ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டவர்கள் மனிதத்தன்மையற்ற நிலைமைகளை எதிர்க்கின்றனர்

Max Boddy
11 January 2021

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

செவ்வாய்கிழமை மாலை, இந்து சமுத்திரத்தின் தொலைதூர புறக்காவல் நிலையமான கிறிஸ்துமஸ் தீவில் ஆஸ்திரேலியாவின் இழிபுகழ்பெற்ற குடியேற்றச் சிறைக்குள் ஒரு ஆர்ப்பாட்டம் வெடித்தது. இந்த நிலையத்தில் தாங்கள் எதிர்கொண்ட "காலவரையற்ற கொடுமை" யை கண்டித்து பல ஆண் கைதிகள், மெத்தைகளையும், சில கட்டிடங்களையும் தீவைத்துக் கொழுத்தினர்.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காட்சிகள் ஒரு வளாகத்தின் கூரையில் ஒரு மனிதரைக் காட்டியது, "எங்கள் குழந்தைகளைப் பார்க்க முடியாது, எங்கள் குடும்பத்தைப் பார்க்க முடியாது." சில கைதிகள் "ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாக" அடைக்கப்பட்டுள்ளனர், "போதும் இது போதும்" என்று அறிவித்தார்.

கிறிஸ்மஸ் தீவிலுள்ள ஆஸ்திரேலிய தடுப்புக்காவல் நிலையத்தில் அகதிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் வீடியோவின் ஸ்கிரீன் ஷாட். (Credit: The Guardian, YouTube)

மற்றய காட்சிகள் ஒரு கைதி இவ்வாறு கூறுவதைக் காட்டுகின்றன: “மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு விரக்தியடைகிறார்கள் … அரபு மக்கள், வெள்ளையின மக்கள், ஆபிரிக்க மக்கள், அவர்கள் உடல்நிலை சரியில்லாமலும் மிகவும் களைப்படைந்தும் [உள்துறை அமைச்சர்] பீட்டர் டட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவின் பிரதம மந்திரி ஸ்காட் மோரிசன் எங்களை ஒரு நாய் போல நடத்துகிறார்கள்… நாங்கள் மனிதர்கள்.”

சாட்சிகளின் கூற்றுப்படி, 10 முதல் 20 கைதிகள் புதன்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். செவ்வாய்க்கிழமை இரவு குறைந்தது இரண்டு கைதிகள் ஒரு கூரையின் மேல் இருந்தனர், தற்போது 230 கைதிகள் உள்ளனர்.

பல மாதங்களாக தடுப்புக் காவல் மையத்திற்குள் பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. ஆகஸ்ட் மாதம், லிபரல்-தேசிய அரசாங்கம், முன்னர் சிறைதண்டனை அனுபவித்த, COVID-19 பெருந்தொற்று நோய் காரணமாக இனி மேலும் நாடு கடத்தப்பட முடியாத குடியுரிமையற்றவர்களை காலவரையின்றி தடுத்து வைக்கவும், முன்னர் ஆயிரக்கணக்கான அகதிகளை சிறைவைக்க பயன்படுத்தப்பட்ட அந்த சிறை நிலையத்தை முழுமையாக மீண்டும் திறந்தது.

கைதிகள் பலர் 22 மணி நேரம் கட்டிட வளாகத்திற்குள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பயன்பாடு செய்யக்கூடிய இணையம் அல்லது மொபைல் அணுகல் மறுக்கப்பட்டதால், அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பேச முடியவில்லை. கைதிகளில் பலர் உடல் மற்றும் மன நலப் பிரச்சினைகளை அனுபவிக்கின்றனர், மேலும் இந்த சிறை நிலையத்தில் சிறப்பு சிகிச்சைக்கான சேவைகளும் இல்லை.

"எல்லோரும் தங்கள் குடும்பத்துடன் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள், இப்படித்தான் நாங்கள் நடத்தப்படுகிறோம். இது மனரீதியான சித்திரவதை," Rey என்றழைக்கப்படும் போராட்டத்தில் சம்பந்தப்பட்ட ஒரு கைதி கார்டியனிடம்கூறினார். கைதிகள் அமைதியாக போராட உரிமை மறுக்கப்பட்ட பின்னரே இந்த சம்பவம் தூண்டப்பட்டுள்ளதாக அவர் கூறினார். "எல்லோருக்கும் போதுமான, அனைத்து வெற்று பேச்சுவார்த்தைகள் மற்றும் வெற்று வார்த்தைகளைத்தான் பெற்றோம்" என்று அவர் கூறினார். "தீவில் என்ன சரி செய்யப்பட வேண்டும் என்பதை நாங்கள் எப்போதும் அவர்களுக்குச் சொல்கிறோம், ஆனால் நாங்கள் எப்போதும் புறக்கணிக்கப்படுகிறோம்."

