பாரிஸுக்கு மூன்று நாள் அரசு விஜயம் மேற்கொண்டுள்ள கெய்ரோ கொலைகாரன் அல் சிசியை மக்ரோன் வரவேற்கிறார்

Alex Lantier
8 December 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் மற்றும் ஏனைய உயர்மட்ட பிரெஞ்சு அதிகாரிகளுடன் மூன்று நாட்கள் பேச்சுவார்த்தைகளுக்காக எகிப்திய சர்வாதிகாரி ஜெனரல் அப்தெல் பத்தா அல்-சிசி நேற்றிரவு பாரிஸுக்கு வந்துள்ளார். பத்திரிகை அறிக்கைகள் வழக்கமான ஆர்வமற்ற மொழியில், மக்ரோனும் சிசியும் மூலோபாய பிரச்சினைகள் மற்றும் சிசியின் "மனித உரிமைகள் பதிவு" என்று குறிப்பிடுவதைப் பற்றி அவர்கள் விவாதிப்பார்கள் என்று சுட்டிக்காட்டியது.

தெளிவான மொழியில், லிபிய எண்ணெய் வயல்களையும் கிழக்கு மத்தியதரைக் கடலையும் கட்டுப்படுத்த இரத்தக்களரி பினாமிப் போர்களில் துருக்கிக்கு எதிரான அவர்களின் ஒத்துழைப்பைப் பற்றி அவர்கள் விவாதிப்பார்கள். ஆனால், உலகெங்கிலும் சிசியை இழிவுபடுத்தியது: தொழிலாள வர்க்கத்தின் மீதான கொலைகார ஒடுக்குமுறையாகும்.

எகிப்திய தொழிலாளர்களின் இரண்டு ஆண்டு புரட்சிகர இயக்கத்தை நசுக்கி, ஜூலை 2013 இல் தொடங்கப்பட்ட ஒரு சதித் திட்டத்தில், சிசி ஆயிரக்கணக்கானவர்களை வீதிகளில் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டார். சிசி இப்போது 60,000 அரசியல் கைதிகளின் பாரிய கைது மற்றும் சித்திரவதை மூலம் எகிப்தை ஆளுகிறார். சிசியுடனான மக்ரோனின் உறவுகளால் சங்கடத்திற்குட்பட்ட சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (LFI) கட்சி ஆகியவைகளிலிருந்து சில அதிகாரிகள், எகிப்துடன் "நமது இருதரப்பு உறவுகளின் இதயத்தானத்தில் மனித உரிமைகளை" வைக்க வேண்டும் என்று ஆலோசனை கூறும் ஒரு Le Monde பத்திரிகை பத்தியில் கையெழுத்திட்டனர்.

நவம்பர் 11, 2020 அன்று எகிப்திய ஜனாதிபதி அப்தெல் பத்தா அல்-சிசி ஒரு செய்தியாளர் மாநாட்டில் அறிக்கைகளை வெளியிடுகிறார். (Costas Baltas/Pool via AP)

உண்மையில், பிரெஞ்சு ஜனாதிபதியின் பொலிஸ் அரசு நிகழ்ச்சி நிரலில் பெருகிவரும் சமூக கோபத்தின் மத்தியில், ஒரு பாசிச எதோச்சதிகார ஆட்சியை எவ்வாறு நடத்துவது என்பது குறித்த ஒரு பயிற்சியை மக்ரோனுக்கு வழங்க சிசி வந்திருக்கிறார்.

