கொரோனா வைரஸ் இறப்புகள் ஏற்றமடையும்போது மக்ரோன் அரசாங்கம் முழுமையான பொது முடக்கத்தை எதிர்க்கிறது

Will Morrow
18 November 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரான்சில் பல்லாயிரக்கணக்கான புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கள் பதிவாகிய வண்ணம் இருக்கையில், ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் தொடர்ந்து இறந்து கொண்டிருக்கிறார்கள்.

ஞாயிறன்று மேலும் 302 பேர் மருத்துவமனைகளில் இறந்துள்ளனர். இது தொற்று நோய் தொடங்கியதில் இருந்து நாட்டில் மொத்த இறப்பு எண்ணிக்கையானது 44,548 ஆக உள்ளன. மருத்துவமனைகளில் சுமார் மூன்றில் இரண்டு (30,785 பேர்கள்) இறந்துள்ளனர், மற்றும் வைரஸ் தொடர்ந்து பரவி வருகிற முதியோர் பராமரிப்பு இல்லங்கள் மற்றும் பிற சமூக சேவை வழங்குநர்கள் இடங்களில் கிட்டத்தட்ட 13,379 பேர்கள் இறந்துள்ளனர்.

சனிக்கிழமையன்று, ஒரு அதிர்ச்சியூட்டும் 932 இறப்புக்கள் பதிவு செய்யப்பட்டன, இதில் கிட்டத்தட்ட பாதிக்கு மேற்பட்டவர்கள் முன்னைய நான்கு நாட்களில் முதியோர் பராமரிப்பு மையங்களில் கணக்கிடப்படாத இறப்புகளில் இருந்ததாகும். பிரான்சில் தினசரி இறப்புக்கள் கடந்த வாரம் முழுவதும் சராசரியாக 500 க்கும் மேற்பட்டவையாக இருந்தன, இது அமெரிக்க நாட்டின் அளவில் நாளொன்றுக்கு கிட்டதட்ட 2,500 க்கு சமமானதாக இருந்திருக்கிறது.

French soldiers discuss inside the military field hospital built in Mulhouse, eastern France, to treat coronavirus patients (AP Photo/Jean-Francois Badias)

ஞாயிற்றுக்கிழமைகளில் குறைவான அறிக்கை காரணமாக எண்ணிக்கையின் அளவு எப்போதும் குறைவாக இருந்தாலும், மேலும் 27, 228 தொற்றுக்கள் நேற்று பதிவாகியுள்ளன. சனிக்கிழமையன்று, 33,000 க்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றுக்குள்ளானதாக பரிசோதனை முடிவு வெளியாகியது. இவைகள் ஒரு வாரத்திற்கு முன்பு இருந்த 60,000 க்கும் அதிகமான உச்ச தொற்றுக்களின் எண்ணிக்கைக் குறைப்பைக் குறிக்கின்றன, நவம்பர் தொடக்கத்தில் இருந்து வரையறுக்கப்பட்ட பொது முடக்க கட்டுப்பாடுகளின் தாக்கத்தின் காரணமாக, வைரஸ் தொடர்ந்து மக்கள் தொகையில் வேகமாக பரவி வருகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்குள், நாடானது மொத்தம் இரண்டு மில்லியன் தொற்றுக்களைத் தாண்டிவிடும், இது உலகின் நான்காவது அதிக தொற்றுக்குள்ளாகிய நாடாகும்.

பல பிராந்தியங்களிலுள்ள மருத்துவமனைகள் கட்டுப்பாடு உடையும் நிலையில் உள்ளன அல்லது நெருங்குகின்றன. கடந்த வியாழக்கிழமை, ஏப்ரல் மாதத்தில் வைரஸின் முதல் அலையின் உச்சத்தின் போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அதிகபட்ச அளவை விட அதிகமாக இருந்தது. இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,081 ஆக உள்ளன. மேலும் 270 பேர் நேற்று தீவிர சிகிச்சை பிரிவுகளுக்கு வந்ததால் மொத்தம் எண்ணிக்கை 4,896 ஆக உள்ளனர்.

ஓய்வூதிய இல்லங்களிலிருந்து புதுப்பிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கைகள் உடனடியாக கிடைக்கவில்லை, பரவலின் அளவு இன்னும் தெரியவில்லை என்பதை இது குறித்துக்காட்டுகிறது.