"நாங்கள் ஒரு நாளைக்கு 22 மணிநேரம் எங்கள் வளாகத்திற்குள் பூட்டப்பட்டுள்ளோம், இங்குள்ள எங்கள் நடமாட்டங்கள் அனைத்தும் கட்டுப்படுத்தப்படுகின்றன, அனைத்தும் பூட்டப்பட்டுள்ளன, மேலும் நாங்கள் கைதிகளைப் போல கட்டிடத்திலிருந்து கட்டிடத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறோம்."

கிறிஸ்துமஸ் தீவின் அமைவிடம் (Credit: Wikimedia)

ஆஸ்திரேலிய செய்தி ஊடகம் உடனடியாக இந்த சம்பவத்தை ஒரு கலவரம் என்று முத்திரை குத்தியது, இது பொது மக்களின் கருத்தை நச்சுப்படுத்தவும், அமைதியின்மைக்கான காரணங்களை மூடிமறைக்கவும், ஆர்பாட்ட எதிர்ப்பாளர்களுக்கு எதிராக பதிலடியை நியாயப்படுத்தவும் முற்பட்டது. அகதிகளை சிறையிலடைத்து நாடுகடத்துவதற்கு பொறுப்பான துணை இராணுவ அரசாங்க அமைப்பான ஆஸ்திரேலிய எல்லைப்படை (The Australian Border Force- ABF) கூறுகையில், நிலையத்தில் ஒழுங்கை மீட்டெடுக்க "நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று கூறியுள்ளது. இதில் புதன்கிழமையன்று தீவுக்கு ஒரு "சிறப்பு பதிலளிப்பு குழுவை" அனுப்புவதும் அடங்கும்.

ABF அல்லது செய்தி ஊடகமோ இந்த எதிர்ப்பை அடக்கவும், பங்கேற்பாளர்களை தண்டிக்கவும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றிய எந்த தகவலையும் வழங்கவில்லை, மேலும் சமூக ஊடக வீடியோக்கள் மற்றும் கைதிகளின் செய்திகள் தடைசெய்யப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது.

இந்த அபிவிருத்தி, கடந்த மூன்று தசாப்தங்களாக ஆஸ்திரேலியாவின் குடிவரவு தடுப்பு மையங்களுக்குள் இதேபோன்ற கலவரங்கள் என அழைக்கப்படுவதன் அனைத்து அடையாளங்களையும் கொண்டுள்ளன. லிபரல்-நேஷனல் மற்றும் தொழிற் கட்சி ஆகிய இரண்டு அரசாங்கங்களும் பல மாதங்களாக அதிருப்திக் கட்டிடம் பற்றி அறிந்திருக்கின்றன, இதனால் சிறையில் அடைபட்டவர்கள் விரக்தியால் செயற்பட நிர்பந்திக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கடுமையான சட்டம் ஒழுங்கு விடையிறுப்பால் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் சிறையில் அடைக்கப்பட்டவர்களை சித்திரவதைக்கு உள்ளாக்கும் நேரடி விளைவாகும். COVID-19 வைரஸ் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளின் விளைவாக நிலையத்தின் கொள்ளவு திறன் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்ற போர்வையில், மோரிசனின் அரசாங்கம் கைதிகளை ஆஸ்திரேலிய பெருநிலப்பகுதியிலுள்ள நிலையங்களிலிருந்து கிறிஸ்துமஸ் தீவுக்கு மாற்றியுள்ளது.

கிறிஸ்துமஸ் தீவுக்கு மாற்றப்பட்ட அகதிகள் சமூகத்தில் வாழ அனுமதிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) வெளியிட்டுள்ள ஒரு ட்டுவீட்டில் கவலை எழுப்பப்பட்டபோது, ABF ட்டுவிட்டர் பின்வருமாறு கூறியது: "எந்த அகதிகளும் CI [கிறிஸ்துமஸ் தீவு] க்கு மாற்றப்படுவதில்லை. தாக்குதல், பாலியல் குற்றங்கள், போதைவஸ்து மற்றும் பிற வன்முறை குற்றங்கள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்களை வைத்திருக்கிறது."

