கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் “எழ வேண்டும்” என ட்ரம்ப்பின் ஆலோசகர் அழைப்பு விடுகிறார்
18 November 2020
மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
மிச்சிகன் கவர்னர் கிரெட்சன் விட்மரைக் கடத்தி கொலை செய்வதற்கான ஒரு பாசிச சதி, மாநில காவல்துறை மற்றும் FBI ஆகியவற்றால் தகர்க்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குள், வெள்ளை மாளிகையின் உயர்மட்ட உதவியாளர் ஒருவர் மிச்சிகன் மக்களை ஜனநாயகக் கட்சி ஆளுநருக்கு எதிராக "எழ" அழைப்பு விடுத்துள்ளார்.
மதுவகங்கள், உணவகங்கள் மற்றும் பிற உட்புற கூடுமிடங்களை மூன்று வாரங்கள் மூடுவது, உயர்நிலைப் பள்ளிகளில் தனிநபர் வகுப்புகளுக்கு முடிவு, மற்றும் பிற கட்டுப்பாடுகள் உட்பட தொற்றுநோய்களின் எழுச்சிக்கு எதிராக புதிய பொது சுகாதார நடவடிக்கைகளை விட்மர் வெளியிட்ட பின்னர், ட்ரம்பின் வெள்ளை மாளிகை கொரோனா வைரஸ் பணிக்குழுவின் தலைவரான டாக்டர் ஸ்காட் அட்லஸ் ஞாயிற்றுக்கிழமை இரவு ட்விட்டரில் கருத்து தெரிவித்தார்.
"மக்கள் எழுச்சியடைவதே இது நிறுத்தப்படுவதற்கான ஒரே வழி" எனவும் "நீங்கள் ஏற்றுக்கொள்வதை நீங்கள் பெறுவீர்கள்" எனவும் அட்லஸ் டுவீட் செய்துள்ளார்.
இந்த துறையில் நிபுணத்துவம் இல்லாதபோதிலும், அட்லஸை ட்ரம்ப் தனது உயர்மட்ட பொது சுகாதார ஆலோசகர் பதவிக்கு உயர்த்தினார் — அவர் ஒரு கதிரியக்கவியலாளர் வலதுசாரி ஹூவர் இன்ஸ்டிடியூஷனுக்கான சுகாதார கொள்கை வர்ணனையாளராக மாறியிருந்தார். ஆளுநர் விட்மருக்கு எதிராக மக்களை "எழ" அழைப்பு விடுத்ததில், அட்லஸ் நன்கு அறியப்பட்டவர், செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்ட பாசிச குடிப்படை துப்பாக்கிதாரிகளின் மொழியை அவர் எதிரொலிக்கிறார். அவர்கள் விட்மரை அவரது விடுமுறை இல்லத்திலிருந்து கடத்தி வெளியேற்றி, முந்தைய கொரோனா வைரஸ் பூட்டுதலுக்காக, கொடுமைப்படுத்தி "விசாரணை" செய்த பின்னர் அப்பெண்மணிக்கு மரணதண்டனை வழங்கவும் திட்டமிட்டிருந்தனர்.
ட்ரம்பின் டுவீட்களையும் அவர் பிரதிபலித்தார், குறிப்பாக கொரோனா வைரஸ் மிச்சிகனை கடுமையாக தாக்கியவேளையில் விட்மரின் முந்தைய நிர்வாக உத்தரவுகளான பள்ளிகளையும், மதுவகங்களையும், உணவகங்களையும் முதல் கட்ட தொற்றுநோய்களின் போது மூடிய பின்னர், ட்ரம்ப் "மிச்சிகனை விடுவிக்க" தனது ஆதரவாளர்களை அழைத்தார்.
அவரது டுவீட், வன்முறையைத் தூண்டுவதாக விட்மர் பகிரங்கமாகக் கண்டித்த பின்னர், அட்லஸ் வெளிப்படையான மறுப்பை தொடர்ந்து ட்வீட் செய்தார், “நான் வன்முறையைப் பற்றி ஒருபோதும் பேசவில்லை. மக்கள் வாக்களிக்கின்றனர், மக்கள் அமைதியாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். வன்முறையை நான் ஆதரிக்கவோ தூண்டவோ மாட்டேன். ஒருபோதும் இல்லை!!”
