"பெருவணிகத்தின் இலாபங்களுக்காக நாங்கள் தியாகம் செய்யப்படுகிறோம்"

பள்ளிகளுக்கான மக்ரோன் நிர்வாகத்தின் "சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்க" கொள்கைக்கு எதிராக ஆசிரியர்கள் பிரான்ஸ் முழுவதும் வேலைநிறுத்தம் செய்கிறார்கள்

Will Morrow
12 November 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கொரோனா வைரஸ் தொற்றுநோயை பள்ளிகள் வழியாக பரப்ப அனுமதிக்கும் மக்ரோன் நிர்வாகத்தின் குற்றவியல் மற்றும் பொறுப்பற்ற கொள்கையை எதிர்ப்பதற்காக நேற்று, பிரான்ஸ் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஒருநாள் வேலைநிறுத்த நடவடிக்கையில் பங்கேற்றனர்.

தொழிற்சங்கங்களின்படி, வேலைநிறுத்த பங்கேற்பு ஆரம்ப பள்ளி ஆசிரியர்களிடையே 20 சதவீதத்திற்கும், நடுநிலைப் பள்ளிகளில் 45 சதவீதத்திற்கும் இடையில் இருந்தது. அரசாங்கத்தின் சொந்த புள்ளிவிவரங்கள், பொதுவாக வேலைநிறுத்தங்களில் உண்மையான பங்களிப்பை குறைத்து மதிப்பிடுகின்றன, முறையே 8.8 சதவிகிதம் மற்றும் 10.4 சதவிகிதம் பங்கேற்பைப் பதிவு செய்தன.

கடந்த திங்கட்கிழமை விடுமுறை இடைவேளையைத் தொடர்ந்து வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டதிலிருந்து ஒரு வாரம் வெளிநடப்பு செய்த ஆசிரியர்களால் இந்த ஒரு நாள் வேலைநிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டது. டஜன் கணக்கான பள்ளிகளில் ஆசிரியர்கள், பள்ளிக்கு முன்பாக கூட்டங்களை கூட்டி, வகுப்பறைகளுக்குள் நுழைய வேண்டாம் என்று வாக்களித்தனர். வைரஸின் பாரிய மீள் எழுச்சியின் நிலைமைகளின் கீழ், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களிடையே இது பரவுவதைத் தடுக்க மிகக் குறைந்த சமூக இடைவெளி நடவடிக்கைகள் கூட இல்லை.

நேற்று பாரிஸ் பகுதியில் சுமார் 10 உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பள்ளிகளுக்கான நுழைவாயில்களை முற்றுகையிட்டு பள்ளிகளை மூட வேண்டும் எனக் கோரினர். கடந்த வாரம் நடந்த ஆர்ப்பாட்டங்களை போலவே, கலவரம் அடக்கும் காவல்துறையினரும் கண்ணீர்ப்புகை மற்றும் கலவரங்களை சாட்டாக கொண்ட குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டங்களை வன்முறையில் அடக்குவதற்கு விரைவாக அழைக்கப்பட்டனர். காவல்துறையினர் பல உயர்நிலைப் பள்ளிகளுக்கு வெளியே வரிசைகளை அமைத்து, ஒவ்வொரு மாணவரிடமும் நுழைவதற்கு முன் ஆவணங்களைக் கோரினர்.

COVID-19 இலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கக் கோரி ஆசிரியர்கள் 2020 நவம்பர் 10 செவ்வாய்க்கிழமை தென்மேற்கு பிரான்சின் Pau உள்ளூர் கல்வி ஆணையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (AP Photo/Bob Edme)

மக்ரோன் அரசாங்கத்தின் கொள்கை, தொற்றுநோய் கட்டுப்பாட்டையும் மீறிப் பரவ அனுமதித்துள்ளது. மேலும் 472 பேர் செவ்வாய்க்கிழமை இறந்தனர். அதற்கு முந்தைய நாள், 551 பேர் இறந்துவிட்டனர். இது இலையுதிர்காலத்தில் மிக அதிகமான தினசரி இறப்பு எண்ணிக்கை, மற்றும் ஏப்ரல் 6 அன்று இறந்த 613 பேர் உயர் எண்ணிக்கையை விட சற்று குறைவாகவே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், ஆக்கிரமிக்கப்பட்ட அவசர சிகிச்சை படுக்கைகளின் எண்ணிக்கை 472 ஆக அதிகரித்து, மொத்தம் 4,736 ஆக உள்ளது. ஆனால் மொத்தம் 3,168 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கள் ஏழு நாள் சராசரி இப்போது 40,000 க்கும் அதிகமாக உள்ளது, இது தனிநபர் அடிப்படையில் அமெரிக்காவில் 200,000 க்கும் மேற்பட்ட தொற்றுக்களுக்கு சமமானதாகும்.

வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசினர் மற்றும் பள்ளிகளுக்குள் இருக்கும் பேரழிவு நிலைமைகளை விவரித்தனர். கொரோனா வைரஸ் காரணமாக ஒரு குழந்தை இல்லாதபோது ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்படுவதில்லை, அதாவது ஒரு கொத்தணி உருவாகிறதா என்பதை தீர்மானிக்க இயலாது. வகுப்பறைகள் 25 முதல் 35 மாணவர்களுடன் நிரம்பியுள்ளன. ஒரு நேரத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்களுடன் சிற்றுண்டிச்சாலைகள் நிரம்பியுள்ளன. பள்ளி நடைபாதைகள், பொதுப் போக்குவரத்து மற்றும் மண்டபங்கள் நிரம்பியுள்ளன, எந்தவொரு சமூக இடைவெளியும் பராமரிக்கப்படவில்லை.

Bouches-du-Rhône பிராந்தியத்தில் வேலைநிறுத்தத்தில் 80 சதவீதத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் பங்கேற்ற ஒரு நடுநிலைப் பள்ளியில், சமையல் கற்பிக்கும் கெல்லி, WSWS இடம் கூறினார்: “கடந்த வாரம் திங்களன்று பள்ளிக்கு வந்த ஒரு மாணவி, அவர் நேர்மறையான ஒருவருடன் தொடர்பு கொண்டதாகக் கூறினார், ஆனால் அவர் சோதனை முடிவுக்காக காத்திருந்தார். செவ்வாய்க்கிழமை அவர் நேர்மறையாக இருந்ததால் அவர் பள்ளிக்கு வரவில்லை. ஆனால் பள்ளி நிர்வாகம் எங்களிடம் எதுவும் சொல்லவில்லை. மாணவர்கள் அல்லது வைரஸைப் பெறும் சக ஊழியர்களைப் பற்றி எங்களிடம் கூறப்படவில்லை. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் தொடர்புகொள்வதன் மூலம் மட்டுமே நாங்கள் கண்டுபிடிப்போம்.”

பொதுவாக, தனது பள்ளியில் வகுப்புகள் 30 மாணவர்களைக் கொண்டிருந்தன, என்று அவர் கூறினார். “என் மகன் நடுநிலைப்பள்ளியில் இருக்கிறான், அவன் உட்கார்ந்திருக்கக்கூட முடியாத அளவுக்கு பஸ்ஸில் பயணிக்கிறான். எங்கள் அமைச்சரின் பொய்களுக்கு தனிப்பட்ட முறையில் நான் மிகவும் கோபமாக இருக்கிறேன். முதல் பூட்டப்பட்டதிலிருந்து அவர் எல்லாம் தயாராகவும், ஒழுங்கமைக்கப்பட்டும், கட்டுப்பாட்டின் கீழும் இருப்பதாக அறிவித்துள்ளார். உண்மையில், எம்மை நாமே பராமரிக்க விடப்பட்டுள்ளோம்”. மக்களிடையே வைரஸ் பரவலாக இளைஞர்களிடையே பரவுவதை அனுமதிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என அவர் நம்புகிறார். "குழந்தைகள் மத்தியில் கடுமையான தொற்றுக்கள் இருக்கக்கூடும் என்பது முக்கியமல்ல, குறிப்பாக நாங்களும் எங்கள் குடும்பங்களும் ஒரு பொருட்டேயல்ல."

உணவக ஊழியர்களை உள்ளடக்கிய தனது குடும்பத்தை பற்றிக் குறிப்பிடுகையில், "400 மாணவர்கள் ஒரு சிற்றுண்டிச்சாலையில் இருக்க முடியும் என்றால் அவர்கள் ஏன் 20 வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்க முடியாது என்று அவர்களுக்குப் புரியவில்லை" என்றார். பள்ளிகளை மீண்டும் திறப்பது பெற்றோரை வேலையில் வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டது. "உண்மையில், பெரிய நிறுவனங்களின் இலாபத்தைப் பாதுகாக்க நாங்கள் தியாகம் செய்யப்படுகிறோம்."

ஒரு நடுநிலைப் பள்ளி ஆசிரியரான எல், WSWS இடம் தனது பள்ளியில் “ஆசிரியர்களின் அறைகளில் கிருமிநாசினி கூட இல்லை, அறைகள் மிகச் சிறியதாக இருந்தாலும் (சிறிய அறைகளைக் கொண்ட மிகப் பழைய கட்டிடம்) வகுப்புளின் எண்ணிக்கை அளவுகள் குறைக்கப்படவில்லை” என்று WSWS இடம் கூறினார். ‘எங்களை கவலைக்குள்ளாக்கும்’ என்பதற்காக நேர்மறையான மாணவர்களின் பெயர்களை உத்தியோகபூர்வமாக எங்களுக்கு தெரிவிப்பதில்லை. நாங்கள் மாணவர்களிடமிருந்து மட்டுமே கண்டுபிடிப்போம். எனது பள்ளி அதன் அதிகபட்சத்தை தொடுகிறது என்பதை நான் அறிவேன். ஆனால் உங்களிடம் வழிகள் இல்லாதபோது அதிகபட்சமாக ஒன்றுமில்லை.”