இந்த கைதிகளை வன்முறைக் குற்றவாளிகளாகக் கருதுவதற்கு அடுத்தடுத்த அரசாங்கங்களும் ஊடகங்களும் ஏற்றுக்கொண்ட தந்திரோபாயம் இதுதான். உண்மையில், அவர்கள் ஜனநாயக எதிர்ப்பு மற்றும் கடுமையான குடியேற்ற சட்டங்களுக்கு பலியாகிறார்கள்.

“501” மக்கள் குழு என குறிப்பிடப்படும் இவர்கள் ஆஸ்திரேலியாவில் நிரந்தர குடியிருப்பாளர்கள், குடியேற்றச் சட்டத்தின் 501 வது பிரிவின் கீழ் “மோசமான நடத்தை” அடிப்படையில் விசாக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அவர்கள் நாடுகடத்தப்படும் வரை சிறையில் அடைக்கப்படுவார்கள், அவர்கள் சிறிய குற்றங்களுக்கு மட்டுமே தண்டனை பெற்றிருந்தாலும், சிறையில் தங்கள் நேரத்தை அனுபவித்திருக்கிறார்கள். பலர் தங்கள் வாழ்நாளில் ஆஸ்திரேலியாவில் நீண்ட காலம் வாழ்ந்து வந்திருக்கிறார்கள், நாட்டில் நீண்டகாலமாக நிறுவப்பட்ட குடும்பங்களாக வாழ்ந்தும் வந்துள்ளனர்.

2014 டிசம்பரில் சட்டதிருத்தங்களின் கீழ், "மோசமான நடத்தை" என்ற விதி, 12 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத் தண்டனை அனுபவித்தவர்களை உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது. அதாவது கடைகளில் திருட்டு, போதைப் பொருள் வைத்திருந்தல் போன்ற குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்தவர்கள் நாடு கடத்தப்பட வேண்டிய நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது விரைவாக ஏராளமான நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு வழிவகுத்தது, இதில் கணிசமான எண்ணிக்கையிலான நியூசிலாந்து நாட்டினர் உட்பட, நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.

கார்டியனுடன் பேசியபோது, நிலைமைகள் "சிறையை விட மோசமானது" என்று Rey கூறினார். அவர் விளக்கினார்: “சிறையில், நீங்கள் எப்போது வீட்டிற்குச் செல்ல முடியும் என்பது உங்களுக்குத் தெரியும், ஆனால் தடுப்புக்காவலில் நீங்கள் வீட்டிற்குச் செல்ல அவர்களுக்கு காலக்கெடு இல்லை. நீங்கள் காத்திருக்கிறீர்கள், என்ன நடக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது.”

ABF உடன் கைதிகள் எழுப்பியதாகக் கூறப்படும் குறைகளில் உடற்பயிற்சி பகுதிக்கான அணுகலும் அடங்கும் (தற்போது ஒவ்வொரு கட்டிட வளாகத்திற்கும் ஒரு நாளைக்கு இரண்டு மணிநேர பட்டியல் முறை நேரம் மட்டுமே உள்ளது); சிகரெட்டுகளின் விலை; தனிப்பட்ட விடயத்திற்கான அணுகல்; மொபைல் இணையத்திற்கு சரியான அணுகல் இல்லாதது என்பவைகளாகும். தடுப்புக்காவல் நிலையங்களிலிருந்து இடமாற்றம் செய்ய கைவிலங்குகளைப் பயன்படுத்துவது மற்றும் நீண்டகால கைதிகளின் உடல் மற்றும் மனரீதியான நீண்டகால உடல்நலக்குறைவு ஆகியவைகள் பிற சிக்கல்களில் அடங்குகின்றன.

1992 ஆண்டில் கீட்டிங் தொழிற் கட்சி அரசாங்கம் கட்டாய தடுப்புக்காவல் முறையை அறிமுகப்படுத்தியபோது, செல்லுபடியாகும் விசாக்கள் இல்லாமல் மக்களை காலவரையின்றி சிறையில் அடைத்த முதல் நாடு ஆஸ்திரேலியாவாக இருந்தது. இரு கட்சி ஆதரவைப் பெற்ற இந்த அரசாங்கம், அப்போதிருந்து ஒவ்வொரு அரசாங்கமும் அதை ஆழப்படுத்தி வருகிறது.

