ஜனவரி 6 சதித்திட்டத்திற்காக வாஷிங்டனுக்கு பயணித்தவர்களில் பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் உள்ள "டஜன் கணக்கான" நவ நாஜிக்கள் மற்றும் வெள்ளை மேலாதிக்கவாதிகள் இருந்ததாக FBI வெளிப்படுத்துகின்றது

Jacob Crosse
16 January 2021

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜனவரி 6 ஆட்சி கவிழ்ப்பில் பங்கேற்க FBI யின் பயங்கரவாதிகளை தேடும் தரவுத்தளத்தில் தற்போது உள்ள "டஜன் கணக்கானவர்கள்" வாஷிங்டன் டி.சி.யில் இருந்ததாக வியாழக்கிழமை Washington Post செய்தி வெளியிட்டுள்ளது. பெயர் குறிப்பிடப்பிட விரும்பாத ஒரு ஆதாரம் போஸ்ட் இடம், முன்னர் தரவுத் தளத்தில் பதியப்பட்ட வெள்ளை மேலாதிக்கவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் பலர் அரச முகவர்கள் அல்லது தகவல் வழங்குவோருடன் முந்தைய பரஸ்பர தொடர்புகளை கொண்டிருந்ததாக கூறியது.

நவ நாஜிகள் மற்றும் பாசிஸ்டுகள் வாஷிங்டனுக்கு வரப்போகிறார்கள் என்பது உள்நாட்டு புலனாய்வு அமைப்புகளுக்குத் தெரியும் என்பது, இராணுவச் செயலாளர் ரியான் மெக்கார்த்தி போன்ற நபர்களின் பொய்யான கூற்றுக்களை மேலும் அம்பலப்படுத்துகிறது. ஆட்சிசதியின் மறுநாளே "எந்த உளவுத்துறையும்" வாஷிங்டனுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பரிந்துரைக்கவில்லை என்று கூறினார். பரந்த இராணுவ-உளவுத்துறை அமைப்பினுள் நூற்றுக்கணக்கானவர்களுக்கு பேரணியில் யார் கலந்துகொள்ளப் போகிறார்கள் என்பதையும் அவர்களின் நோக்கங்கள் என்ன என்பதையும் அறிந்திருப்பர் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

உயர் நீதிமன்றத்தில் அமெரிக்க தலைநகர் பொலிஸ் (Lorie Shaull/Wikimedia Commons)

சதித்திட்டத்தில் பங்கேற்றதாக சந்தேகிக்கப்படும் சில நபர்கள் தற்போதைய மற்றும் முன்னாள் பொலிஸ் மற்றும் இராணுவ உறுப்பினர்கள் மற்றும் "மூத்த வணிக நிர்வாகிகள் மற்றும் நடுத்தர வயது வணிக உரிமையாளர்கள்" என்று பெயரிடப்படாத மற்றொரு அதிகாரி போஸ்ட் இடம் தெரிவித்தார்.

போஸ்ட் க்கு விசாரணையை கசியவிட்டிருப்பது, அரசாங்கத்தினுள் பொங்கி எழும் மோதலை சுட்டிக்காட்டுவதுடன், இதன் கணிசமான பிரிவினர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முயற்சியை எளிதாக்குவதற்காக உளவுத்துறை தகவல்களையும் மேலதிக பாதுகாப்பு வசதிகளையும் தெரிந்தே தடுத்து நிறுத்தியுள்ளனர். இதுவரை நீதித்துறையும் FBI யும் தேர்தலை முறியடிக்கும் நம்பிக்கையில் காங்கிரஸில் இறங்கிய ஆயிரக்கணக்கானோரில் ஒரு பகுதியான குறைந்தது 70 பேர்கள் மீது குற்றச்சாட்டுகளை அறிவித்து, 170 பேரை அடையாளம் கண்டுள்ளது.