விரிவான பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து 500,000 பேர்கள் அணிவகுத்துச் சென்ற ஒரு வாரத்திற்குப் பின்னர், மக்ரோனின் "விரிவான பாதுகாப்பு" (“global security”) மசோதாவுக்கு எதிராக பாரிசில் பத்தாயிரக்கணக்கான ஆர்ப்பாட்ட எதிர்ப்பாளர்களை சனிக்கிழமையன்று போலீசார் மீண்டும் மிருகத்தனமாகத் தாக்கினர். வரைவுச் சட்டத்தின் மீது வெடிக்கும் கோபம் உள்ளது, காவல்துறையினரை படப்பிடிப்பு செய்வதை தடை செய்யும் அதன் விதிகளில் ஒன்று இப்போது மறுவேலை செய்யப்படுகிறது. "மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்கள் மீதான முக்கியமான தாக்குதல்களை" அனுமதித்ததற்காக ஐக்கிய நாடுகள் சபை (UN) அதைக் கண்டித்தது.

இசை தயாரிப்பாளர் மிஷேல் ஜெக்லரை நவம்பர் 21 அன்று அவரது பாரிஸ் வீட்டிற்குள் புகுந்து போலீசாரால் காட்டுமிராண்டித்தனமான முறையில் அடித்துத் தாக்கியதானது இந்த மசோதா எதற்கு அனுமதி வழங்கிறது என்பது தெளிவாக வெளிப்படுகிறது. ஜெக்லர் தங்களை தாக்கியதாக தெரிவித்த, அந்த சம்பவம் பற்றிய வீடியோ வெளியானபோது அவரை சிறையில் அடைக்க இருப்பதாக போலீஸ் கூறிய குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் புனையப்பட்டவைகள் என அம்பலப்படுத்தப்பட்டது. போலீசை படம்பிடிக்கும் உரிமை இல்லாமல் இருந்தால், பொய்களின் அடிப்படையில் பொலிஸ் அரசால் ஒருதலைப்பட்சமாக சிறையில் அடைக்கப்படும் மக்களை எந்த ஒரு தாக்குதலிலிருந்தும், எதேச்சதிகாரமாக சிறையிலடைக்காமலும் பாதுகாக்க முடியாது என்பது தெளிவாகிறது.

புதனன்று உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மனன் ஒரு "பிரிவினைவாத-எதிர்ப்பு சட்டத்தின்" இறுதி வரைவை வழங்குவார், இது இப்போது ஓர்வெல்லியன் பாணியில் "குடியரசுக் கோட்பாடுகளை வலுப்படுத்துவதற்கான சட்டம்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உண்மையில், இந்த சட்டம் மத நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கும், மத, தொண்டு, சட்ட மற்றும் அரசியல் குழுக்கள் உட்பட அனைத்து வகையான அமைப்புக்களையும் கலைப்பதற்கும் அரசுக்கு முன்னொருபோதும் இல்லாத அதிகாரங்களை வழங்குகிறது. அவற்றின் உரிமைகள், பிரான்சில் நாஜி ஆக்கிரமிப்பின் போது தவிர, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அவர்களின் உரிமைகள் சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தன.

டார்மனன் முதலில் சட்டத்தை முன்வைத்தபோது ஒரு அதி-வலது தொனியை அமைத்திருந்தார், அவர் கோஷர் அல்லது ஹலால் உணவுகளானது பல்பொருள் அங்காடிகளின் தட்டு அடுக்குகளில் இருப்பதை விரும்பவில்லை எனக் கூறி, யூத-எதிர்ப்பு மற்றும் முஸ்லீம்-எதிர்ப்பு உணர்வுகளுக்கு அழைப்பு விடுத்தார். அதன் பின்னர், அரசானது 76 மசூதிகளை மூடிவிட்டது. மேலும், இது முஸ்லீம்களுக்கு சட்ட உதவி வழங்கி ஒரு வாதிடும் குழுவான பிரான்சில் இஸ்லாமிய பாகுபாட்டிற்கு எதிரான சபை (Collectif Contre Islamophobie en France - CCIF) உட்பட பல அமைப்புக்களையும் அது கலைத்தது.

