யூத-விரோத நவம்பர் படுகொலையின் ஆண்டு நிறைவையொட்டி ஜேர்மனியில் நவ-நாஜிக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்

Peter Schwarz
18 November 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக நவம்பர் படுகொலையின் 82 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நினைவுகள் ஜேர்மனி முழுவதும் இரத்து செய்யப்பட்டன அல்லது தடை செய்யப்பட்டன. இதற்கு நேர்மாறாக, வலதுசாரி தீவிரவாத பெகிடா இயக்கம் நவநாஜி அந்திரேயாஸ் கல்பிட்ஸுடன் பிரதான பேச்சாளராக கலந்துகொண்ட டிரெஸ்டனின் பழைய சந்தையில் ஒரு பேரணியை நடத்த அனுமதிக்கப்பட்டது.

நவம்பர் 9-10, 1938 இரவு, ஜேர்மனி முழுவதும் நாஜிக்கள் யூத வழிபாட்டுத் தலங்களை எரித்து, யூத வணிகங்களை சூறையாடி, நூற்றுக்கணக்கான யூதர்களை கொன்றதோடு பல்லாயிரக்கணக்கானோரை சித்திரவதை முகாம்களுக்கும் அனுப்பினர். நாஜி ஆட்சியின் மிக உயர்ந்த மட்டங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட நவம்பர் படுகொலைகள், யூதர்களைத் துன்புறுத்துவதில் ஒரு புதிய கட்டத்தை குறித்தது. இது 6 மில்லியன் மக்களைக் அரசு ஒழுங்கமைத்து கொலை செய்ததில் உச்சக்கட்டத்தை அடைந்தது.

மக்டபேர்க்கில் நகரில் அழிக்கப்பட்ட யூதர்களின் கடை (Federal Archives, picture 146-1970-061-65 / CC-BY-SA 3.0)

டிரெஸ்டன் நகரில் உள்ள யூத சமூகம், சாக்சோனி மாநில தலைநகரின் மையத்தில் வலதுசாரி தீவிரவாத ஆர்ப்பாட்டத்திற்கு "ஆச்சரியத்துடனும், தீவிர கோபத்துடனும்" பதிலளித்தது. "நவம்பர் 9 அன்று, ஒரு பெகிடா ஆர்ப்பாட்டம் நடைபெற அனுமதிக்கப்படுவது முற்றிலும் உணர்வற்றதும் மற்றும் வரலாற்றை அறியாததும்" என்று மாநில யூத மத தலைவர் ஸோல்ட் பல்லா வாதிட்டார். ஜேர்மன் பழைமைவாத யூத மத தலைவர்களின் மாநாடு, தொற்றுநோய் காரணமாக உத்தியோகபூர்வ நினைவுகள் இரத்து செய்யப்பட்ட நிலையில், "வலதுசாரி தீவிரவாத, யூத எதிர்ப்பு மற்றும் இஸ்லாமிய எதிர்ப்புவாத உணர்வுகள் தெருக்களில் பகிரங்கமாக முழக்கமிடப்படுகின்றன" என்று விமர்சித்தன.

ட்ரெஸ்டன் நகர சபை தலைவர் ஹில்பேர்ட் (தாராளவாத ஜனநாயகவாதிகள்) வலதுசாரி தீவிரவாத அணிவகுப்பின் அங்கீகாரத்தை நியாயப்படுத்தினார். ஜேர்மனியின் அடிப்படை சட்டம் அல்லது சாக்சோனியின் சட்டம் எதுவும் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்தை கட்டுப்படுத்த ஒரு சட்டபூர்வமான அடிப்படையை வழங்கவில்லை என்று கூறினார். ஆனால் இது ஒரு வெட்கக்கேடான பொய்யாகும்.

