பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி வாஷிங்டனில் ட்ரம்பின் பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு சதியை மறுக்கிறது

Alex Lantier
14 January 2021

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பில்லியனர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் முடுக்கி விடப்பட்டு வாஷிங்டனில் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்த ஒரு பாசிசவாத கும்பலின் ஜனவரி 6 காட்சிகளால் உலகெங்கிலும் மில்லியன் கணக்கானவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி திகைப்படைந்துள்ளனர். பிரான்சில், உறைந்து போன செய்தி தொகுப்பாசிரியர்கள் இந்த சம்பவங்கள் வரலாற்றுரீதியில் முன்நிகழ்ந்திராததை ஒப்புக் கொள்கிறார்கள்.

இந்த முயற்சிக்கப்பட்ட பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு சதி மீது முழு அளவில், பகிரங்கமாக, நேரடி ஒளிபரப்புடன் ஒரு விசாரணை நடத்த அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியில் அணித்திரட்டி எச்சரிக்கையூட்டுவதே முக்கிய பணியாகும். அதற்கு மாறாக, பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA) போன்ற செல்வசெழிப்பான நடுத்தர வர்க்கங்களின் போலி-இடது கட்சிகள், ஆட்சிக்கவிழ்ப்புச் சதி ஒன்று முயற்சிக்கப்பட்டதை மறுத்தும், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பைடெனின் ஜனநாயகக் கட்சியை ஊக்குவித்தும் தொழிலாள வர்க்கத்தை உறக்கத்திலேயே வைத்திருக்க முயல்வதன் மூலமாக எதிர்வினையாற்றி வருகின்றன.

New Anticapitalist Party (NPA) flag. (Credit: Wikimedia Commons)

புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சியின் அமெரிக்க துணை அமைப்பான Left Voice இன் ஒரு கட்டுரையை மேலோட்டமாக மொழிபெயர்த்து, “நாடாளுமன்ற கட்டிடத்தில் புயலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலிவும்" என்ற தலைப்பில் அதன் Permanent Revolution வலைத் தளத்தில் பிரசுரித்திருந்தது. ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சி நடத்தப்பட்டதை அது மறுத்ததுடன், ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை எச்சரித்தவர்களை "பூர்சுவாக்கள்" என்று தாக்கியும் பின்வரும் எழுதியது:

முதலாளித்துவ பத்திரிகை உறுப்பினர்கள் ஆதரவு தேடுவதைப் போல நாடாளுமன்ற கட்டிடம் மீதான தாக்குதல் ஒரு கிளர்ச்சியோ அல்லது ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியோ இல்லை, மாறாக நவம்பர் 3 க்குப் பின்னர் தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல், உண்மையில் ஆட்சி மாற்றத்தின் போது ஓர் அதி வலது துணிவு பெற்றிருப்பதை அது எடுத்துக் காட்டுகிறது. இது, இந்த கோடையில் நடந்த கறுப்பினத்தவரின் உயிரும் மதிப்புடையதே (Black Lives Matter) போராட்டங்களுக்கு எதிராக, கோவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு எதிராக, மற்றும் தேர்தலின் போது கடும் போட்டி நிலவிய முக்கிய மாநிலங்களில் மறுவாக்கு எண்ணிக்கைக்காக அணித்திரட்டப்பட்ட அதே அதி-வலதாகும்.

புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சியின் வாராந்தர பத்திரிகை The Anti-capitalist அதன் வாசகர்களுக்குப் பின்வருமாறு மறுஉத்தரவாதமளித்தது: “அதி வலது மெதுவாக வளர்ந்து வருகிறது. அமெரிக்காவில் அதி வலது இன்னமும் ஓரளவுதான் உள்ளது.” ட்ரம்பின் அதி வலது கலகத்தை யார் ஒழுங்கமைத்தார்கள் அல்லது யார் தலைமை வகித்தார்கள் என்பது தனக்குத் தெரியாது என்று கூறியது: “எதிர்-ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கமைப்பதற்கு முன்னரே கலகக்காரர்கள் வெளியேற்றப்பட்டிருந்தார்கள். பலர் Proud Boys அமைப்பு போன்ற அதி வலது குழுக்களின் உறுப்பினர்கள் என்றாலும், எந்த குழுவும் அந்த நடவடிக்கைகளுக்குத் தலைமை ஏற்றிருந்ததாக தெரியவில்லை. ஊடகங்கள் கலகக்காரர்களை 'கிளர்ச்சியாளர்கள்' என்று அழைத்தன.”

