பிரெக்ஸிட் உடன்படிக்கை கூடுதல் மோதல்களுக்கு வழி வகுக்கிறது

Robert Stevens
31 December 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரிட்டனும் ஐரோப்பிய ஒன்றியமும் டிசம்பர் 24 இல் உடன்பட்ட வர்த்தக உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ள இருக்கின்றன. பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளுக்கும் இடையிலான இந்த உடன்படிக்கை 660 பில்லியன் பவுண்டு மதிப்பிலான வர்த்தகத்தை உள்ளடக்கி இருப்பதுடன், பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே பண்டங்கள் சம்பந்தப்பட்ட வரிவிதிப்பு மற்றும் ஒதுக்கீடு மட்டுப்பாடுகள் இல்லாத வர்த்தகத்தைப் பேணுகிறது.

"ஜனவரி 1, 2021 இல் இருந்து ஐரோப்பிய ஒன்றியம்-பிரிட்டன் வர்த்தகம் மற்றும் கூட்டுறவு உடன்படிக்கை" மீதான உடன்பாடானது, ஜூன் 2016 இல் தொடங்கிய பிரெக்ஸிட் நிகழ்ச்சிப்போக்கை உத்தியோகபூர்வமாக நிறைவு செய்கிறது, அப்போது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதென ஒரு சிறிய வித்தியாசத்திலான பெரும்பான்மையால் பிரிட்டனின் ஒரு பொது வாக்கெடுப்பில் வாக்களிக்கப்பட்டது.

Prime Minister Boris Johnson signed the Withdrawal Agreement for the UK to leave the EU on January 31st. [Credit: U.K. Prime Minister]

1,246 பக்க ஆவணம் மீது வெறும் ஒரு நாள் விவாதத்திற்குப் பின்னர், இந்த உடன்படிக்கை புதன்கிழமை பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வேக வேகமாக கொண்டு செல்லப்படுகிறது. பழமைவாத கட்சியின் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் 80 ஆசனங்களுடன் பெரும்பான்மை கொண்டுள்ளார் என்பதோடு, பிரதான எதிர்க் கட்சியான தொழிற் கட்சியிடம் இருந்தும் இந்த உடன்படிக்கைக்கு ஆதரவைப் பெற்றுள்ளார். வெறும் 47 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டுள்ள ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி மற்றும் 11 உறுப்பினர்களைக் கொண்டுள்ள தாராளவாத ஜனநாயகக் கட்சியினர் மட்டுமே இதற்கு எதிராக வாக்களிக்க சூளுரைத்துள்ளனர்.

இந்த உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ளும் நிகழ்ச்சிப்போக்கைத் தொடங்கும் விதத்தில், இந்த உடன்படிக்கைக்கு ஒப்புதல் வழங்க ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் நேற்று புரூசெல்ஸில் ஒன்றுகூடினர். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஒப்புதலுடன், ஆனால் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல், ஐரோப்பிய ஒன்றியம் ஜனவரி 1 இல் இருந்து தற்காலிகமாக இதை நடைமுறைப்படுத்த முடியும். ஐரோப்பிய நாடாளுமன்றம் இதை சில காலம் கழித்து பெப்ரவரியில் ஏற்றுக் கொள்ளுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உடன்படிக்கை டிசம்பர் 31 காலக்கெடுக்கு வெறும் ஒரு சில நாட்களுக்கு முன்னதாக எட்டப்பட்டது. பிரிட்டன் புரூசெல்ஸ் உடனான அதன் வெளியேறும் உடன்படிக்கை மூலமாக ஜனவரியில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறி, ஓராண்டு கால இடைமாறும் காலக்கட்டத்திற்குள் நுழைந்தது. கடந்த வாரம் இந்த உடன்படிக்கை மீது உடன்பாடு எட்டப்படாமல் இருந்திருந்தால், பிரிட்டன் ஒரு "கடினமான பிரெக்ஸிட்" மூலமாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறி இருக்கும் என்பதோடு, உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகள் மீதும் மற்றும் ஒரு சிக்கலான வரிவிதிப்பு முறை மூலமாகவும் வர்த்தகம் செய்ய நிர்பந்திக்கப்பட்டிருக்கும்.