பெகிடா ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக, தொடர்ந்து அணிதிரட்டும் தேவாலயங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பிற அமைப்புகளின் பரந்த கூட்டணியான “வெறுப்புக்கு பதிலாக இதயம்” (“Heart not Hate”) அமைப்பு, நகர அதிகாரிகள் அத்தகைய முடிவுகளை எடுக்கும் அதிகாரங்களைக் கொண்டுள்ளனர் என்பதையும் தமது கூட்டணியின் பேரணிகளை மீண்டும் மீண்டும் தடைசெய்ததையும் நினைவு கூர்ந்தது. எடுத்துக்காட்டாக, 2015 ஆம் ஆண்டில் பெகிடாவிற்கு எதிராக 6,000 பேர் பங்கேற்ற ஒரு ஆர்ப்பாட்டம் “அவமதிக்கப்பட்டு, விதிமுறைகளால் தடைசெய்யப்பட்டது.”

நகர மையத்தில் எந்தவொரு இனவாத நிகழ்வுகளையும் அனுமதிக்கக் கூடாது என்ற குறிக்கோளுடன் நவம்பர் 9 ஆம் தேதிக்கு முன்னர் “வெறுப்புக்கு பதிலாக இதயம்” அமைப்பு நகர சபை தலைவரை தொடர்பு கொண்டதாக செய்தித் தொடர்பாளர் ரீட்டா குனெர்ட் தெரிவித்தார். ஆனால் எந்தவொரு காரணமும் தெரிவிக்கப்படாமல் காவல்துறை மற்றும் நிகழ்வுகளுக்கு பொறுப்பான அதிகாரிகளுடன் திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பு இரத்து செய்யப்பட்டது.

நல்லெண்ணம் மற்றும் பொது அறிவுடன், அந்த நாளில் கல்பிட்ஸின் முக்கியத்துவம் வாய்ந்த பிரசன்னத்தை அங்கு தடுத்திருக்க முடியும், என்று அவர் மேலும் கூறினார். யூத சமூகத்திற்கான சாக்சோனியின் ஆணையாளரான தோமஸ் ஃபீஸ்ட் (CDU) நகர அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக “யூத சமூகத்தின் உறுப்பினர்களுடன் அதைத் தடுப்பதற்கான விருப்பங்கள் குறித்து பேச” விரும்பாததற்காக விமர்சித்தார்.

சால்ஸ்வேடல், சாக்சோனி-அன்ஹால்ட் மற்றும் லோயர் சாக்சோனியின் டனன்பேர்க் அதிகாரிகள் மிகவும் மாறுபட்ட அணுகுமுறை சாத்தியம் என்பதை நிரூபித்தனர். அவர்கள் நிகழ்வுகளைத் தடைசெய்து, தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க வேண்டியதன் அடிப்படையில் இதை நியாயப்படுத்தினர். இருப்பினும், இவை வலதுசாரி தீவிரவாதிகளின் ஆர்ப்பாட்டங்கள் அல்ல, ஆனால் நவம்பர் படுகொலைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நினைவு அஞ்சலிகளாகும்.

சால்ஸ்வேடலில், பாரிய படுகொலையில் பாதிக்கப்பட்ட யூதர்களை நினைவுகூரும் வகையில், ஜேர்மன் நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள ஞாபகார்த்த நினைவுச் சின்னங்களுக்கான சுற்றுப்பயணம் தடைசெய்யப்பட்டது. தொற்று அபாயத்தை குறைக்க “சால்ஸ்வேடல் கூட்டணி ஒற்றுமை நடவடிக்கை” அமைப்பாளர்கள் அதிகாரிகளிடம் ஒரு கடுமையான திட்டத்தை முன்வைத்த போதும் இது தடைசெய்யப்பட்டது. இதில் குறைந்த எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்கள் மற்றும் அனைவருக்கும் முகமூடி அணிந்து சமூக இடைவெளியை பேணவேண்டும் போன்றவை அடங்கியிருந்தன. மக்ட்பேர்க்கில் உள்ள நிர்வாக நீதிமன்றத்தின் முடிவு மட்டுமே உள்ளூர் அதிகாரிகள் உத்தரவிட்ட தடையை இரத்து செய்தது. தொற்றுநோய் காரணமாக டனன்பேர்க்கில் யூதர்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய தலங்களுக்கு மெழுகுவர்த்தி ஊர்வலம் தடை செய்யப்பட்டது.