அக்கூட்டத்தில் பாசிச Oath Keepers, III Percenters மற்றும் Proud Boys ஆகியோர் அடங்குவர். குழுவின் அரிசோனாவை சேர்ந்த பிரிவினரை காட்டும் ஒளிப்பதிவு ஒன்றில், அந்த உறுப்பினர்களை எளிதில் அடையாளம் காணக்கூடிய அவர்களின் கறுப்பு மற்றும் மஞ்சள் மேற்சட்டை இல்லாமல் காணப்படுகிறார்கள். அதற்கு பதிலாக, தங்களை மறைப்பதற்கான ஒரு வெளிப்படையான முயற்சியில், அக்குழு ஆரஞ்சுநிற பின்னப்பட்ட நீண்டதொப்பிகளை அணிந்துகொண்டு, "காங்கிரஸை கைப்பற்ற" (“take the f—ing Capitol”) தயாராக இருப்பதை படமாக்கியது.

வெள்ளை மாளிகையில் இருந்து தொடங்கி, அரசாங்கத்தின் உயர் மட்டங்களில் இருந்து கணிசமான ஆதரவைத் தவிர, Chainanalysis நடத்திய ஆய்வில், டிசம்பர் 8, 2020 அன்று 22 பாசிச மற்றும் தீவிர வலதுசாரிகளுடன் தொடர்புடைய வலைத் தள கணக்குகளுக்கு பிட்கொயின் டிஜிட்டல் நாணயத்தில் (bitcoin digital currency) 500,000 டாலர்கள் விநியோகிக்கப்பட்டதாக தெரியவந்தது. இந்த கணக்குகள் நாஜி வலைத் தளமானDaily Stormer மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான வெறுப்புக் குழு VDARE மற்றும் அமெரிக்கா முதல் நவ-நாஜி நிக் ஃபியூண்டஸ் (Nick Fuentes) ஆகியவை அடங்கும். Chainanalysis இன் கூற்றுப்படி, இந்த வைப்புத்தொகைகள் இறந்துபோன பிரெஞ்சு பதிவர் ஒருவரிடமிருந்து வெளிவந்ததாகத் தெரிகிறது. அவர் பாசிச வலதுசாரிகளின் பிரபலமான சொற்றொடர்களான "நம் முன்னோர்களையும் எங்கள் பாரம்பரியத்தையும் நிராகரித்ததன் காரணமாக" மேற்கத்திய நாகரிகத்தின் "சரிவு" குறித்து இணையத்தில் புலம்பினார்.

டிஜிட்டல் நாணயத்தைப் பெறுபவர்களில் ஒன்றான VDARE, பில்லியனர் தனியார் நிதி மேலாளர் ரொபேர்ட் மேர்சர் (Robert Mercer) மற்றும் அவரது மகள் ரெபெக்கா மேர்சர் ஆகியோரிடமிருந்தும் கணிசமான நிதியைப் பெறுகிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அரிசோனா குடியரசுக் கட்சியின் தலைவி கெல்லி வார்ட் (Kelli Ward) உடன் இணைந்த அரசியல் நடவடிக்கைக் குழுக்களுக்கு 1.5 மில்லியன் டாலர் உட்பட மேர்சர்கள் குடியரசுக் கட்சிக்கு தாராளமாக நன்கொடை அளித்துள்ளனர். கெல்லி வார்ட், அரிசோனாவிலும் வாஷிங்டனிலும் “களவை நிறுத்து” என்ற ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைத்த அரிசோனா பிரதிநிதிகளான ஆண்டி பிக்ஸ் மற்றும் பால் கோசர் ஆகியோருடன் சேர்ந்து ட்ரம்ப்பின் தற்போதைய சதிமுயற்சியையும் ஆதரிக்கின்றார்.

ரெபெக்கா மேர்சர் Breitbart News நிறுவனர் ஸ்டீவ் பானனின் நெருங்கிய கூட்டாளியும், அதில் ஒரு முக்கிய முதலீட்டாளரும் ஆவார். வியாழக்கிழமை பானன், ட்ரம்புடன் பலமுறை பேசியதாக Bloomberg அறிவித்தது, ட்ரம்ப் தனது மறுதேர்தல் தோல்வியை எவ்வாறு முறியடிப்பது என்பது குறித்து பானனின் ஆலோசனையை நாடியிருந்தார்.