நாடாளுமன்ற கட்டிட பொலிஸ், கதவுகளைத் திறந்துவிட்டு கட்டிடத்தை நொருக்க அதி வலது குண்டர்களுக்கு சைகை காட்டும் காணொளிகள் வெளியாகியும் கூட, புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி பாசிசவாத அச்சுறுத்தல் குறைவாக இருப்பதாக அதன் வாசகர்களுக்கு மறுஉத்தரவாதம் அளித்தது. வோல் ஸ்ட்ரீட், பென்டகன் மற்றும் அமெரிக்க பொலிஸ் நம்பத்தகுந்தளவில் ஜனநாயகத்திற்கு ஆதரவாக இருப்பதாக அது வெட்கமின்றி வலியுறுத்தியது:

ஜனநாயக அமைப்புமுறை கடுமையான அழுத்தத்தில் இருந்தாலும், அது நடைமுறையில் இருக்கிறது. தேர்தல் அமைப்புமுறை மற்றும் நீதித்துறையைத் துடைத்தழிப்பதற்கான ட்ரம்பின் முயற்சிகளை முதலாளித்துவ வர்க்கத்தின் எந்த பிரிவோ அல்லது அரசு எந்திரமோ ஆதரிக்கவில்லை. நவம்பர் 3 தேர்தல் முடிவுகள் மீது எந்தவொரு கேள்வியையும் எதிர்த்து 100 க்கும் அதிகமான தலைமை செயலதிகாரிகள் ஓர் ஆவணத்தில் கையெழுத்திட்டனர், மேலும் ஆயுதப் படைகள் தலையிடுவதற்கான அழைப்புகளை உறுதியாக நிராகரித்தது. அரசின் கட்டுப்பாடு மாநிலத்தின் நிறைவேற்று சாதனங்கள் மீது முழு கட்டுப்பாட்டை வழங்காது என்ற உண்மையை ட்ரம்ப் முகங்கொடுக்க வேண்டியிருந்தது.

அமெரிக்க முதலாளித்துவ வர்க்கம் பாசிசவாத ஆட்சியை நோக்கி அதிகரித்தளவில் திரும்புவதை மறுக்கும் இத்தகைய வெட்கக்கேடான முயற்சிகள் பொய்களின் அடிப்படையில் உள்ளன. அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி ஜனாதிபதி ட்ரம்பால் ஒழுங்கமைக்கப்பட்டு தலைமை கொடுக்கப்பட்டது, அந்த கும்பல் நாடாளுமன்ற கட்டிட பொலிஸைக் கடந்து அக்கட்டிடத்தை ஆக்கிரப்பதற்கு முன்னரே அவர் அந்த கும்பலுடன் பேசியிருந்தார். ட்ரம்ப் இந்த மூலோபாயத்தை, ஜூன் மாதம் மினெயாபொலிஸில் ஜோர்ஜ் ஃபுளோய்ட்டை பொலிஸ் படுகொலை செய்ததற்கு எதிரான பாரிய சர்வதேச போராட்டங்களின் போது முயற்சிக்கப்பட்ட ஒரு ஆட்சி சதியைத் தொடங்கியதில் இருந்தே பின்பற்றிக் கொண்டிருக்கிறார்—அப்போது அதி வலது போராளிகள் குழுக்களுக்கு முறையீடு செய்த அவர், அமெரிக்காவில் முதல்முதலாக முயற்சிக்கப்பட்ட ஒரு ஆட்சி சதியில் போராட்டக்காரர்களுக்கு எதிராக சட்டவிரோதமாக அமெரிக்க இராணுவத்தை நிலைநிறுத்த முயன்றார்.

தேர்தலின் சட்டபூர்வத்தன்மையை மறுப்பதற்காக ஜனநாயகக் கட்சிக்கான பெருவாரியான தபால் வாக்குகளை அவர் மோசடியானது என்று பொய்யாக அறிவித்தபோது, நூற்றுக் கணக்கான குடியரசுக் கட்சி சட்ட வல்லுனர்களின் பின்புல ஆதரவு ட்ரம்புக்கு இருந்தது. முக்கிய மாநிலங்களில் தேர்தல் அதிகாரிகளை மிரட்டவும் அச்சுறுத்தவும் அவரது கூட்டாளிகள் Proud Boys போன்ற அதிவலது குழுக்களுடன் மிக நெருக்கமாக செயலாற்றினார்கள். மிச்சிகன் ஆளுநர் கிரெட்சன் விட்மரைக் கடத்தி கொலை செய்யும் திட்டத்தில் லான்சிங்கில் மிச்சிகன் மாநில தலைமைச் செயலகத்தை அவர்கள் தகர்க்க முயற்சிப்பதற்கு முன்னர் அதிவலது செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

