ஆசிரியர்களின் திடீர் வேலைநிறுத்தங்கள் தொடர்கையில்

பிரெஞ்சு அரசாங்கம் பள்ளிகளில் COVID-19 வைரஸ் நோய்த் தொற்றுகளை மூடிமறைப்பது அதிகரிக்கிறது

Samuel Tissot
12 November 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நவம்பர் 6 ஆம் திகதி, பிரெஞ்சு பள்ளிகளில் 3,528 மாணவர்கள் மற்றும் 1,165 பணியாளர்களுக்கு மட்டுமே COVID-19 வைரஸ் பரிசோதனையில் தொற்று ஏற்பட்டதாக தெரிவித்து பிரெஞ்சு தேசிய கல்வி அமைச்சகம் அந்த வாரம் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டது. இருப்பினும், பொது சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள் வாரத்தின் முதல் மூன்று நாட்களில் 0 முதல் 19 வயதுக்குட்பட்ட 25,151 பேர் வைரஸ் தொற்று ஏற்பட்டதாக பரிசோதனை முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.

0–19 வயதுடையவர்களில் பெரும்பாலானோர் பள்ளி வயது மாணவர்களாகவும், 50,000 குழந்தைகள் மட்டுமே பிரான்சில் வீட்டில் கல்வி கற்பவர்களாகவும் இருப்பதால், இந்த இரண்டு எண்ணிக்கைகளுக்கும் இடையிலான வேறுபாடு பிரெஞ்சு பள்ளிகளில் COVID-19 வைரஸ் பரவுதலை முறையாக அரசாங்கம் மூடிமறைப்பதை சுட்டிக்காட்டுகிறது.

Students leave their school in Cambo les Bains, southwest France, Thursday November 5, 2020 (AP Photo / Bob Edme)

கடந்த வாரத்தில் மாணவர்கள் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கான முழுக் கதை கூட இதுவல்ல. வாரத்தின் தேசியளவில் தொற்றுகுள்ளானவர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர்கள் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் (முறையே 58,046 மற்றும் 60,486) பதிவாகியுள்ள நிலையில், தரவுகள் கிடைக்கும்போது பதிவுசெய்யப்பட்ட மாணவர்களில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது 40,000 ஐக் கடந்து செல்லுவதாக இருக்கும். மேலும், கடந்த வாரத்தில் சராசரியாக 20 சதவிகிதத்திற்கும் அதிகமான பரிசோதனை தொற்றுக்குள்ளானவர்களின் சதவிகிதத்துடன், நோய்த்தொற்றின் உண்மையான சதவிகிதம் இன்னும் அதிகமாக இருக்கிறது.

வைரஸ் இப்போது பிரான்ஸ் முழுவதும் கட்டுப்பாட்டில் இல்லாதுள்ளது. நவம்பர் 2 மற்றும் 6 ஆம் திகதிக்கு இடையில், பிரெஞ்சு மக்களில் 190,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டதாக பரிசோதனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சனிக்கிழமையன்று, 86,852 நோய்த்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. வைரஸால் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் ஆபத்தை அடிக்கோடிட்டுக்காட்டி, 0–19 வயதுக்குட்பட்ட 182 தனிநபர்கள் தற்போது பிரான்சில் COVID-19 உடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அனைத்து வயதினர்களில், நவம்பர் 2 முதல் 8 ஆம் திகதி வரையிலான வாரத்தில், COVID-19 வைரஸால் 3,420 பேர்கள் இறந்துள்ளனர்.

அரசாங்கத்தின் சமீபத்திய பொய்கள் பிரெஞ்சு ஆசிரியர்களிடமிருந்து பெருகிய முறையில் போர்க்குணமிக்க எதிர்ப்பை எதிர்கொள்கின்றன. கடந்த திங்கட்கிழமை தொடங்கி வாரம் முழுவதும் தொடர்ந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அனைத்து புனிதர்கள் விடுமுறைக்குப் (All Saints holiday) பின்னர் நவம்பர் 2 ஆம் திகதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை எதிர்த்து தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக வேலைநிறுத்த நடவடிக்கைகளை ஏற்பாடு செய்தனர். நாடு முழுவதும், மாணவர்கள் அவர்களுடைய ஆசிரியர்களின் வேலைநிறுத்த நடவடிக்கையில் சேர்ந்து கொண்டனர். பாரிஸில், இந்த வேலைநிறுத்தம் செய்யும் இளைஞர்களுக்கு எதிராக வன்முறை பொலிஸ் தாக்குதலுக்கு வழிவகுத்தது.

