ஐரோப்பிய அரசியல்வாதிகளும் ஊடகங்களும் அமெரிக்க சதியை ஆபத்து இல்லாததாக காட்டுகின்றன

Peter Schwarz
9 January 2021

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

முன்னணி ஐரோப்பிய அரசியல்வாதிகள் மற்றும் செய்தித்தாள் ஆசிரியர்கள் அமெரிக்காவில் பாசிச சதித்திட்டத்தை கண்டித்தனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்களால் காங்கிரஸ் சபையின் கட்டிடத்தை முற்றுகையிட்டதற்கு அவர்கள் கவலை மற்றும் பதட்டத்துடன் பதிலளித்து வருகின்றனர்.

ஆனால் அவர்களின் முக்கிய கவலை அமெரிக்க ஜனநாயகத்திற்கு அது அச்சுறுத்தல் என்பதாலல்ல, மாறாக ஜனவரி 6 ஆம் திகதி மிகவும் அப்பட்டமாக வெளிப்பட்ட அதன் மேம்பட்ட சிதைவு, சர்வாதிகார மற்றும் பாசிச போக்குகள் மிகவும் வளர்ச்சி கண்டுள்ள ஐரோப்பாவிலும் இதேபோன்ற நிகழ்வுகளுக்கான எதிர்ப்பு வலுப்பட முடியும் என்ற அச்சத்தாலாகும்.

2021 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி பாரிஸில் உள்ள லு மொண்ட் தலைமையகத்தில் காங்கிரஸ் சபையின் தாக்குதல் குறித்த பிரெஞ்சு செய்தித்தாள் லு மொண்டின் பிரதிகள் வழங்கப்படுகின்றன. (AP Photo/Thibault Camus)

ஜேர்மனியில், அரசின் உயர் மட்டத்தினரின் வலுவான ஆதரவைக் கொண்ட வலதுசாரி தீவிரவாத வலைப்பின்னல்கள் இராணுவம், பொலிஸ் மற்றும் உளவுத்துறை நிறுவனங்கள் முழுவதும் பரவி வருகின்றன. மேலும் ஜேர்மனிக்கான தீவிர வலதுசாரி மாற்றீடு கூட்டாட்சி மற்றும் மாநில நாடாளுமன்றங்களின் அரசியல் தொனியை தீர்மானிக்கிறது. பிரான்சில், ட்ரம்பிலிருந்து தனது நேர்த்தியான நடைமுறை பழக்கவழக்கங்களால் மட்டுமே வேறுபடுகின்ற ஜனாதிபதி மக்ரோன், மஞ்சள் சீருடை எதிர்ப்பாளர்களுக்கு எதிராக கொடூரமாக வெடித்ததுடன் மற்றும் பெருகிய முறையில் கடுமையான தணிக்கை மற்றும் பாதுகாப்பு சட்டங்களை நிறைவேற்றியுள்ளார். போலந்து மற்றும் ஹங்கேரியில், சர்வாதிகார ஆட்சிகள் நீதித்துறையையும் ஊடகங்களையும் அரச கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருகின்றன.

ஜேர்மனிய வெளியுறவு மந்திரி ஹெய்கோ மாஸ் மற்றும் ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்ரைய்ன்மையர் ஆகியோர் அமெரிக்காவில் நடந்த நிகழ்வுகள் குறித்த தங்கள் கருத்துக்களில் இந்த சமாந்தரமான நிகழ்வகளை பற்றி உரையாற்றினர். அமெரிக்காவை மட்டும் நோக்கி விரல் காட்டுவது சுய திருப்தியின் அடையாளமாக இருக்கும் என்று மாஸ் Der Spiegel க்கான விருந்தினர் பகுதியில் பின்வருமாறு எழுதினார். "இங்கே எங்களிடமும் ஹால, ஹனாவ் நகரங்களிலும் மற்றும் பாராளுமன்ற கட்டிடத்தின் படிகளிலும் கிளர்ச்சி மற்றும் எழுச்சியூட்டும் சொற்களை எவ்வாறு வெறுப்பு நிறைந்த செயல்களாக மாற்ற முடியும் என்பதை நாங்கள் காணக்கூடியதாக இருந்தது." ஆகஸ்ட் மாதத்தில் பேர்லினில் நடந்த நிகழ்வுகளுடன் காங்கிரஸ் சபையின் முற்றுகையை ஸ்ரைய்ன்மையர் ஒப்பிட்டார். அப்போது தீவிர வலதுசாரி கொரோனா வைரஸ் மறுப்பாளர்கள் பாராளுமன்ற கட்டிடத்தின் படிகளை முற்றுகையிட்டனர்.