வளர்ந்து வரும் சமூக கோபத்தால் பீதியடைந்த மக்ரோன், சர்வதேச செய்தித்தாள்கள் சட்டத்தை விமர்சிக்கும் கட்டுரைகளை தணிக்கை செய்ய வேண்டும் என்று கோரினார். பைனான்சியல் டைம்ஸ் இந்த மசோதா குறித்த ஒரு கட்டுரையை வாபஸ் பெற்றது மற்றும் அதன் தகவலைக் கண்டித்த மக்ரோனின் ஒரு கடிதத்தையும் வெளியிட்டது, அதே நேரத்தில் நியூ யோர்க் டைம்ஸ் மக்ரோனுடன் ஒரு பேட்டியை நடத்தியது, அப்பேட்டி அதனுடைய பத்திரிகையாளர்களுக்கு சட்டத்திற்கு எதிரான அவர்களின் "பக்கச்சார்பு" பற்றி போதனையளித்திருந்தது.

ஆளும் வர்க்கத்தின் சக்திவாய்ந்த பிரிவுகள் தங்கள் செல்வத்தைப் பாதுகாப்பதற்கு ஒரு எதோச்சதிகார ஆட்சியை நிறுவவேண்டும் என்று நம்புகின்றன. இரண்டு வாரங்களுக்கு முன்னர், அதி-வலது ஓய்வு பெற்ற தளபதி ஜெனரல் பியர் டு வில்லியே, நவ-பாசிச சஞ்சிகையான Current Values க்கு சர்வாதிகாரத்தின் தேவையை வலியுறுத்திப் பேசினார். "சட்டத்தின் ஆட்சி என்பது வெளிப்படையாக ஒரு நல்ல விஷயம், ஆனால் சில நேரங்களில் நீங்கள் மூலோபாய ரீதியாக சிந்திக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

நேற்று, Le Parisien பத்திரிகைக்கு இரண்டு பக்க அளவிலான பேட்டியை டு வில்லியே அளித்தார். அது "அடுத்த ஜனாதிபதி தேர்தலின் ஆச்சரியம்" என்று ஊகம் செய்யும் ஒரு தலையங்கத்துடன் அதை வெளியிட்டது. COVID-19 பெருந்தொற்று நோய்க்கு முன்னர் வெளிப்பட்ட புரட்சி மற்றும் சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் எழுச்சி பற்றி டு வில்லியே எச்சரித்தார். அவர் கூறினார், "பெருந்தொற்று நோய்க்கு முன் சமூக சூழல் ஏற்கனவே மிகவும் சீரழிந்து விட்டது. தற்போதைய நிலைமை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மிகவும் நிலையற்றதாக, மிக மோசமான வெடிப்புத் தன்மையுடையதாக உள்ளது. எல்லா இடங்களிலும் வறுமையும் கோபமும் அதிகரித்துவருகின்றன."

பிரெஞ்சுப் புரட்சி, முதலாம் உலகப் போர் மற்றும் 1917 அக்டோபர் ரஷ்யப் புரட்சிக்கு முன்னர் நிலவிய நிலைமைகளுடன் நிலையை ஒப்பிட்டு, அவர் மேலும் கூறியதாவது: "1789 அல்லது 1914 இல் ஏற்பட்ட தீப்பொறியைப் போன்ற ஒரு தீப்பொறி இருந்தால், விஷயங்கள் படிப்படியாக அல்லது மிக விரைவாக மாறக்கூடும். பிரான்ஸ் ஒரு பழைய ஜனநாயக நாடு, ஒரு முதிர்ந்த நாடு, ஆனால் வரலாற்று ரீதியாக தன்னை சீர்திருத்துவதில் சிக்கல் உள்ளது. இது பெரும்பாலும் வெடிப்புகள், சிதைவுகளுடன் நிகழ்கிறது.”

