இலங்கை அரசாங்கம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் “முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை” இடித்தமைக்கு வெகுஜன எதிர்ப்பு வளர்கிறது

Pani Wijesiriwardena
14 January 2021

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஜனவரி 8 அன்று, யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த “முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை” அழித்து இராணுவம் மேற்கொண்ட ஆத்திரமூட்டலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மக்கள் நேற்று கடைகளை மூடி, பொது போக்குவரத்தை நிறுத்தி ஒரு 'ஹர்த்தாலை' நடத்தினர். இதனால், இரண்டு மாகாணங்களில் உள்ள அனைத்து செயற்பாடுகளும் சீர்குலைந்தன.

யாழ்ப்பாணத்தில் ஹர்த்தாலுக்காக கடைகள் பூட்டப்பட்டுள்ளன (Photo by T. Pratheeban)

வெகுஜன எதிர்ப்பின் உடனடி நோக்கம் நினைவுத்தூபியை இடித்த இராணுவத்தின் ஆத்திரமூட்டலாக இருந்தாலும், அது நீண்டகால இராணுவ அடக்குமுறை, போர்க்குற்றங்கள் மற்றும் தொற்றுநோயினால் தீவிரமடைந்துள்ள நெருக்கடியை சுமத்தி, வேலைகள், ஊதியங்கள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான கொடூரமான தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் இது பொங்கி எழும் கோபத்தையே வெளிப்படுத்தி இருந்தது.

வெள்ளிக்கிழமை இரவு, துணைவேந்தர் சிறிசற்குணராசா படையினரையும் மற்றும் பொலிசாரையும் அழைத்து நினைவுத்தூபியை அழித்துக்கொண்டிருப்பதை கேள்விபட்ட உடனேயே அங்கு வந்த மாணவர்கள் மற்றும் பிரதேசவாசிகளை, பல்கலைக்ழக வளாகத்துக்கு நுழைய விடாமல் தடுத்து, அங்கு பிரதான நுழைவாயிலில் காவலில் இருந்த பொலிசும் விசேட அதிரடிப் படையும், எதிர்ப்பில் ஈடுபட்ட இரண்டு மாணவர்களைக் கைது செய்தனர். பின்னர், நினைவுத்தூபி அகற்றப்படுவதற்கு எதிராக பல மாணவர்கள் தொடங்கிய உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக அப்பகுதியின் மாணவர்களும் பிரதேசவாசிகளும் போராட்டம் நடத்தினர்.

ஜனவரி 8 அன்று முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டபோது பல்கலைக்கழக வளாகத்தில் காவலில் நிற்கும் படையினர். (Photo: Colombo Telegraph)

உள்நாட்டுப் போர் முடிவடைந்த 2009 மே மாதம் முல்லைத்தீவின் முள்ளிவாய்க்காலில் அரசாங்கப் படைகள் நடத்திய இரத்தக்களரி தாக்குதலில் கொல்லப்பட்ட பத்தாயிரக்கணக்கான மக்களை நினைவுகூரும் வகையில், 2019 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் இந்த நினைவுத்தூபி கட்டப்பட்டது. அதை நீக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ அரசாங்கம் விடுத்த உத்தரவை அலட்சியம் செய்ததால் முன்னாள் துணைவேந்தர் ஆர். விக்னேஸ்வரன் 2020 ஆகஸ்டில் பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டார்.

வளர்ந்து வரும் வெகுஜன எதிர்ப்பின் மத்தியில், அரசாங்கத்தின் சூழ்ச்சியாக, தூபியை மீண்டும் கட்டுவதாக மாணவர்களுக்கு வாக்குறுதியளித்த துணைவேந்தர் எஸ்.சிறிசற்குணராஜா அதற்கான அடிக்கலையும் நாட்டினார். அந்த 'வாக்குறுதியின்' அடிப்படையில் மாணவர்களின் உண்ணா விரதத்தை நிறுத்துவதற்கு அவர் செயல்பட்டார்.

இந்த சூழ்ச்சியை தூக்கிப்பிடித்துக்கொண்டு அரசாங்கத்தின் தீவிர அடக்குமுறை கொள்கை தளர்த்தப்பட்டுள்ளது என்று நினைப்பது ஒரு பெரும் மாயை ஆகும். இந்த ஆத்திரமூட்டலின் நோக்கம், வகுப்புவாத பதட்டங்களை அதிகரிப்பதும் “இராஜபக்ஷ அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் சீற்றம் பெருகிவருகின்ற சூழ்நிலையில், தொழிலாள வர்க்கத்தை இன ரீதியாக பிளவுபடுத்துவதாகும்,” என உலக சோசலிச வலைத் தளத்தில் (WSWS) வெளியிட்ட ஒரு கட்டுரையில் நாங்கள் விளக்கியுள்ளோம்.