ட்ரம்ப்பும் அவரது கோடீஸ்வர சதிகாரர்களும், காவல்துறையின் சில பிரிவுகளும், இராணுவ-உளவுத்துறை அமைப்பும் தங்களது அடுத்த முயற்சியை தொடர்கையில், மேலதிக கைதுகள் காங்கிரஸ் முற்றுகையில் தற்போதைய மற்றும் முன்னாள் பொலிஸ் மற்றும் இராணுவ உறுப்பினர்களின் நெருக்கமான தலையீட்டை சுட்டிக்காட்டுகின்றன.

கடந்த புதன்கிழமை காங்கிரஸிற்கு வெளியே வீடியோவில் அடையாளம் காணப்பட்ட பின்னர், முன்னாள் கடற்படையினரும், “Vets for Trump” நிறுவனருமான 42 வயதான ஜோசுவா மாகியாஸ் இன் ஜாமீன் இரத்து செய்யுமாறு பிலடெல்பியா வழக்குத்தொடுனர்கள் கேட்டுக் கொண்டனர். பல மோசமான மற்றும் ஆயுதங்களை தவறாக கையாண்ட குற்றங்களுக்காக நவம்பர் 5 ஆம் தேதி மாகியாஸ் கைது செய்யப்பட்டார். அவரும் ஒரு கூட்டாளியான அன்டோனியோ லாமோட்டாவும் வேர்ஜீனியாவில் அவர்களின் ஊரிலிருந்து ஜனாதிபதி தேர்தலின் பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கையில் “விடயங்களை நேர்த்தியாக்குவதற்கு” நகரத்திற்கு சென்றுகொண்டிருந்ததாக FBI க்கு கிடைத்த தகவலின் பின்னரே இது நிகழ்ந்தது.

தேர்தலைத் தொடர்ந்து, வேர்ஜீனியா மாநில செனட்டரும் வருங்கால 2022 குடியரசுக் கட்சியின் ஆளுனர் பதவிக்கான வேட்பாளருமான அமெண்டா சேஸுடன் "களவை நிறுத்து" பேரணிகளில் மாகியாஸ் பல இடங்களிலும் ஒன்றாக காணப்பட்டார். பாசிச QAnon சதி கோட்பாட்டின் தீவிர ஆதரவாளரான மாகியாஸ், பேரணிக்கு முந்தைய நாள் சேஸுடன் பேஸ்புக் நேரடி ஒளிபரப்பில் தோன்றினார். சேஸ் பேரணியின் அமைப்பாளராக மாகியாஸை அறிமுகப்படுத்தினார். அதை தொடர்ந்து அவர் பாசிச சதி கோட்பாடுகளை பரப்பத் தொடங்கி, “எதிரி இங்கே இருக்கிறார், அது வாயிலில் மட்டுமல்ல, அது உள்ளேயும், நாங்கள் எங்கும் அதை காணக்கூடியதாகவும் உள்ளது” என்றார்.

வேர்ஜீனியாவின் ரொக்கி மவுண்டைச் சேர்ந்த இரண்டு போலீஸ் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். தோமஸ் ரோபர்ட்சன் மற்றும் ஜேக்கப் ஃப்ரேக்கர் இருவரும் காங்கிரஸினுள் இருந்ததுடன் ஒன்றாக ஒரு படத்தை எடுத்துள்ளனர். ரோபர்ட்சன் ஜனவரி 11 திங்கள் அன்று WFXR உடன் ஒரு அறிக்கையைப் பகிர்ந்து கொண்டார். அவர் ஒரு தேசபக்தர் என்று கூறி, "என்னை காங்கிரஸ் காவல்துறையினர் உள்ளே அனுமதித்தனர், அவர் எனக்கு ஒரு போத்தல் தண்ணீரைக் கொடுத்து, கயிறு கட்டியுள்ள பகுதிகளுக்குள் இருக்கும்படி கூறினர்." ரோபர்ட்சன், தான் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானின் காயமடைந்த ஒரு முன்னாள் படையினர் என்று கூறினார்.