ஏறக்குறைய அனைத்து ஐரோப்பிய கருத்துக்களும் அமெரிக்காவில் சதித்திட்டத்தின் அளவைக் குறைத்துக்காட்ட முயன்றன. பதவியில் இருந்து அகற்றப்பட்ட அதிபர் ட்ரம்பையும், அவர் தூண்டிய வலதுசாரி கும்பலையும் அவர்கள் விமர்சித்தாலும், அவர்கள் அரசு எந்திரம் மற்றும் குடியரசுக் கட்சியின் பங்கு குறித்து மௌனமாக இருக்கிறார்கள்.

ஆனால் அவர்களின் பங்கை ஒப்புக் கொள்ளாமல், வலதுசாரி சதித்திட்டத்தின் அளவையும் அது ஏற்படுத்தும் ஆபத்தையும் புரிந்து கொள்ள முடியாது."ஜனவரி 6 பாசிசவாத ஆட்சிக் கவிழ்ப்பு” என்ற தனது கட்டுரையில் உலக சோசலிச வலைத் தளம் செனட் சபையில் குடியரசுக் கட்சியின் பெரும்பான்மையினரும் மற்றும் அரசு அமைப்புகளில் ஒரு பிரிவினர் ஆட்சிக் கவிழ்ப்பினை தயாரிப்பதில் வகித்த முக்கிய பங்கை விளங்கப்படுத்தி அதன் இலக்கை முதல்தடவையில் அது அடையாவிட்டாலும் இது திரும்பவும் நிகழலாம் என்று குறிப்பிட்டது.

குடியரசுக் கட்சி செனட்டர்களும் காங்கிரஸ்காரர்களும் தேர்தல் முடிவுகளை அங்கீகரிப்பதை தாமதப்படுத்தி, இதனால் தேர்தல் திருடப்பட்டது என்ற ட்ரம்ப்பின் பொய்யை ஆதரித்தனர். காங்கிரஸ் சபையின் கட்டிடத்தின் முற்றுகைக்கு பின்னரும், 138 குடியரசுக் கட்சியினர் பைடெனின் வெற்றியைத் தடுக்க பென்சில்வேனியாவில் தேர்தல் முடிவு உறுதிப்படுத்தப்படுவதற்கு எதிராக வாக்களித்தனர். பாதுகாப்பு அமைப்பின் ஆதரவு இல்லாமல், வலதுசாரி கும்பல் உலகின் மிக வலுவாக பாதுகாக்கப்பட்ட கட்டிடங்களில் ஒன்றிற்குள் நுழைந்திருக்க முடியாது.

இந்த சூழல் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களின் ஐரோப்பிய கருத்துக்களால் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. அமெரிக்க ஜனநாயகம் மிகச் சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பதைப் போலவும், சதித்திட்டத்திற்கு ட்ரம்பும் அவரது உடனடி பரிவாரங்களும் தான் காரணம் என்றும் அவர்கள் சித்தரிக்கிறார்கள். ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பைடெனைப் போலவே, அவர்களும் சதித்திட்டம் தீட்டிய குடியரசுக் கட்சியினருடன் ஒற்றுமைக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இது Neue Zürcher Zeitung பத்திரிகையின் ஒரு கருத்தில், "காங்கிரஸ் சபையின் கட்டுப்பாட்டை இழப்பது ஒரு எச்சரிக்கை சமிக்ஞையாகும், ஆனால் அமெரிக்க ஜனநாயகத்தின் வீழ்ச்சி அல்ல" என்ற தலைப்பில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது.