நவம்பர் 2020 தேர்தல் முடிவுகளை, ட்ரம்ப் தொடர்ந்து மறுத்து வரும் அதேவேளையில், தேர்தல் முடிவுகளுக்கு உத்தியோகபூர்வமாக சான்றளிக்க காங்கிரஸ் சபை ஒன்று கூடும்போது, ஜனவரி 6 இல் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே போராடுவதற்கு அவரது ஆதரவாளர்களை அணிதிரட்டப்போவதாக அறிவித்திருந்தார். அக்கட்டிடத்தின் சட்ட வல்லுனர்களில் இருந்து சிலரை அவர்களுடன் பிணைக்கைதிகளாக கூட்டிச் செல்வதற்காக, நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்த அதி வலது போராட்டக்காரர்கள் பலரிடம் பிளாஸ்டிக் பிணைப்பான்கள் காணப்பட்டன. குறிப்பிடத்தக்க வகையில், ட்ரம்ப்பின் குண்டர்களிடம் இருந்து நாடாளுமன்றக் கட்டிடத்தை மீட்க தேசிய பாதுகாப்புப் படைகளை அனுப்புமாறு செனட்டர்கள் மற்றும் பிரதிநிதிகளிடம் இருந்து வந்த மன்றாடிய முறையீடுகளை பென்டகன் அதிகாரிகள் ஆரம்பத்தில் மறுத்தனர்.

இதற்குப் பின்னரும், ஒரு பாசிசவாத கொள்கைக்கு அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்திற்குள் அல்லது அரசு எந்திரத்திற்குள் ட்ரம்புக்கு எந்த ஆதரவும் இல்லை என்று NPA வாதிடுவது நகைப்புகுரியது மட்டுமல்ல, குற்றத்தின் மீது சுயதிருப்தி கொள்வதாகவும் உள்ளது.

வோல் ஸ்ட்ரீட்டிலும், அமெரிக்க இராணுவத்திலும் உளவுத்துறையிலும் சக்திவாய்ந்த சக்திகள் ஒரு பாசிச சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்கலாமா வேண்டாமா என்று விவாதித்து வருவதால், அமெரிக்க அரசியலமைப்பின் பல மீறல்கள் இருந்தபோதிலும், ட்ரம்ப் தனது பதவியை வைத்திருக்க முடிந்தது. அவரது படுகொலைக்கு நிகரான கோவிட்-19 சம்பந்தமாக "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கையை ஆளும் வர்க்கம் ஒருமனதாக ஆதரிக்கிறது. இதன் விளைவாக தான், அதி வலது குண்டர்கள் நாடாளுமன்ற கட்டிடத்தை ஆக்கிரமித்த போதும், ஜனவரி 6 இல் வோல் ஸ்ட்ரீட் பங்குச் சந்தை குறியீடுகள் வசதியான உயர்வைக் கண்டது.

ட்ரம்பின் முயற்சிக்கப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சதி மீது ஒரு பொய்யான, சுயதிருப்தி கொள்ளும் நிலைப்பாட்டை முன்னெடுத்துக் கொண்டே, NPA ஒரு "முதலாளித்துவ-எதிர்ப்பு" அமைப்பாகவும், ட்ரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சி இரண்டு தரப்புக்கும் விமர்சனபூர்வமாக இருப்பதாக காட்டிக்கொண்டே அதன் பிற்போக்குத்தனமான கொள்கையை மூடிமறைக்க முயற்கிறது. Permanent Revolution தொடர்ந்து குறிப்பிட்டது:

"இடதுகள் விரைவாக முடிவுகளை எடுக்க வேண்டும் ... மேலும் முதலாளித்துவத்தை ஒட்டுமொத்தமாக சவால் செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு வேலைத்திட்டத்தைக் கொண்டு முதலாளித்துவ சிக்கன நடவடிக்கைகள் மற்றும் இனவாத ஒடுக்குமுறைக்கு எதிரான எல்லா எதிர்ப்பையும் ஆதரிக்க வேண்டியுள்ளது. ஜனநாயகக் கட்சிக்கு அடிபணிவது அமெரிக்க இடதின் பெரும்பகுதியைப் பாதித்துள்ள ஒரு புற்றுநோய்: அங்கே ஜனநாயகக் கட்சியிலிருந்து முற்றிலும் சுயாதீனமாக தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் ஓர் அமைப்பை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது.

ஒரு பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு சதியை மூடிமறைக்கவும் மற்றும் குடியரசுக் கட்சியைப் பாதுகாப்பதற்குமான பைடெனின் நகர்வுகள், ஜனநாயகக் கட்சியின் திவால்நிலையை அம்பலப்படுத்துவதுடன், அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியைக் குறைத்துக் காட்டி தொழிலாளர்களை மற்றும் இளைஞர்களை ஜனநாயகக் கட்சிக்கு அடிபணிய செய்ய முயன்று வரும் அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்ட்டுகள் (DSA) போன்ற நடுத்தர வர்க்க குழுக்களின் திவால்நிலையையும் அம்பலப்படுத்துகிறது. தேசிய தொலைக்காட்சியில் தோன்றுமாறு ட்ரம்புக்கு முறையிட்டும், அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியைத் தொடங்குவதற்கு மத்தியில் இருந்த அவரிடம் அதைக் கைவிடுமாறும் முறையிட்டதன் மூலமாக பைடென் அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு எதிர்வினையாற்றினார். செனட்டர் மிட்ச் மெக்கொன்னல் போன்ற ட்ரம்பின் சக-சதிகாரர்களையும் பாராட்டிய அவர், அமெரிக்காவுக்கு "வலுவான" குடியரசுக் கட்சி தேவைப்படுகிறது என்று வாதிட்டார்.