தந்தையும் மகனுமான கெவின் மற்றும் ஹண்டர் சீஃப்பிரிட் (Kevin, Hunter Seefried) வியாழக்கிழமை டெலாவேரில் கைது செய்யப்பட்டனர். கெவின் காங்கிரஸிற்குள் ஒரு கூட்டமைப்பு போர்க் கொடியுடன் நடந்து சென்றவர் என அடையாளம் காணப்பட்டார். நியூ யோர்க் டைம்ஸுடன் பேசிய பொலிஸின் கூற்றுப்படி, ஜனவரி 6 ஆம் தேதி, அவரும் அவரது தந்தையும் காங்கிஸிற்குள் இருந்ததாக ஒரு சக ஊழியரிடம் ஹண்டர் தற்பெருமை காட்டிக்கொண்டார்.

பென்சில்வேனியாவின் 55 ஷெஸ்டரை சேர்ந்த அண்மையில் ஓய்வுபெற்ற பென்சில்வேனியா தீயணைப்பு வீரர் ராபர்ட் லீ சான்ஃபோர்ட், அதிகாரிகளை அவமதித்தது, பொது ஒழுங்கை குழப்பியமை, அத்துமீறல் மற்றும் வன்முறை நடத்தை ஆகியவற்றுடன் காங்கிரஸின் தடைசெய்யப்பட்ட மைதானத்தில் ஆபத்தான ஆயுதம் ஏந்தியதாக குற்றம் சாட்டப்பட்டார். ட்ரம்ப் ஆதரவாளர்களின் கும்பல் காங்கிரஸினுள் உள்புகுந்தபோது பொலிஸாரின் மீது அவர் ஒரு தீயணைப்பு கருவியை எறிந்தார்.

செனட் மேடையில் உடல் கவசம் அணிந்து கைவிலங்குகளுடன் புகைப்படம் எடுத்த ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி லெப்டினன்ட் கேணல் லாரி ரெண்டால் ப்ரோக் ஜூனியர் (Larry Rendall Brock Jr.), கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரானபோது, உதவி அமெரிக்க வழக்கறிஞர் ஜே வீமர், ப்ரோக் ஜூனியருக்கு “பணயக்கைதிகளை பிடிக்கும் நோக்கம் இருந்ததாக குற்றம் சாட்டினார். அமெரிக்க அரசாங்கத்தின் உறுப்பினர்களைக் கடத்தல், கட்டுப்படுத்துதல், ஒருவேளை முயற்சி செய்தல், ஒருவேளை தூக்கிலிட வேண்டும் என்று” அவர் கருதுவதாக வீமர் தெரிவித்தார்.

ஓஹியோவின் லிஸ்பனைச் சேர்ந்த 45 வயதான ஆடம் நியூபோல்ட் (Adam Newbold), ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் பங்கு வகித்ததற்காக இந்த வாரம் கைது செய்யப்பட்ட மற்றொரு ஓய்வு பெற்றவராவார். நியூபோல்ட் ஒரு ஓய்வுபெற்ற SEAL சேமப்படை சிறப்பு போர் இயக்குபவர் என்பதை கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது. நியூபோல்ட்டின் புதிய தொழில், பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் “தந்திரோபாய சுடுதலில்” (tactical shooting) பயிற்சி அளிப்பதாகும். கடந்த புதன்கிழமை நிகழ்வுகளுக்குப் பின்னர் நீக்கப்பட்ட பேஸ்புக் நேரடி ஒளிபரப்பில், நியூபோல்ட் அன்றைய தினம் தனது செயல்களைப் பற்றி "பெருமைப்படுவதாக" பெருமிதம் கொண்டார், மேலும் இது தேர்தலை முறியடிக்கும் என்று நம்புவதாகவும் காங்கிரஸினுள் இருப்பவர்கள் “தாம் செய்வதைப்பற்றி இரண்டு தரம் சிந்திக்கவேண்டும்” எனவும் குறிப்பிட்டார்.