சுவிஸ் வங்கிகளின் ஊதுகுழலான இது, "காங்கிரஸ் சபையின் காட்சிகள் ஒரு ஊழல்" என்று கூறியது. "ஆனால் அவை அமெரிக்காவின் நிலையை முதன்மையாக பிரதிபலிக்கவில்லை, ஆனால் அதன் ஜனாதிபதியின் நிலையை பிரதிபலிக்கின்றன." என எழுதியது. இதேபோன்ற ஒரு வரியை இத்தாலியின் la República எழுதியது. "அமெரிக்க ஜனநாயகம், ஒரு ஜனாதிபதியின் சர்வாதிகார தூண்டுதல்களை எதிர்ப்பதற்கு தற்காப்பு சக்திகளைக் கொண்டுள்ளது என்பதை நிரூபித்துள்ளது" என அது எழுதியது.

ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஆகியோர் இதேபோன்ற நிலைப்பாடுகளில் வாதிட்டனர். புதன்கிழமை மாலை வாஷிங்டனில் நடந்த நிகழ்வுகள் குறித்து பேசிய மக்ரோன், “இன்று வாஷிங்டன் டி.சி இல் நடந்தது, அமெரிக்கா அல்ல, நிச்சயமாக இல்லை. எங்கள் ஜனநாயகங்களின் வலிமையை நாங்கள் நம்புகிறோம், அமெரிக்க ஜனநாயகத்தின் வலிமையை நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

வியாழக்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் மேர்க்கெல் பின்வருமாறு கூறினார். அமெரிக்காவின் படங்கள் என்னை "கோபமாகவும் சோகமாகவும்" ஆக்கியது. "நவம்பர் முதல், நேற்று மீண்டும் ஜனாதிபதி ட்ரம்ப் தனது தோல்வியை அங்கீகரிக்கவில்லை" என்று அவர் மிகவும் கவலைப்பட்டதாக கூறினார். தேர்தல் முடிவு குறித்த சந்தேகங்களை வேண்டுமென்றே ஊக்குவித்தது “இரவின் நிகழ்வுகளை சாத்தியமாக்கும் சூழ்நிலையை தயார் செய்தது” என்றார்.

"ஆனால் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடெனின் வார்த்தைகள், இந்த ஜனநாயகம் தாக்குதல் நடத்தியவர்களையும், குண்டர்களையும் விட மிகவும் வலுவானதாக இருக்கும் என்பதை நான் உறுதியாக நம்பச்செய்கின்றது ... இரண்டு வாரங்களுக்குள், அமெரிக்கா அதன் ஜனநாயகத்தின் புதிய அத்தியாயம் ஒன்றை கட்டாயமாக திறக்கும்” என்றார்.

ஒரு பரிதாபகரமான உரையில், பைடென் முன்னணி சதித் திட்டக்காரரான ட்ரம்ப்பை மக்களுக்கு ஒரு தொலைக்காட்சி உரையை வழங்குமாறு கெஞ்சினார். மேலும் தனது ஆதரவாளர்களை அணிதிரட்டுவதற்கான அழைப்பு என்று அர்த்தப்படக்கூடிய எந்தவொரு வார்த்தையையும் சொல்வதைத் தவிர்த்தார். ட்ரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்களின் எந்தவொரு சதித் திட்டத்தையும் விட அவர் கீழே இருந்து எழும் ஒரு இயக்கம் குறித்து மிகவும் பயப்படுவதை அவர் இதன்மூலம் தெளிவுபடுத்தினார். இறுதி ஆய்வில், குடியரசுக் கட்சியினரும் ஜனநாயகக் கட்சியினரும் ஒரு சிறிய அடுக்கு கோடீஸ்வரர்கள் மற்றும் மில்லியனர்களின் நலன்களையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

