இலங்கை சுகாதார ஊழியர்களின் பிரச்சாரங்கள் தொடர்கின்றன

Our correspondents
14 January 2021

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஜனவரி 6 அன்று, நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளில் சுகாதார ஊழியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா தொற்றுநோய் விரைவாக பரவி வருகின்ற பின்னணியில், சுகாதார ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரமாண்டமான ஆபத்தான நிலைமைக்கு எதிராக போராடுவதற்கு அவர்களுக்கு உள்ள அவசரத் தேவை இந்த ஆர்ப்பாட்டங்கள் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்து.

மருத்துவமனைக்கு முன் சன நடமாட்டமுள்ள இடங்களுக்கு அருகே தொழிலாளர்கள் ஒன்று கூடி, கோஷங்களை எழுப்பி, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பிரச்சாரம் செய்தனர். ஆபத்துக்கால கொடுப்பனவை பெறுதல், சரியான விடுமுறை பெறுதல், தற்காலிக தொழிலாளர்களின் வேலைகளைப் பாதுகாத்தல், சீருடைக் கொடுப்பனவை அதிகரித்தல் மற்றும் பண்டிகை முற்பணம் பெறுதல் தொடர்பான கோஷங்கள் அவற்றில் அடங்கும்.

கொழும்பு மற்றும் கண்டி தேசிய மருத்துவமனைகள், களுபோவில தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலை, றாகம வட கொழும்பு போதனா மருத்துவமனை, ஹோமாகம கொவிட் நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மருத்துவமனை, குளியாபிட்டிய மருத்துவமனை, கேகல்ல மருத்துவமனை, களுத்துறை-நாகொட மருத்துவமனை, நுவரெலிய வைத்தியசாலை, வாழைச்சேனை மருத்துவமனை மற்றும் லெனதொர, ஹத்தொட அமுனுவ, லக்கல ஆகிய பல உள்ளூர் மருத்துவமனைகளுக்கு முன்னால் மதிய உணவு இடைவேளையின் போது நடந்த இந்த போராட்டங்களில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், குறிப்பாக கனிஷ்ட ஊழியர்களும் மற்றும் தற்காலிகத் தொழிலாளர்களும் பங்கேற்றனர்.

நவம்பர் 25, 26 ஆகிய திகதிகளிலும், டிசம்பர் மாதத்திலும் நடந்த சுகாதார ஊழியர்களின் பல ஆர்ப்பாட்டங்கள் இத்துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு உள்ள கூர்மையான பிரச்சினைகள் அம்பலத்துக்கு வந்துள்ளன.

கண்டி, இரத்தினபுரி, பதுளை, பாதுக்க, பேராதனை மற்றும் கம்பளை போன்ற பல மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளதால், ஏராளமான தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பின்னணியிலேயே சுகாதார ஊழியர்களின் இந்த போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மருத்துவமனைகளில் சில வார்டுகள் மூடப்பட்டுள்ளன.

இருப்பினும், மேலும் பல மருத்துவமனைகளில் கொவிட் நோய்க்கு சுகாதாரப் பணியாளர் சிகிச்சை அளித்திருந்த போதிலும், மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்தும் மருத்துவமனைகளை இயக்கி வருவதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் தொற்றுநோய் பரவியுள்ளமை குறித்த தகவல்களை நிர்வாகங்கள் வெளியிடாமல் மூடி மறைத்துள்ள நிலைமையில், சுகாதாரத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் கடுமையாக உயர்ந்துள்ளன. நாட்டில் தற்போது எத்தனை சுகாதார ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற புள்ளிவிவரங்களை அரசாங்கம் வெளியிடவில்லை.

ஹோமகம கொவிட்-19 நோயாளிகளுக்கான மருத்துவமனையின் கனிஷ்ட ஊழியர்களின் மறியல் போராட்டம்

ஹோமாகமவில் உள்ள கொவிட் மருத்துவமனைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், உலக சோசலிச வலைத்தளத்தின் (WSW) செய்தியாளர்களிடம் பேசிய போது, தாங்கள், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதைக் கண்டறிய பி.சி.ஆர். பரிசோதனைக்கு கூட உட்படுத்தப்படுவதில்லை என்று கூறினார்.

"நாங்கள் எங்கள் உயிருக்கு பெரும் ஆபத்தில் இருக்கிறோம். இந்த நேரத்தில் எங்கள் உடலில் கொரோனா வைரஸ் இருக்கிறதா என்பது எங்களுக்குத் தெரியாது. நாங்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று சந்தேகம் இருந்தால், பரிசோதனை செய்ய வழி இல்லை. அந்த கோரிக்கையை முன்வைத்தாலும் பிரயோசனம் இல்லை” என்று ஒரு தொழிலாளி கூறினார்.