சனிக்கிழமை இரவு வாஷிங்டன் டி.சி. மற்றும் சாக்ரமென்டோ, கலிபோர்னியா, நெவாடாவின் கார்சன் சிட்டி உள்ளிட்ட பல மாநில தலைநகரங்களில் தனது பாசிச ஆதரவாளர்களுக்கும் இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களுக்குப் பின்னர் ட்ரம்ப்பே வெளிப்படையாக வன்முறையைத் தூண்டினார். அமெரிக்க தலைநகரின் தெருக்களில் காவல்துறையின் சில பிரிவுகளின் ஆதரவுடன் நவ-நாஜி Proud Boys இன் நடவடிக்கைகளை அவர் பாராட்டினார். பல ஆயிரம் ட்ரம்ப் ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து, யூத எதிர்ப்பு Nick Fuentes போன்ற பாசிச தலைவர்களும், காங்கிரசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோர்ஜியாவின் Marjorie Taylor Greene உம், பாசிச QAnon குழுவின் ஆதரவாளர்களும் உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அவற்றின் வன்முறை விளைவுகளைப் பற்றி மீண்டும் மீண்டும் ட்வீட் செய்த ட்ரம்ப், தனது அரசியல் எதிரிகளை பாசிச வார்த்தைகளால் கண்டித்தார், அவர்களை “மனித தீவிர இடது குப்பைகள்” மற்றும் “தீவிர இடது ஆண்டிஃபா அழுக்குகள்” என்று அழைத்தார், அதே நேரத்தில் அனைத்து ட்ரம்ப் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களையும் சாத்தியமானவரை பலம், வன்முறையை பிரயோகித்து அடக்குமாறு வாஷிங்டன் டிசி காவல்துறையினரை வலியுறுத்தினார்.
ட்ரம்ப் ஏற்றுக்கொண்ட அனைத்து அறிவிப்புகளிலும் மிகவும் சிலிர்க்கவைப்பது, ஒரு கிறிஸ்தவ அடிப்படைவாதியும், ஜனாதிபதியின் வெளிப்படையான ஆதரவாளருமான நடிகர் Jon Voight இன் ட்விட்டர் வீடியோவாக இருக்கலாம், அதை ட்ரம்ப் கடந்த வாரம் பிற்பகுதியில் மறு டுவீட் செய்தார்.
ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடெனை ஆதரித்தவர்களைக் கண்டித்து, அவர்களின் அழிவை முன்னறிவித்த Voight, “இப்போது மகிழ்ச்சிக்காக தாவுகின்றவர்கள் தாங்கள் இருக்கும் திகில் நோக்கி குதித்து வருகிறார்கள்…” என்று அவர் தொடர்ந்தார், “இப்போது மகிழ்ச்சிக்காக குதிக்கிறவர்கள் அவர்கள் இருக்கும் பயங்கரத்தை நோக்கி குதிக்கின்றனர்… ” அவர் தொடர்ந்தார், “உள்நாட்டுப் போருக்குப் பின்னர் இது இப்போது எங்களுடைய மிகப் பெரிய போர்: சாத்தானுக்கு எதிரான நீதியின் போர். ஆம், சாத்தான். ஏனெனில் இந்த இடதுசாரிகள் தீங்குவிளைவிப்பவர்கள், ஊழல்வாதிகள், அவர்கள் இந்த தேசத்தை கிழிக்க விரும்புகிறார்கள்.”
ட்ரம்ப் வன்முறையைத் தூண்டுவதோடு, உள்நாட்டுப் போரின் அச்சுறுத்தல்களை மறு ட்வீட் செய்கையில், குடியரசுக் கட்சி முழுவதிலும் அவரது உதவியாளர்கள் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்ததை, ஒரு வேட்பாளராக அவரது உரிமைகளை முறையாகப் பயன்படுத்துவதைப் போல கருதுகின்றனர். நெருக்கமாக இல்லாத ஒரு தேர்தலில் அவர் மக்கள் வாக்குகளில் கிட்டத்தட்ட ஆறு மில்லியன் வாக்குகள் மற்றும் தேர்தல் குழு வாக்குகளில் 306-232 எண்ணிக்கையில் தோல்வியடைந்துள்ளார்.
