தெற்காசியாவில் அமெரிக்க ஜனாதிபதியின் சதி முயற்சி பற்றிய கவலை

K. Ratnayake
16 January 2021

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

கடந்த வாரம் வாஷிங்டனில் நாடாளுமன்றக் கட்டிடத்தை தாக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப்பால் தூண்டிவிடப்பட்ட பாசிச கும்பல் குறித்து தெற்காசியாவில் கவலை தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனிடம் "அதிகாரம் வழமைபோல் கை மாற்றப்பட வேண்டும்" மற்றும் அமெரிக்காவில் "உச்சகட்ட ஜனநாயகம் பரவ வேண்டும்" என்ற எதிர்பார்ப்புகள் வெளிப்படுத்தப்படுகின்றன.

இந்த பதட்டத்திற்கும் ஜனநாயகத்தை காப்பதற்கும் இடையில் எந்த சம்பந்தமும் இல்லை. ட்ரம்பை விட பைடன் "ஜனநாயகத்தை" பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அதே நேரம் பைடன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் அதன் ஈவிரக்கமற்ற வர்க்க நலன்களையும் பாதுகாக்கிறார்.

ஹூஸ்டனில் 2019 செப்டம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை என்.ஆர்.ஜி. ஸ்டேடியத்தில் நடைபெற்ற “ஹவுடி மோடி: பகிரப்பட்ட கனவுகள், பிரகாசமான எதிர்காலங்கள்” நிகழ்ச்சியின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைகுலுக்கிறார். (AP Photo/Michael Wyke)

பூளோள கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தீவிரப்படுத்தப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், ஆளும் வர்க்கங்கள் எதேச்சதிகார ஆட்சி முறைகளை நோக்கி நகர்கின்றன. அமெரிக்காவின் சதி முயற்சி உலக முதலாளித்துவத்தின் மையத்தில் மட்டுமன்றி, தங்கள் சொந்த நாடுகளிலும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் வீழ்ச்சியை தொழிலாள வர்க்கத்திற்கு அம்பலப்படுத்திவிடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

தெற்காசிய ஆளும் உயரடுக்கினர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பொருளாதார ரீதியாகவும் மூலோபாய ரீதியாகவும் பெரிதும் நம்பியிருப்பதோடு வாஷிங்டனிலான அரசியல் ஸ்திரமின்மை அவர்கள் அனைவரையும் நேரடியாக பாதிக்கிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 7 அன்று ஒரு ட்வீட்டை வெளியிட்டார்: “வாஷிங்டன் டி.சி.யில் கலவரம் மற்றும் வன்முறை பற்றிய செய்திகளைக் கண்டு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. வழக்கமான மற்றும் அமைதியான அதிகார கைமாற்றம் தொடர வேண்டும். சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையைத் தகர்த்தெறிய அனுமதிக்க முடியாது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், அவர் பாசிச சதித்திட்டத்தை கண்டிக்கவில்லை அல்லது "சதி" என்ற வார்த்தையை கூட பயன்படுத்தவில்லை.

மோடியின் அறிக்கை, அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவுகளுக்கு வாஷிங்டனில் நடக்கும் சம்பவங்கள் ஏற்படுத்தவுள்ள தாக்கங்கள் பற்றிய நிச்சயமான கவலைகளை பிரதிபலிக்கிறது.

கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்திய அரசாங்கங்கள் வாஷிங்டனுடன் மிக நெருக்கமான இராணுவ, பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை உருவாக்கிக்கொண்டுள்ளன. அமெரிக்காவுடனான அதன் மூலோபாய அணிதிள்வு பரம எதிரியான சீனாவுக்கு எதிரான அதன் பிராந்திய மற்றும் பூகோள அபிலாஷைகளை உயர்த்தும் என்று இந்திய முதலாளித்துவம் நம்புகிறது.