எவ்வாறிருப்பினும், ஜனநாயகக் கட்சியினர் உடனான கூட்டணியில் செயல்பட்டு கொண்டே அவர்கள் மீது ஒருசில விமர்சனங்களைப் பேசும், NPA போன்ற குட்டி-முதலாளித்துவக் கட்சிகளையும் இது அம்பலப்படுத்துகிறது. சொல்லப் போனால், Permanent Revolution, அதன் கட்டுரையில், ஜனநாயகக் கட்சியின் ஒரு "முற்போக்கான" கன்னை பெயரிட்டுக் குறிப்பிட முடியாத எதிர்கால நெருக்கடிகளுக்கு விடையிறுப்பாக இடதுக்குத் திரும்பும் என்று வலியுறுத்தி, இந்த சமயத்தில், அதன் புகழ்பாட திரும்பியது. அது எழுதியது:

… ஜனநாயகக் கட்சி, நான்சி பெலோசி மற்றும் சக் சூமர் தலைமையிலான ஸ்தாபக அணிக்கும் மற்றும் முற்போக்கு பிரிவு ஆகியவற்றுக்கு இடையில் தனது சொந்த உள் நெருக்கடியை எதிர்கொள்கிறது (அலெக்ஸாண்ட்ரியா ஒக்காசியோ-கோர்ட்டெஸ், இல்ஹன் ஓமர், அயன்னா பிரெஸ்லெ மற்றும் ரஷிதா தலீப் போன்றவர்கள் தலைமையிலான மிகவும் இடதுசாரியாக கருதப்படும் சட்டவல்லுனர்கள்) மற்றும் ஜனநாயகக் கட்சியின் தலைமையுடன் அதிகரித்துவரும் அதிருப்திக்கு அரசியல் வெளிப்பாடாக உள்ள பேர்ணி சாண்டர்ஸ் ஆகியோர் இடதுபுறமாகக் கருதப்படுகிறார்கள். இந்த கிளர்ச்சி அமெரிக்காவில் வளர்ந்து வரும் இடது இயக்கத்தைக் கட்டுப்படுத்தி, ஜனநாயகக் கட்சிக்குப் புத்துயிரூட்ட முடிந்துள்ளது என்றாலும், வரவிருக்கும் காலத்தில் ஜனநாயகக் கட்சியினர் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த நிர்பந்திக்கப்படுவதால், இத்தகைய பதட்டங்கள் ஒரு கொதிநிலையை எட்டும்.

புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி, சாண்டர்ஸையும், DSA உறுப்பினர் ஒக்காசியோ-கோர்ட்டெஸ், மற்றும் ஜனநாயகக் கட்சி கூட்டாளிகளைப் புகழ்கிறது ஏனென்றால் —ஜனநாயகக் கட்சியிடமிருந்து "சுயாதீனமாக" இருப்பதான அதன் மோசடியான அழைப்புகளுக்கு மத்தியில்— இந்த பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு சதியை பைடென் மூடிமறைப்பதுடன் தங்களை அணிசேர்த்துக் கொண்டுள்ள இதே பிரமுகர்களுடன் தான் அது கூடி செயல்பட்டு வருகிறது. ஜனநாயகக் கட்சியின் இந்த அணியுடன் தொடர்புபட்ட அமெரிக்க பத்திரிகை, ஜாக்கோபினில், NPA செய்தி தொடர்பாளர் ஒலிவியே பெசன்ஸெநோ அடிக்கடி பேட்டிகளையும் கட்டுரைகளையும் பிரசுரிக்கிறார். இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு ஆளும் வர்க்கம் மற்றும் அரசு எந்திரத்தின் பரந்த ஆதரவு குறித்து சாண்டர்ஸூம் ஒக்காசியோ-கோர்டெஸூம் காது கேளாதது போல மவுனமாக உள்ளனர்.