ஜேர்மனியின் சமூக ஜனநாயக வெளியுறவு மந்திரி, பைடென் சதியாளர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பரிந்துரைத்தார். "சுமாரான பொறுப்புள்ள ஒவ்வொரு குடியரசுக் கட்சியினரும் இப்போது ட்ரம்பிற்கு முரணாக இருக்க வேண்டும்" என்று Der Spiegel இல் மாஸ் எழுதினார். பைடெனின் “பரஸ்பர மரியாதை மற்றும் நல்லிணக்கத்திற்கான அழைப்பு, ஒரு ஜனாதிபதியின் நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்கள். ஜோ பைடென் மற்றும் கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதை அமெரிக்க காங்கிரஸால் உறுதிப்படுத்தப்பட்டமை நேற்று வாஷிங்டனில் குழப்பத்தையும் அமைதியின்மையையும் உருவாக்கியவர்களுக்கு மிகச் சிறந்த ஜனநாயக பதில்” என்று குறிப்பிட்டார்.

ட்ரம்பின் கீழ் தனது பிரெக்ஸிட்டின் மூபோபாயத்திற்கு அமெரிக்காவுடன் நெருங்கிய கூட்டணியை அடிப்படையாகக் கொண்ட பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இதேபோன்ற தொனியில், ஆனால் இன்னும் சுருக்கமாக குறிப்பிட்டார். "அமெரிக்க காங்கிரசில் இழிவான காட்சிகள். அமெரிக்கா உலகெங்கிலும் உள்ள ஜனநாயகத்திற்காக நிற்கின்றது. அமைதியான மற்றும் ஒழுங்கான அதிகார பரிமாற்றம் இருக்க வேண்டும் என்பது இப்போது மிக முக்கியமானது” என்று அவர் ட்விட்டரில் எழுதினார்.

லண்டனின் Times பத்திரிகையும் அமெரிக்க ஜனநாயகத்தின் ஸ்திரத்தன்மையை கண்டுபிடித்துள்ளது. தேர்தல் முடிவுகளை முறியடிக்க விடுத்த அவரது சட்ட சவால்களை நீதிபதிகள் நிராகரித்தனர். மேலும் அவரது சொந்த கட்சியின் அதிகாரிகள் அவரை எதிர்த்தனர். "இது வீழ்ச்சியடையும் ஒரு ஜனநாயகம் அல்ல" என்று டைம்ஸ் முடித்தது. ஒரு சில செய்தித்தாள்கள் மட்டுமே அதிக சிந்தனைமிக்க கருத்துக்களை வெளியிட்டன.

வார்சோவை தளமாகக் கொண்ட Rzeczpospolita அமெரிக்க சமுதாயத்தில் உண்மையான பிளவுகளை சுட்டிக்காட்டியது. "இதுபோன்ற காட்சிகள் பொதுவாக ஆபிரிக்க நாடுகளிலிருந்து மட்டுமே எங்களுக்குத் தெரியும். அங்குதான் அரச தலைவர்களும் அரசாங்கத் தலைவர்களும் ஜனநாயக ரீதியாக தமக்கு பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை ஏற்க மறுக்கின்றார்கள்" என்று செய்தித்தாள் குறிப்பிட்டது. "இது பல தசாப்தங்களாக அமெரிக்காவில் வளர்ந்து வரும் விரக்தியின் பிரமிக்கத்தக்க வெளிப்பாடாகும். சமுதாயத்தின் ஒரு பிரம்மாண்டமான துருவமுனைப்படுத்தல் நடைபெறுகிறது, அதிக எண்ணிக்கையிலான மக்கள் இனியும் தமது நாளாந்த தேவைகளை சமாளிக்க முடியாது இருக்கையில், அதே நேரத்தில் ஒரு சிலர் இன்னும் தங்கள் பில்லியன்களை எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள். இந்த தொற்றுநோய் இந்த துன்பியலை தீவிரப்படுத்தியுள்ளது.”