தொற்றுக்களின் எண்ணிக்கையை அறிந்து கொள்ள அவர்களுக்கு எந்த வழியும் இல்லை என்ற ஆசிரியர்களின் அறிக்கைகள், மாணவர்களின் COVID-19 தொற்று எண்ணிக்கைகளை வேண்டுமென்றே மூடிமறைப்பதற்கான வளர்ந்து வரும் ஆதாரங்களுடன் ஒத்துப்போகின்றன. அரசாங்கத்தின் புள்ளிவிவரங்கள், கடந்த வாரம் 3,528 மாணவர்கள் நேர்மறையாக பரிசோதித்ததாகக் கூறுகின்றன, ஆனால் பொது சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் வாரத்தின் முதல் மூன்று நாட்களில், 0–19 வயதுடைய 25,000 க்கும் மேற்பட்டோர் நேர்மறையாக சோதனை செய்ததாகக் காட்டுகின்றன. இந்த புள்ளிவிவரங்களுக்கு இடையிலான வெளிப்படையான முரண்பாட்டை சரிசெய்ய கூட அரசாங்கம் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மக்ரோன் அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராக பாரிய எதிர்ப்பு வளர்கின்றன என்பதைக் காட்டுகின்றன. பள்ளிகளின் திறப்புயானது, மாணவர்களின் நல்வாழ்வு குறித்த எந்த அக்கறையுடனும் தொடர்புபட்டதல்ல, ஆனால் அவர்களின் பெற்றோரை பணியிடங்களுக்கு அனுப்பவும், பெருநிறுவன இலாபங்கள் தொடர்ந்து அதிகரிக்கவும் முடியும். இதன் விளைவாக, பிரான்சில் மட்டும் வரும் மாதங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மரண அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர்.

அனைத்து பள்ளிகளையும், அத்தியாவசியமற்ற பணியிடங்களையும் மூடுமாறு கோருவதற்கும், தொழிலாளர்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவதற்கும், வைரஸ் பரவுவதைத் தடுத்து, உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த தொழில்துறை மற்றும் அரசியல் இயக்கத்தின் வளர்ச்சியே அவசர பணியாக உள்ளது.

அத்தகைய ஒரு போராட்டத்தை நடத்துவதற்காக தொழிற்சங்கங்கள் நேற்றைய வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கவில்லை. உண்மையில், வேலைநிறுத்தம், கடந்த வார காலப்பகுதியில் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருந்த ஆசிரியர்களின் இயக்கத்தை சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டது.

தொழிற்சங்கங்கள் ஒரு நாள் நடவடிக்கையை அரசாங்கத்திற்கு "எச்சரிக்கை வேலைநிறுத்தம்" என்று பெயரிட்டன. வேலைநிறுத்தத்திற்கான தங்கள் அறிக்கையில் அவர்கள் "பள்ளிகளைத் திறந்து வைப்பதே முன்னுரிமை" என்று வலியுறுத்தினர், மேலும் பாரியளவில் ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான "அவசரத் திட்டத்திற்கான" தெளிவற்ற கோரிக்கைகளையும் உள்ளடக்கியிருந்தனர். பெரும்பான்மையான ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று முடிவு செய்திருந்தால், அது தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்த நீண்ட ஒரு தொடர் ஒருநாள் நடவடிக்கைகளில் இதையும் இன்னொன்றாகக் கண்டதால் தான். இதன் நோக்கம் தொழிலாளர்கள் மத்தியில் உள்ள கோபத்தை மடியச்செய்வது மட்டுமே.

சோசலிச சமத்துவக் கட்சி வேலைநிறுத்தத்திற்காக வெளியிடப்பட்ட தனது அறிக்கையில் கோடிட்டுக் காட்டியவாறு, ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், அரசாங்கம் மற்றும் பெருநிறுவனங்களின் கூட்டாளிகளாக இருக்கும் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக, தங்களது சொந்த சாமானிய பாதுகாப்புக் குழுக்களை அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த குழுக்கள், அனைத்து பள்ளிகளையும் உடனடியாக மூடுவதற்கான வேலைநிறுத்தம் உட்பட, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சுயாதீன வலிமையைத் திரட்டுவதற்கான வழிவகைகளை வழங்கும்.