பாரிசைச் சுற்றியுள்ள Île-de-France பிராந்தியத்திலும், லியோனில் மருத்துவமனைகளின் மொத்த எண்ணிக்கைகள் குறிப்பாக குவிந்துகொண்டுள்ளன. Île-de-France இல், நிரப்பப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவுப் (ICU) படுக்கைகளின் பகுதியானது கடந்த வாரம் 92.7 சதவிகிதத்தில் இருந்து வெள்ளிக்கிழமை வரை 99.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கான இட வசதிக்காக பிற முக்கியமான அறுவை சிகிச்சைகள் இரத்து செய்யப்படுகின்றன அல்லது ஒத்திவைக்கப்படுகின்றன. லியோனில் நரம்பியல் அறுவை சிகிச்சை துறையிலுள்ள செவிலியர்கள் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு 16 படுக்கைகளுக்கான இடத்தை தயார் செய்துள்ளதாக France Info நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. “இவர்கள் கடுமையான சுவாச பிரச்சினைகள் உள்ளவர்கள், அறுவை சிகிச்சை துறையில் நாம் அரிதாகவே பார்க்கிறோம். அவர்களில் சிலர் இறந்துவிட்டார்கள்… இது நிரந்தர நெருக்கடியின் சூழ்நிலை ”என்று 19 வயது செவிலியரான பாஸ்கேல் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

பாரிய மற்றும் உயரும் இறப்பு எண்ணிக்கை தவிர்க்க முடியாதது அல்ல. பிரெஞ்சு நிறுவனங்களின் இலாபங்களைப் பாதுகாக்கும் நோக்கில் அதன் மீண்டும் திறக்கும் கொள்கைகளுடன் மக்ரோன் அரசாங்கம் வைரஸின் இரண்டாவது அலைக்கான வழியை வேண்டுமென்றே தயார் செய்தது. ஜூலை மாதத்திலேயே, உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே ஐரோப்பாவில் ஒரு புதிய இரண்டாவது அலைகளைக் காணலாம் என்று எச்சரித்தது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களைப் போலவே ஒரு புதிய பொது முடக்கம் “வைரஸ் பரவுவதைத் தடுக்கும், ஆனால் பொருளாதார மற்றும் சமூக நிலைப்பாட்டில் இது ஒரு பேரழிவு” என்று பிரதமர் காஸ்டெக்ஸ் வலியுறுத்தினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பெரும் செல்வந்தர்களின் இலாப நலன்களுக்கு இடையூறு விளைவிக்கும் எதுவும் செய்ய முடியாது என்பதாகும்.

ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மரணங்கள் நிகழ்ந்தாலும், பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற பணியிடங்களை மூடுவதை மக்ரோன் அரசாங்கம் நிராகரித்துள்ளது. சமூக இடைவெளிக்கான நடவடிக்கைகளை கோரி கடந்த இரண்டு வாரங்களில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்துள்ளனர். ஒரு வகுப்பறையில் 35 மாணவர்கள் வரை பள்ளிகள் நிரம்பியுள்ளன, 500 மாணவர்கள் வரை உணவுச் சிற்றுண்டிச் சாலைகளிலும், பொது போக்குவரத்தில் நிற்பதற்கான இடம் மட்டுமே உள்ளன.

வைரஸ் பரவுவதில் அதனுடைய பள்ளி திறப்புகளின் தாக்கத்தை மூடிமறைக்க அரசாங்கம் நனவுடன் செயற்படுகிறது. நவம்பர் 6 ஆம் திகதி, தொற்றினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை 3,528 ஆகும். அதே காலகட்டத்தில், பொது சுகாதார நிறுவனத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் 19 வயதிற்கு உட்பட்ட 25,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தொற்றுக்குள்ளானதாக பரிசோதனை முடி காட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த புள்ளிவிபரங்களுக்கு இடையிலான முரண்பாட்டை விளக்க அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கடந்த வெள்ளிக்கிழமையன்று, அரசாங்கம் அதன் தொற்றுக்குள்ளான மாணவர்களின் எண்ணிக்கையை 12,000 க்கும் அதிகமாக திருத்தியது, இதில் முன்னைய 24 மணி நேரத்தில் மட்டுமே பரிசோதனையில் தொற்று ஏற்பட்டதாக கண்டறியப்பட்ட 2,500 க்கும் மேற்பட்டோரும் அடங்குவர்.