இது ஜனவரி 6 ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து மூடிமறைப்பதில் NPA யும் உடந்தையாக உள்ளது. உண்மையில், ஜனநாயகக் கட்சியின் எல்லா அணிகளும் —பைடெனும் சரி, அல்லது NPA ஆல் முத்திரை குத்தப்பட்ட "முற்போக்கு" சக்திகளைச் சுற்றி இருப்பவர்களும் சரி— ட்ரம்பின் அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியைக் குறைத்துக் காட்ட முயன்றதன் மூலமாகவே அதற்கு எதிர்வினையாற்றினார்கள். NPA “முற்போக்கு" என்று குறிப்பிடும் ஜனநாயகக் கட்சி கன்னை, ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சிக்கான பைடெனின் செயலற்ற முறையீடுகளைப் போலவே அதேபோன்ற சுயதிருப்தி கொண்ட முட்டாள்தனமான ஒரு கொள்கைக்கு அழைப்பு விடுத்தது.

இதே போல ஜாக்கோபின் பதிப்பாசிரியர் பாஸ்கர் சங்காராவும், ட்ரம்ப் ஒரு பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு முயன்றதை மறுத்ததுடன், அப்பிரச்சினையைக் குறைத்துக் காட்ட முயன்றார். அவர் ட்வீட் செய்தார்: “'இதை ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு சதி' என்று கூறுவதின் நன்மை என்ன? மோசமான விடயங்களுக்கு மிகவும் தீவிர முத்திரைகளைக் குத்துவதன் பயன் என்னவென்று எனக்கு புரியவில்லை.”

“இதுவொரு ஆட்சிக்கவிழ்ப்பு சதி" என்பதே உண்மை, இதுவே அவ்வாறு குறிப்பிடுவதில் உள்ள "நன்மை" ஆக உள்ளது, மேலும் அது தற்போதைய தெளிவான பாசிசவாத அபாயம் குறித்து அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தை எச்சரிக்கையூட்டுகிறது. அதுவொரு "அதீத முத்திரை” அல்ல, மாறாக அதுவொரு அரசியல் குணாம்சப்படுத்தல், அது நிதியியல் செல்வந்த தட்டுக்களது எதேச்சதிகார ஆட்சிக்கான தயாரிப்பின் முன்னேறிய நிலைக்கு எதிராக, ஒரு சமரசமற்ற போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டும் இன்றைய நிலைமையின் இன்றியமையா பணியைச் சுட்டிக்காட்டுகிறது.

வாஷிங்டன் ஆட்சிக்கவிழ்ப்பு சதி அமெரிக்காவுக்கு மட்டுமல்ல மாறாக சர்வதேச அளவிலும் குறிப்பாக ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கும் ஓர் அவசர எச்சரிக்கையாகும். 1991 இல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிச ஆட்சியால் கலைக்கப்பட்டதற்குப் பிந்தைய 30 ஆண்டுகள், ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் வர்க்கங்களால் பாசிசவாதம் சட்டப்பூர்வமாக்கப்படுவதில் தீவிரப்பாட்டைக் கண்டுள்ளன. இப்போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் தசாப்த கால சிக்கன நடவடிக்கைகள் மீதும் மற்றும் கோவிட்-19 மீது ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய படுபாதக "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கை மீதும் தொழிலாள வர்க்க கோபம் அதிகரித்து வருகின்ற நிலையில், பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு சதிகள் மற்றும் பாரிய படுகொலைகளுக்கான திட்டங்கள் ஐரோப்பா எங்கிலும் தயாரிப்பில் முன்னேறிய நிலையில் உள்ளன என்பது பரவலாக ஒப்புக் கொள்ளப்படுகிறது.

ஜேர்மனியில், இங்கே வலதுசாரி தீவிரவாத பேராசிரியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி ஹிட்லரை "வக்கிரமானவர் இல்லை" என்று பகிரங்கமாகவே மறுவாழ்வளித்துள்ளார், அதி வலது தற்கொலைப்படைகளைக் கொண்டு கொலை செய்ய வேண்டிய அரசியல்வாதிகளின் பட்டியலை தயாரித்துள்ளதை நவ-நாஜி வலையமைப்புகள் ஒப்புக் கொள்கின்றன. பழமைவாத அரசியல்வாதி வால்டர் லூப்க்க இன் அதி வலது படுகொலை ஏற்கனவே 2019 இல் நடந்துவிட்டது. பிரான்சில், ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் "மஞ்சள் சீருடை" போராட்டங்களுக்கு மத்தியில் பாசிசவாத சர்வாதிகாரி பிலிப் பெத்தானை "மாவீரர்" என்று புகழ்ந்துரைத்தார், தளபதி பியர் டு வில்லியே இப்போது அதி வலது பத்திரிகையில் இராணுவ ஆட்சிக்காக தூபமிட்டு வருகிறார்.