தாம் எதிர்கொள்ளும் பாதுகாப்பின்மை குறித்து மேலும் பேசிய ஒரு தொழிலாளி கூறியதாவது: “தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் மிகக் குறைவு. சில நேரங்களில் மிகுந்த பயத்துடன் வேலை செய்ய வேண்டியுள்ளது. நாங்கள் மருத்துவமனை ஊழியர்களாக இருந்தாலும் எங்களுக்கு கொரோனா இருந்தால் இறக்கும் வரை எங்களுக்குத் தெரியாது.”

குறிப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட கணிஷ்ட ஊழியர் குழாமைச் சேர்ந்த நிரந்தரமற்ற மற்றும் பராமரிப்பு தொழிலாளர்கள், தொற்றாளர்கள் மருத்துவமனைக்கு வந்த தருணத்திலிருந்து ஒரு நோயாளியை நெருக்கமாக கவனிக்க வேண்டும், ஆனாலும் தொற்றுநோய்க்கு எதிரான அவர்களின் பாதுகாப்பு மிகக் குறைவே, என்று விளக்கினர்.

இந்த பிரச்சாரத்திற்கு அழைப்பு விடுத்த முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) தலைமையிலான கூட்டு சுகாதார தொழிலாளர் சங்கம், சுகாதார அமைச்சின் செயலாளருக்கும் சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியராச்சிக்கும் அடுத்தடுத்து கடிதங்கள் எழுதியும், இத்தகைய பிரச்சாரங்களை பயன்படுத்தி அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து சுகாதார கோரிக்கைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்ற மாயையை தொழிலாளர்கள் மத்தியில் பரப்புவதற்கே செயற்பட்டு வந்துள்ளது.

கண்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு தொழிலாளி "அரசாங்கம் எப்போதும் வாக்குறுதியளிக்கிறது, ஆனால் எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை" என்று உலகசோசலிசவலைத்தள செய்தியாளர்களிடம் கூறினார். “கொரோனா தொற்றுநோயால் ஆபத்தான வேலையைச் செய்கிறோம். நோயாளிகளை பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலேயே கொண்டு செல்ல வேண்டியிருக்கின்றது. முக கவசம் கூட சொந்த பணத்திலிருந்து தான் வாங்குகிறோம். எங்கள் வாழ்க்கையை பற்றி கூட யோசித்துப் பார்க்க முடியாது. பல ஆண்டுகளாகியும் இன்னும் நிரந்தரமாக்கப்படவில்லை,” என்று ஒரு தொழிலாளி தனது அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்தினார்.

இந்த சமயத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் "கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைக்கு" செல்லப்போவதாக கூறிய ஐக்கிய சுகாதாரத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தம்பிட்டியே சுகதானந்தா, அந்த போராட்டத்தின் மறுநாளே, வன்னியராச்சிக்கு ஒரு கடிதம் எழுதி, சுகாதார ஊழியர்களின் கோரிக்கைகளைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்த ஒரு வாய்ப்பு கேட்டுக்கொண்டார். இந்த வழியில், சுகாதார ஊழியர்களின் போர்க்குணத்தை சிறைப்படுத்தி இந்த போராட்டத்தை தனிமைப்படுத்த இந்த தொழிற்சங்கம் செயல்படுகிறது.

கொவிட் -19 தொற்றுநோயால் தீவிரமாக்கப்பட்டுள்ள உலக முதலாளித்துவ நெருக்கடியை எதிர்கொண்டு, ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் வர்க்கங்கள் இதுவரை முன்னெடுத்த சிக்கன திட்டத்தை மேலும் துரிதப்படுத்தியுள்ளன. இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தேவையான பாரிய நிதியுதவி தேவைப்படுகின்ற சூழ்நிலையிலேயே, இராஜபக்ஷ அரசாங்கம், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு சுகாதார செலவினங்களை, 27 பில்லியன் ரூபாயால் வெட்டித் தள்ளியுள்ளது.

இராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் முழு முதலாளித்துவ முறைமைக்கும் எதிரான ஒரு சுயாதீனமான அரசியல் போராட்டத்தின் மூலம் மட்டுமே சுகாதாரத் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை உறுதிப்படுத்த முடியும். சுகாதார ஊழியர்களின் தராதரங்களுக்கு இடையிலான ஒரு பரந்த ஒருங்கிணைப்பின் மூலம், தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினரையும் சுகாதாரத் தொழிலாளர்களின் அணிகளில் ஒன்றிணைப்பதன் ஊடாக, இதேபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சர்வதேச தொழிலாளர்களுடன் சேர்ந்து, ஒடுக்குமுறையான முதலாளித்துவ முறைமையை தூக்கியெறியும் நோக்கத்துடன், தொழிலாளர்கள் அந்த போராட்டத்தை ஒழுங்கமைக்க வேண்டியது அவசியமாகும்.

முதலாளித்துவத்திற்கு எதிரான இத்தகைய பரந்த போராட்டத்தின் வளர்ச்சிக்கு நேர் எதிராக, தொழிலாளர்களை அரசாங்கத்தின் போலி பேச்சுவார்த்தை மேசையுடன் கட்டி வைக்கும் மலட்டுத்தனமான அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைக்கு கீழிறக்குவதற்காக செயற்படும் போலி-இடது மு.சோ.க. தொழிற்சங்கங்கள் உட்பட ஏனைய தொழிற்சங்கங்கள், சுகாதாரத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் இந்த தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு பொறுப்பாகும்.

கோடாபய இராஜபக்ஷயின் அரசாங்கத்தின் கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை பாராட்டி, "வேறுபாடுகள் இருந்தபோதிலும்" அரசாங்கத்திற்கு தனது ஆதரவை வழங்குவதற்கான தயார்நிலையை ஏப்ரல் மாதத்தில் மு.சோ.க. செயலாளர் குமார் குணரத்னம், பிரதமர் மஹிந்த இராஜபக்ஷக்கு அனுப்பிய இரண்டு கடிதங்களில் வெளிப்படுத்தினார்.

எதிர்க்கட்சிகள் என்று கூறிக்கொள்ளும் அனைத்தினதும் ஆதரவை அணிதிரட்டிக்கொண்ட அரசாங்கம், இராணுவமயமாக்கலை துரிதப்படுத்தியதுடன், தொழிலாளர்களை தொற்றுநோய் ஆபத்துக்குள் தள்ளி, அவர்களை பெரிய முதலாளிகளின் இலாப நலன்களுக்காக மீண்டும் வேலக்குச் செல்ல நிர்ப்பந்தித்தது.

பி.சி.ஆர். பரிசோதனையை அரசாங்கம் குறைந்தபட்சமாக வைத்துக்கொண்டு மற்றும் தொற்றுநோயின் அபாயத்தை மூடிமறைத்து, உழைக்கும் மக்களை "கொவிட் உடன் வாழும் புதிய வழமை நோக்கி" இழுத்துத் தள்ளியுள்ளதால், தொற்று நோய் வேகமாக பரவி மருத்துவமனைகள் நிறைந்து போயுள்ளதால், சுகாதாரப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உக்கிரமடைந்துள்ளன.

இராணுவ அடிப்படையிலான சர்வாதிகாரத்தின் கீழ், உழைக்கும் மக்களை நசுக்கி, பெரிய முதலாளித்துவ முதலீட்டாளர்களுக்கு நாட்டை உழைப்புச் சுரண்டல் சுவர்க்கமாக ஆக்குவதற்கு செயற்பட்டு வரும் இராஜபக்ஷ ஆட்சியின் தாக்குதலுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையிலேயே போராட முடியும்.

இந்த வேலைத் திட்டத்தின் அடிப்படையில் போராடுவதற்கு, சோசலிச சமத்துவக் கட்சியுடன் (சோ.ச.க.) கைகோர்த்து தங்கள் பணியிடங்களில் சுயாதீனமான தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை அமைக்க முன்வருமாறும், சோ.ச.க. கட்டியெழுப்பிவரும் நடவடிக்கை குழுக்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்குமாறும் அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

 

மேலதிக வாசிப்புக்கு ஆசிரியர் பரிந்துரைக்கும் கட்டுரைகள்:

இலங்கை: தொழிற்சங்கங்களின் பிடியிலிருந்து தொழிலாளர்கள் விடுபடுவதாக டெய்லி மிரர் ஆசிரியர் தலையங்கம் அச்சம் வெளிப்படுத்தியுள்ளது.
[11 January 2021]

தோட்டத் தொழிலாளர்களின் ஊதியம் உற்பத்தித்திறனை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று பெருந்தோட்ட கம்பனிகள் வலியுறுத்துகின்றன
[6 January 2021]

இலங்கை: மஸ்கெலியா காட்மோர் தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலைகள் மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
[6 January 2021]