செனட் பெரும்பான்மைத் தலைவர் மிட்ச் மெக்கானலைப் போன்ற சிலர், அனைவருக்கும் உண்மை என்று தெரிந்ததை ஒப்புக்கொள்ள ட்ரம்ப் மறுப்பதில் சாதாரணமாக எதுவும் இல்லை என்று பாசாங்கு செய்தனர்: பைடென் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றனர். ஹவுஸ் சிறுபான்மைத் தலைவர் கெவின் மெக்கார்த்தி மற்றும் ட்ரம்ப் அமைச்சரவை உதவியாளர்களைப் போன்ற மற்றவர்களின் அறிக்கைகள், ட்ரம்ப் தேர்தலில் "வென்றார்" என்றும், "இரண்டாவது ட்ரம்ப் நிர்வாகத்தின்" தொடக்கத்தை அவர்கள் எதிர்நோக்குகிறார்கள் என்றும் தொடர்கிறது. இது பாரிய வன்முறை மற்றும் ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவுவதன் மூலம் மட்டுமே அடைய முடியும்.
ட்ரம்பின் பாசிச வெறிப்பேச்சுகளுக்கு, ஜனநாயகக் கட்சி மக்களை அமைதிப்படுத்தும் மயக்க மருந்துகளுடனும் தூக்க மாத்திரைகளுடனும் பதிலளித்து வருகிறது. டொனால்ட் ட்ரம்பும் குடியரசுக் கட்சியினரும் நூற்றாண்டு பழமையான ஜனநாயக மரபுகளை மிதித்து, கணிசமான வித்தியாசத்தில் தோல்வியுற்ற ஒரு தேர்தலை ஒப்புக்கொள்ள மறுத்து வருகிறார்கள். ஆனால் ஜனநாயக அரசியலின் அடிப்படையாகக் கருதப்படும் "அதிகாரத்தை அமைதியான முறையில் மாற்றுவதில்" ஈடுபட மறுக்கிறார்கள் என ஜனநாயகக் கட்சியினர் யாரும் வெளிப்படையாகக் கூறவில்லை.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நடவடிக்கைகளால் அமெரிக்க ஜனநாயகம் அபாயகரமான முறையில் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படுகிறது என்ற கூற்றில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஜனநாயகக் கட்சி ஒருமனதாக கவனம் செலுத்தியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். "வெளிநாட்டு தலையீடு" என்ற கூற்று ஒரு முழுமையான புனைகதை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், ஜனநாயக உரிமைகளை அழிக்க ஒரு உண்மையான சதித்திட்டத்தை எதிர்கொள்ளும்போது, ஜனநாயகக் கட்சியினர் வெறும் மோசமான நடத்தைக்குரிய விடையமாக மட்டுமே காட்ட முற்படுகிறார்கள்.
திங்களன்று தனது பத்திரிகையாளர் சந்திப்பில், ஒரு சாதாரண மாற்றத்தில் ஈடுபட ட்ரம்ப் மறுத்ததன் விளைவுகள் என்ன என்று பைடெனிடம் கேட்கப்பட்டது. "நாங்கள் ஒருங்கிணைக்கப்படாவிட்டால் அதிகமான மக்கள் இறக்கக்கூடும்" என பைடென் பதிலளித்தார். உண்மையில், வரும் மாதங்களில் இறப்பவர்களின் எண்ணிக்கை பத்தாயிரம் மற்றும் நூறாயிரக்கணக்கானதாக இருக்கும்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கை கிரிமினல் தனமானது என்ற உண்மையை பைடென் விரிவாகக் கூறவில்லை, இது பாரிய படுகொலைக்கு காரணமானவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டிய அவசியத்தை எழுப்புகிறது. மக்கள் முக கவசங்களை அணிய வேண்டும் என்று வலியுறுத்துவதைத் தவிர, வளர்ந்துவரும் பேரழிவைத் தடுக்க எந்தவொரு குறிப்பிடத்தக்க திட்டத்தையும் அவர் முன்மொழியவில்லை. குறிப்பாக, அத்தியாவசியமற்ற உற்பத்தியை நாடு தழுவிய அளவில் பூட்டுவதை பைடென் பிரச்சாரம் எதிர்த்தது.