நவம்பர் 9 ஆம் தேதி டிரெஸ்டனில் பெகிடாவின் ஆர்ப்பாட்டமானது, தீவிர வலதுசாரிகளை ஊக்குவிக்க காவல்துறை, நீதித்துறை மற்றும் அரசாங்கங்கள் நெருக்கமாக ஒத்துழைத்துள்ள நீண்ட சம்பவங்களில் சமீபத்திய ஒன்றாகும். ஸ்தாபகமயப்படுத்தப்பட்ட கட்சிகள், ஜேர்மனிக்கான வலதுசாரி தீவிரவாத மாற்றீடு (AfD) மற்றும் நவ-நாஜிக்கள் இந்த முடிவுக்கு ஒருவருக்கு ஒருவர் உதவிசெய்கிறார்கள். சாக்சோனி இந்த வலதுசாரி சதித்திட்டத்தின் கோட்டையாகும்.

இரண்டு நாட்களுக்கு முன்னர், நவம்பர் 7 ஆம் தேதி, நாடு முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான நவ-நாஜிக்கள் உட்பட மத்திய அரசின் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு எதிராக 20,000 பேர் லைப்சிக் நகரில் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளையும் புறக்கணித்த போதிலும், ஆர்ப்பாட்டம் அதிகாரபூர்வமாக இடைநிறுத்தப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களை நடத்திய பின்னர் அதைத் தொடர்ந்தாலும், காவல்துறையினர் கலவரத்தை நடத்த அனுமதித்தனர். பொலிஸ் அதிகாரிகள் வலதுசாரி ஆர்ப்பாட்டக்கார்களுடன் தங்கள் ஒற்றுமையை எவ்வாறு காட்டினர் என்பதைக் காட்டும் ஒளிப்பதிவுகள் வலைத் தளத்தில் அதிகளவு காணப்பட்டன.

சாக்சோனி மாநில தலைவர் மைக்கேல் கிரெட்ச்மார் மற்றும் உள்துறை மந்திரி ரோலண்ட் வுல்லர் (இருவரும் CDU), மற்றும் மத்திய உள்துறை மந்திரி ஹார்ஸ்ட் சீஹோஃபர் (கிறிஸ்தவ சமூக ஒன்றியம், CSU) ஆகியோர் தங்களது முழு ஆதரவையும் லைப்சிக் போலீசாருக்கு அளித்துள்ளனர். "விவரங்களை புரிந்து கொள்ளாமலும், முழு நிலைமையையும் அறியாது காவல்துறையின் தந்திரோபாயங்களை மறுபரிசீலனை செய்வதிலிருந்தும் தூரத்திலிருந்தும் கேள்வி கேட்பதையும் நாங்கள் நிறுத்த வேண்டும்" என்று சீஹோஃபர் கூறினார். "காவல்துறைக்கு எனது முழு ஆதரவு உள்ளது" என்றார்.

லைப்சிக் நகர அதிகாரிகளின் விருப்பத்திற்கு எதிராக நகர மையத்தில் “குறுக்குப்பாட்டு சிந்தனையாளர்களின்” (“lateral thinkers”) ஆர்ப்பாட்டத்திற்கு பவுட்ஸான் நகரில் உள்ள பிராந்திய உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்து வலதுசாரி தீவிரவாதிகளுக்கு ஒரு பெரிய மேடையை வழங்கியது என்பது தற்செயல் நிகழ்வு அல்ல.