பிரதம மந்திரிகளான ரூட் மற்றும் கில்லார்ட் ஆகியோரின் கடைசி தொழிற் கட்சி அரசாங்கமும் 501 வது பிரிவின் கீழ் விசாக்கள் இரத்து செய்யப்பட்ட நபர்களை சிறையில் அடைப்பதை மேற்பார்வையிட்டது, தடுப்பு மையங்களில் தரமற்ற மற்றும் கொடூரமான நிலைமைகளுக்கு அவர்களை கட்டாயப்படுத்தியது. 2008 ஆம் ஆண்டில், ரூட் தொழிற் கட்சி அரசாங்கம் பதவியில் இருந்தபோது, ஒரு மனித உரிமைகள் மற்றும் சம வாய்ப்பு ஆணைய அறிக்கையானது இந்த வசதிகளை ஒரு "அவமானம்" என்று கூறி அவைகள் "இடிக்கப்பட வேண்டும்" என்று கோரியது.

மாறாக, தொழிற் கட்சி அரசாங்கம் தடுப்புக்காவல் முறையை விரிவாக்கியது. நவரு மற்றும் பப்புவா நியூ கினியின் மனுஸ் தீவு மற்றும் கிறிஸ்துமஸ் தீவில் மீண்டும் சிறை முகாம்களைத் திறந்து வைத்தன.

கிறிஸ்துமஸ் தீவில் ஒரு தமிழ் அகதி குடும்பம் வசித்து வருகிறது, அவர்கள் நாடு கடத்தப்படுவதை ஒரு கடைசி நிமிட நீதிமன்ற தடையுத்தரவால் தடுக்கப்பட்ட பின்னர் ஆகஸ்ட் 2019 ஆண்டு முதல் அங்கு சிறையில் அடைக்கப்பட்டனர். வேண்டுமென்றே தண்டனைக்குரிய நடவடிக்கையாக, அவர்கள் கிராமப்புற குயின்ஸ்லாந்தில் உள்ள தங்கள் சொந்த ஊரான பிலோலாவிலிருந்து 5,000 கி.மீ தூரத்திலுள்ள கிறிஸ்துமஸ் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

நடேஸ் என அழைக்கப்படும் நடேசலிங்கம் முருகப்பன், பிரியா என்று அழைக்கப்படும் கோகிலபத்மபிரியா நடேசலிங்கம், மற்றும் அவர்களின் ஐந்து வயது கோபிகா மற்றும் மூன்று வயது தர்னிகா. (Credit: Facebook@solidaritywithBiloela)

கைது செய்யப்பட்ட முன்னாள் கைதிகளைப் போலவே, பிரியா முருகப்பன், அவரது கணவர் நடேஸ் மற்றும் இரு கைக்குழந்தைகள் ஆகியோர்களை அகற்றுவதற்கான திட்டம் அவர்களது தனிப்பட்ட மற்றும் அரசியல் ஆதாரங்களில் இருந்து அவர்களை அகற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டது. பிலோலாவில் வசிப்பவர்கள் அவர்களை விடுதலை செய்ய தொடர்ந்து போராடி வருகின்றனர், இது ஒவ்வொரு திருப்பத்திலும் அரசாங்கத்தால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் போராட்டம் நடந்த இடத்திலிருந்து வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோர் மற்றும் விசா வைத்திருப்பவர்களை கொடூரமாக நடத்துவது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும், அதை எதிர்த்துப் போராட வேண்டும். உடல்நலம், பொருளாதார மற்றும் சமூக பதட்டங்கள் அதிகரித்து, தொழிலாளர்கள் அடிப்படை வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான தொடர்ச்சியான தாக்குதலுக்கு எதிராக போராடுகையில், இத்தகைய நடவடிக்கைகள் உழைக்கும் மக்களுக்கு எதிராக இன்னும் பரந்த அளவில் திரும்பும்.

 

மேலதிக வாசிப்புக்கு ஆசிரியர் பரிந்துரைக்கும் கட்டுரைகள்:

ஆஸ்திரேலிய தமிழ் புலம்பெயர்ந்த தாய்க்கு பல வாரங்களாக அவசர மருத்துவ சிகிச்சை மறுக்கப்படுகின்றது
[28 July 2020]

கிரேக்க அரசாங்கம் 11,000 க்கும் மேற்பட்ட தஞ்சம் கோருபவர்களை வெளியேற்றுவதைத் தொடர்கிறது
[5 September 2020]

ஒரு கொலைகார ஒப்பந்தம்: ஐரோப்பிய ஒன்றியம் அகதிகளை நாடு கடத்தவுள்ளது
[2 October 2020]

பாரிஸில் அகதிகள் எதிர்ப்பு பொலிஸ் கலவரம்: தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை
[28 November 2020]