பெய்ஜிங்கிற்கு எதிரான வாஷிங்டனின் மூலோபாய மற்றும் இராணுவ தாக்குதலில் இந்தியாவின் மைய முக்கியத்துவம் காரணமாக இந்த உறவுகள் அமெரிக்காவால் முன்தள்ளப்பட்டு வருகின்றன. சீனாவுக்கு எதிரான போரில், எரிசக்தி மற்றும் மூலப்பொருட்களின் சீன இறக்குமதிக்கு இன்றியமையாத இந்து சமுத்திர கடல் பாதைகளை தடுக்க அமெரிக்கா முயற்சிக்கின்றது.

அமெரிக்காவுடனான நெருக்கமான புவி-மூலோபாய உறவுகள், பிரதமர் மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் அரசாங்கத்தின் கீழ் தொடங்கியதுடன் அதற்கு இந்தியாவின் இரண்டு ஸ்ராலினிச கட்சிகளும் ஆதரவு கொடுத்தன. மோடியின் கீழ், வாஷிங்டனின் போர் திட்டங்களுடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு முன்நிலை அரசாக இந்தியா மாற்றப்பட்டுள்ளது. இந்த உறவுகளை மேலும் உறுதிப்படுத்த டிரம்ப் கடந்த பெப்ரவரி மாதம் இந்தியாவுக்கு பயணித்திருந்தார்.

இந்தியாவின் இராணுவ துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களைப் பயன்படுத்துவதற்கு அமெரிக்கப் படைகளை அனுமதிக்கும் ஒப்பந்தங்களில் அமெரிக்காவுடன் புதுடெல்லி கையெழுத்திட்டுள்ளது. அக்டோபர் 27 அன்று, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு பத்து நாட்களுக்கு முன்னர், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பொம்பியோ, அடிப்படை கொடுக்கல் வாங்கல் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியாவுக்கு விஜயம் செய்தார். இது இரு நாடுகளுக்கிடையில் உயர்தர இராணுவ தொழில்நுட்பம் மற்றும் வகைப்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் மற்றும் பிற தரவுகளைப் பகிர்ந்துகொள்ள அனுமதிக்கும்.

சீனாவுக்கு எதிராக அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா சம்பந்தப்பட்ட ஒரு அரை-இராணுவ கூட்டணியான நாற்கர பாதுகாப்பு பேச்சுவார்த்தை அல்லது குவாட் எனப்படுவதன் முக்கிய உறுப்பினராக இந்தியா உருவெடுத்துள்ளது. வாஷிங்டனுடனான புது தில்லியின் உறவுகள் கடந்த ஆண்டு சீனாவுடனான எல்லை பதட்டங்களைத் தூண்டிவிட்டு, இரு அணு ஆயுத நாடுகளுக்கிடையில் போர் வெடிக்கும் நிலையையும், அதில் அமெரிக்கா மற்றும் ஏனைய பெரும் வல்லரசுகளும் பங்குகொள்ளும் உலகப் பேரழிவு ஆபத்தையும் முன்கொணர்ந்தது.

அமெரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள பிரதான ஊடகங்களும் ஆளும் உயரடுக்கினரும் தங்களை சிறந்த ஜனநாயக நாடுகளாக சித்தரித்துக்கொள்கின்றனர் - அமெரிக்கா உலகின் பழமையான ஜனநாயகம் மற்றும் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாம். இந்த கூற்றுக்கள் அடிப்படையிலேயே பொய்யானவை.

ட்ரம்பின் சதித்திட்டம் அமெரிக்க ஜனநாயகத்தின் நீண்டகால சீரழிவையும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்களின் வெடிப்பை நசுக்குவதற்காக ஒரு பாசிச ஆட்சியை நோக்கி ஆளும் உயரடுக்கின் முக்கிய பிரிவுகள் முன்நகர்ந்துகொண்டிருப்பதையும் வெளிப்படுத்தியுள்ளது. இதேபோல் இந்தியாவில், மோடியின் இந்து-மேலாதிக்க அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை நிலைநிறுத்துகிறது.