நீதிமன்றத்தின் தலைவர் எரிச் குன்ஸ்லர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு AfD இனை பாரியளவில் பாராட்டினார். தஞ்சம் கோரும் விண்ணப்பங்கள் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட அகதிகள் நாடு கடத்தப்படுவதில்லை என்று Freie Presse செய்தித்தாளில் அவர் அளித்த புகாரைத் தொடர்ந்து இது நிகழ்ந்தது. இது சட்டத்தின் ஆட்சியை சேதப்படுத்துகிறது மற்றும் நீதித்துறையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று அவர் கூறினார். நாங்கள் அதிகரித்தளவில் "குப்பைக்கூடைக்காக வேலை செய்வதைப் போல" உணருவதாக தெரிவித்தார்.

சாக்சோனியின் மாநில நாடாளுமன்றத்தில் உள்ள AfD இன் குழு, "மூத்த புகலிட விசாரணை நீதிபதி AfD இன் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்கிறார்: CDU இன் புகலிட முட்டாள்த்தனம், சட்டத்தின் ஆட்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது." என்று புகழ்ந்தது. கட்சி செய்தித்தாளான, AfD Kompakt “CDU சட்டவிரோத குடியேறியவர்களின் வெள்ளத்தினால் ஜேர்மனியை மூழ்கடிக்க விரும்புகிறது என்பது பெருகிய முறையில் தெளிவாகிறது. சாக்சோனியின் நீதிபதி விமர்சிப்பது பொருத்தமானது” என்று எழுதியது.

சாக்சோனியின் மாநிலத் தேர்தலுக்கு முன்னதாகவே "தீவிர வலதுசாரிக்கு ஆபத்தான தூண்டுதலில்" ஈடுபடுவதை எதிர்த்து ஜனநாயக நீதிபதிகள் சங்கம் மற்றும் குடியரசு வழக்கறிஞர்கள் சங்கம் (RAV) குன்ஸ்லரை எச்சரித்தன. குடிவரவு சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற மற்றும் குடியரசு வழக்கறிஞர்கள் சங்க நிர்வாக உறுப்பினரான டிரெஸ்டனை சேர்ந்த வழக்கறிஞர் கேட்டி லங், “நேர்காணல் நேரடியாக AfD க்கு சாதகமாக இயங்குகிறது. இந்த அறிக்கைகள் ஒருதலைப்பட்சமானவையும் மற்றும் ஜேர்மன் நீதிமன்றங்களின் சட்டபூர்வமான தன்மையை நம்பும் பாதுகாப்பைத் தேடும் மக்களுக்கு அவமரியாதையாகும்” என்று கூறினார்.

அரசாங்கத்திற்கும், மாநில மற்றும் வலதுசாரி தீவிரவாதிகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகள் ஏற்கனவே 2018 கோடையில் அப்பட்டமாக வெளிவந்தன. முன்னணி AfD உறுப்பினர்கள் மற்றும் நவ-நாஜிக்கள் செம்னிட்ஸ் நகரில் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் செய்து, புலம்பெயர்ந்தோர், ஊடகவியலாளர்கள் மற்றும் இடதுசாரி மக்கள், அதே போல் ஒரு யூத உணவகம் மீது தாக்குதல் நடத்துவதில் ஒரு இனவெறி கும்பலை வழிநடத்தினர்.

கிரெட்ச்மார் மற்றும் சீஹோஃபர் இருவரும் அந்த நேரத்தில் தீவிர வலது ஆர்ப்பாட்ட்த்தை ஆதரித்தனர். "அங்கு கும்பல் இல்லை, சூனிய வேட்டை இல்லை, செம்னிட்ஸில் படுகொலை இல்லை" என்று கிரெட்ச்மார் ஒரு அரசாங்க அறிக்கையில் கூறினார். "மக்கள் ஆத்திரமாகவும் கோபமாகவும் உள்ளனர்" என்று சீஹோஃபர் அத்தாக்குதலுக்கான தனது புரிதலை வெளிப்படுத்தினார். மேலும் Rheinische Post பத்திரிகையிடம், "நான் ஒரு அரசாங்க அமைச்சராக இல்லாதிருந்தால், நான் ஒரு குடிமகனாக வீதிகளில் இறங்கியிருப்பேன்" என்று கூறினார்.