பைனான்சியல் டைம்ஸ்(FT) ஆபத்து கடந்து செல்லவில்லை என்று எச்சரித்தது. "யாரும் ஆச்சரியத்தில் பாசாங்காக மூழ்கிவிடக்கூடாது" என்று அது எழுதியது. ட்ரம்ப் நீண்ட காலமாக தனது திட்டங்களைத் தெரியப்படுத்தியிருந்தார். திரு ட்ரம்ப் தனது பதவியில் மீதமுள்ள இரண்டு வாரங்களில் என்ன செய்ய முயற்சிக்கக்கூடும் என்பதுதான் இப்போது மிக முக்கியமான கேள்வி. 1807 எழுச்சிச் சட்டத்தைப் பயன்படுத்தி திரு ட்ரம்ப் இராணுவச் சட்டத்தை அறிவிக்க முயன்றால் அவர்கள் எவ்வாறு பதிலளிப்பது என்று பென்டகனில் உள்ள மூத்த இராணுவத்தினர் விரிவாக விவாதித்துள்ளனர்.

அவரது முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான மைக்கல் ஃபிளின் உட்பட திரு ட்ரம்பைச் சுற்றியுள்ள சிலர் அதைச் செயல்படுத்துமாறு அவரை வற்புறுத்தி வருகின்றனர். "திரு ட்ரம்ப் இன்னும் என்ன செய்ய முயற்சிக்க முடியும் என்பது பற்றிய கவலை புலமைத்துவம் சார்ந்ததல்ல. புதன்கிழமை நடந்ததை வைத்து பார்க்கையில், திரு ட்ரம்ப் சீருடையில் பலரின் தனிப்பட்ட விசுவாசத்தை இன்னும் வைத்திருக்கின்றார். கும்பல் காங்கிரஸை அவ்வளவு எளிதில் உடைத்து சென்றதற்கு ஒரு காரணம், கேபிடல் ஹில் காவல்துறை அதிகாரிகள் பலரும் அவர்களுடன் வெளிப்படையாக அனுதாபத்தை கொண்டிருந்ததால் தான்” என டைம்ஸ் எழுதியது.

"டெட் குரூஸ், டெக்சாஸ் செனட்டர் ஜோஷ்யு ஹவோலி, மிசூரி செனட்டர் மற்றும் காங்கிரஸிலும் செனட்டிலும் உள்ள 100 க்கும் மேற்பட்ட சகாக்கள்" உட்பட முன்னணி குடியரசுக் கட்சியினரின் ஆதரவையும் ட்ரம்ப் தொடர்ந்து அனுபவித்து வருகிறார் என டைம்ஸ் தொடர்ந்தது.

தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ வர்ணனையாளர்களை விட அமெரிக்காவில் நடந்த சதித்திட்டத்திலிருந்து வேறுபட்ட படிப்பினைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் பாசிசம், போர், வறுமை மற்றும் கொரோனா வைரஸ் இறப்பு ஆகியவற்றை மட்டுமே வழங்கும் ஒரு சமூக அமைப்பிற்கு எதிரான போராட்டத்தை மேற்கொள்ளத் தொடங்கும்.

 

மேலதிக வாசிப்புக்கு ஆசிரியர் பரிந்துரைக்கும் கட்டுரைகள்:

ஜனவரி 6 பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு
[8 January 2021]

ட்ரம்பின் ஜனவரி 6 ஆட்சிக்கவிழ்ப்பு சதி மீது ஒரு முழுமையான, பகிரங்க விசாரணைக்காக!
[9 January 2021]

ஐரோப்பிய ஒன்றியம் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் ஐரோப்பிய ஒன்றிய-அமெரிக்க பதட்டங்கள் அதிகரிக்கின்றன
[6 January 2021]