அந்த வர்த்தக பேச்சுவார்த்தைகள் ஒன்றுக்கொன்று முரண்பாடாக பலவீனமாக இருந்தன, இரண்டு தரப்புகளும் கடைசி நிமிடம் வரையில் அவற்றின் நிலைப்பாடுகளில் விடாப்பிடியாக இருந்ததுடன் அச்சுறுத்தல்களில் ஈடுபட்டிருந்தன.

பேச்சுவார்த்தைகள் முடிவு செய்யப்பட்டு விட்ட நிலையில், நவம்பர் மாத அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்பை ஜோ பைடென் ஜெயித்திருப்பதால் ஜோன்சன் பாரியளவில் பலவீனமடைந்திருந்தார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஜனநாயகக் கட்சியினரின் எதிர்ப்பு நன்கறியப்பட்டதே என்கின்ற நிலையில், அவர்களின் வெற்றி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஒரு வரமாக ஆகியிருந்தது. டொனால்ட் ட்ரம்பின் "அமெரிக்கா முதலில்" திட்டநிரல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அவரின் விரோதம் ஆகியவற்றுடன் அடிமைத்தனமாக ஒட்டிக் கொண்டிருந்த டோரி அரசாங்கத்தின் பிரெக்ஸிட் மூலோபாயம் பலமாக அடிவாங்கி உள்ளது.

இரு தரப்புமே ஓர் உடன்படிக்கையை விரும்பிய நிலையில், பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் விடப்பட்டிருக்கும் அந்த உடன்படிக்கையானது, பிரதான ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே தீவிரமடைந்து வரும் வர்த்தக மோதல்கள் ஆதிக்கம் செலுத்தும் ஓர் உலகளாவிய நிலைமையில், இவ்வளவு தான் செய்ய முடியும் என்பதாக இருந்தது.

இறுதியாக, இந்த உடன்படிக்கை பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே தொடர்ந்து கொண்டிருக்கும் மோதலில் குறுகிய கால வரையறைகளை அமைத்திருப்பதற்கு மேலாக வேறொன்றையும் செய்யவில்லை. இது, பிரிட்டனை பிரதான அபாயப் பகுதியாக கொண்டு, அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே வெடித்துள்ள உலகளாவிய பதட்டங்களில் சிறிது நிம்மதியைக் கொண்டு வந்து, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கின்ற உக்கிரமான பதட்டங்களின் இன்றைய தேதியின் முழுமையான வெளிப்பாடாக உள்ளது.

பேச்சுவார்த்தைகளில் தீர்க்க முடியாத பிரச்சினைகள் பிரதான புவிசார் அரசியல் மோதல்களில் குவிமையமாக மாறும் என்பது தவிர்க்க முடியாததாகும்.

இந்த ஆவணம் வெளியுறவுக் கொள்கை குறித்தோ, பாதுகாப்பு மற்றும் தற்காப்பு குறித்தோ எதுவும் குறிப்பிடவில்லை. இந்த சிக்கல்கள் பலவற்றில், பிரிட்டன் அமெரிக்காவுடன் அணி சேர்ந்துள்ளது, பைடென் அக்கண்டத்தில் வேறு கூட்டாளிகளைப் பெற முயன்றாலும் கூட பிரிட்டன் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக நிற்க வேண்டியிருக்கும். இந்த உடன்படிக்கைக்கு முன்னரே, பிரிட்டன் ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் உலகளாவிய செயற்கைக்கோள் கண்காணிப்பு முறை உள்ளடங்கலாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பல்வேறு பாதுகாப்பு மற்றும் தற்காப்பு ஏற்பாடுகளில் இருந்து வெளியேறி இருந்தது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறக்குறைய 7 சதவீதத்தைக் கணக்கில் கொண்டு 132 பில்லியன் பவுண்டு தொழில்துறையுடன் பிரிட்டன் ஓர் உலகளாவிய தலைமையில் இருக்கும் ஒரு துறையான நிதித்துறை சேவைகள் குறித்தும் இந்த உடன்படிக்கையில் எதுவும் இல்லை. 2018 இல், நிதியியல்துறை சேவைகள் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியது, இதில் இலண்டன் அத்துறையின் வெளியீட்டில் 49 சதவீதத்தைக் கணக்கில் கொண்டிருந்தது.