இறுதியில், ட்ரம்புடனான ஜனநாயகக் கட்சியினரின் வேலைத்திட்ட வேறுபாடுகள் ஒரு தந்திரோபாய தன்மையைக் கொண்டவை. ட்ரம்பின் பாசிச சதித்திட்டங்களை விட அவர்கள் சொல்வது எதுவும் வெகுஜன எதிர்ப்பைத் தூண்டி சந்தைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்திவிடும் என்பதில் அவர்கள் அதிக அக்கறையுடன் உள்ளனர்.
தேர்தல் முடிவுகளை தூக்கியெறிந்து பதவியில் நீடிப்பதற்கான தனது முயற்சிகளை ட்ரம்ப் தொடர்ந்தால், ஜனநாயகக் கட்சி, கொள்ளையடிப்பவரை அதிகாரத்திலிருந்து விரட்டியடிக்கவும், அவரையும் அவரது ஒத்துழைப்பாளர்களையும் சிறையில் அடைக்கவும் அமெரிக்க மக்களுக்கு அழைப்பு விடுக்காது. மாறாக, ட்ரம்பிற்கு எதிரான எந்தவொரு மக்கள் கிளர்ச்சியையும் நசுக்குவதற்கு அவர்களாலான அனைத்தையும் செய்வார்கள், மேலும் உள்நாட்டில் முதலாளித்துவ ஆதிக்கத்தையும், உலகளவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அந்தஸ்தையும் பாதுகாக்கும் ஒரு மாற்றத்தை உறுதிப்படுத்த இராணுவ-உளவுத்துறை எந்திரத்தை நம்பியிருப்பார்கள்.
மிச்சிகனில் ஆளுநர் விட்மரைப் போலவே, அதன் சொந்த ஆளுநர்கள் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளானபோதும் கூட, ஜனநாயகக் கட்சி அதன் சின்னிவிரலைக் கூட அசைக்கவில்லை.
அதன் அனைத்து விவகாரங்களையும் போலவே, ஜனநாயகக் கட்சியினரும் என்ன சொல்ல முடியும் என்பதில் உண்மையான சமூக கட்டுப்பாடுகள் உள்ளன. இவை அமெரிக்க இரு கட்சி கட்டமைப்பில் ஜனநாயகக் கட்சியின் போலிப் பாத்திரத்தின் விளைவாகும். இது ஒரு முதலாளித்துவ ஏகாதிபத்திய கட்சி, குடியரசுக் கட்சியினரை விட குறைவாக ஒன்றையும் வோல் ஸ்ட்ரீட் மற்றும் CIA க்கு அர்ப்பணிக்கவில்லை. ஆனால் பெருவணிகத்தின் அரசியல் ஏகபோகத்தை பராமரிக்கும் நோக்கத்திற்காக, அதன் மீது ஒருபோதும் நடவடிக்கை எடுக்காமல், சில ஜனரஞ்சக, ஜனநாயக சொல்லாட்சிகளுடன் உழைக்கும் மக்களின் நலன்களை ஆதரிப்பதாக பாசாங்கு செய்ய வேண்டும்.
2020 தேர்தல்களும், தேர்தலுக்கு பிந்தைய நெருக்கடிகளும், சர்வாதிகார ஆட்சியின் அச்சுறுத்தல் மற்றும் வெளிப்படையான பாசிசத்திற்கு எதிராக எந்தவொரு தீவிரமான போராட்டத்தையும் நடத்த அதன் முழுமையான இயலாமை மற்றும் விருப்பமின்மை ஆகியவை ஜனநாயகக் கட்சியின் வர்க்கத் தன்மை பற்றி பதிலளிக்க முடியாத ஒரு செயல் விளக்கத்தை அளித்துள்ளன. பைடென் அடுத்த ஜனவரியில் பதவியேற்றாலும் இல்லாவிட்டாலும், பாசிச அபாயத்துக்கு எதிரான போராட்டம் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் அணிதிரட்டல் மற்றும் அதன் சொந்த புரட்சிகர சோசலிசக் கட்சியை கட்டுவதன் மூலமாக மட்டுமே முன்னேறிச் செல்ல முடியும்.
Patrick Martin
Follow the WSWS