க்ஷாமா சாவந்திற்கு எதிரான மரண அச்சுறுத்தல்கள் குறித்து ஒரு முழுமையான, உடனடி விசாரணைக்கு!

Statement of the Socialist Equality Party
25 January 2021

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சோசலிச மாற்றீடு அமைப்பின் (Socialist Alternative) தலைவரும் சியாட்டில் நகர சபை உறுப்பினருமான க்ஷாமா சாவந்திற்கு (Kshama Sawant) எதிரான உடல் ரீதியான வன்முறை அச்சுறுத்தல்களை சோசலிச சமத்துவக் கட்சி கண்டிக்கிறது. உடனடி வன்முறை அச்சுறுத்தல்களின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்தவும், சாவந்த், அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது உதவியாளர்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் முழு மற்றும் வெளிப்படையான விசாரணையை நகரசபை நடத்துமாறு சோசலிச சமத்துவக் கட்சி கோருகிறது.

Kshama Sawant [Photo: Seattle City Council]

ஜனவரி 19, 2021 அன்று, சாவந்தின் அலுவலகம் வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், அவரைக் கொல்ல அவரது அலுவலகத்திற்கு விரிவான அச்சுறுத்தல்கள் வந்தன. சியாட்டில் தீயணைப்புத் துறையுடன் இணைக்கப்பட்ட நகர அரசாங்க மின்னஞ்சல் முகவரியிலிருந்து வந்த தொடர்ச்சியான மின்னஞ்சல்களுடன் இந்த அச்சுறுத்தல்கள் தொடர்புபட்டிருந்தன. வலதுசாரிகளிடமிருந்து தவறாமல் அச்சுறுத்தல்களை பெறுவதால், அவை வழக்கமாக "பாதுகாப்பிற்கு உடனடி அச்சுறுத்தல்களாக எடுத்துக் கொள்ளும் அளவுக்கு இல்லை" என்று சாவந்த் விளக்கினார்.

எவ்வாறாயினும், “சமீபத்தில், சியாட்டில் நகர ஊழியர் மின்னஞ்சல் கணக்கிலிருந்து 2020 டிசம்பர் 17 ஆம் தேதி தொடங்கி எனக்கு கிடைத்த அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள் குறித்து நான் மிகுந்த கவலை கொண்டுள்ளேன். இந்த மின்னஞ்சல்களில் மிகவும் அச்சுறுத்தல் நேற்று ஜனவரி 18 அன்று வந்தது. அதில் ‘உங்கள் காலாவதியை அறிவிக்க வேண்டிய நேரம்' என்ற தலைப்பில், 'இப்பொழுது நேரம் வந்துள்ளது. நாளை சபையில் உங்களுக்கு இடம் இருக்காது. உங்கள் இராஜினாமாவை இப்போது அறிவிக்கவும், இல்லையென்றால் வேறு ஏதாவது நிகழும்” என முடிவடைந்ததாக சாவந்த் விளக்கினார்.

முந்தைய மின்னஞ்சல்களில் மரண அச்சுறுத்தல்கள் இருந்தன மற்றும் சாவந்தை தற்கொலைக்கு ஊக்குவித்தன. சாவந்த் எழுதினார்: “இந்த விஷயத்தில் உடனடியாக ஒரு முழுமையான விசாரணை இருக்க வேண்டும். குறிப்பாக இந்த மின்னஞ்சல்களுக்கும், ஜனவரி 20, நாளை பைடெனின் பதவியேற்புக்கு திட்டமிடப்பட்ட தீவிர வலதுசாரி ஆர்ப்பாட்டங்களுக்கும் இடையில் சாத்தியமான தொடர்பின் வெளிச்சத்தில் (குறிப்பாக 'ஜனவரி 18 மின்னஞ்சலில் நாளை சபையில் உங்களுக்கு இடம் இல்லை என்று கூறப்படுவதை கவனிக்கவும்) விசாரிக்கவேண்டும்”.

மின்னஞ்சல்களை அனுப்பியவர் யார் என்பதை விளக்குமாறு சாவந்த் சியாட்டில் தீயணைப்புத் துறையிடம் கேட்டபோது, அந்தத்துறை மறுத்துவிட்டது. திணைக்களத்தின் நிர்வாக இயக்குநர் அதை அனுப்பிய பணியாளரின் அடையாளத்தை வழங்க மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக சாவந்திற்கு "சியாட்டில் தீயணைப்புத் துறை ஊழியர் மின்னஞ்சல்களை அனுப்பவில்லை என்று கூறி வருகிறார்" என்று தெரிவித்தார்.

சாவந்த் மேலும், "தீயணைப்புத் துறையினர் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எனக் கருதுவதால், மேயர் ஜென்னி துர்கன் மற்றும் இடைக்கால சியாட்டில் காவல்துறைத் தலைவர் அட்ரியன் டயஸ் ஆகியோரை இந்த உடனடி அச்சுறுத்தல் குறித்து அவசரமாக விசாரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்." என அறிவித்தார்.

சாவந்த் மற்றும் அவரைச் சுற்றியுள்ளவர்களைப் பாதுகாக்க உடனடியாக விசாரணை செய்ய சோசலிச சமத்துவக் கட்சி கோருகின்றது. சாவந்த் மற்றும் சோசலிச மாற்றீட்டு அமைப்புடன் எங்களுக்கு அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், தீவிர வலதுசாரிகளிடமிருந்து படுகொலை அச்சுறுத்தல் இல்லாமல் அரசியல் பணிகளை நடத்துவதற்கான அவரது ஜனநாயக உரிமையை நாங்கள் பாதுகாக்கிறோம். ட்ரம்ப் நிர்வாகத்திற்குள் இருந்து பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளுடன் உயர் மட்ட தொடர்புகளைக் கொண்ட ஜனவரி 6 பாசிச ஆட்சி கவிழ்ப்பு முயற்சியைக் கருத்தில் கொள்கையில் இது மிகவும் அவசரமானது.

 

மேலதிக வாசிப்புக்கு ஆசிரியர் பரிந்துரைக்கும் கட்டுரைகள்:

ஜனநாயகக் கட்சியின் பதவிநீக்க குற்றவிசாரணை தோல்விக்குப் பின்னர் ட்ரம்ப் பலத்துடன் எழுகிறார்
[7 February 2020]

அமெரிக்க பெடரல் நீதிமன்றம் அசான்ஜ் மற்றும் விக்கிலீக்ஸிற்கு எதிரான ஜனநாயகக் கட்சியின் சூழ்ச்சியை அம்பலப்படுத்துகிறது
[31 July 2019]

ஜனநாயகக் கட்சியினர் "நிரந்தர போரை" ஆதரிக்கின்றனர்
[16 October 2019]

ஜூலை 4, 2006: அமெரிக்க புரட்சியின் 230 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க ஜனநாயகத்தின் நிலை
[4 July 2020]