கல்வி அமைச்சின் குற்றவியல் முறைகள் இந்த வேலைநிறுத்த நடவடிக்கைக்கு விடையிறுப்பாகும். ஆசிரியர்களை மீண்டும் கொடிய வகுப்பறைச் சூழல்களுக்கு செல்ல அழுத்தம் கொடுக்கும் முயற்சிக்கு பொதுமக்களின் ஆதரவைப் பெறுவதற்காக பள்ளிகளை பாதுகாப்பானதாக முன்வைப்பதே இதன் நோக்கமாக இருக்கிறது. ஐரோப்பா முழுவதிலுமுள்ள ஆளும் வர்க்கத்தின் பார்வையில், பள்ளிகள் திறந்து வைக்கப்பட வேண்டும், இதனால் நூற்றுக்கணக்கான மில்லியன் உழைக்கும் பெற்றோரிடமிருந்து இலாபம் தொடர்ந்து பிழிந்து எடுக்க முடியும்.

கடந்த மாதம் பிரெஞ்சு பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அரசாங்கம் பயன்படுத்திய இதே போன்ற தந்திரங்களை பின்பற்றி பள்ளிகளில் வைரஸ் பரவுவதை மறைக்க முயன்றது. அரசாங்கத்தின் இரண்டு உத்தியோகபூர்வ உறுப்புகள் முரண்பாடான COVID-19 வைரஸ் புள்ளிவிபரங்களை தயாரிக்கின்றன என்பதானது அதிகரித்து வரும் மரணங்கள் மற்றும் ஆசிரியர் வேலைநிறுத்தங்களை எதிர்கொள்ளுவது பிரெஞ்சு அரசை சூழ்ந்துள்ள நெருக்கடியின் ஆழமான தன்மையைக் குறித்துக் காட்டுகிறது.

செய்தி ஊடகக் குறிப்பைத் தொடர்ந்து, கல்வி மந்திரி ஜோன்-மிஷேல் புளாங்கேர் தனது அமைச்சரகத்தின் கதையாடல்களை இரட்டிப்பாக்கினார். நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை "கட்டுப்பாட்டில் உள்ளது" என்றும் கல்வி அமைப்புமுறைக்குள் பரவுதல் "மீதமுள்ள மக்கள்தொகையில் காணப்படும் விகிதாச்சாரத்திற்கு கீழே" இருப்பதாகவும் அவர் கூறினார். பள்ளிகள் "எந்த விலை கொடுத்தாலும்" திறந்திருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார் – அதாவது இந்த விலைகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உயிர்களாகும்.

இந்த புள்ளிவிபரங்களை கையாளுதல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பள்ளிகளில் நோய்த் தொற்றுக்குள்ளானவர்கள் குறித்த அறிவைக் கட்டுப்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு நெறிமுறையால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. ஒரு மாணவர் COVID-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார் என்று உறுதிப்படுத்தப்படும்போது, தலைமை ஆசிரியரிடம் மட்டுமே கூறப்படுகிறது. முகக்கவசங்கள் தொற்றுநோய்க்கான வாய்ப்பை மட்டுமே குறைக்கின்றன என்ற உண்மை இருந்தபோதிலும், தொற்றுக்குள்ளாகிய நபர்கள் முகக்கவசத்தை அணிந்தால் அவர்கள் தொற்றுக்குள்ளானவர்களாக கருதப்படுவதில்லை அல்லது அவர்களின் தொற்றுக்கான வெளிப்பாடு குறித்து தெரிவிக்கப்படுவதில்லை. திங்களன்று, ஒரு நடுநிலைப் பள்ளி மாணவரான ஜோ எனபவர், “இன்று பள்ளியில் ஆறு மாணவர்கள் ஆறாம் ஆண்டில் நோய்த்தொற்றுகுள்ளானதாக பரிசோதனை காட்டியது. ஆனால் எதுவும் நடக்கவில்லை என்பது போல வகுப்பு தொடர்ந்து நடந்தது” என்றார்.

