப் அவர் முடிவு செய்யக்கூடிய பாரிய அதிகாரங்களைக் கொண்டிருப்பார். உலக சோசலிச வலைத் தளம் எச்சரித்துள்ளதைப் போல, இந்த இடைக்கால பதவி மாற்ற காலத்தில் ஈரானுக்கு எதிராக ஒரு போர் தொடுக்க ட்ரம்ப் இஸ்ரேல் மற்றும் சவூதி அரேபியாவுடன் சதித்திட்டம் தீட்டி வருகிறார். இது, மில்லியன் கணக்கானவர்களைக் கொல்லக்கூடிய, பாரிய பரிணாமங்களைக் கொண்ட ஒரு போர் குற்றமாக மட்டும் இருக்கப் போவதில்லை, அது அமெரிக்காவுக்குள் எதிர்ப்புக்கு எதிராக இராணுவச் சக்திகளை அணித்திரட்டுவதற்குச் சாக்குபோக்கு கூட வழங்கக்கூடும்.

தொடர்ந்து கொண்டிருக்கும் சர்வாதிகார அச்சுறுத்தலைக் குறித்து தொழிலாள வர்க்கத்தை எச்சரித்தாக வேண்டும், ஏற்கனவே என்ன நடந்துள்ளதோ மற்றும் என்ன தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறதோ —பதவியிலிருக்கும் ஜனாதிபதி தேர்தல்களில் அவரின் தோல்வியை ஏற்க மறுப்பது— அமெரிக்காவில் முதலாளித்துவ ஜனநாயகத்தில் என்ன எஞ்சியிருக்கிறதோ அதன் திரும்பப் பெறவியலாத பொறிவைப் பிரதிநிதித்துவம் செய்கிறது என்பதை புரிய வைத்தாக வேண்டும். இது ஆளும் நிதியியல் செல்வந்த தட்டுக்களின் முக்கிய பிரிவுகள் பாசிசவாதம் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கி திரும்புவதைக் குறிக்கிறது, தற்போதைய நெருக்கடியின் உடனடி விளைவு என்னவாக இருந்தாலும் இது தொடரும் மற்றும் ஆழமடையும்.

இரு கட்சிகளுக்கும் எதிராகவும் அவை பாதுகாக்கும் இந்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராகவும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான தலையீட்டின் மூலமாக மட்டுமே இதை தடுக்க முடியும். சோசலிசம் இல்லாமல் இன்று ஜனநாயகம் இருக்க முடியாது.

 

மேலதிக வாசிப்புக்கு ஆசிரியர் பரிந்துரைக்கும் கட்டுரைகள்:

ட்ரம்ப் தேர்தலைச் செல்லாததாக்கும் முனைவைத் தொடர்கிறார்
[1 December 2020]

பைடென் வலதுசாரி இராணுவவாதிகளை கொண்ட தேசிய பாதுகாப்பு குழுவினை அமைக்கின்றார்
[25 November 2020]

2020 தேர்தல்களை செல்லத்தகாததாக ஆக்கும் ட்ரம்பின் சூழ்ச்சியை நிறுத்துவோம்!
[10 November 2020]