“அதன் நிதித்துறை சேவை நிறுவனங்கள் எதிர்காலத்தில் என்ன சந்தை அணுகல் உரிமைகளைப் பெறும் என்பதைத் தெரிந்து கொள்ள ஜனவரி 1 வரையில் காத்திருக்க வேண்டியிருக்கும்" என்று புரூசெல்ஸ் இலண்டனுக்குத் தெரிவித்ததாக பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டது, ஐரோப்பிய ஒன்றிய தரமுறைகளில் இருந்து பிரிட்டன் எந்தளவுக்கு விலகி உள்ளது என்பதை அவர்கள் இணைப்பார்கள் என்பதற்கு இதுவொரு எச்சரிக்கையாகும்.

அதனதன் நிதித்துறை சேவை சந்தைகளை அணுகுவது, நெறிமுறை நடைமுறைகளில் "சமநிலை" என்ற அடிப்படையில் இருக்கும் என்பதில் முன்னரே உடன்பாடு எட்டப்பட்டிருந்தது. ஆனால் புரூசெல்ஸ் தான் முதலில் அதன் பாதிப்பைப் பெறுகிறது, தொழிலாளர்களின் பாதுகாப்பு உரிமைகள், சுற்றுச்சூழல் தரமுறைகள், மற்றும் இனி பிரிட்டன் கட்டுப்பட்டு இருக்காத ஏனைய நெறிமுறைகளை அடியோடு வெட்டிவிடுவதன் மூலமாக பொருளாதார ஆதாயத்தைப் பெறுவதற்கான இலண்டனின் தவிர்க்கவியலாத நகர்வுகள் குறித்து புரூசெல்ஸ் முற்றிலும் விழிப்புடன் உள்ளது.

ஜோன்சன் இந்த உடன்படிக்கையை அறிவிக்கையில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் நேரடி போட்டியிடும் வகையில் "தேம்ஸில் ஒரு சிங்கப்பூரை" ஸ்தாபிப்பதற்கான அவரின் உத்தேசத்தைத் தெளிவுபடுத்தினார். அவர் டிசம்பர் 24 உரை ஒன்றில் அறிவிக்கையில், “நாங்கள் கூட்டாக உருவாக்குவது" என்னவென்றால், ஒரு "மாபெரும் சுதந்திர வர்த்தக மண்டலம்" ஆகும். “சுதந்திரமான துறைமுகங்கள் மற்றும் புதிய பசுமை தொழில்துறை மண்டலங்களுடன், புதிய வேலைகளையும் புதிய நம்பிக்கையை நாம் எங்கே எவ்வாறு உருவாக்க போகிறோம் என்பதை" இப்போது பிரிட்டனே "முடிவெடுக்க முடியும்.” பெருநிறுவனங்களுக்கு குறைவான வரிகள் மற்றும் இலண்டனில் தேம்ஸ் உள்ளடங்கலாக மலிவு உழைப்பு சக்தி ஆகியவை வழங்குவதன் அடிப்படையில், பிரிட்டனைச் சுற்றி 10 சுதந்திர துறைமுகங்களுக்கான வேலைகள் ஏற்கனவே நடந்து வருகின்றன.