ஜனவரி 6 சம்பவங்கள் குறித்து இந்திய ஊடகங்கள் பல கருத்துக்களை வெளியிட்டுள்ளன. நாடாளுமன்ற கட்டிடத்தின் மீதான தாக்குதலைத் தூண்டிவிடுவதில் ட்ரம்பின் வகிபாகத்தை பலரும் சுட்டிக்காட்டி, அதை "சதி" என்று வர்ணிக்கின்றனர். எவ்வாறாயினும், நிலைமை எப்படியாவது இயல்பு நிலைக்கு திரும்பும் என்று அவர்கள் முடிவு செய்கிறார்கள்.

உதாரணமாக, ஜனவரி 8 அன்று வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம், கெபிடல் ஹில் மீதான குண்டர் பாய்ச்சல், “மோசமான முறையில் அமைதியை குலைக்கின்றது” மற்றும் “ஆபத்தான தருணமும்” ஆகும் என்று அறிவிக்கிறது. எவ்வாறாயினும், அமெரிக்கா "அதன் பெரும் நெருக்கடிகளை [வெற்றிகண்டதைப்] போலவே இந்த சந்தர்ப்பத்திலும் வெற்றிகொள்ளும்… நாட்டின் அரசியல் தலைமை, அதன் மிக உயர்ந்த அதிகாரங்களையும் கூட விஞ்சக்கூடிய நிறுவனங்கள் அங்கு இன்னும் உள்ளன", அது கூறியுள்ளது.

எகோனமிக் டைம்ஸ் மிகவும் வெளிப்படையாக எழுதியிருந்தது. ட்ரம்ப்பின் ஆதரவாளர்களின் நடவடிக்கைகளை இழிவானதாகக் கண்டித்த அது, "அதன் மோசமான நாளிலும் கூட, அமெரிக்காவானது இன்னமும் குடியரசு மற்றும் ஜனநாயகம் மீதான தனது உறுதிப்பாட்டைக் காட்டியது" என்று அது கூறுகிறது. பைடென் ஜனாதிபதியாக வருவதால், "தொற்றுநோயையும் அதன் பொருளாதார விளைவுகளையும் கையாள்வதுடன், அமெரிக்காவை அதன் பாரம்பரிய உலகளாவிய தலைமைப் பாத்திரத்திற்கு மீட்டெடுப்பது மட்டுமல்லாமல், அமெரிக்காவை பிளவுபடுத்தும் வெடிப்புகளை குணப்படுத்துவதோடு சமரசம் மற்றும் ஒருமித்த அரசியலை புதுப்பிக்கும்" என்று செய்தித்தாள் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இவை முற்றிலும் போலி நம்பிக்கைகள் ஆகும்.

உலக சோசலிச வலைத்தளம் தொடர்ந்து விளக்கியது போல், ட்ரம்ப் ஒரு “தீய ஆளுமை” அல்ல, மாறாக, அவர் அமெரிக்காவில் உள்ள குற்றவியல் நிதி தன்னலக்குழுவின் ஒரு பிரதிநிதி ஆவார். பைடனும் அவரது ஜனநாயகக் கட்சியும் அதே ஈவிரக்கமற்ற ஆளும் வர்க்கத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

இலங்கையில், ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ அல்லது அவரது சகோதரர் பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவோ வாஷிங்டனில் பாசிச ஆட்சி கவிழ்ப்பு முயற்சி குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

எவ்வாறெனினும், கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மேலும் மோசமடைந்துள்ள பொருளாதார நெருக்கடியால் பணப் பற்றாக்குறையை எதிர்கொள்வதோடு சீன முதலீடு மற்றும் கடனில் தங்கியிருக்கும் இலங்கை அரசாங்கம், அமெரிக்காவின் அரசியல் முன்னேற்றங்களை பதட்டமாக ஆராய்ந்து வருகிறது.

அக்டோபரின் பிற்பகுதியில், பொம்பியோ கொழும்புக்கு விஜயம் செய்தார். அங்கு அவர் இராஜபக்ஷ மற்றும் பிற அரசியல் தலைவர்களைச் சந்தித்து, பெய்ஜிங்குடனான தனது உறவை அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அமெரிக்க நலன்களுடன் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் குண்டர்தனமாக அறிவித்தார்.