Eric Menonville என்ற விஞ்ஞான ஆசிரியர் ட்டுவிட்டரில் குறிப்பிட்ட அதே பொய்கள் பணியிடங்களுக்கு திரும்புவதற்கான முயற்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளன, அதாவது “இது எல்லாம் ஒரு நகைச்சுவை. தொழிலாளர் அமைச்சகம் எங்களிடம் 1 சதவீதத்திற்கும் குறைவான பரவல் பணியிடங்களில் நடக்கிறது என்றும் நிறுவனங்களில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது என்றும் தேசிய கல்வி அமைச்சர் எங்களிடம் கூறினார். எனவே நோய்த்தொற்றுகள் எங்கே நடக்கிறது?”Top of FormBottom of Form

உள்ளூர் மற்றும் தேசிய அளவில் நோய்த்தொற்றுக்களின் எண்ணிக்கைகளை தணிக்கை செய்வது தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு கொலைகாரக் குற்றமாகும். நோய்த்தொற்றுக்கள் இல்லை என்று நம்பி எத்தனை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பியுள்ளனர்? எத்தனை ஆசிரியர்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக நம்பி பணிக்குச் சென்றுள்ளனர்? எத்தனை மாணவர்கள் தங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டி மற்றும் நண்பர்களுக்கு வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படாததால் அவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது? இந்தப் பரவல் வழிகளின் விளைவாக எத்தனை மக்கள் இறக்கப் போகிறார்கள்?

புளாங்கேரின் பொய்களை அம்பலப்படுத்தியதற்கு பதிலளிக்கும் விதமாக, La France Insoumise இன் பாராளுமன்ற உறுப்பினரான அலெக்ஸ் கோர்பியர் உட்பட போலி-இடதுகளது பிரமுகர்கள் அமைச்சர் உண்மையான புள்ளிவிபரங்களைக் காட்ட வேண்டும் என்று மட்டுமே கோரியுள்ளன.

இந்த அரை மனதுடன் கூடிய பதில், கடந்த வாரத்தில் வேலைநிறுத்த நடவடிக்கை எடுத்த ஆயிரக்கணக்கானோருக்கு எந்தவிதமான வேண்டுகோளையும் கோரவில்லை, மேலும் பள்ளி சென்று கல்வி கற்பதை நிறுத்த வேண்டும் என்றும் அது அழைப்புவிடவில்லை. இதேபோல், தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அழைப்புவிடுவதை மறுத்து, சுயாதீனமான நடவடிக்கையில் ஈடுபட்ட ஆசிரியர்களின் குழுக்களை தீவிரமாக தனிமைப்படுத்தியுள்ளன.

இது ஆசிரியர்களும் மாணவர்களும் தொழிற்சங்கங்கள் மற்றும் போலி-இடது சக்திகளிலிருந்து சுயாதீனமான சமானிய குழுக்களை அமைக்க வேண்டும் என்ற உண்மையைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அனைத்து ஐரோப்பிய அரசாங்கங்களின் சமூக நோய் எதிர்ப்பு பெருக்கும் கொள்கைக்கு எதிரான போராட்டத்தின் அடிப்படையானது கண்டம் முழுவதும் வேலைநிறுத்தங்களை விரிவாக்கி ஒருங்கிணைப்பதாக அவற்றின் நோக்கம் இருக்க வேண்டும்.

பள்ளிகளை உடனடியாக மூடுவதோடு, அத்தியாவசிய உணவு, சுகாதாரம் மற்றும் பொருள் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு விதிவிலக்குகளுடன், அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் வணிகங்கள் உள்ளிட்ட தேசிய பொது முடக்கத்தை செயற்படுத்த வேலைநிறுத்தக்காரர்கள் கோருதல் வேண்டும். பரிசோதனை மற்றும் தடமறிதல் திறனை விரைவாக விரிவுபடுத்துவதன் மூலமும், குடும்பங்களுக்கும் ஆசிரியர்களுக்கும் போதுமான தரமான தொலைதூரக் கற்றலை உறுதி செய்வதற்கு போதுமான ஆதார வளங்களை வழங்குவதன் மூலமும் இது பூர்த்தி செய்யப்பட வேண்டும்.