ஜோன்சன் இந்த உடன்படிக்கைக்குப் பிந்தைய அவரின் முதல் பேட்டியை சன்டே டெலிகிராபுக்கு வழங்கினார், “புரூசெல்ஸ் 'வழமையாக' பழிவாங்கும் நடவடிக்கை எடுக்க முயன்றால் இந்த உடன்படிக்கையிலிருந்து வெளியேற அவர் தயாராக இருப்பதை" பிரதம மந்திரி எவ்வாறு சமிக்ஞை செய்தார் என்பதை அப்பத்திரிகை குறிப்பிட்டது. சுதந்திர துறைமுகங்களை ஆதரிப்பதில் முக்கியமானவரான சான்சிலர் ரிஷி சுனாக் "இவை அனைத்திலும் பெரும் ஒத்திகை செய்யப்படுகிறது,” என்று கூறிய நிலையில், வணிக வரிகளும் வணிக நெறிமுறைகளும் குறைக்கப்படும்.

இந்த பிரெக்ஸிட் உடன்படிக்கை, “தாட்சர் புரட்சியை" பரிபூரணமாக்க தங்களுக்கான பிரெக்ஸிட்டை தலைச்சிறந்த வாய்ப்பு என்பதாக பார்க்கும் ஆளும் உயரடுக்கின் மிகவும் ஈவிரக்கமற்ற மற்றும் வக்கிரமான பிரிவுகளுடன் தொழிலாள வர்க்கத்தை மோதலில் நிறுத்துகிறது.

பிரெக்ஸிட் என்பது தொழிலாள வர்க்கத்திற்கு தாட்சரிச பேராபத்து என்பதை தவிர வேறுபட்டிருகாது என்ற சோசலிச தொழிலாளர் கட்சி மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் தலைமையில் 2014 இல் முன்வைக்கப்பட்ட இடதிலிருந்து வெளியேறும் (Brexit) பிரச்சாரத்தின் பிற்போக்குத்தனமான வாதங்கள் தவறென ஆகியுள்ளன. இந்த உடன்படிக்கை நிறைவு செய்யப்பட்டு வருகின்ற நிலையில், “பிரெக்ஸிட் இதை விட அதிகமானதை அர்த்தப்படுத்தும்,” என்று தலைப்பிட்டு சோசலிச தொழிலாளர் கட்சி Socialist Worker கட்டுரை ஒன்றில் அனுதாபமாக குறிப்பிடுகையில், “முதலாளிமார்கள் மக்களைச் சுரண்ட இன்னும் எளிதாக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட பிரெக்ஸிட்டின் பல வடிவங்களை டோரிகள் கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்கள் தேம்ஸில் ஒரு சிங்கப்பூரை அமைக்க விரும்புகிறார், இதில் தொழிலாளர்கள் உரிமைகள் வெட்டப்பட்டு இனவாத சட்டங்கள் பலப்படுத்தப்படுகின்றன,” என்று குறிப்பிட்டது.

டோரிகள் இத்தகைய ஒரு விசயத்தைக் கருத்தில் கொள்வார்கள் என்று யார் தான் நினைத்திருப்பார்கள்?

“சுதந்திரச் சந்தையை" வழிபடும் பிரெக்ஸிட் ஆதரவாளர்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் கட்டுப்படுத்தும் மேலாதிக்கமாக இருக்கவில்லை அல்லது இருக்கவும் இருக்காது என்பதுடன், அது தொழிலாளர்களுக்கு ஒரு முற்போக்கான முன்னோக்கிய பாதையை வழங்கும் என்று அதிலேயே தங்கியிருக்கலாம் என்ற ஆளும் உயரடுக்கின் பிரிவுகள் மற்றும் அதன் ஆதரவாளர்களின் வாதமும் மற்றொரு மாபெரும் கட்டுக்கதையாக சிதைந்து போனது. ஒட்டுமொத்த ஐரோப்பிய கண்டமும் சமூக சமத்துவமின்மையால் சீரழிந்துள்ளது, இத்துடன் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஓர் ஆயுதமாக அதிவலது சக்திகளை இறக்கி விடுவதற்காக திட்டமிட்டு விதைக்கப்பட்டு வருகின்றன. இதற்கும் மேலாக, இலண்டன் போலவே புரூசெல்ஸூம் வர்த்தகப் போருக்குப் பொறுப்பேற்றுள்ளது.