“உள்நாட்டு போரையிட்டு நான் அஞ்சுகிறேன்” என்று டு வில்லியே மேலும் கூறினார். "இன்று நமது பொலிஸ் படைகள் உடைந்து போகும் நிலைக்குச் கொண்டு செல்லப்பட்டுள்ளன," என்று அவர் அறிவித்தார். "அவர்கள் மே 1968 இல் இருந்து [பிரெஞ்சு பொது வேலைநிறுத்தத்திற்கு] பின்னர் நாம் பார்த்திராத வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்."

இந்த வர்க்கப் பதட்டங்கள், பிரெஞ்சு சூழ்நிலையிலிருந்து அல்ல ஆனால் உலக சூழ்நிலையிலிருந்து உருவானவை. பெருந்தொற்று நோயின் எடையின் கீழ் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதால் உலகளவில் கோடிக்கணக்கான மக்கள் அரச உதவியில் இருந்து துண்டிக்கப்படுகிறார்கள், மேலும் டிரில்லியன் கணக்கான யூரோக்கள் வங்கிகளுக்கும் பெரும் நிறுவனங்களுக்கும் அரச பிணையெடுப்புகளில் ஒப்படைக்கப்படுகின்றன. 1991 ஆண்டில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐரோப்பா முழுவதும் மூன்று தசாப்தங்களாக சிக்கன நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த குற்றவியல் கொள்கை, ஜனநாயக ஆட்சிக்கு பொருந்தாத சமூக சமத்துவமின்மையின் மட்டங்களை உருவாக்குகின்றது.

ஐரோப்பாவிலுள்ள செல்வந்த நாடுகளில் ஒன்றான பிரான்சில், ஒன்பது மில்லியன் மக்கள், கிட்டத்தட்ட 15 சதவீத மக்கள், மாதத்திற்கு 900 யூரோக்கள் என்ற கீழ்மட்ட வறுமை கோட்டில் வாழ்கின்றனர். இவர்களில் பாதிப்பேர் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக இருக்கின்றனர்.

பிரான்சின் நிகழ்வுகள் சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்: ஆளும் வர்க்கத்தின் தீர்க்கமான பிரிவுகள் ஒரு பாசிச பொலிஸ் அரசை ஸ்தாபிக்க உழைப்பதன் மூலம் புரட்சியின் அச்சுறுத்தலுக்கு நனவுடன் பதிலளிக்கின்றன. 1929 ஆம் ஆண்டில், ஆளும் வர்க்கமானது ஜேர்மனியிலும் ஐரோப்பாவிலுமுள்ள பாசிஸ்டுகளுக்கு அதிகாரத்தை ஒப்படைக்கத் தயாரானபோது, மாபெரும் மார்க்சிச புரட்சியாளரான லியோன் ட்ரொட்ஸ்கி விளக்கினார்:

“மின் பொறியியலுடன் ஒப்புமை செய்தால், அதிக மின்னழுத்தம் ஏற்படும் மின்சாரத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு அமைக்கப்படும் பாதுகாப்பு சுவிட்சுகள் மற்றும் சர்க்யூட் பிரேக்கர்கள் கொண்ட ஒரு அமைப்புமுறையாக, தேசிய அல்லது சமூகப் போராட்டத்தில் ஜனநாயகத்தை குறிப்பிடலாம். மனித வரலாற்றின் எந்தக் காலகட்டத்திலும் -ஏதோ ஒரு மூலையிலும் கூட- நமது காலத்தைப் போல குரோதங்கள் ஒருபோதும் அதிகப்படியாக ஆகியிருந்தது கிடையாது. ஐரோப்பிய பவர் கிரிட்டில் பல்வேறு இடங்களிலும் மேலும் மேலும் அடிக்கடி மின்பாதைகள் ஓவர்லோடு ஆவது நடந்தேறுகிறது. ரொம்பவும் அதிக சார்ஜ் ஆகி விடுகின்ற வர்க்க மற்றும் சர்வதேச முரண்பாடுகளது தாக்கத்தின் கீழ், ஜனநாயகத்தின் பாதுகாப்பு சுவிட்ச்கள் புகைந்து விடுகின்றன அல்லது வெடிக்கின்றன. இதுதான் அத்தியாவசியமாக சர்வாதிகாரம் என்னும் ஷார்ட் சர்க்யூட்டிங் குறித்து நிற்பதாகும்.” இன்று, இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் போராட்டங்களின் சமயத்தில் போல, வர்க்கப் பதட்டங்கள் பல்கிப்பெருகி முதலாளித்துவ ஜனநாயகத்தின் சர்க்யூட் பிரேக்கர்களை ஓவர்லோடு செய்து கொண்டிருக்கின்றன.