அனேகமாக மிகவும் அதிகப்படியான விசயம் ஸ்பெயினில் உள்ளது, இங்கே "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களின் வெடிப்பானது, ஒரு பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு ஆயுதப்படைகளின் பரந்த திட்டமிடலுக்கு இட்டுச் சென்றது. ஸ்பானிய உள்நாட்டு போரில் தொடங்கிய தளபதி பிரான்சிஸ்கோ பிராங்கோவின் 1936 ஆட்சிக்கவிழ்ப்பு சதியைப் புகழ்ந்துரைத்து, பிராங்கோயிச அதிகாரிகளின் குழுக்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக அரசர் தங்களை ஆதரிக்க வேண்டுமென அவருக்கு கோரிக்கை விடுத்து கடிதங்கள் எழுத தொடங்கின. பத்திரிகைகளுக்கு கசியவிடப்பட்ட வாட்ஸ்-அப் சேதிகளில், இந்த அதிகாரிகள் பிராங்கோவின் ஆட்சிக்கவிழ்ப்பு சதியைப் புகழ்ந்துரைத்ததுடன், ஸ்பெயினில் இடதுசாரி வாக்காளர்கள் என்று அவர்கள் மதிப்பிட்டுள்ள "26 மில்லியன் மக்களை" படுகொலை செய்ய அழைப்புவிடுத்தனர்.

முதலாளித்துவக் கட்சிகளில் இருந்து அரசியல்ரீதியில் சுயாதீனமாகவும் ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையிலும் தொழிலாள வர்க்கத்தை சர்வதேச அளவில் அணித்திரட்டுவதற்கான போராட்டம் இல்லாமல் பாசிசவாதத்தை எதிர்ப்பது சாத்தியமில்லை.

இதற்கு NPA போன்ற செல்வ செழிப்பான நடுத்தர வர்க்கத்தின் போலி-இடது கட்சிகளின் ஒட்டுமொத்த சர்வதேச அடுக்குடனும் நனவுபூர்வமாக, கோட்பாட்டுரீதியாக முறித்துக் கொள்வது அவசியமாகும். இத்தகைய அமைப்புகளுக்கு அரசியல் செல்வாக்கும் அதிகாரமும் வழங்கியுள்ள ஸ்ராலினிச கட்சிகள் அல்லது ஏகாதிபத்தியம் இவற்றுடனான கூட்டணியில் தொழிலாள வர்க்கத்தை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியவாறு, தசாப்தங்களாக, இவை தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை முடக்க முயன்றுள்ளன. 1968 மாணவர் போராட்டத்தின் முன்னாள் தலைவர் அலன் கிறிவினும் மற்றும் அவரின் புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகமும் (LCR) 2009 இல் NPA ஐ ஸ்தாபித்த போது, கிறிவின் ஓர் அரசியல் செயல்திட்டத்தை முன்மொழிந்தார், அது அறிவித்தது:

புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி ட்ரொட்ஸ்கிசத்துடனான பிரத்யேக தொடர்பு மீது உரிமை கோரவில்லை, மாறாக கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக எல்லா வழிகளிலும் இந்த அமைப்புமுறையை எதிர்த்து வந்துள்ளவர்களுடன் தொடர்ச்சியைப் பேணுகிறது. புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சியானது பன்முகத்தன்மை கொண்ட ஒரு ஜனநாயகக் கட்சியாகும். அதில் சமூக இயக்கத்தின் பல்வேறு கூறுபாடுகளின் தோழர்களும், பூகோளமயமாக்கல்-எதிர்ப்பு இடதின், அரசியல் சுற்றுச் சூழலியலின், [சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஏகாதிபத்திய போரின் ஒரு சமூக ஜனநாயகக் கட்சியான] சோசலிஸ்ட் கட்சி மற்றும் [PS இன் பிரதான கூட்டணி பங்காளியான ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி] PCF இன் தோழர்களும், அராஜகவாத கோட்பாட்டாளர் இயக்கத்தில் இருந்தும், புரட்சிகர இடதில் இருந்தும் தோழர்களின் பங்கெடுப்பைக் [கொண்டிருக்கும்]. தன்னைத்தானே அடைத்துக் கொள்ளாமல், NPA, தன்னை இன்னும் கூடுதலாக திறந்து விடுவதன் மூலமாக ஜெயிப்பதற்கு ஒவ்வொன்றையும் கொண்டுள்ளது.

உலக சோசலிச வலைத் தளம் அப்போதே விவரிக்கையில், ட்ரொட்ஸ்கிசத்துடனான LCR இன் எஞ்சிய எச்சசொச்ச மெல்லிய தொடர்புகளிலிருந்தும் முறித்துக் கொள்வதற்காகவே அது NPA ஐ ஸ்தாபிக்கிறது என்றும், சோசலிஸ்ட் கட்சி, தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் எஞ்சிய பிரிவுகளுடன் சேர்ந்து அது தயாரிப்பு செய்துவரும் வலதை நோக்கிய திருப்பத்திற்கு ட்ரொட்ஸ்கிசத்தை ஒரு தடையாக அது பார்க்கிறது என்றும் விவரித்தது.