“நினைவுத்தூபியை அடிப்படையாகக் கொண்டு கொண்டாட்டங்கள் நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது” என்றும், “யாழ்ப்பாணத்தின் கோப்பாயில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு ஹர்த்தால்கள் மற்றும் உண்ணாவிரதம் நடத்தும் அரசியல் குழுக்களைத் தேடும் நடவடிக்கையில் ஏற்கனவே கோப்பாயில் அரச புலனாய்வுப் பிரிவு இறக்கிவிடப்பட்டிருப்பதாக” திவயின சிங்களப் பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

"இது ஒரு சட்டவிரோத கட்டுமானம். இது எப்படியாவது அகற்றப்பட வேண்டும். சின்ன சின்ன நெருடல் இருக்கின்றது. அதை நாங்கள் கையாளுவோம், அவர்கள் அப்படி (உள்ளே) வருவது சட்டவிரோதமானது. அவர்கள் வெளியேறாவிட்டால் கையாளுவோம்," என நினைவுத்தூபி அகற்றப்பட்ட ஜனவரி 08 அன்று துணைவேந்தர் விடுத்த அச்சுறுத்தல் மேலும் தீவிரமாகி வருகிறது, என்பதையே திவயின செய்தி அர்த்தப்படுத்துகிறது.

நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ், “யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நினைவுத்தூபி சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ளதால்” அதை அகற்றியதாக கூறினார். “நினைவுத் தூபி சட்டவிரோத கட்டுமானம் என்பதால் இதைப் பற்றி வாதிடுவதில் அர்த்தமில்லை” என்றும் அவர் எச்சரித்தார்.

தமிழ் தேசிய கூட்டணி உட்பட பல அரசியல் அமைப்புகள் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விட்டிருந்தன. மற்றொரு முதலாளித்துவ கட்சியான முஸ்லீம் காங்கிரசும் இதற்கு ஆதரவை வெளிப்படுத்தியிருந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் முன்னணி (டி.பி.எஃப்.) மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி (டி.என்.பி.எஃப்) உடன் உறவு வைத்துள்ள அமைப்பாகும்.

இந்த கட்சிகள், தமிழ் தொழிலாளர் ஒடுக்கப்பட்ட மக்களின் எந்தவொரு அவசியத்தையும் ஆர்வத்தையும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. அதிருப்திக்கு உள்ளாகியுள்ள அவர்கள், பிரச்சினையை அடிப்படையாக கொண்டு தமிழ் தேசியவாதத்தைத் தூண்டிவிட்டு, மக்களை தங்கள் கட்சிகளின் கீழ் இறுக்கி வைத்திருப்பதற்கு அரசாங்கத்தின் இந்த ஆத்திரமூட்டலை உடனடியாக பற்றிக்கொண்டன.

கடந்த பத்து ஆண்டுகளில், போர்க்குற்றங்கள் மற்றும் போரினால் ஏற்பட்ட சமூக பேரழிவுகளுக்கு எதிரான தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் போராட்டங்களை அடக்குவதில் இந்தக் கட்சிகள் கொழும்பு அரசாங்கத்திற்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் ஆதரவளித்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், புளோட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்தன், உடனடியாக துணைவேந்தர் சிறிசற்குணராஜாவைச் சந்தித்து, வெகுஜன எதிர்ப்பு வெடிக்காமல் எவ்வாறு தணிப்பது என்பது குறித்து கலந்துரையாடினார். நினைவுச்சின்னத்தை மீண்டும் கட்ட துணைவேந்தர் முடிவு செய்துள்ளதாக கலந்துரையாடலின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இந்த சந்திப்பு ஒரு கணக்கிடப்பட்ட கொடுக்கல் வாங்கலாகும். வெகுஜன எதிர்ப்பு அரசாங்கத்துடனும் இராணுவத்துடனும் மோதலுக்குச் செல்லவிடாமல் கட்டுப்படுத்த இந்த முதலாளித்துவக் கட்சிகள் முடிவு செய்துள்ளன என்பதே சித்தார்த்தனின் பேச்சுவார்த்தைகளின் அர்த்தமாகும்.

கடந்த சில மாதங்களாக, ஜனாதிபதி இராஜபக்ஷவுக்கு வேண்டுகோள்களை எழுதியும், கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக அரசாங்கத்தின் நெருக்கடி தீவிரமடைந்து வந்த போது, பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவின் அனைத்து கட்சி மாநாடுகளில் கலந்தும் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள், தங்களை அரசாங்கத்துடன் இணைத்துக் கொள்ள முயன்றனர். தொற்றுநோய்களுக்கு மத்தியில் வளர்ச்சியடைந்து வரும் நெருக்கடிக்கு மத்தியில் தலைதூக்கும் தொழிலாளர்களது போராட்டங்களால் முதலாளித்துவ வர்க்க ஆட்சி நெருக்கடிக்குள் போவதை தடுப்பதே தமிழ் கட்சிகளின் நோக்கமாகும்.

அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் இந்தியாவை ஒரு மூலோபாய நட்பு நாடாகப் பயன்படுத்திக்கொண்டு முன்னெடுக்கும் போர் தயாரிப்புகளை ஆதரிக்கும் தமிழ் தேசியவாத அமைப்புகள், அவற்றின் ஆதரவுடன் கொழும்பு ஆட்சியுடன் ஒரு சமரசத்தை எட்டுவதன் மூலம் தங்களது வரப்பிரசாதங்களை உறுதிப்படுத்திக்கொள்ளும் ஒரு பிற்போக்கு முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

அதிருப்திக்கு உள்ளாகியுள்ள தமிழ் நாட்டு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி உடனடியாக ட்விட்டர் செய்தியொன்றை வெளியிட்டார்: இலங்கைப் போரின் இறுதிக் கட்டங்களில் முள்ளிவாய்க்காலில் இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டதை பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது மக்கள் நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மைதானத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி ஒரே இரவில் இடிக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது. நினைவுத்தூபி அகற்றப்படுவதை “கடுமையாக கண்டிக்கிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் வலதுசாரி மத்திய அரசாங்கத்தின் பிரதமர் நரேந்திர மோடியின் தாக்குதல்களுக்கு ஆதரவளிக்கும் அதே வேளையில், தமிழகத் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளை அடக்குவதில் ஈடுபட்டுள்ள பழனிசாமியின் எதிர்ப்பு அப்பட்டமான பொய்யாகும். இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மீது அனுதாபம் காட்டுவதாக நடித்து, தமிழ் இனவாதத்தை தூண்டுவதற்கே அவர் முயற்சிக்கிறார்.

இலங்கையில் வடக்கு கிழக்கில் இரத்தக்களரி இனவாத போர் நடந்து வந்த நாட்களில், தமிழ்நாட்டு அரசாங்கமும் தமிழ் இனவாத கட்சிகளும் தமிழ் தேசியவாதத்தைத் தூண்டிவிட்டு, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளிடையே போருக்கு எதிராகவும் சமூக உரிமைகள் நசுக்கப்படுவதற்கு எதிராகவும் வளர்ந்த எதிர்ப்பு போராட்டங்களை திசைதிருப்பிவிடும் படு பிற்போக்கு வகிபாகத்தில் ஈடுபட்டன.

இந்த கட்சிகளின் திவாலான மற்றும் பிற்போக்கு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இராஜபக்ஷ அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட எதிர் புரட்சிகர தாக்குதல்களுக்கு எதிராகவும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களின் ஐக்கியப்பட்ட போராட்டத்தை ஒழுங்கு செய்யவதன் பக்கம் தமிழ் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் திரும்ப வேண்டும்.

யுத்தத்தின் போது மட்டுமல்ல, இப்போது வரை, போலி சிவில் ஆட்சி என்ற போர்வையில் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆட்சியே பராமரிக்கப்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை பல்கலைக்கழகத்தில் இராணுவத்தின் தலையீடு இதையே காட்டுகிறது. இந்த இரண்டு மாகாணங்களிலுமான இராணுவ ஆட்சியானது, நாடு முழுவதும் விரிவாக்கி அரசாங்கம் அபிவிருத்தி செய்து கொண்டிருக்கும் இராணுவ அடிப்படையிலான ஜனாதிபதி சர்வாதிகாரத்தின் ஒரு உள்ளார்ந்த பகுதியாகும்.

கோவிட் -19 தொற்றுநோயால் அதிகரித்துள்ள நெருக்கடியின் சுமையை, இப்போதே போராட்டத்தில் இறங்கிவரும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது கொடூரமாக சுமத்த தயாராகி வருகின்ற இராஜபக்ஷ ஆட்சி, தமிழர்-விரோத மற்றும் முஸ்லீம்-விரோதத்தை தூண்டிவிட்டு தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தி பலவீனப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றது. தமிழ் கட்சிகள் தேசியவாதத்தைத் தூண்டுவிட்டு இதற்கு சமாந்தரமான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளன. முஸ்லீம் காங்கிரஸ் உட்பட முஸ்லிம் அமைப்புகளும் இதிலிருந்து வேறுபட்டவை அல்ல.

வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து ஆயுதப்படைகளை அகற்றுவதற்கு, அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதற்கு மற்றும் பயங்கரவாத தடைச் சட்டம் உள்ளிட்ட அனைத்து அடக்குமுறை மற்றும் இன பாகுபாடு சட்டங்களை ரத்து செய்வதற்காகப் போராடுவதற்கு சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்கள் மத்தியில் ஒரு அனைத்துலகவாத கூட்டணி உருவாக்கப்பட வேண்டும்.

இந்த ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு, தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசிற்காகப் போராடுவதே சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடுவதற்கான ஒரே வழியாகும்.

இந்த வேலைத்திட்டத்திற்காகப் போராடும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்துகொள்ளுங்கள்.