அப்போதிருந்து, நீதித்துறை, காவல்துறை, உளவு அமைப்புகள், அரசாங்கம், AfD மற்றும் நவ-நாஜிக்கள் இடையேயான நெருக்கமான உறவுகள் இன்னும் தெளிவாகிவிட்டன. AfD தலைமைக்குள் பாதுகாப்பு அமைப்புகளின் பல பிரதிநிதிகள் உள்ளனர். அதனுள் வலதுசாரி தீவிரவாத வலைப்பின்னல்கள் உள்ளிளுக்கப்படுகின்றன. உதாரணமாக, டிரெஸ்டன் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் ஜென்ஸ் மையர், 2017 முதல் AfD நாடாளுமன்ற பிரதிநிதியாக இருந்து வருகிறார்.

சாக்சோனியில் உள்ள காவல்துறை அதிகாரியான ஸ்டெஃபான் ஜானிச், பிர்னா நகரில் உள்ள AfD யின் உள்ளூர் தலைவராக உள்ளார். மேலும் ஏப்ரல் மாதத்தில் பொது சுகாதார கட்டுப்பாடுகளுக்கு எதிராக மிகவும் ஆக்ரோஷமான ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவராவார். இதையடுத்து அவர் கடமையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இவர் முன்னாள் AfD தலைவர் பிரைவ்க்க பேட்ரியின் தேர்தல் மாவட்டத்தில் AfD இன் கூட்டாட்சி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டார். பவுட்ஸன் நகரைச் சேர்ந்த AfD துணைத் தலைவர் கார்ஸ்டன் ஹில்ஸும் ஒரு போலீஸ் அதிகாரியாவார். கடந்த வாரம் அவர் பாராளுமன்றத்தில் பேசியபோது, ஒரு “குறுக்குவாட்டு சிந்தனையாளர்” அமைப்பின் சட்டையை அணிந்திருந்தார்.

சிறை அதிகாரி டானியல் ஸாபல், ஒரு குற்றம் என்று சந்தேகிக்கப்பட்ட புகலிடம் கோருவோருக்கான பிடியாணையை வலதுசாரி தீவிரவாத உறுப்பினர்களுக்கு கொடுத்து, இதனால் செம்னிட்ஸில் சீற்றத்தைத் தூண்டினார். இப்போது சாக்சோனியின் மாநில நாடாளுமன்றத்தில் AfDக்கு நாடாளுமன்ற துணைத் தலைவராக உள்ளார். அதற்கு முன்னர், அவருக்கு இடைநீக்கம் செய்யப்பட்ட தண்டனை வழங்கப்பட்டது.

ஆண்ட்ரியாஸ் கல்பிட்ஸ் (Source: Wikimedia / Professusductus)

மையர், ஜானிச் மற்றும் ஸாபல் ஆகியோர் AfD யின் தீவிர வலதுசாரி "Wing" பிரிவின் உறுப்பினர்களாக நம்பப்படுகிறார்கள். இது உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டிருந்தாலும் கட்சியை ஆதிக்கம் செலுத்துகிறது. பிராண்டன்பேர்க்கில் உள்ள AfD தலைவர் ஆண்ட்ரியாஸ் கல்பிட்ஸ், துரிங்கியாவின் தலைவரான பியோர்ன் ஹொக்க உடன் சேர்ந்து “Wing” இன் முன்னணி செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக இருந்தார். எவ்வாறாயினும், பின்னர் தடைசெய்யப்பட்ட ஒரு நவநாஜி அமைப்பில் தனது உறுப்பினரை மறைத்து வைத்திருப்பதாக வெளிவந்த பின்னர் கல்பிட்ஸ் AfD யிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