இந்த மதிப்பீடு விரைவிலேயே சம்பவங்களால் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. 2011 இல், எகிப்து மற்றும் துனிசியாவில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர மேலெழுச்சிகளுக்கு விடையிறுப்பதில், ஜனநாயகக் கட்சியின் ஒபாமா நிர்வாகம் தலைமையில், அல் கொய்தாவுடன் கூட்டணியில் தொடுக்கப்பட்ட, லிபியா மற்றும் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான நேட்டோ போர்களை NPA “ஜனநாயக புரட்சிகளாக" புகழ்ந்தது. அது கியேவில் ரஷ்ய ஆதரவிலான ஜனாதிபதியைப் பதவியிலிருந்து வெளியேற்றிய மற்றும் அந்நாட்டை உள்நாட்டு போரில் மூழ்கடித்த, நேட்டோ ஆதரவிலான, பாசிசவாத தலைமையிலான 2014 ஆட்சிக்கவிழ்ப்பு சதியையும் ஆதரித்தது.

மேலும், 2014 ஆம் ஆண்டில், அதன் சொந்த அடித்தளத்தை வழிநடத்திய அதே கண்ணோட்டத்தில், ஏகாதிபத்திய கட்சிகளுடன் கூட்டணி சேரும் "பரந்த இடது கட்சி" முன்னோக்கின் பாகமாக, ஸ்பெயினில் பப்லோ இக்லெஸியாஸ் மற்றும் NPA இன் ஸ்பானிய துணை அமைப்பான Anticapitalistas சுற்றி ஸ்ராலினிச பேராசிரியர்களின் ஒரு குழுவால் அமைக்கப்பட்ட ஒரு "இடது ஜனரஞ்சகவாத" கட்சியான பொடெமோஸை ஸ்தாபிப்பதற்கும் NPA ஆதரவளித்தது. அது பொடெமோஸின் கிரேக்க கூட்டாளியான சிரிசா (“தீவிர இடதின் கூட்டணி") 2015 இல் தேர்ந்தெடுக்கப்பட்டதையும் புகழ்ந்தது. பொடெமோஸைப் பொறுத்த வரையில், அது இறுதியில் 2019 இல் பெருவணிக ஸ்பானிய சோசலிஸ்ட் கட்சியான PSOE உடன் ஒரு கூட்டணி அரசாங்கத்தில் அதிகாரத்திற்கு வந்தது.

இத்தகைய போலி-இடது கட்சிகள் முதலாளித்துவ அரசில் செல்வாக்கான அதிகாரப் பதவிகளில் நுழைந்தமை தொழிலாள வர்க்கத்திற்குப் பேரிடராக போய் முடிந்தது. கிரீஸில் அதிவலது சுதந்திர கிரேக்கர்கள் கட்சியான ANEL உடன் ஒரு கூட்டணி அரசாங்கம் அமைத்த சிரிசா, ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வரும் அதன் தேர்தல் வாக்குறுதிகளை முற்றிலுமாக காட்டிக்கொடுத்து, இன்னும் பில்லியன் கணக்கில் சமூக வெட்டுக்களைத் திணித்ததுடன், கிரேக்க தீவுகள் எங்கிலும் மத்தியக் கிழக்கு அகதிகளுக்கு கொடூர அடைப்பு முகாம்களை அமைத்தது.

2017 பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல்களின் போது, பிரான்சின் சோசலிச சமத்துவக் கட்சி மக்ரோனின் அதிவலது கொள்கைகளைக் குறித்து தொழிலாள வர்க்கத்திற்கு எச்சரிக்க போராடியது. மக்ரோனுக்கும் நவ-பாசிசவாத வேட்பாளர் மரீன் லு பென்னுக்கும் இடையே இரண்டாவது சுற்று போட்டி ஏற்பட்டபோது, அதை தொழிலாள வர்க்கம் செயலூக்கத்துடன் புறக்கணிக்குமாறு அழைப்புவிடுத்து, லு பென் ஸ்தாபிக்க விரும்பும் நவ-பாசிசவாத ஆட்சிக்கு மக்ரோன் எந்தவிதத்திலும் மாற்றீடு கிடையாது என்று எச்சரித்தது. இது, அதற்குப் பின்னர் பெத்தானை மக்ரோன் புகழ்ந்த போதும், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் பொலிஸ் வன்முறைக்கு எதிராக அதிகரித்து வந்த போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை அவர் கொடூரமாக ஒடுக்கியபோதும் உறுதிப்படுத்தப்பட்டது.

ஆனால் மக்ரோனுக்கு வாக்கு வழங்குவதற்காக சோசலிஸ்ட் சார்பு ஊடகங்களில் மேலோங்கிய அழைப்புகளுக்கு அடிபணிந்து, NPA, அந்த தேர்தலில் எந்த பகிரங்கமான நிலைப்பாடும் எடுக்க மறுத்தது.