ட்ரம்பின் ஆட்சி கவிழ்ப்பு குறித்து இராஜபக்ஷக்கள் உத்தியோகபூர்வ மௌனத்தை பேணி வரும் நிலையில், இலங்கை ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

டெய்லி மிரர் பத்திரிகையின் சர்வதேச விவகார ஆசிரியர் அமீன் இசாதீன் எழுதிய ஒரு கருத்துப் பத்தி இவ்வாறு அறிவித்தது: “ஜனவரி 6 அன்று ஜனநாயகத்தைத் தகர்த்தெறியும் ஒரு சதித்திட்டம் நடந்துள்ளது… 9/11 அன்று பயங்கரவாதிகள் இரட்டை கோபுரங்களை வீழ்த்தியதைப் போலவே, ட்ரம்ப்பின் பயங்கரவாதிகள் -அவர்களில் சிலர் ஆயுதபாணிகளாக இருந்தனர்- அந்த குண்டருக்கு இன்னும் நான்கு ஆண்டுகள் ஜனாதிபதியாக தொடர கூடியவாறு, ஜனநாயகத்தின் மாளிகையை வீழ்த்த முயன்றனர்.”

டெய்லி மிரர் கட்டுரையாளர், “ட்ரம்பை தோற்கடிப்பதன் மூலம், பைடென் அமெரிக்காவின் ஆத்மாவைக் காப்பாற்றினார்” என்று ஆடம்பரமாக அறிவித்தார் –இந்தக் கருத்துக்கள், ஜனநாயகக் கட்சியினர் ஒருவித முற்போக்கான மாற்றீடாக உள்ளனர் என்ற கட்டுக்கதையைத் தக்கவைக்க வடிவமைக்கப்பட்டதாகும்.

உலக முதலாளித்துவத்தின் மையமான அமெரிக்காவில் என்ன நடக்கிறது என்பது, எல்லா இடங்களிலும் உள்ள அரசியல் நிலைமையைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோலாகும்.

அமெரிக்காவிலான பாசிச சதி முயற்சி, ஆழ்ந்த நெருக்கடியில் உள்ள, புரட்சியின் சாத்தியங்களைக் கொண்டுள்ள வளர்ந்து வரும் தொழிலாள வர்க்கப் போராட்டங்களையிட்டு பீதியடைந்துள்ள ஒரு முதலாளித்துவ வர்க்கத்தின் எதிர் புரட்சிகர பிரதிபலிப்பாகும்.

இந்தியாவில் அதன் சகாக்களின் சர்வாதிகார திருப்பத்தைப் போலவே, இலங்கை ஜனாதிபதி இராஜபக்ஷவும் இராணுவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சர்வாதிகாரத்தை நிலைநாட்டும் முயற்சியில் பாசிச சக்திகளை அணிதிரட்டுகிறார். உலக சோசலிச புரட்சி வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்ப போராட வேண்டியதன் அவசரத்தையே இந்த அபிவிருத்திகள் முன்வைக்கின்றன.

 

மேலதிக வாசிப்புக்கு ஆசிரியர் பரிந்துரைக்கும் கட்டுரைகள்:

மோடியின் ஆதரவாளர்கள் டெல்லியை வகுப்புவாத வன்முறையில் மூழ்கடிக்கையில், ட்ரம்ப் அவரை புகழ்கிறார்
[2 March 2020]

ட்ரம்பின் இந்திய விஜயம் மற்றும் புது டெல்லி முஸ்லிம் விரோத படுகொலைகளைப் பற்றி இலங்கை தமிழ் தேசியவாத கட்சிகள் மயான அமைதி
[10 March 2020]

ட்ரம்ப் மோடியை கட்டித்தழுவுகையில், இந்தியாவின் தலைநகரத்தில் வகுப்புவாத வன்முறை கொந்தளித்து கொண்டிருக்கிறது
[27 February 2020]

இந்து மேலாதிக்க குடியுரிமை சட்டத்திற்கு இந்தியா ஒப்புதல் அளிக்கிறது
[13 December 2019]