எவ்வாறாயினும், இந்த வெளியேற்றம் முற்றிலும் போலியான நடவடிக்கையாகும். கடந்த வாரம், வலதுசாரி தீவிரவாத Future Homeland அமைப்பு ஏற்பாடு செய்த கொட்புஸ் நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவரது அரசியல் வழிகாட்டியான கூட்டாட்சி நாடாளுமன்றத்தில் AfD குழுவின் தலைவரான அலெக்சாண்டர் கவ்லாண்ட் பேசியபோது கல்பிட்ஸ் மேடைக்கு முன்னால் அவருடன் அருகே நின்றார். ட்ரெஸ்டனில் நடந்த பேரணி கல்பிட்ஸை வெளியேற்றிய பின்னர் இது அவரது முதல் பகிரங்க உரையாக குறித்தது.

2013 மற்றும் 2020 க்கு இடையில் சாக்சோனியில் உள்ள மாநில புலனாய்வு அமைப்பின் தலைவராக இருந்த கோர்டியன் மையர்-பிளாத் தீவிர வலதுசாரிகளுடன் செயல்பட்டு வருகிறார். அவர் Marchia Bonn என்ற குண்டர்பாணியிலான மாணவர் குழுவில் உறுப்பினராக உள்ளார். அவர் மேலும் பிராண்டன்பேர்க்கில் வலதுசாரி தீவிரவாத அமைப்பை கட்டியெழுப்புவதில் தகவலறிபவராக பெரிதும் ஈடுபட்டார். இது National Socialist Underground (NSU) அமைப்புடன் பயங்கரவாத கலத்துடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், அவரை சாக்சோனி உள்துறை மந்திரி ரோலண்ட் வுல்லர் பதவி நீக்கிவிட்டார். இது அவர் அத்தகைய வலதுசாரி என்பதால் அல்ல, ஆனால் அவர் AfD பற்றி சேகரிக்கப்பட்ட தகவல்களை அழிக்க மறுத்ததாலாகும்.

நவம்பர் படுகொலை ஆண்டு நிறைவையொட்டி ட்ரெஸ்டனில் நடந்த வலதுசாரி தீவிரவாத பேரணி, மாநில மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் வலதுசாரி திருப்பம் எவ்வளவு முன்னேறியது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதற்கு முக்கிய கட்சிகள் அனைத்தும் பொறுப்பாகும். சமூக ஜனநாயகவாதிகள் 2014 இல் சாக்சோனியின் மாநில அரசாங்கத்தில் சேர்ந்தனர், மேலும் பசுமைவாதிகள் 2019 இல் தொடர்ந்தனர். அவை அமைச்சர் ஜனாதிபதி கிரெட்ச்மாருக்கு ஆதரவையும், அரசு எந்திரத்திற்குள் வலதுசாரி சதித்திட்டத்திற்கான அரசியல் மூடிமறைப்பையும் வழங்குகின்றன. இடது கட்சியும் நீதித்துறை மற்றும் காவல்துறையை உறுதியாக ஆதரிக்கிறது.

இதற்கு நேர்மாறாக, வலதுசாரி தீவிரவாதிகளுக்கு மக்களிடையே எந்த ஆதரவும் இல்லை. டிரெஸ்டனில் நடந்த பெகிடா பேரணியில் சில நூறு பங்கேற்பாளர்கள் மட்டுமே இணைந்தனர். சமூக சமத்துவமின்மை, இராணுவவாதம் மற்றும் தொற்றுநோய்களின் நிலைமைகளின் கீழ் பொருளாதாரத்தை மீண்டும் திறந்து வைப்பதற்கான பெருகிவரும் எதிர்ப்பை அச்சுறுத்துவதற்கும் அடக்குவதற்கும் வலதுசாரி தீவிரவாதிகள் வேண்டுமென்றே அதிகாரத்தின் மேல் மட்டத்திலிருந்து கட்டியமைக்கப்படுகிறார்கள்.