இப்போது அதிகாரத்தில் இருக்கும் பொடெமோஸைப் பொறுத்த வரையில், அதுவும் ஐரோப்பா எங்கிலுமான ஏனைய அரசாங்கங்களைப் போலவே சிக்கன நடவடிக்கைகள், போர் மற்றும் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" அதே கொள்கைகளைப் பின்தொடர்வதுடன், அதன் அரசாங்கத்திற்கு எதிரான ஒரு பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் அபாயத்தை விடாப்பிடியாக குறைத்துக் காட்டுகிறது. ஸ்பெயினில், ஆட்சிக்கவிழ்ப்பு சதிகாரர்கள் பாசிசவாத Vox கட்சியின் தலைவர் Santiago Abascal இன் ஆதரவைப் பெற்றுள்ளனர், இவர் கடந்தாண்டு ட்ரம்பைச் சந்திக்க வாஷிங்டன் சென்றிருந்தார். ஜனவரி 6 ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியும் ஜனநாயகக் கட்சியின் அனுதாபமான விடையிறுப்பும் இத்தகைய சக்திகளுக்குத் துணிவளிக்கின்றன.

இவ்வாறிருக்கையில் அல்பட்ரோஸ் நடவடிக்கை (Operation Albatross) என்று குறியீட்டு பெயர் கொண்ட ஒரு பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்காக நூற்றுக் கணக்கான ஓய்வுபெற்ற மற்றும் பணியில் உள்ள ஸ்பானிய அதிகாரிகள் விடுத்த அழைப்புகளை, துணைப் பிரதம மந்திரி பப்லோ இக்லெஸியாஸ் பொருத்தமற்றது என்று நிராகரித்தார். தொழிலாள வர்க்கம் எந்த நடவடிக்கையும் எடுக்க தேவையில்லை என்றவர் வலியுறுத்தினார்: “அவர்களின் வயது ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், நிறைய மதுபோதையில் பேசிய உரையாடல்களில், இந்த கணவான்கள் என்ன கூறுகிறார்களோ, அது எந்த அச்சுறுத்தலையும் முன்வைக்கவில்லை,” என்றார்.

உண்மையில், அச்சுறுத்தல் மிகப்பெரியளவில் உள்ளது. தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவதை இக்லெஸியாஸூம் பொடெமோஸூம் எதிர்க்கின்றன ஏனென்றால் அந்த அச்சுறுத்தல் மிகைப்படுத்தப்பட்டது என்பதற்காக அல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்தின் ஓர் அரசியல் இயக்கம் சிக்கன நடவடிக்கைகள், போர் மற்றும் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" அவர்களின் சொந்த கொள்கைகளுக்கு எதிராக பாரிய போராட்டங்களுக்கு இட்டுச் செல்லும் என்பதால் ஆகும்.”

ஜனவரி 6 வாஷிங்டன் ஆட்சிக்கவிழ்ப்பு சதியானது, நிதியியில் பிரபுத்துவத்தின் பரந்த பிரிவுகள் ஒரு பாசிசவாத ஆட்சியை ஸ்தாபிக்க தீர்மானகரமாக உள்ளன என்பதற்கு ஒரு மறுக்க முடியாத எச்சரிக்கையாகும். இந்த கொள்கைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தில் ஆழமான வரலாற்றுரீதியில் வேரூன்றிய எதிர்ப்பு உள்ளது, போர்குணமும் போராடுவதற்கான விருப்பமும் அதிகரித்து வருகிறது. ஆனால் போலி-இடது தொழிலாள வர்க்கத்தின் அணிதிரள்வை உடைக்க நகர்கின்ற நிலையில் தொழிலாள வர்க்கத்தை எச்சரித்து அணித்திரட்டுவதற்கு போலி-இடதின் மீது நனவுபூர்வமான எதிர்ப்பு அவசியப்படுகிறது. அட்லாண்டிக்கின் இரண்டு தரப்புகளிலும் பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கான தயாரிப்பை அது குறைத்துக் காட்டுவது தன்னைத்தானே மனநிறைவு கொள்வது மற்றும் ஏமாற்றிக் கொள்வது என்பது மட்டுமல்ல, மாறாக அரசியல்ரீதியில் குற்றகரமானதும் ஆகும்.

 

மேலதிக வாசிப்புக்கு ஆசிரியர் பரிந்துரைக்கும் கட்டுரைகள்:

ட்ரம்பின் ஜனவரி 6 ஆட்சிக்கவிழ்ப்பு சதி மீது ஒரு முழுமையான, பகிரங்க விசாரணைக்காக!
[9 January 2021]

மரணங்கள் அதிகரிக்கையில் ஸ்பெயினின் PSOE–போடேமோஸ் அரசாங்கம் புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதலை அதிகரிக்கிறது
[2 December 2020]

சோசலிசப் புரட்சியின் தசாப்தம் ஆரம்பமாகிறது
[4 January 2020]