திறந்த நிலையில் பள்ளிகளை வைத்திருப்பது என்பது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வகுப்பறைகளில் இருக்கும்போது தொடர்ந்து பணிக்குச் செல்வதை உறுதி செய்வதற்காக மட்டுமேயாகும்.

மக்ரோன் நிர்வாகமானது அனைத்து கொரோனா வைரஸ் தொற்றுகள் மற்றும் இறப்புகளைத் தடுக்க முயற்சிக்கவில்லை, ஆனால் இறப்பு மற்றும் மருத்துவமனை நிலையில் உடைவு ஆகியவைகளின் அளவை மட்டுமே தொழிலாள வர்க்கத்தில் கோபம் மற்றும் எதிர்ப்பின் வெடிப்புக்கு அச்சுறுத்தல் இல்லாமல் பராமரிக்கக்கூடிய ஒரு கட்டத்திற்கு மட்டுப்படுத்துகிறது. அதாவது, பெயரைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் “சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கையைத்தான் மக்ரோன் பின்பற்றுகிறார்.

மாத தொடக்கத்தில் உணவகங்கள், கஃபேக்கள் மற்றும் சில சில்லறை விற்பனையகங்களை மட்டுப்படுத்திய பொது முடக்கத்தை அறிவித்து, வைரஸ் ஒவ்வொரு நாளும் 5,000 பேருக்கு தொற்று ஏற்படுவதே சிறந்த சூழ்நிலையின் இலக்கு என்று மக்ரோன் கூறினார். கடந்த வியாழக்கிழமையன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், காஸ்டெக்ஸ் இந்த இலக்கைத் தக்க வைத்துக் கொண்டார், மேலும் பொது முடக்க நடவடிக்கைகள் எதுவும் அறிவிக்கப்படாது என்று வலியுறுத்தினார்.

2021ஆம் ஆண்டில் ஒரு பயனுள்ள தடுப்பூசி முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டு, கிடைக்கக்கூடும் என்பதற்கான சமீபத்திய அறிகுறிகள் இருந்தபோதிலும் இந்த நிலைமையுள்ளது. கடந்த திங்களன்று, மருந்து நிறுவனமான Pfizer அதனுடைய சோதனையானது, இந்த வைரஸை குறைத்து தடுப்பதில் 90 சதவிகிதம் பயனுள்ளதாக இருந்தது என்று தெரிவித்தது. நவம்பர் 10 ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட WSWS இன் முன்னோக்கு பத்தியில் விளக்கியது போல், இந்த அபிவிருத்தி "வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தவும், ஒரு தடுப்பு மருந்து பரவலாக கிடைக்கும் வரை உயிர்களைக் காப்பாற்றவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்."

சனிக்கிழமையன்று Le Monde க்கு அளித்த பேட்டியில், ஒரு வைரசிற்கான தடுப்பூசி கிடைக்கக்கூடும் என்பது அரசாங்கத்தின் பதிலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று காஸ்டெக்ஸ் வலியுறுத்தினார். அரசாங்கத்தின் கொள்கை இன்னும் “நீண்ட காலமாக வைரஸுடன் வாழ்வது” என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்திருப்பதாகவும், “எங்களிடம் தடுப்பூசி இல்லாத வரை, விளையாட்டின் விதிகளுக்கு ஒரு முன்னோக்கைக் கொடுக்க வேண்டும்” என்றும் காஸ்டெக்ஸ் கூறினார்.

பள்ளிகளையும் அத்தியாவசியமற்ற பணியிடங்களையும் திறந்த நிலையில் வைத்திருத்தல், வேண்டுமென்றே வைரஸ் பரவ அனுமதித்தல், மற்றும் தடுப்பூசி கிடைப்பதற்கு முன்பு ஆயிரக்கணக்கானோர் தேவையற்று இறப்பதை உறுதி செய்வது போன்றவைகள் தான் அரசாங்கத்தின் கொள்கைக்கான அடிப்படைக் கோட்பாடாக இருக்கிறது.