கிளர்ச்சியின் நாளில் காங்கிரஸினுள் ஒரு ஆயுதத்தை ஏந்தியிருந்த வட கரோலினா குடியரசுக் கட்சியின் பிரதிநிதி மடிசன் கோவ்தோர்ன் (Madison Cawthorn) பேசிய வார்த்தைகளை நியூபோல்ட்டின் செயல் பிரதிபலிக்கிறது. பவேரிய மலைகளில் அடோல்ஃப் ஹிட்லரின் கழுகு பதுங்குகுழிக்கு விஜயம் செய்வது தனது “இதுவரை செய்ய முடியாத பட்டியலில்” இருப்பதாக முன்பு கூறிய கோவ்தோர்ன், ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் காலையில் பேசினார், “இந்த கூட்டத்தில் சில சண்டைகள் உள்ளன. ... குடியரசுக் கட்சியினர் மறைந்து கொள்கிறார்கள், சண்டையிடவில்லை, அவர்கள் உங்களது குரல்களை அமைதியாக்க முயற்சிக்கிறார்கள்” என்றார்.

டிசம்பர் மாதம் நடந்த ஒரு அமெரிக்கா ஒரு திருப்பு முனையில் என்ற நிகழ்ச்சியிலும் கோவ்தோர்ன் பேசினார். அதில் ட்ரம்பின் தேர்தல் மோசடி தொடர்பான ஆதாரமற்ற கூற்றுக்களை ஆதரிக்கத் தவறினால் காங்கிரஸ் உறுப்பினர்களை "இலேசாக அச்சுறுத்துமாறு” பங்கேற்பாளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

மற்றொரு குறிப்பிடத்தக்க கைது ராபர்ட் கீத் பாக்கர் என்ற, "அவுஷ்விட்ஸ் முகாம்" என எழுதியும் மற்றும் என்றும் மண்டையோடும் குறுக்கு எலும்புகளும் பதித்த ஒரு மேலைடையை அணிந்திருந்த பாசிசவாதியினதாகும். இரண்டாம் உலகப் போரில் 1.1 மில்லியன் யூத மக்கள் கொல்லப்பட்ட கடூழிய சித்திரவதை முகாம்களின் வாயிலில் வைக்கப்பட்ட ஜேர்மன் சொற்றொடரான “Arbeit macht frei” என்பதன் தோராயமான மொழிபெயர்ப்பான “வேலை விடுதலையைத் தருகிறது” என்பது பேக்கரின் சட்டையின் அடிப்பகுதியில் எழுதப்பட்டிருந்தது.

30 வயதான தளபதி எமிலி ரெய்னி (Emily Rainey) இன் செயல்பாட்டை அமெரிக்க இராணுவம் இன்னும் "விசாரித்து வருகிறது". 6 ஆம் தேதி வாஷிங்டனுக்கு "சுதந்திரத்திற்கான மூர் கவுண்டி குடிமக்களின்" 100 உறுப்பினர்களை ஒழுங்கமைத்து வழிநடத்தியதாக ரெய்னி ஒப்புக் கொண்டார். இருப்பினும், தான் காங்கிரஸுக்குள் நுழையவில்லை என்று கூறுகிறார். 1 வது சிறப்புப் படை கட்டளையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ரெய்னி, Fort Bragg இல் உள்ள 4 வது உளவியல் செயல்பாட்டுக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார். கோவிட்-19 சுகாதார கட்டுப்பாடுகளுக்காக ஒரு விளையாட்டு திடலினை தடைசெய்ய கட்டப்பட்டிருந்த பாதுகாப்பு நாடாக்களை கிழித்து எறிந்த ஒளிப்பதிவுகளை மே மாதத்தில் சமூக ஊடகங்களில் வெளியிட்ட பின்னர் ரெய்னி கணிசமான வலைத் தள பின்தொடர்பாளர்களை பெற்றார்.