சர்வாதிகாரம் எகிப்திலிருந்து ஐரோப்பாவிற்கு பரவ முடியாது என்று நினைப்பவர்களுக்கு உரையாற்றக்கூடிய ஒரு பத்தியில், ட்ரொட்ஸ்கி மேலும் கூறினார்: "மூட்டுவாதம் சிறிய விரலிலோ அல்லது பெருவிரலிலோ தொடங்கலாம், ஆனால் இறுதியில் அது இதயத்தை அடைகிறது."

இந்த நிகழ்வுகள் 2017 ஆண்டில் பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste - PES) எடுத்த நிலைப்பாட்டை நிரூபணம் செய்துகாட்டுகின்றன. மக்ரோனுக்கும் நவ-பாசிசவாத வேட்பாளர் மரின் லு பென்னுக்கும் இடையிலான போட்டியை செயலூக்கத்துடன் பகிஷ்கரிக்குமாறு PES அழைப்பு விடுத்தது. லு பென் ஜனாதிபதியாக பொறுப்பெடுக்கக்கூடிய அதி-வலது ஆட்சிக்கு மக்ரோன் ஒரு அரசியல் மாற்றீடு அல்ல என்று PES எச்சரித்தது. இப்போது, டு வில்லியேயின் அதி-வலது திட்டத்தை மக்ரோனே செயற்படுத்துகிறார்.

சர்வாதிகாரத்திற்கு திரும்புவதை எதிர்ப்பது என்பது முதலாளித்துவத்திற்கு எதிராக சோசலிசத்திற்காகப் போராட தொழிலாள வர்க்கத்தில் ஒரு சர்வதேச இயக்கம் கட்டமைக்கப்பட வேண்டும். தொழிலாளர்கள் மக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்த எதுவும் இல்லை, சிசியுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் எதுவும் இல்லை. ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்பு மற்றும் மக்ரோனுடன் சிக்கன நடவடிக்கைகளை பேச்சுவார்த்தை நடத்திய தொழிற்சங்கங்களால் கட்டுப்படுத்தப்படும் ஆர்ப்பாட்டங்களும் ஆளும் வர்க்கம் சர்வாதிகாரத்திற்கு திரும்புவதைத் தடுக்காது.

தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக தொழிலாளர்களை சர்வதேச ரீதியில் ஒழுங்கமைத்தல் மற்றும் சோசலிசத்திற்காக போராடுவதற்கும் அதிகாரத்தை தொழிலாள வர்க்கத்திற்கு மாற்றுவதற்கும் போராடுகின்ற அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவது தான் முக்கியமான பணியாக இருக்கிறது.

 

மேலதிக வாசிப்புக்கு ஆசிரியர் பரிந்துரைக்கும் கட்டுரைகள்:

லிபிய போரில் துருக்கிக்கு எதிராக தலையீடு செய்யும் எகிப்தின் அச்சுறுத்தலை பிரான்ஸ் ஆதரிக்கிறது
[25 June 2020]

எகிப்து: எல்-சிசி இராணுவ சர்வாதிகாரத்திற்கான சட்ட கட்டமைப்பை அங்கீகரிக்கிறார்
[5 June 2020]

சோசலிசப் புரட்சியின் தசாப்தம் ஆரம்பமாகிறது
[4 January 2020]