ஐரோப்பிய சக்திகள் அனைத்தும் வர்க்க நலன்களை மூர்க்கமாக பின்தொடர்வது இந்த உடன்படிக்கையின் அந்த நேரத்திலேயே கூட தெளிவாக இருந்தது. இரண்டாம் உலக போருக்குப் பின்னர் அக்கண்டத்தில் தடுத்திருக்கக்கூடிய மிகப்பெரியளவில் இழப்பை இந்தாண்டு கண்டது, 525,000 க்கும் அதிகமானவர்கள் உயிராபத்தான நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் மட்டும் உத்தியோகபூர்வமாக 71,000 பேரும் ஏனைய அதிகாரபூர்வ மதிப்பீடுகளின்படி குறைந்தபட்சம் 80,000 பேரும் கோவிட்-19 ஆல் உயிரிழந்துள்ளனர். ஆனால் கோவிட்-19 தடுப்பூசி உட்பட உணவு மற்றும் மருந்து பொருட்களின் வினியோகம் அச்சுறுத்தப்பட்ட டோவர் துறைமுகத்தின் நெஞ்சைப் பதறச் செய்யும் காட்சிகளுக்கு பின்னரும் கூட, இருதரப்பிலிருந்தும் யாரொருவரும் எந்தவொரு தருணத்திலும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதைத் தாமதப்படுத்தலாமென அறிவுறுத்தவில்லை.

பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சகோதர கட்சிகளும் ஆரம்பத்தில் இருந்தே பிரெக்ஸிட் நெருக்கடியில் ஆளும் வர்க்கத்தின் எல்லா கன்னைகளையும் எதிர்த்தன. ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்கான போராட்டத்தில் ஆளும் வர்க்கத்தின் தேசியவாத, முதலாளித்துவ-சார்பு அரசியலுக்கு எதிராக ஓர் ஒருங்கிணைந்த சர்வதேச சோசலிச எதிர்ப்பில் தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவது மட்டுமே இப்போது மில்லியன் கணக்கானவர்கள் முகங்கொடுத்து வரும் சமூக மற்றும் பொது சுகாதார நெருக்கடிக்கு ஒரே முற்போக்கான பதில் என்று இன்றும் நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

 

மேலதிக வாசிப்புக்கு ஆசிரியர் பரிந்துரைக்கும் கட்டுரைகள்:

தொழிலாள வர்க்கம் பேரழிவை முகங்கொடுக்கையில் இன்னமும் பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளில் எந்த உடன்பாடும் இல்லை
[24 December 2020]

இராணுவ செலவினங்களில் 21.5 பில்லியன் பவுண்டுகள் அதிகரிப்பை பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது
[25 November 2020]

போரிஸ் ஜோன்சனின் பிரதம மந்திரி பதவி பிரெக்ஸிட் நெருக்கடியை ஆழப்படுத்துவதுடன், கடுமையான வர்க்க மோதலை முன்னறிவிக்கிறது
[24 July 2019]

வர்க்கப் போராட்டமும் சோசலிசமுமே பிரெக்ஸிட் நெருக்கடிக்கான ஒரே பதில்
[1 April 2019]

உடன்பாடு இல்லாத பிரெக்ஸிட்டுக்குப் பின்னரான சமூக அமைதியின்மைக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தயாராகிறது
[21 August 2019]